பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 20 - ராமன் எத்தனை ராமனடி - சுந்தரதாஸ்

தமிழ் சினிமாவில் பிரபல டைரக்டராக திகழ்ந்தவர் பி மாதவன். கதை வசனம் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கியவர் பாலமுருகன். இவர்கள் இருவரும் இணைந்து சிவாஜிகணேசனின் நடிப்பில் பல படங்களை உருவாக்கினார்கள், அவற்றில் ஒன்றுதான் 1970இல் வெளியாகிய ராமன் எத்தனை ராமனடி. மாதவன் தனது அருண் பிரசாத் மூவீஸ் சார்பில் தயாரித்தார். முதலில் சாப்பாட்டு ராமன் என்று பெயரிடப்பட்டு சிவாஜி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கிராமத்தில் அப்பாவி இளைஞனாக சுற்றித்திரியும் ராமனுக்கும் ஜமீன்தாரின் தங்கைக்கும் இடையே காதல் அரும்புகிறது. ராமன் வெகுளித்தனமாக ஜமீன்தார் தன் நண்பர்களுடன் கூடி இருக்கும் போது சென்று அவரின் தங்கையை தனக்கு மணமுடித்து தரும்படி கேட்கிறார். ஜமீன்தாரோ பலர் முன்னணியில் அவனை அடித்து கேவலப்படுத்தி விரட்டுகிறார். பிழைப்புத் தேடி பட்டணம் செல்லும் ராமன் திரைப்பட நட்சத்திர நடிகனாகிறான் . லட்சாதிபதியாக ஊர் திரும்புபவன் ஜமீன்தாரிடம் பெண் கேட்டு மிடுக்காக செல்கிறான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இப்படி அமைந்த கதையை எழுதி தனது அருமையான வசனங்களால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார் பாலமுருகன். படத்தில் வெகுளியான அப்பாவியான வேடம் சிவாஜிக்கு . இது பின்னர் கமலஹாசனின் சப்பானி பாத்திரத்திற்கு அச்சாணியாக அமைந்தது.


எந்தவிதமான வேடம் என்றாலும் நடித்து தள்ளக்கூடிய சிவாஜிக்கு இதில் அப்பாவி வேடமம் பின்னர் கம்பீரமான நடிகர் வேடமும் அமைந்தது. தனது ஆற்றல்மிக்க நடிப்பால் அதனை முழுமைப்படுத்தியிருந்தார் சிவாஜி. தன்னை வளர்த்த ஆயாவான எஸ் என் லட்சுமியிடம் பாசத்தை காட்டும் போதும், காதலி கே ஆர் விஜயாவிடம் அசட்டுத்தனமாக நடக்கும் போதும், தன்னை அடித்த நம்பியாரை தனது கம்பீரமான பார்வையாலேயே மிரட்டும் போதும், சிவாஜி தான் யார் என்பதை உணர்த்தி விட்டார்.

கதாநாயகியாக வரும் கே ஆர் விஜயா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார். சில காட்சிகளில் வந்தாலும் முத்துராமன் சோடை போகவில்லை கண்ணதாசன் இயற்றிய அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு, சித்திரை மாதம் பௌர்ணமி நேரம், நிலவு வந்து பாடுமோ பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இதமாக ஒலித்தன.

மாவீரன் சிவாஜியாக மேடையில் நடித்து பெரியாரினால் சிவாஜி என்று பட்டம் பெற்றவர் சிவாஜி கனேசன். சிவாஜியாக படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற குறை அவருக்கு இருந்து வந்தது இந்தப் படத்தில் அக்குறையை தீர்க்கும் விதமாக ஒரு காட்சியில் வீர சிவாஜியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சிவாஜி.


படத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் எவரும் இல்லாதது வித்தியாசமாக அமைந்தது. அதற்கு பதில் பகோடா காதல்,சதன் , காத்தாடி ராமமூர்த்தி என்று சிறிய நடிகர்களை நடிக்க வைத்திருந்தார்கள். முழு படமம் சிவாஜி கே ஆர் விஜயா இருவரையும் அடிப்படையாகக் கொண்டே நகர்கிறது. ஆனாலும் தனது திறமையினால் படத்தை நல்ல விதமாக இயக்கி நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படமாக வழங்கியிருந்தார் டைரக்டர் மாதவன்.


No comments: