இலங்கைச் செய்திகள்

 தமிழரின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமைக்கு அங்கஜன் கண்டனம்

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை

மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில்

மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு?

ஷானி அபேசகரவுக்கும் தொற்று; சிறைச்சாலை கொத்தணி 753 ஆக உயர்வு

உடல் நிலையை கருத்திற் கொண்டு ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்

மட்டு. பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்படும்

மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய யாழ்.பல்கலை

அஜித் தோவால், மரியா தீதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு


தமிழரின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமைக்கு அங்கஜன் கண்டனம்

யாழ். நீதிமன்றில் யாழ். OIC தெரிவித்த கருத்து

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கிற்காக முன்னிலையாகிய யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைப்படுத்தும் முகமாக ‘சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நீதிமன்றில் கருத்து கூறியிருந்தார்.

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தினால், துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவரது கருத்தானது, அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும் பொலிஸ்துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின்போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு, இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி தினகரன்    

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை-Sivanesathurai Chandrakanthan-Pillayan-Released On Bail

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், வாக்குமூலம் வழங்கும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த பிள்ளையான், அன்றைய தினமே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை-Sivanesathurai Chandrakanthan-Pillayan-Released On Bail

கடந்த 5 வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த பொதுத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (24)  மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை-Sivanesathurai Chandrakanthan-Pillayan-Released On Bail

இதன்போதே அவர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

படு கொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி சார்பில், இவ்வழக்கில் ஆஜரான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிள்ளையான் உட்பட சந்தேகநபர்கள் ஐவருக்கும் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை-Sivanesathurai Chandrakanthan-Pillayan-Released On Bail

ஆயினும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான  சிரேஷ்ட சட்டத்தரணி  ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் பிணை வழங்கப்பட்டது

இதன்போது, வழக்குடன் சம்பந்தப்படட ஐவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கம், மற்றும் இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு டிசம்பர் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை-Sivanesathurai Chandrakanthan-Pillayan-Released On Bail

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு, பிள்ளையானின் விடுதலையையடுத்து, நீதிமன்றத்துக்கு முன்னால் பெருமளவான அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

அவரது ஆதரவாளர்களால், மட்டக்களப்பு நகரில் பட்டாசுகளும் கொளுத்தப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல், புதிய காத்தான்குடி  தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்) - நன்றி தினகரன்    


மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில்

மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில்-Maithripala Sirisena Arrived in Easter Sunday Attack-PCoI

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று (24) முற்பகல் 9.45 மணியளவில் அங்கு வருகை தந்ததோடு, கடந்த வருடம் ஏப்ரல் 21இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்    மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு?

மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு?-Maithripala Sirisena Left from PCoI of Easter Sunday Attack-5 Hr Statement

- இன்று 5 மணித்தியால வாக்குப் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (25) முற்பகல் அங்கு முன்னிலையான அவர், சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆணைக்குழு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வது நிறைவடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி தினகரன்    


ஷானி அபேசகரவுக்கும் தொற்று; சிறைச்சாலை கொத்தணி 753 ஆக உயர்வு

ஷானி அபேசகரவுக்கும் தொற்று; சிறைச்சாலை கொத்தணி 753 ஆக உயர்வு-Shani Abeysekara Tested Positive-Prison Cluster 753-Police Cluster-1095

- 256 STF உள்ளிட்ட பொலிஸ் கொத்தணி 1,500 ஆக உயர்வு

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை நேற்று இரவு மஹர சிறையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஷானி அபேசேகர தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹர சிறைச்சாலையின் குறித்த வார்டில் இருந்து இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை எனவும், அவருக்கு ஏவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 19 பொலிஸார் மற்றும் 17 அதிரடிப் படை வீரர்கள் (STF) புதிதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் கொத்தணி மொத்த எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன்    உடல் நிலையை கருத்திற் கொண்டு ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்

உடல் நிலையை கருத்திற் கொண்டு ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்-Former CID Director Shani Abeysekara Transferred from Welikanda to IDH

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், ஷானி அபேசேகர IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து, ஷானி அபேசேகர மஹர சிறைச்சாலையிலிருந்து, கடந்த புதன்கிழமை (25) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து, வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து தற்போது IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன்    

மட்டு. பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்படும்

தனியார் நிறுவனமாக இயங்க அனுமதியில்லை

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாக இயங்க அனுமதியளிக்க மாட்டோம். அதனை அரசுக்கு சுவீகரித்து மாணவர்களின் வளத் தேவைக்காக பயன்படுத்துவோமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. மனுக்கள் சமர்ப்பணத்தின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசுக்கு சுவீகரிக்கப்படுமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வரையறுக்கப்பட்ட நிறுவமாக 2016.2.09 பதியப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 90 சதவீதமான பங்குகள் ஹிரா மன்றத்துக்கும் 10 சதவீதமான பங்குகள் அஹமட் சிராஸ் ஹிஸ்புல்லாவுக்கும் உரித்துடையதாகவுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் 08 பேர் இருந்துள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் 18 பாடவிதானங்கள் முன்னெடுக்கப்படவிருந்தன. பாடவிதானங்களில் ஷரீஆ சட்டம் தொடர்பிலான பாடமொன்றுமுள்ளது. அதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்தான் Bachelor of art Islamic studies. சமகால அரசாங்கம் பட்டங்கள் வழங்கு நிறுவனங்களில் இருந்து இந் நிறுவனத்தை நாம் முற்றாக நீக்கியுள்ளோம். பட்டங்களை வழங்குவதற்கு எவ்வித அதிகாரமும் அந்நிறுவனத்திற்கு வழங்க மாட்டோம்.

இதன்போது இடையீட்டு கேள்வியை எழுப்பிய காவிந்த ஜயவர்தன எம்.பி.,

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் போது 350இற்கும் அதிகமாக கத்தோலிக்கர்கள் உயிரிழந்ததுடன், இன்றும் 500இற்கும் அதிகமானவர்கள் ஊனமுற்றுள்ளவர்களாக வாழ்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர்தான் ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்தாடல்கள் உருவாகின. சஹ்ரான் என்பவர்தான் தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

பயங்கரவாதி சஹ்ரானுடன் நேரடித் தொடர்புகளை பேணியிருந்தவர்தான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா. இந்தப் பல்கலைக்கழகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

எம்.எஸ்.டி பாதுகாப்புடன் தான் ஹிஸ்புல்லா நேற்றையதினம் ஆணைக்குழுவுக்கு வந்திருந்தார். அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதா? எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகத்தை உருவாக்க ஹிஸ்புல்லாவுக்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பிலும் பாரிய பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சியாகவிருந்த சந்தர்ப்பத்தில் ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தப்படுமென தெளிவாக கூறியிருந்தீர்கள். ஆகவே, இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு சுவீகரித்துக்கொள்வீர்களா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பல்கலைக்கழத்திற்கு உள்ளீர்க்கும் மாணவர்களை இம்முறை அதிகரித்துள்ளோம். கடந்தவருடம் 30ஆயிரம் மாணவர்களே உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால், இம்முறை 40ஆயிரம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதிகமான மாணவர்களை உள்வாங்கும் போது பௌதீக வசதிகள் அவசியமாகும். உட்கட்டமைப்பு வசதிகளும் அவசியமாகும்.

அதன் காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தின் வளங்களை அதற்காக பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தைவிட இந்த பல்கலைக்கழத்தில் உயர்வான வளங்கள் காணப்படுகின்றன. அதன் பயன்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்திற்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மத்திய வங்கியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்குதான் இதனை கண்டறியும் முழுமையான பொறுப்பு உள்ளது. இத்திணைக்களத்தின் அனுமதி இல்லாது தனியொரு நபருக்கு இத்தகைய பாரிய நிதி கிடைக்கப்பெறுவது சட்டவிரோதமானதாகும். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். நிதியை கொண்டுவர வேண்டாமென கூறவில்லை. ஆனால், அதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இது தான் எமது கொள்கையாகும்.

ஷரீஆ பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாக இயங்கவிடமாட்டோம் என்பதை தெளிவாக கூறுகிறோம். அரசாங்கத்திற்கு சுவீகரித்து மாணவர்களின் வளத் தேவைக்கான பயன்டுத்துவோம்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தெளிவான கொள்கைகள் இருந்தன. ஷரீஆ கல்வி உட்பட பல கல்வி முறைகள் தொடர்பில் தெளிவான திட்டங்கள் இருந்தன. 2015ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாட்டு போதகர்கள் வந்தனர். அவர்களது பின்புலத்தை ஆராயாது ஒன்லைன் விசாக்களை வழங்கினர். எமது காலத்தில் எவ்வாறு விசாக்கள் வழங்கவில்லை. புலனாய்வுத்துறையினர் நன்கு விசாக்களை பரிசீலனை செய்தனர்?எவர் வேண்டுமானாலும் வந்து எந்தவொரு பாடத்தையும் கற்பிக்க கட்டுப்பாடுகற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஷரீஆ சட்டமோ அல்லது வேறு எந்த பாடவிதானமாகவிருந்தாலும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் பாடவிதானங்களுக்குதான் நாம் அனுமதியளிப்போம்.

மீண்டும் இடையீட்டு கேள்விளை எழுப்பிய காவிந்த ஜயவர்தன எம்.பி.,

ஷரீஆ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான அடிக்கல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். அடிப்படைவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம், சாபி ஷாப்தீனுக்கு எதிராக நடவடிக்கையெடுப்போம் என்றே மக்களிடம் வாக்குகளை பெற்றிருந்தீர்கள். இன்று அனைத்தையும் மறந்துள்ளீர்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசாங்கத்திற்கு ஆதரவுகளை பெற்றுக்கொள்ளவும் இவ்வாறான குழுக்களுக்கு கடந்த காலத்தில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. எமது காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. அதன் பிரதிபலனைதான் இன்று அனுபவிக்கிறோம். இவை அனைத்துக்கும் நாம் இடமளிக்க மாட்டோம் என்பதே எமது பதில் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

நன்றி தினகரன்    

மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய யாழ்.பல்கலை

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது.

2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதெனிய பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, போதனை சார் வள ஆளணியினரின் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், ஆராய்சிக் கட்டுரைகளின் சர்வதேச சமர்ப்பணம் போன்ற பல அளவு கோல்களின் அடிப்படையிலேயே இந்தத் தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், மொரட்டுவ பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   நன்றி தினகரன்    


அஜித் தோவால், மரியா தீதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு

அஜித் தோவால், மரியா தீதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு-Ajit Doval-Mariya Didi-Kamal Gunaratne Meets

இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோருக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பில் தனித்தனியே இடம்பெற்ற இந்த சந்திப்புக்களின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிநேக பூர்வ கலந்துரையாடல்  இடம்பெற்றன. 

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில்  கொழும்பில் நடைபெற்ற 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும் இலங்கை  பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை,  அண்மையில் MT New Diamond எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளான போது இந்திய தரப்பினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

புதுடில்லியில் ஒரு முன்னணி சிந்தனைக் குழுவான  விவேகானந்தா சர்வதேச  மையத்தின் ஸ்தாபக பணிப்பாளராக உள்ள இவரினால் ‘தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான  விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

இந்தியாவின் உயர்ந்த பாதுகாப்பு விருதான கீர்த்தி சக்கர விருதை 1980ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ள அஜித் தோவால், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக 2014ம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை, மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையில் இடம்பெற்ற  சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோருக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் இடையில் தனித்தனியே இடம்பெற்ற இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் ஒருவருக்கொருவர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்

நன்றி தினகரன்    

No comments: