வாசகர் முற்றம் - அங்கம் 12 பரிசுத்தவேதாகமத்தையும் படைப்பிலக்கிய நூல்களையும் தொடர்ந்து படிக்கும் தேர்ந்த வாசகி வானலைகளில் அன்பின் செய்தியை பரவச்செய்யும் திருமதி நிர்மலா அல்போன்ஸ் முருகபூபதி

சிசில் பி டீ மெல் இயக்கிய Ten Commandments                                                     ( பத்துக்கட்டளைகள் ) திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.  அந்தப்பத்துக்கட்டளைகளையும் படித்தோ, கேட்டோ தெரிந்தும் வைத்திருப்பீர்கள்.              

அனைத்து கட்டளைகளையும் சுருக்கமாக இவ்வாறு                                                ( பின்வருமாறு )  இரண்டு கட்டளைகளாக்கவும் முடியும் என்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிப்பது. 

தன்னைத்தான்  நேசிப்பது போல் பிறரையும்  நேசிப்பது.

ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குநர்  சிசில் பிடீ மெல்லிடம் ஒரு


நிருபர்,  “ உங்கள் திரைப்படத்திற்கான கதைகளை எவ்வாறு உருவாக்குகிறீர்கள்..?  “ எனக்கேட்டபோது, அவர்,  “  நான் எனது திரைப்படங்களுக்கான கதைக்காக எங்கேயும் அலைவதில்லை.  பரிசுத்த வேதாகமத்திலேயே (Holy Bible) இருக்கிறது என்றார்.

உலகில் அதிகம் பிரதிகள் விற்பனையாகியிருப்பதும்  பரிசுத்த வேதாமம்தான் என்ற கணிப்பும் இருக்கிறது.

இயக்குநர் சிசில் பிடீ மெல்லைப்போன்று,  தினமும் கடவுளையும் கதைகளையும் தேடிக்கொண்டிருக்கும் தீவிர வாசகரைத்தான் இந்த வாசகர் முற்றத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். கடவுளை மக்களிடமும் தேடலாம்.

அவர்தான் திருமதி நிர்மலா அல்போன்ஸ் அவர்கள்

தமிழகம்  சென்னையில் , கிறிஸ்துவ விசுவாசத்துடன்  இறை


அன்பும் பிறர் மீது அன்பும் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

அவரது பெற்றோர் பற்றியும் குடும்ப பின்னணி பற்றியும் கேட்டதும்,

 “அம்மா மிகவும் பொறுமையும் அன்பும் கொண்டவர்.   வறுமையிலும் , வளமையிலும் ஒரே மனநிலையில் வாழ்வதற்கு எங்களை பயிற்றுவித்தவர். அப்பா நல்ல கல்வியாளர். தமிழகத்தில் அரசாங்க பணியில் தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர். என் கணவர் இசைப்பிரியர். நல்ல குரல் வளமும் இசை கருவிகள் வாசிப்பதில் தேர்ச்சியும் பெற்றவர். எங்கள் ஒரே மகன் திருமணம் முடித்து   அவுஸ்திரேலியா கன்பெராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “ என்றார் நிர்மலா.

அவர்  தமிழகத்தில் அறிவியல் இளங்கலைப் பட்டமும்  ,


உளவியல்  முதுகலைப் பட்டமும் ,  ஆசிரியர் இளங்கலைப் பட்டமும் பெற்றுபின்னர், கிறித்துவ பெண்கள் மேல் நிலைப்பள்ளியொன்றில்  சுமார் பன்னிரண்டு  ஆண்டுகள் ஆசிரியராக  பணியாற்றியவர்.  

தற்போது மெல்பனில்  கல்வித்துறை சார்ந்த  அலுவலகப்                      பணியிலிருக்கிறார்.

தமது கல்லூரி வாழ்க்கையில்,   இளமை காலத்திற்கே உரிய ஆர்வத்தில் பாலகுமாரனின் சிறுகதைகள், உமாச்சந்திரனின் சிறுகதைகள், வாரப்பத்திரிகைகள்  படிப்பதில்  ஆர்வம்  கொண்டிருந்தவர்.


 இலக்கிய நூல்களை இளமையில் படிக்கவில்லை என்பதுதான்    உண்மை என்றும் சொன்னார். அத்துடன், வயதின் தன்மைகேற்ப மனம் பக்குவம் பெறுகிறது . இப்பொழுது உளவியல், எண்ணங்கள், தத்துவம், ஜென் தலைப்பிலான வாசிப்புகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவும் தெரிவித்தார்.

தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது, முடிந்தவரையில் ஓய்வு கிடைக்கும் தருணங்களில் தான் வாசிப்பதில்தான் நேரத்தை ஒதுக்கியிருப்பதாகச் சொன்னார்.

எனினும் ,  “  இலக்கிய வாசிப்புகளை பொறுத்தமட்டில் தான் இன்னமும் முதல் வகுப்பு மாணவியாகத்தான் இருக்கிறேன் “  என்றார்.


தமிழகத்திலிருந்து 2001 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலியாவிற்கு  புலம்பெயர்ந்திருக்கும் நிர்மலாவின்  கணவர் , மெல்பனில் இயங்கும்  இந்திய தமிழ் சங்கத்தில் சில பொறுப்புகளில் இருந்த வேளையில்  அவருக்கும்  சங்கத்தின் பணிகளில்   பக்கத்துணையாக விளங்கியவர். 

இந்த புகலிட வாழ்வில் அவர் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் பணிகளைப்பற்றியும் தெரிவித்தார். அவற்றை அவரது வாய்மொழிக்கூற்றாகவே இங்கு பதிவுசெய்கின்றோம்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசத்தில் தமிழ் ஊட்டலை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய  தமிழ் பட்டதாரிகள் சங்கம் நடத்தும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கு நடுவராய் இருந்து எனது பங்களிப்பை வழங்கி வருகிறேன்.

செவ்வாய் கிழமைகளில் , 88.6  அலைவரிசையில்  மெல்பனிலிருந்து  ஒலிபரப்பாகும் வானமுதம் வானொலியில்


அன்பின் செய்தி என்ற தலைப்பில் ஐந்து  நிமிடங்களுக்கு ஒரு செய்தி கொடுத்து வருகிறேன் .

செய்தித் தாள்களும் , ஊடகங்களும் பெரும்பாலும் எதிர்மறை செய்திகளையே முன்னெடுத்து வருகையில் , உலகில் அன்பின் தளத்தில் நடைபெற்று வரும் உண்மை நிகழ்வுகளை அன்பின் செய்தி என்ற தலைப்பில் வாசித்து வருகிறேன் .

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்ட்டின் , தன் மகள் லிசலுக்கு எழுதிய கடிதத்தில் இப்படியாக எழுதுகிறார்:   “ இந்த பிரபஞ்சத்தை இயக்கும் மிகப் பெரிய ஆற்றல் ஒன்று உள்ளது. அன்பைத்  தவிர அந்த ஆற்றல் வேறொன்றும் இல்லை  “  அவர் அறிவியல் அறிஞர்.   நான் சாதாரணமானவள்.  எனவே எனது அன்பின் செய்தி என்னுடைய  எளிய செயல்.  அது  மக்களின் மனதில் மனிதர்களை பற்றிய நல்ல எண்ணங்களை ஈரமாக வைக்க உதவும் என்று நம்புகிறேன்.



மற்றும் வானொலியில் இடம்பெறும்  பாட்டும் பதமும் , இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது சில ஆக்கங்கள் தருவதும் உண்டு.

சகோதரி திருமதி நிர்மலா அல்போன்ஸ் அவர்கள், மெல்பன் வாசகர் வட்டத்திலும் இணைந்திருப்பவர்.  தொடர்ச்சியாக நூல்களைப்படித்து, தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதும்,

 

 “  மெல்பன் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருப்பது மிகவும் சந்தோசம் . பல நல்ல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. மாதம் ஒரு முறை வாசகர்களோடு சேர்ந்து கருத்துக்களை பகிர்வது மகிழ்ச்சி தருகிறது. மற்றவரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பதும் , அவரவர் கருத்தை மற்றவர் மனம் நோகாமல் பகிர்ந்து கொள்வதும் , பக்குவப்பட்ட மனிதர்களோடு பழகுவதும்  மனதிற்கு நிறைவை தருகிறது. ஒரே புத்தகத்தை , ஒரே எழுத்துகளை  பலரும்  பல் வேறுபட்ட கோணங்களில் பார்ப்பதும் , புரிந்து கொள்வதும் நம் மனதையும் அறிவையும் விசாலமாக்குகிறது .

இன்றைய   தொடர்பாடலில்   அறிமுகமாகியிருக்கும்  நவீன தொழில் நுட்பம் பற்றியும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

  “அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் கைபேசியிலும் வலைத்தளங்களிலும் செலவழிக்கும் நேரம் அதிகமாக இருப்பதால் புத்தகங்களை படிப்பது குறைந்து வருவதாக நான் நினைக்கிறேன் .  இருபது வருடங்களாக நான் ரயிலில் வேலைக்குச்  சென்று வருகிறேன் .  இருபது வருடங்களுக்கு முன்பு   ரயில் பயணிகளின் கைகளில் புத்தகம் இருந்தது. இப்பொழுது என்ன இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால்,  கைபேசியில் புத்தகம் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் எந்த அளவிற்கு முழுமையாக வாசிப்பதில் கவனம் செலுத்த முடியும் என்பது கேள்வியாகத்தான் இருக்கிறது.

நான் கைப்பேசியிலும் அவ்வப்போது தேவையின் நிமித்தம் படிக்கின்றேன். அத்துடன் அதிகம் நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் செலவிடுகின்றேன்.

வாசகர் வட்டம் மாதாந்தம் தரமான புத்தகங்களை தேர்வுசெய்து தருகின்றது. அத்துடன் பைபிள் படிக்கும் நேரத்தை அதிகமாக்கி வருகிறேன்.

நிர்மலா அல்போன்ஸ் அவர்களின்  இந்த வாக்குமூலம்தான் எமக்கு  பத்துக்கட்டளைகள் திரைப்படம் எடுத்த புகழ்பெற்ற இயக்குநர் சிசில் பி டீ மெல்லை நினைவுக்கு கொண்டுவந்தது.

நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நிர்மலா கலந்துகொள்ளும் வானமுதம் வானொலி நிகழ்ச்சியை நாம் செவிமடுப்பதுண்டு.

அவருக்கு மிகவும் பிடித்தமான தேசிய விருது கிடைத்த சைவம் திரைப்படப்பாடல் எமக்கும் பிடிக்கும். எமது ஆறுவயது பேத்திக்கும் பிடிக்கும்.  அவள் அழகே அழகு என்றால், அதனை இணையத்தில் எடுத்து ஒலிபரப்பியாகவேண்டும்.

அதில் வரும் வரிகளிலிருந்து எமது வாசகர் திருமதி நிர்மலா அல்போன்ஸ் அவர்களின்  அன்பின் செய்தியின் தாற்பரியத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

அதனை இயற்றிய கவிஞர் முத்துக்குமார்  மறைவதற்கு முன்னர் எமக்கு விட்டுச்சென்றுள்ள கருத்தாழம் மிக்க பாடல்.

தேர்ந்த வாசகி நிர்மலா அல்போன்ஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

---0---

letchumananm@gmail.com


No comments: