அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 36 – பம்பை – சரவண பிரபு ராமமூர்த்தி

 பம்பை – தோற்கருவி  


'பம்பை உடுக்கை கொட்டி, பரிவட்டம் மேலே கட்டி, தங்கரதம் போலே ஆடும் வித்தாரக் கள்ளி; எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு, அச்சாரம் சொல்லி,' என்று ரிக்க்ஷாக்காரன் படத்தில், எம்.ஜி.ஆர்., நடித்த பாடல், அதில் நாம் தமிழகத்தில் புழங்கி வந்த பம்பையின் பழைய வடிவை காணலாம். இரு உருள் வடிவ பகுதிகள் சேர்ந்தது பம்பை. பழைய பம்பையில் ஒரு உருள் மிகப் பெரியதாக இருக்கும். மற்றொன்று சிறியதாக இருக்கும். நீளமும் தற்கால பம்பையின் முக்கால் அளவு தான் இருக்கும். 

பழைய பம்பைகள் மரத்தில் தான் செய்யப்பட்டது. கோவில்களுக்கு ஐம்பொன் அல்லது வெங்கல பம்பைகள் செய்து சிலர் காணிக்கை அளித்தார்கள். பிறகு இந்த முறையே எல்லா


இடங்களிலும் பம்பை தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது பித்தளை/இரும்பில் கூட பம்பை வந்து விட்டது. 

ஆனால் அதில் நாதம் வராது சத்தம் தான் வரும். பம்பையின் ஓலியை அதிகரிக்க அதன் நீளம் அதிகரிக்கப்பட்டதாக கூறுகிறார் 9 தலைமுறைகளாக இக்கலையைப் பேணி வரும் புதுச்சேரி திரு ஞ. செந்தில் அவர்கள். பம்பையின் ஒரு பகுதியை அலங்காரம் என்றும் மற்றொன்றை திம்மி என்றும் அழைக்கிறார்கள். 

மேற்கு தமிழகத்தில் பெரிய உருளையை 'துந்துமி' என்றும், சிறியதற்கு 'திமிரி' என்றும் பெயர்.  அலங்காரம் பகுதிக்கு ஆட்டுத்தோலும் திம்மிக்கு மாடு அல்லது எருமைத் தோலும் கட்டுவார்களாம். மரமும் தோலும் பயன்படுத்தி செய்த பம்பை தான் இனிய நாதம் தரும் என்கிறார் திரு செந்தில். சுமார் 100 ஆண்டு பழமையான செந்தில் அவர்களின் பாட்டனார் திரு பழனி பூசாரி பயன்படுத்திய பாரம்பரிய புதுச்சேரி பாணி கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட பம்பையை படத்தில் காணலாம்.  

பண்ருட்டி வட்டாரங்களில் பம்பையின் வடிவம் வேறு. பண்ருட்டி பலாவின் செழிப்பால் திம்மி பகுதியை பலா மரத்தில் செய்கிறார்கள். தவிலை போல இருக்கும் ஆனால் அதைவிட சிறியது. தோல் எல்லாம் கிடையாது. மலையேறி விட்டது. ஃபைபர் தட்டுகள் தான் என்கிறார் பண்ருட்டியைச் சேர்ந்த பம்பை இசைக்கலைஞர் திரு நாகராஜ் அவர்கள். இது தவிலுக்குப் போட்டியாக இடைக்காலத்தில் உருவான ஒரு பம்பை வடிவம். மற்ற பம்பையை விட ஒசை அதிகம் தரவல்லது.   

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செஞ்சி, மேல்மலையனூர் போன்ற பகுதிகளில் சிலர்


வைத்து இருக்கும் பம்பை வேறு ஒரு வடிவத்தில் இருக்கின்றது. ஒரு பகுதி உருளையாகவும் மற்றொன்று உருமி அமைப்பில் இருக்கும். இதைத் தொடையின் கீழ் வைத்து அழுத்தியும் விடுத்தும் இசைப்பார்கள். ஆதியன் எனப்படும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வருமானம் கருதி தங்களுடைய பூர்வீகத் தொழில்களை விட்டுவிட்டு பம்பை இசைக்க வந்த போது, உருமி மேல் உள்ள தங்களது ஈர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பம்பையில் சில மாற்றங்களைச் செய்துகொண்டார்கள்.  

இப்பிரிவினர் இதை இசைக்கும் போது அதிலே உருமியின் சத்தத்தைக் கொண்டு வருகிறார்கள். ”தொம்” என்று ஒலிக்காமல் “தொம்ம்ம்ம்ம்ம்…” என்று ஒலிக்கும். மேல்மலையனூர் போன்ற கோயில்களில் விழா நாட்களில் இவர்களை மிகுதியாக நாம் காணலாம். இது ஒரு வகை பம்பை.  தென் தமிழ்நாட்டில் இசைக்கப்படும் பம்பை முழுவதும் மரத்தில் தான் செய்யப்படுகிறது. 

பலா மரம் தான் இதற்கு ஏற்றது. வேங்கை மரமும் முன்பு பயன்பட்டது. தற்பொழுது கிடைப்பதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழ் பகுதியைத் தொம்மி என்கிறார்கள்.


திருநேல்வேலி பக்கம் மந்தம் என்கிறார்கள். ஆட்டுத்தோல் கொண்டு வார்க்கப்படும். மேல் பகுதியை பம்பை அல்லது உச்சம் என்கிறார்கள். நல்ல எருமைத்தோல் கொண்டு மூட்டப்படும். முதலில் கயிறு, பிறகு வார் இப்பொழுது இரும்பு பட்டைகள் கொண்டு தட்டுகள் பம்பை கட்டையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறது. தென் தமிழ்நாட்டில் பம்பை பெரும்பாலும் நையாண்டி மேளத்தின் துணைக்கருவியாகவே பயன்படுகிறது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கியப்பன், காளிமுத்து, காளிராஜன், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஆனந்த், திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன், வெங்கடேசகிருஷ்ணன், பேய்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் போன்றோர் தற்காலத்தின் பிரபல பம்பை இசைக் கலைஞர்கள். பம்பை சில இடங்களில் ஒரு பகுதியை மட்டும் வைத்து இசைக்கும் வழக்கம் உள்ளது. ஒற்றை பம்பை என்று பெயர்.  சேலம் முத்துநாயக்கன்பட்டி தான் தற்காலத்தில் உலோக பம்பை இசைக்கருவி தயாரிப்புக்குப் பிரபலம். 


பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் என்கிற ஊரிலும் பம்பை/உடுக்கை பாரம்பரியமாக ஐம்பொன்னில் தேவைப்படுவோருக்குச் செய்து தரப்படுகிறது. தகரத்திலும் வளைத்து செய்கிறார்கள். ஐம்பொன் பம்பை பெரும்பாலும் கோவில்களுக்குக் காணிக்கையாக அளிக்க செய்யப்படுவது.  தமிழ்த்திணையில் முல்லை நிலத்திற்குரிய இசைக்கருவி பம்பை. வயினியர் என்கிற இனப் பிரிவினர் தான் பம்பையை தொன்மையாக இசைத்தார்கள். புதுச்சேரி அடுத்த முற்றாம்பட்டு மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தவிர ஆதி திராவிடர், செங்குந்தர், வன்னியர், வன்னார், நாட்டார், பண்டாரம், நாயுடு, ஆதியன் ஆகியோரும் இதைக் கற்று இசைத்து வருகிறார்கள்.   

இன்றும், அம்மன் விழாக்கள் என்றாலே, உடுக்கையும், பம்பையும் இருக்கும். இவற்றிலிருந்து வரும் தாளமும், நாதமும், மனிதனிடம் பரவசம் ஏற்படுத்தி, அருள் இறங்கி ஆடவைக்கிறது. சாமி அழைப்பு, சக்தி கரகம், தீச்சட்டி, செடில் என்று கோவில் சார்ந்த நிகழ்வுகளில் பம்பை


இடம்பெறுகிறது. பம்பை இசைக்கருவி கைச்சிலம்பாட்டம், சிலம்பம் ஆட்டம், கோலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகிய நாட்டார் கலை வடிவங்களிலும் பயன்படுகிறது.  ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் திரு சண்முகம் அவர்கள். இவர் தனது பதினோராவது வயதில் இருந்து பம்பை இசையை கற்று இசைத்து வருகிறார். 

இவரிடமும் சுமார் 100 ஆண்டு கால பழமையான பம்பை உள்ளது. இவர் முன்னோர் பயன்படுத்தியது. அவர் கூறுகையில் இந்த பம்பையில் உள்ள வேலைப்பாடுகளை பிரதி எடுத்து தற்காலத்தில் புதிய பம்பை செய்வதற்கு ஆள் இல்லை என்கிறார். பம்பை முதலில் முத்திரை என்று அழைக்கப்பட்டதாகவும் பிற்காலத்தில் பம்பை என்று அழைக்கப்படுவதாகவும் கூறினார். மாட்டின் தோல் வாரைக்கொண்டு முற்காலத்தில் பம்பை மூட்டப்பட்டது. தற்காலத்தில் இரும்பு கம்பியுடன் நட்-போல்ட் போட்டுக் கொள்வதாக கூறுகிறார். 

பம்பை இசைக்க நெய்ப்பலா அல்லது குருவிக் குச்சி அல்லது மதுக்காரைக் குச்சி என்னும் குச்சி பயன்படுமாம். இது அடர் காடுகளில் வளரும் ஒரு தாவரம். கொங்கு வட்டாரங்களில் அனைத்து கோவில் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இசைக்கிறார்கள். பெருமாள் கோவில்களிலும் இசைப்பார்களாம். ஒரு நிகழ்ச்சி என்றால் முதல் அரை மணி நேரம்


பாடலின்றி  இசைப்பார்கள். பின்பு விநாயகர் அகவலுடன் பாடத் தொடங்குவார்கள். பிறகு சாமி அழைப்பு, வர்ணிப்பு என்று தொடரும் இவர்களின் இசை முடியும்போது மங்கள வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது. பூசைகள் முடிந்தவுடன் மீண்டும் அரை மணி நேரத்திற்கு இசைத்து நிறுத்துகிறார்கள். பம்பை இசைக் கருவியை உலக அளவில் எடுத்துச்செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் இவர் அதற்கான முயற்சிகளையும் செய்து வருவதாகக் கூறுகிறார். திரு சண்முகம் அவர்கள் சென்னை சங்கமம், மகுடம் போன்ற நிகழ்வுகளில் பம்பை இசைத்தவர்.  

வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செய்யாறு, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் குலதெய்வம், காவல் தெய்வம் என ஏராளமான அம்மன் வழிபாடு காணமுடிகிறது. இப்பகுதிகளில் “ரேணுகா கூத்து” “ரேணுகாம்பாள் கதைப் பாடல்”  போன்றவற்றை நிகழ்த்துகின்றனர். பம்பை, கைச்சிலம்பு, உடுக்கை ஆகியவை முக்கிய இடத்தை இந்த அம்மன் சடங்குகளில் பிடித்துள்ளன. உடுக்கை பாடகர்கள், பம்பை வாசிக்கும் கலைஞர்கள், கைச்சிலம்புடன் ஆடுவோர் எனக் குறைந்தது ஐந்து பேர் நிகழ்த்துகின்றனர். 

அம்மன் திருவிழாக்கள், பூவாடை வர்ணிப்பு, குலதெய்வ பொங்கலிடல், காதுகுத்து போன்ற நிகழ்வுகளில் நிகழ்த்துகின்றனர். இவர்கள் கதையாக நிகழ்த்துவதில்லை. புராணச் செய்திகள் உள்ளடக்கிய அம்மன் பாடல்களைப் பாடி அடவுபோட்டு, விழாக்காலங்களில் வீதி வீதியாக நிகழ்த்துவர்.  வட தமிழகதிற்குரிய திரௌபதி, அங்காளம்மன் வழிபாட்டில் பம்பை முதன்மை இசைக்கருவியாகும். பூவாடைக்காரி என்னும் முன்னோர் வழிபாடு பம்பை இல்லாமல் நிகழ்த்தப்படுவதில்லை. புதுச்சேரியில் ஒன்பதாவது தலைமுறையாக திரு ஞ.செந்தில் பூசாரி அவர்கள் பம்பை உடுக்கை இசையை நிகழ்த்தி வருகிறார். இவரது பாட்டனாா் பா.பழனி பூசாரி அவர்கள் மிக புகழ்வாய்ந்தவராக இருந்தார். இவரது தந்தை ப.ஞானராஜ் அவர்கள் உலகம் முழுக்கப் பயணம் செய்து பம்பை/உடுக்கைக் கலையை நிகழ்த்தி வந்தார். ஐய்யனாரப்பன் கதை, திரௌபதி அம்மன் கதை, அங்காளம்மன் கதை, முருகப்பெருமான் கதை, காத்தவராயன் கதை, மாரியம்மன் கதை. கருப்பண்சாமி கதை, முனீச்வரன் கதை, காட்டேரி கதை, மதுரை வீரன் கதை, அகோர வீரபத்ரன் கதை, பாவாடைராயன் கதை, பேச்சாயி கதை, பெரியாயி கதை, கன்னிமார் கதை, நோன்டி வீரன் கதை, சங்கிலி கருப்பு கதை,  தீப்பாய்ந்தம்மன் கதை, காளியம்மன் கதை போன்ற பல்வேறு கதைகளை உடுக்கை/பம்பை இசைத்து நிகழ்த்துகிறார் திரு செந்தில் அவர்கள்.இவரது கலைக் குழுவின் பெயா் "அங்காளபரமேஸ்வாி கலைக் குழு" தொடா்பு எண்: +919585192345. சிறப்பு வாய்ந்த இந்த இசைக்கருவிகளை பாதுகாக்க, இளைஞர்கள் இன்று முன்வருவதில்லை. 

அதனால், இவை அழியும் அபாயத்தில் உள்ளது. அரசு இக்கலையைப் பாதுகாக்க, பயிற்சி அளிக்க முன்வரவேண்டும் என்று கூறுகிறார் இவர். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இவர் இக்கலையை பயிற்றுவிக்க ஆவலாக உள்ளார்.  பாடல்: கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்  மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்  சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும்  காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே - திருமுறை 12.0721  , சேக்கிழார் வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்  எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்  மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்  கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம் - திருமுறை 12.0726  , சேக்கிழார் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்  – திருப்புகழ், அருணகிரிநாதர்    தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் – திருப்புகழ், அருணகிரிநாதர் 

 காணொளி: பம்பை தயாரிப்பு: 

https://www.youtube.com/watch?v=Xijf8WANwpc&t=594s 

https://www.youtube.com/watch?v=KPUV66-J8H4 

https://www.youtube.com/watch?v=dskvggE9vYc  

தென் தமிழக பம்பை: 

https://www.youtube.com/watch?v=k7QzPnrbZWY 

https://www.youtube.com/watch?v=iSQeuOHE3ds&t=269s  

பம்பை இசை: 

https://www.youtube.com/watch?v=5z7hFitJB3Q&t=65s 

https://www.youtube.com/watch?v=4d2oewPR3Bw  – சரவண பிரபு ராமமூர்த்தி  

நன்றி: 

1. திரு ஞ. செந்தில் அவர்கள், அங்காளம்மன் கலைக்குழு, +919585192345, புதுச்சேரி 

2. திரு பால்ராஜ் அவர்கள், நையாண்டி மேள இசைக்கலைஞர் மற்றும் இசைக்கருவி தயாரிப்பாளர், சென்னை 

3. திரு சண்முகம் அவர்கள், பம்பை இசைக்கலைஞர், அந்தியூர், ஈரோடு