............... பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி
அன்றெங்கள் காரைநகர் ஈழத்துச் சிதம்பர
அழகுத்தேர்த் திருவிழாவாய் இருக்கு மோவென
நன்றாகச் சிந்தித்த வண்ணம் பேருந்திலே
நசிபட்டுத் தொங்கிநின்று பயணஞ் செய்தேன்!
மன்றாடி நெளிந்துநான் வண்டியில் இருந்தொரு
வகையாகக் காலிமுகச் சந்தியில் இறங்கி
குன்றெனவோர் உயர்மாட விடுதியின் உச்சிக்
'குளிர்அறை'யில் நண்பனைநான் காணச் சென்றேன்!.
எழிலாரும் பெருங்கடலின் அருகே அமைந்த
எட்டடுக்கு விடுதியதன் அறையோ டமைந்த
வெளிச்சன்னல் ஊடாகக் கடற்கரை மணலில்
விதம்விதமாய் மக்களங்கு கூடக் கண்டேன்
ஒளிகால முழுநீல வானில் வெய்யோன்
ஒப்பரிய எழில்பூத்து மலரக் கண்டேன்!.
களிபொங்க உளமகிழ்ந்து ஆர்ப்ப ரிக்கும்
கள்ளமில்லா உள்ளங்கள் சிரிப்பொலி கேட்டேன்!
குறையாடை தரித்தபெண்கள் குப்புறப் படுத்துக்
கொழுத்திடுங் கதிரவனொளிக் கதிரில் இருந்து
நிறைவாக உயிர்ச்சத்தைப் பெறுகின்ற போது
நீட்டியங்கு இளைப்பாறுங் கணவரைப் பார்த்துச்
'சிறையெடுத்து உயிர்பறிக்கும் சுனாமி பற்றிச்
சிறிதேனும் தெரியாது காதலில் மயங்கி'ப்
பிறையொத்த புருவத்தை உயர்த்திக் கண்ணாற்
பேசாத கதையெல்லாம் பேசியா சிரித்தார்?
வாழ்'நாளை' எப்படியோ வாழ்ந்து விட்ட
வயோதிபர்கள் வெண்மைமணல் மீதமர்ந்(து) அங்கே
ஊழ் -'நாளை' என்செய்யும் என்ற அச்சம்
ஓன்றினையும் தங்கருத்தில் எடுத்தி டாது
'நாள்'-நாளை நல்லதென்று பார்த்தி டாமல்
நனிசுவைக்க இதழ்கூட்டும் இளைஞரின் 'மன்மத
'வேள்'நாளைப் பார்த்துஐயோ!எம் இளமை தன்னை
வீணாக்கி விட்டோமே என்றா சிரித்தார்?
ஒய்யார மாய்க்கடலில் நீச்சல் உடையில்
ஒட்டியெட்டி நீந்திவிளை யாடிடக் கண்டோ?
கைசேர்த்துக் கடற்கரையில் உல்லாச மாகக்
காதல்செய மறந்தோமே! தலையும் நரைத்து
மெய்சோர்ந்து கண்ணுங்குழி யானத னாலே
விருப்பிருந்தும் முடியலையே என்பதை நினைந்தோ?
ஐயையோ பொக்குவாயைப் பொத்தித் தங்கள்
ஆற்றாமை தனையுணர்ந்தோ அவர்கள் சிரித்தார்!
மறைவாகத் தன்கணவன் அருகிலோர் இளம்பெண்
மார்போடு அணைத்துத்தன் மகனைப் பார்த்து
'நிறைவாகப் படித்துயர்ந்து மருத்துவ னாகி
நீயென்னைப் பார்பப்பாயோ கண்ணா' என்றோ
குறையாத அன்போடு பாலை ஊட்டிக்
கொஞ்சிமகிழ்ந் திட்டதாயும் சிரித்து நின்றாள்?
இறைவனவன் திட்டமேதுந் தெரியா மக்கள்
இன்றாயுள் பிரியுமெனத் தெரிந்தா சிரித்தார்!

இயற்கையன்னை சீற்றங்கொண் டெழுந்து வந்தால்
இப்படியா? பேரலையாய்ப் பனைபோல் உயர்ந்து
வியந்தவர்கள் விழிமூட முன்பே சுனாமியாய்
வேகமாய்வந் தவர்களைமூர்ச் சிக்க வைத்துத்
தயக்கமின்றிச் சுருட்டியள்ளிக் கரையை விட்டுத்
தன்னோடு நடுக்கடலுட் சேர்க்கக் கண்டேன்!
மயக்கமுற்றேன்! மதிகலங்கி அறைக்குள் வீழ்ந்தேன்.
மானிலத்தோர் பட்டகதை மறுநாட் கேட்டேன்!.
கரையோர மாயிருந்த குடிசைக ளோடு
கால்நடைகள் மற்றுமங்கு வாழ்ந்த மனிதர்
நிரையாக அடுக்கிவைத்த பொருள்கள் மற்றும்
நின்றபல வாகனங்கள் எல்லாம் அந்தோ
விரைவாக வந்திட்ட சுனாமி அள்ளி
விரைந்துகடல் புகுந்தகதை பலதும் அறிந்தேன்
அரைநொடிக்குள் இப்படியும் அழிக்கும் ஆற்றல்
ஆண்டவனே இயற்கைக்கும் உண்டோ சொல்வாய்!
அஞ்சுபெரும் பூதங்களால் ஆன உடலை
அழிப்பதென்றால் அவைகளாற்றான் அழிக்க முடியும்!
கொடுஞ்செயலாய் மனிதனவன் இயற்கை தன்னைக்
குவலயத்தில் அழித்தொழித்து வருதல் கண்டோ
பஞ்சபூதம் அஞ்சுமாக மாறி மாறிப்
படையெடுத்து மனிதர்களை அழிக்கக் கண்டோம்?
வஞ்சினத்தால் இயற்கைதந்த அழிவைக் கண்டும்
மானிடர்கள் திருந்தாது இருத்தல் நன்றோ?
எஞ்சியநல் இயற்கையொடு சூழல் தனையும்
இனிமேலும் பாதுகாத்து வாரா திருந்தால்
வஞ்சகமாய் வந்தெமக்குப் பாடஞ் சொலிப்புது
வழக்கமெலாம் 'வாய்பொத்திச் செய்ய வைத்து
அஞ்சவஞ்ச அழிவுசெய்த கொறனா' போல
ஆற்றல்மிகு புதுவழியால் இயற்கை எம்மை
கஞ்சிக்கும் வழியின்றித் தவிக்க வைத்தெதிர்
காலத்தில் அழித்தொழிக்க வந்தி டாதோ?.
சொக்கவைத்து மெய்மறந்து வியக்க வைக்கும்
சூட்சுமத்தை இயற்கையதன் அழகிற் கண்டோம்!
திக்குமுக்கு ஆடவைத்துச் சிலநிமி டத்தில்
தேடியுயிர் பறிக்குமதன் ஆற்றல் கண்டோம்!
சொக்கனவன் படைத்தருளி இயைந்து வாழச்
சொல்லியதை மறந்திடாது சூழல் தனையும்
தக்கபடி மாசிலாது காத்து இயற்கை
தனைவணங்கி வாழ்வாங்கு வாழ்தல் நன்றே!
No comments:
Post a Comment