மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 57 முருகபூபதி


இரவு  வேலையால் வீடு திரும்பியிருந்த ஜீவிகாவிடம், வீடு பார்க்க வந்தவர்கள் பற்றி அபிதா சொல்லிக்கொண்டிருந்தாள்.  “  பெரியப்பாவும், அவள் தர்ஷினியும் இந்த வீட்டை விற்பதில் வெகு உஷாராகத்தான் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது.  அவளுக்கு பயம் வந்துவிட்டது என நினைக்கிறேன் அபிதா.  நான் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடிவிடுவேன் என்ற யோசனை அவளுக்கு வந்திருக்கலாம்.  எல்லாம் பெரியப்பாக இங்கே வந்து திரும்பிய பின்னர் அவளிடத்தில் தோன்றிய மாற்றங்கள்தான். “ ஜீவிகா சொல்லச்சொல்ல அபிதா கேட்டுக்கொண்டிருந்தாள். அபிதாவுக்கு  இந்த பூராயங்களைக் கேட்பதில் ஆர்வம் இல்லை.  

தனக்கு வேலையும்,  தங்குவதற்கு இடமும் தந்து நன்றாக கவனித்துக்கொள்ளும் ஜீவிகா சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கவேண்டியது தனது கடமைதானே என்ற எண்ணத்திலேயே பொறுமையுடன் வீட்டுப்பணிகளை செய்தவாறே அந்தக்குடும்பத்தின் பல உள்விவகாரங்களையும் அபிதா கேட்கநேர்ந்தது. இந்தக்  குடும்ப பிரச்சினைகளில் தான்


சிக்கிவிடாமல்,  வெறும் பார்வையாளராக மாத்திரம் இருக்கவே அபிதா விரும்பினாள். இன்றைக்கு சண்டை பிடிப்பார்கள்.  பின்னர் என்றாவது ஒருநாள் கூடிக்கும்மாளம் போடுவார்கள். சேருவது இனம், மாறுவது குணம்தானே..? நான் எனதுபாட்டை இனிப்பார்க்கவேண்டும்.  

இந்த வீட்டுடனான  எனது சொந்தம் தற்காலிகமானதுதானே.  இதற்கு முன்னர் இங்கே எத்தனை வேலைக்காரிகள் வந்து வந்து போயிருப்பார்கள்.  நானும் அப்படித்தானே..?  பாசம் கண்ணை மறைக்கும்போதுதானே மனக்கவலைகள் ஏமாற்றங்கள் வருகின்றன.  யார் யாரை எங்கெங்கே சந்திப்போம்…?  எங்கெங்கே விட்டுப்பிரிவோம்…?  என்பது கூட தெரியாத வாழ்க்கை.   தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு போகும் வரையில்  “ அபிதா… அபிதா…  “  என்று மாறி மாறி அழைத்துக்கொண்டும் -  வேலை வாங்கிக்கொண்டுமிருந்த  கற்பகம் ரீச்சர்,  சுபாஷினி, மஞ்சுளா படிப்படியாக அகன்றுவிட்டார்கள். அவரவர் தத்தம் எதிர்காலத்தை கவனிக்கப்போய்விட்டார்ள். இடைக்கிடை தொடர்புகொண்டு பேசினாலும்,  கிணற்றில் விழுந்த கல்லினால் தோன்றும் வளையங்கள் படிப்படியாக மறைந்துவிடுவதைப்போலத்தானே இந்த உறவுகளும். 

இன்று இங்கே தனது பெரியப்பா மகள் தர்ஷினி பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் இந்த ஜீவிகாவும் கொழும்போடு சென்று தனது புருஷன் – வேலை என்று தனது கவனத்தை தீவிரப்படுத்த தொடங்கியதும், இன்று இப்போது இங்கே பேசிக்கொண்டிருப்பதையும் மறந்துவிடுவாள்.  காலம் தரித்து நிற்பதில்லையே.  இருகோடுகள் தத்துவம்தான்.  ஒரு கோடு வரைந்து அதனை


சிறிதாக்கவேண்டுமானால்,  அருகில் பெரிய கோட்டை வரைவதில்லையா…,? வாழ்க்கையும் அப்படித்தான். அபிதா கடந்த சில மாதங்களாக மனதிற்குள் தனக்குத்தானே பேசத்தொடங்கியிருந்தாள்.  

கற்பகம் ரீச்சரும், சுபாஷினியும் மஞ்சுளாவும் சென்றபின்னர்,  வீட்டுப்பணிகள் குறைந்து,  தனக்குள்  உரையாடிக்கொண்டிருப்பது கூடித்தான்விட்டது. தினமும்  அவள் எழுதிவரும் நாட்குறிப்பிலும் எழுதுவதற்கு பல விடயங்கள் கிடைக்கிறது.   சிலவேளை, அந்த சிங்கள இன்ஸ்பெக்டர் குடும்பம், இந்த வீட்டை விலைக்கு வாங்கிவிட்டால், என்னையே தொடர்ந்தும் இந்து வீட்டின் வேலைக்காரியாக வைத்திருப்பார்களா..?  அந்தப்பெண்ணின் முகத்தில் கனிவு  தென்பட்டதே. 

அந்த இன்ஸ்பெக்டரும் எனது அரைகுறை சிங்களத்தை கேட்டு ரசித்து சிரித்தாரே…?! அவ்வாறு நடந்தால், வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் இருக்கும் என்னவரின் உறவினர்கள் இது பற்றி அறியநேர்ந்தால், என்ன சொல்வார்கள்…?    “ இருக்குமட்டும் இருந்துவிட்டு சிங்களவருக்கு கழுவித்துடைக்கப்போயிருக்கிறாள்  “ எனவும் சொல்லக்கூடும்.  சொன்னால் என்னவாம்…  சொல்லிவிட்டுப்போகட்டும். அவர்களின் சொந்த பந்தங்கள் அகதிகளாக அய்ரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா சென்று அங்கே விடுதிகளிலும் ரெஸ்ரூரண்டுகளிலும்  யார் யாருக்கோ கழுவித்துடைக்கவில்லையா..?  ஏன்… என்னுடைய  அவரே ஒரு நாள் சொன்னாரே ஒரு செய்தி.  அதனை முதலில் நம்பமுடியாதிருந்தது.  பிறகுதான் அப்பாவும் சொல்லி நம்பமுடிந்தது. அபிதா பழைய நினைவுகளில் தோய்ந்தாள்.  “  ஓம் பிள்ளை, பார்த்திபன் சொன்னது சரிதான்.  தந்தை செல்வநாயகத்தின்ர கொழும்பு வீட்டில் ஒரு சிங்களவர்தான் நீண்டகாலமாக வேலைக்கு இருந்தவர்.   தந்தையும் அவரின்ட மகனும் அந்த ஆளை நன்றாகப்பார்த்துக்கொண்டார்கள் என்பதும் தெரியும். அதுமட்டுமல்ல, உனக்குத் தெரியுமா, எங்கட நாட்டில் மட்டுமல்ல, முழு உலகத்திலுமே முதல் பெண் பிரதமர் என்ற பெயரும் புகழும் எடுத்த ஶ்ரீமாவோ பிறந்த ஊர் பலாங்கொடையில் கூட  தந்தை செல்வநாயகத்திற்கு பெட்டிய கல எஸ்டேட் என்ற பெயரில் ஒரு பெரிய தேயிலைத்தோட்டமும் முன்பு  இருந்தது.  “   “ வெளிநாடு வெளிநாடு என்று ஓடும் எங்கட ஆட்களின்ட பிள்ளைகள் அங்கே வெள்ளையலையும் கறுப்பரையும் கட்டியிருக்குதுகள்.  

பலர் சிங்களவரையும் கட்டியிருக்கிறார்கள்.   ஆனால், இங்கேதான்  இனப்பிரச்சினை அது இது என்று போராட்டங்கள் – சிங்களவர் – தமிழர் என்ற பாகுபாடு.   “  என்று  அபிதாவின் அப்பா அன்று  சொன்னதை வேறு ஒரு கோணத்தில் பார்த்திபன் சொன்னதும் அபிதாவுக்கு நினைவுப்பொறியில் தட்டியது.  சிரிப்பும் வந்தது. தன்னையறியாமல் சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பு ஜீவிகாவுக்கும் கேட்டது.   “ என்ன அபிதா…?  உங்களுக்குள்ளே சிரிக்கிறீங்க… எனக்கும் சொல்லுங்கோ… நானும் சிரிக்கிறேன்.  “ கூடத்தில் அமர்ந்து கைத்தொலைபேசியில் முகநூல் பார்த்துக்கொண்டிருந்த ஜீவிகா, முகம் திருப்பிக்கேட்டாள்.  

“  ஒன்றும் இல்லையம்மா… பழைய நினைவுகள் வந்திட்டுது. சிலவேளை இந்த வீட்டை அந்த சிங்கள இன்ஸ்பெக்டர் குடும்பம் விலைக்கு வாங்கநேர்ந்தால், சிலவேளை என்னையே தொடர்ந்தும் இங்கே வீட்டு வேலைக்கு வைத்திருப்பாங்களா…? என்று கற்பனை செய்து பார்த்தேன். அதுதான் சிரிப்பு வந்தது. அது மட்டுமல்ல..,  என்ர அவர் ஒரு தடவை சொன்னதை நினைத்தும் சிரித்துவிட்டேன்.  “ என்றாள் அபிதா.  “  அதுதான் கேட்கிறேன்.  நீங்கள் சிரித்ததற்கான காரணம் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது.  உங்களை வீட்டு வேலைக்கு அந்தக்குடும்பம் கேட்பதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் எதனையோ மறைத்து சிரிக்கிறீர்கள்  “  இவளுக்கு என்ன…  மைண்ட் ரீடிங் ஆற்றலும் இருக்குமோ…?  அபிதா துணுக்குற்று சிரித்துவிட்டு,   “  ஜீவிகா அம்மா… அதனைச்சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது.  முதல் வரியை மாத்திரம் சொல்கிறேன்.  அதற்கு முன்பு நான் நினைத்த மாதிரி அந்த சிங்களக்குடும்பம் என்னை வேலைக்கு வைத்துக்கொண்டால், என்ர அவரின்ட ஆட்கள் ஊரில் என்ன சொல்லக்கூடும் என்றுதான் யோசித்தேன். 

அத்தோடு வந்த பழைய நினைவுதான்  நான் சிரித்தமைக்கு காரணம்.  “  “ அதுதான் அபிதா, கேட்கிறேன். எதற்கு சிரித்தீங்க..?  “   “ சரி… முதல் வரியை மாத்திரம் சொல்கிறேன். மிகுதியை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்  “   “ என்ன சஸ்பென்ஸோ… சரி… சொல்லுங்க .. “  “ தொண்டைக்கு கீழே ருசி இல்லை…. இதற்குக்கீழே சாதியில்லை  “  அபிதா தனது வயிற்றை காண்பித்துவிட்டு  வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள்.   “அட போக்கிரி பெட்டை, இப்படியெல்லாம் பேசத்தெரியுதா…?  “   “  அம்மா நான் சொன்னது இல்லை. என்ர அவர் முன்புசொன்னது.  “   “ அவர் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்.  இப்போது யார் இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் என்று நாடாளுமன்றத்தில் பட்டிமன்றம் நடக்கிறது.  

அங்கே சனம் தெருவில் நின்று இரண்டு வருடத்திற்கும் மேலாக கத்திக்கத்தி போராடிக்கொண்டிருக்கிறது.  அதிலும் சிலது தங்கட பிள்ளைகளை தேடித்தேடி களைத்துப்போய் செத்தும் போயிட்டுதுகள்.  செய்தி எழுதி எழுதி எனக்கு தலை விறைச்சதுதான் மிச்சம் அபிதா.  நீட்டி முழக்கி  ஏட்டிக்குப்போட்டியாக பேசுவாங்கள். பிறகு நாடாளுமன்ற கன்ரீனில் கேக்கும் பிஸ்கட்டும்  ரீயும்  ஒன்றாக நின்று வாங்கிச்சாப்பிட்டு குடிப்பாங்கள்.  நாங்களும் நாளும் பொழுதும் பக்கம் நிரப்பி வயிற்றை கழுவுகிறோம். பாவம் சனங்கள். “   அபிதா, தொடர்ந்தும் முகநூலில் மூழ்கினாள். அபிதா,  தனது அறைக்குத் திரும்பி, மடிக்கணினியை திறந்தாள். நாட்கள் சக்கரம் பூட்டி விரைவதாக  அபிதா, தனது நாட்குறிப்பில் எழுதிக்கொண்டிருந்தாள்.  

சிங்கள இன்ஸ்பெக்டர் குடும்பத்திடமிருந்தோ,  லண்டன் பெரியப்பா, அவர் மகள் தர்ஷினியிடமிருந்தோ அதன்பிறகு எந்த சிலமனும் இல்லை என்பது அபிதாவுக்கு பெரும் புதிராக இருந்தது. அதன்பின்னர், அந்த வீடு விற்பனைப்பிரதிநிதி இரண்டு தடவை வந்துபோய்விட்டான்.  ஒரு தடவை ஒரு தமிழ்  வர்த்தக பிரமுகரை அழைத்து வந்து காண்பித்தான்.  அந்த ஆளை அபிதாவும் முன்னர் பாடசாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் கண்டிருக்கிறாள். தன்னிடம் பாடம் கேட்டு படிக்கவரும் தமயந்தியின் மகன் உதய சங்கர் அழைத்துச் சென்றிருக்கிறான். 

அன்று அவனுக்கும் பரிசும் சான்றிதழும் கிடைத்தது. தன்னை அவன் சக நண்பர்களிடம் தனது அன்ரி என்று அறிமுகப்படுத்தியபோது அபிதா சற்று நெகிழ்ந்துபோனாள்.  மறுகணம்  அங்கு நின்ற மங்களேஸ்வரி ரீச்சர், மற்றும் ஒரு ஆசிரியையிடம்  “ இதுதான் கற்பகம் மிஸ் இருந்த வீட்டின் சேர்வண்ட் “  என்று சொன்னதும் சற்று சங்கடப்பட்டாள்.   மாணவருக்கும் ஆசிரியர்களுக்குமிடையில்தான் எத்தனை வேறுபட்ட பார்வை..? எத்தனை  மாறுபட்ட கோணம்..?  வீடு பார்க்க வந்த அந்த தமிழ் வர்த்தக பிரமுகரை அபிதா சில தடவைகள் கடைத்தெருவிலும் கண்டிருக்கிறாள். அவருக்கு நிகும்பலையில் நகைக்கடை, புடவைக்கடை,  மளிகைக்கடை எல்லாம்  இருப்பதாக தமயந்தி சொல்லித்தான் அபிதாவுக்கும் தெரியும். ஒருநாள்,  லண்டன்காரர் அபிதாவுடன் பேசும்போது,  “ என்ன அய்யா… அந்த ஆள் மாறி மாறி ஒவ்வொருத்தராக அழைத்து வந்து காண்பிக்கிறார்.  ஏதும் சரி வந்த சிலமன் இருக்கா அய்யா..?  “ எனக்கேட்டாள். “  அபிதா… எதுவும் நாங்கள் சொல்லும் விலைக்கு வருவதாகத் தெரியவில்லை.  

நான்தான் மீண்டும் வந்து பார்த்து விலைபேசி விற்கவேண்டும் போலத் தெரிகிறது. இப்ப இருக்கும் சூழ்நிலையில் வரக்கூடிய சாத்தியமும் இல்லைத்தானே… அங்கே மீண்டும் கொரொனோவின் இரண்டாவது அலை பரவியிருக்குது. நீயும் ஜீவிகாவும் கவனம்.   மாஸ்க் இல்லாமல் வெளியே போகவேணாம்.. தண்டப்பணம் எவ்வளவு என்று தெரியும்தானே…,?  அந்த இன்ஸ்பெக்டருக்கு ஏதோ இடமாற்றம் வந்துவிட்டதாம்.  இந்த கோவிட் நெருக்கடியால் வந்த வினை என்று ஏஜண்ட் சொல்கிறார்.  பார்ப்போம்… நீ… வீட்டை எப்போதும் கூட்டிப்பெருக்கி துப்புராவாக வைத்திரு.  அந்த ஏஜண்ட்  பிறகும் ஆட்களை அழைத்து வங்து காண்பிப்பார்.    

கற்பகம் ரீச்சர் ஊரிலிருந்து திரும்பி வந்து தனது சாமான்களை எடுத்துக்கொண்டு போனாவா… மற்றப்பெட்டையளுக்கும் நான் சொன்னதாகச்  சொல்லு,   வீட்டை விற்றுவிட்டால், பிறகு அவற்றை அப்புறப்படுத்துவதும் சிரமம்.  உனக்குத்தான்  அந்த வேலையும் வரும். கவனம்.   “ சண்முகநாதன் சொல்தையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த, அபிதா,  “  எல்லாம் சரி அய்யா… வீட்டில் இருக்கும் அம்மாவின்ர… அதுதான் உங்கட மனைவியின்ர படத்தை என்ன செய்வது.,…? “  எனக்கேட்டதும் மறுமுனையில் சில கணங்கள் நிசப்தம் நிலவியது. சண்முகநாதனிடமிருந்து -  லண்டன்  மிடில்செக்ஸிலிருந்து  வெளிப்பட்ட  பெருமூச்சு  ஆயிரக்கணக்கான மைல்களையும் ஒரு கணம்  கடந்துவந்து நிகும்பலையூரில் அபிதாவின் செவிக்கு எட்டியது.    தமயந்தி ஒருநாள் மகன் உதயசங்கருடன் வந்தாள்.  “  அன்ரியிடம் போவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.   இவன் நேற்று ஒரு கனவு கண்டானாம்.   உங்களைப்பற்றிய கனவாம்.  உங்களிடம்தான் சொல்லவேண்டுமாம். நான் கேட்டுப்பார்த்திட்டேன் அபிதா…  “ அன்ரி போகவேண்டாம்… போகவேண்டாம் … “  என்று கனவில் கத்தினான்.  

தட்டி எழுப்பி தண்ணீர் கொடுத்து குடிக்கவைத்து திருநீறும் பூசிவிட்டு உறங்கவைத்தேன்.  நல்ல கனவோ…கெட்ட கனவோ… தெரியவில்லை.  உங்களைத்தானே இங்கே அன்ரி… அன்ரி என்று கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.  அபிதா அன்ரியா எனக்கேட்டதற்கும் தலையைத்தான் ஆட்டுகிறான். கண்ட கனவு என்னவென்று மாத்திரம் சொல்கிறான் இல்லை அபிதா. அவரும் விமானம் இல்லாதமையால் வரமுடியாமல் தடைப்பட்டு நிற்கிறார். சவூதிக்காரன் இனி எப்போதுதான் விமானத்தை பறக்கவிடுவானோ தெரியவில்லை.  எனக்கு கடைத்தெரு பக்கம் போகவேண்டியிருக்கு.  சில வேளை இங்கேயும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வரும்போலக்கிடக்கு.  கொஞ்சம் சாமான்களை வாங்கி வைக்கப்போகிறேன். உங்களுக்கும் ஏதும் தேவை என்றால் சொல்லுங்க…..” வாங்கி வாரன்  “ தமயந்தி மூச்சுவிடாமல் சொன்னபோது, அதனை செவிமடுத்தவாறு உதயசங்கரையே அபிதா ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ‘  இவன் அப்படி என்ன கனவு கண்டிருப்பான்.  

‘ அவனது தலையை அபிதா தடவி வருடிவிட்டாள்.   “ வீட்டில் இப்போது நானும் ஜீவிகாவும்தானே…?  எல்லாம் இருக்கிறது… நீங்க போயிட்டு வாங்க… இந்த பார்த்திபன் என்ன கனவு கண்டிருப்பார் என்று நான் கேட்கிறன். கல்கி எழுதிய பார்த்திபன் கனவு மாதிரி இந்த உதயசங்கரும் என்ன கனவு கண்டிருப்பார்….”   என்று தமயந்தியின் மகனை அணைத்துக்கொண்டு அபிதா சொன்னாள். “   அபிதா… உங்கட காணாமல்போன அவரின்ட பெயரும் பார்த்திபன்தானே..? “  எனக்கேட்டாள் தமயந்தி.  அபிதா தலையாட்டினாள். தமயந்தி கடைத்தெருவுக்கு புறப்பட்டாள்.  அபிதா, உதயசங்கரின் கையை பற்றிக்கொண்டு கேட்வரையும் வந்து வழியனுப்பிவிட்டு,   “ அப்படி என்னடா கனவு கண்டாய்… சொல்லு. உன்ர அம்மாவிடம் சொல்லமுடியாத, என்னிடம்தான் சொல்லவேண்டும் என்கிற கனவு என்னடா… சொல்லுடா.. “  அபிதா, உதயசங்கரின் நாடியை பரிவோடு தடவியவாறு கேட்டாள். ( தொடரும் )    



 

No comments: