இலங்கைச் செய்திகள்

ரிஷாட்டுக்கும், யாசீனுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை

நாட்டை முடக்காது சகலவித முன்னேற்பாடுகளும் முன்னெடுப்பு

பிரதமரின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான்

கைது செய்யப்படப் போவதை அறிந்து தப்பிச் சென்ற ரிஷாட்

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை

சட்டத்தை மலினப்படுத்த இடமளிக்காதீர்; ரிஷாட் கைதாகாமை குறித்து சட்ட மாஅதிபர் பொலிஸார் மீது கடும் சீற்றம்

ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்

ஏப். 21 தாக்குதல்; ரிசாத், அதாவுல்லா சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை


ரிஷாட்டுக்கும், யாசீனுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை

ரிஷாட்டுக்கும், யாசீனுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை-Travel Ban-Rishad Bathiudeen-Samsudeen Mohamed Yaseen

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றம் சம்சுதீன் மொஹமட் யாசீன் ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியமை, அதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வாக்காளர்களை வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்டுத்திக் கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 








நாட்டை முடக்காது சகலவித முன்னேற்பாடுகளும் முன்னெடுப்பு

மக்களது பூரண ஒத்துழைப்புடன் தொற்றை கட்டுப்படுத்த அரசு உச்சக்கட்ட நடவடிக்ைக

கொரோனா வைரஸ் நெருக்கடியை உச்ச அளவில் கட்டுப்படுத்திய நாடு என்ற வகையில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலையிலும் உரியவாறு கட்டுப்படுத்த முடியுமென்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

தற்போது உருவாகியுள்ள வைரஸ் தொற்று சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச அளவில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், மக்கள் அஞ்சத்தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டை முடக்காமல் பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளதால் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன் பொறுப்புடன் நடந்து முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் அது தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்ததுடன் அமைச்சர் ரமேஸ் பத்திரன மேலும் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை உருவாகியபோது அரசாங்கம் 60 இலட்சம் குடும்பங்களுக்கு சுமார் 60 பில்லியன் நிதியை நிவாரணமாக வழங்கியது.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படவேண்டுமென்பதே குறிப்பாக நாட்டை முடக்கி பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியமாகவுள்ளது. எதிர்வரும் காலங்களில் மக்கள் தனித்தனியே தத்தமது சுகாதார நிலைமைகளில் கவனம் செலுத்தவேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன் சுகாதார துறையினர் மற்றும் அரசாங்கம் விடுக்கும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களில் குறித்த தொழிற்சாலை சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதுடன் வைரஸ் தொற்று உருவாகியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் ஆணையாளரின் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார். நாம் அதன் ஆரம்பத்தை இனங்கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. தற்போது இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தொற்று நோயாளர்களின் பெரும்பாலானோர் உரிய கொத்தணிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் தெளிவாக இனங்கண்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி வரை முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1397 ஆகும். தற்போது மேற்படி கொத்தணி சூழலில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை 24,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தினமும் 7,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 26 வைத்தியசாலைகளில் வைரஸ்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது. அரசாங்கம் மேற்படி நிலைமை முகாமைத்துவம் செய்வதற்கு உச்சளவு பங்களிப்பை செய்கிறது. அதனால் மக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 






பிரதமரின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவரும் ஊவா மாகாண சபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் .

இந் நியமனத்தை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செந்தில் தொண்டைமானிடம் கையளித்தார்.

செந்தில் தொண்டமான் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறை விவகாரங்களுக்கான இணைப்பாளராக கடமையாற்றி வரும் நிலையில் இந்த புதிய நியமனமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 

கைது செய்யப்படப் போவதை அறிந்து தப்பிச் சென்ற ரிஷாட்

CID விசாரணையில் தகவல்; மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என்பதை தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தாரென குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ரிஷாட் கடந்த 13ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்புக்கு வந்துள்ளார். பயணத்தின் போது தனது வாகனத்திலுள்ள வானொலியில் ஒலிபரப்பான தனியார் வானொலி அலைவரிசை ஒன்றின் செய்தியை செவிமடுத்துக் கொண்டிருந்தாரென குற்றப்புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்ட மாஅதிபர் பொலிஸாருக்கு உடனடியாக பதியுதீனை கைது செய்து காவலில் வைக்குமாறு அறிவித்ததாக அந்தச் செய்தி அமைந்திருந்தது.

உடனே சாரதியிடம் புத்தளம் – சிலாபம் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியதுடன் உடன் அதிலிருந்து வெளியேறி பிறிதொரு வாகனத்தில் புத்தளத்துக்கு தப்பினார்.

இது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நேரத்தில் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு வாகனத்திலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரான பதியுதீன் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பின்பு, முன்னாள் அமைச்சரின் அதிசொகுசு ஜீப்பை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பறிமுதல் செய்ததுடன் அதிலிருந்த இரு சாரதிகளையும் கைது செய்தனர். வாகனத்தின் உள்ளே கண்டெடுக்கப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

தற்போது முன்னாள் அமைச்சர் பதியுதீனைத் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு கொழும்பில் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


 




20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை

கனேடிய தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லையென்பதுடன் 13 ஆவது திருத்தத்தை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று நடைபெற்ற கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினனுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தை குறைப்பதற்கு கனாடாவின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும் அமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவையென்ற அடிப்படையில் வீசப்படுகின்றன.

ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.

இந்நிலையிலேயே கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர், அது தொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன் இலங்கையின் சமுத்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர்ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கமைய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கமைய அரசியலமைப்பில் இத் திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமையையும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






சட்டத்தை மலினப்படுத்த இடமளிக்காதீர்; ரிஷாட் கைதாகாமை குறித்து சட்ட மாஅதிபர் பொலிஸார் மீது கடும் சீற்றம்

உத்தரவுகள் பலவும் மீளவும் பிறப்பிப்பித்தார்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்ட மாஅதிபர் டப்புல டி லிவேரா, பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிஷாட்டை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ரிஷாத் பதியுதீனை இதுவரையில் பொலிஸார் கைது செய்யவில்லை. சட்டத்தை மலினப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்படக்கூடாதென சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளையும், சட்ட மாஅதிபர் வழங்கும் அறிவுறுத்தல்களையும் பொலிஸார் மெத்தனமாக கருதி விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரிஷாத் கைது செய்யப்படாமை தொடர்பில் சட்ட மாஅதிபர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசாத் ரணசிங்கவிற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொது மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பொலிஸார் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை மீறிச் செயற்படும் முன்னாள் அமைச்சருக்கும், அவருக்கு உதவுவோருக்கும் எதிராக சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சட்ட மாஅதிபர், பொலிஸாருக்கு கடுமையான தொனியில் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் தலைமறைவான நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகமும் நேற்று தெரிவித்தது.

நேற்று முன்தினம் மாலை 6.00 மணியாகும்போது 48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் அவரைக் கைது செய்ய முடியவில்லையென பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ரிஷாத் பதியுதீனை தேடி கொழும்பின் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடத்திலும், வெள்ளவத்தை மற்றும் மன்னார் பகுதிகளிலும் விசேட தேடுதல்கள் நடத்தப்பட்டபோதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும், அவருடன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதீன் மொஹம்மட் யாசீனையும் கைது செய்ய முடியவில்லையெனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரசாத் ரணசிங்கவின் கீழ் 6 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக உளவுத் துறையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் வணிக குற்ற விசாரணைப் பிரிவையும் இந்த விசாரணைகளையும் மேற்பார்வை செய்யும் உயர் அதிகாரி ஒருவரை சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

ரிஷாத்தை கைது செய்ய சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கி 48 மணி நேரமும் கடந்துள்ளதன் பின்னணியிலேயே அவரை இடமாற்றுவதற்கான பரிந்துரை அடங்கிய பத்திரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையிலேயே, ரிஷாத் பதியுதீனை கைது செய்ய ஆலோசனை பிறப்பிக்கப்பட்டு இரு நாட்களாகும் நிலையில், அவர் கைது செய்யப்படாமை தொடர்பில் சட்ட மாஅதிபர் டப்புல டி லிவேரா, நேற்று முன்தினம் மாலை சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை தனது அலுவலகத்துக்கு அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.

சட்டத்தின் மீதான ஆட்சியைப் பாதுகாக்குமாறு இதன்போது சட்ட

மாஅதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளையும் நீதிமன்ற உத்தரவுகளை கால தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எச்சரித்து தெரிவித்ததாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதன்போது தாமதாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதையும் சி.ஐ.டி. பிரதானிக்கு சட்ட மா அதிபர் எடுத்துரைத்துள்ளார்.   நன்றி தினகரன் 






ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்

Saturday, October 17, 2020 - 10:09am
ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்-Riyaj Bathiudeen-Writ Petition-Will Be Taken On Oct 20

அவசர தேவை என மனுதாரர் விடுத்த கோரிக்கை ஏற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இம்மனு நேற்று (16) மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இம்மனு அவசர தேவைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

இதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 







ஏப். 21 தாக்குதல்; ரிசாத், அதாவுல்லா சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை

ஏப். 21 தாக்குதல்; ரிசாத், அதாவுல்லா சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை-Galle Thakwa Mosque President and Treasurer Released from Accusations

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலி அத்தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷேக் அதாஉல்லாஹ் பஹ்ஜி, பொருளாளர் எம். ரிஷாத் ஆகியோர் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டு கடவுச் சீட்டுகள் மீள வழங்கப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட மடிகணனி ,டெப் என்பனவும் மீள வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 16ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது சட்ட மாஅதிபர் திணைக்கள விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் ஹர்சண கெகுணுவெல்ல  சந்தேகநபர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பள்ளிவாசல் தலைவரும் பொருளாளரும் கடந்த 2019 ஏப்ரல் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்கள். ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பள்ளிவாசலை நிர்மாணிக்க ஸஹ்ரானுடன் தொடர்பினூடாக பணம் கிடைத்ததாகவும் இனவாதத்தை தூண்டும் விரிவுரைகள் நடத்தப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், பள்ளிவாசலில் இருந்த 800 ற்கும் அதிகமாக இறுவட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் தொடர்ந்து தடுத்து  வைக்கப்பட்டிந்த நிலையில், ஆறு மாதங்களின் பின்னர் கடந்த 2019 ஒக்டோபரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு இறுவட்டுகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்நிலையில் இறுதியாக கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2021 மார்ச் 15 இற்கு வழக்கு பின்போடப்பட்டது.

இந்த நிலையிலேயே சட்ட மாஅதிபர் திணைக்கள அறிக்கை காலி பொலிஸிற்கும் நீதிமன்ற பதிவாளருக்கும் அனுப்பபட்டது.

இதனையடுத்து பொலிஸார் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் வழக்கு கடந்த வௌ்ளியன்று (16) மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது எனவும் இறுவட்டுகளில் சந்தேகத்திற்கு இடமான விரிவுரைகள் கிடையாது எனவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டதோடு வழக்கும் நிறைவுக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கே.ஆர்.எம். முபீன் ஆஜராகியிருந்தார். (பா)   நன்றி தினகரன் 





No comments: