எழுத்தாளர் நித்தியகீர்த்தி நினைவில்



தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் ஒக்டோபர் 15, 2009 வியாழனன்று இரவு மாரடைப்பால் இறந்தார்.
வரப் போகும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்தது அப்போது.

நித்திய கீர்த்தி என்ற மனிதர் வெறும் படைப்பாளியாக அறியப்படவில்லை, அந்நியப்படவில்லை. எமது மக்களின் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்த கருணை உள்ளம் கொண்ட மனிதராக திகழ்ந்தவர் என்பதை நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் வாழ்ந்த காலத்தில் செயலாற்றிய பங்களிப்புக்கள் மூலம் பலரும் நன்கறிவர். நாடகப்பிரதி எழுத்தாளனாக, புனைகதை ஆசிரியனாகத் தன்னைப் படைப்பாளியாகக் காட்டியதோடு, அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தின் ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவராகவும், தொண்டராகவும் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழ்ச்சமூகம் சொல்லெணா நெருக்கடியைச் சந்திக்கும் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகத்தொண்டனின் பிரிவும் பேரிழப்பாக அமைந்து விடுகின்ற சூழ்நிலையில் அமரர் நித்தியகீர்த்தி அவர்களின் மறைவும் அவ்வமயம் பொருத்திப் பார்க்க வேண்டிய கவலையோடு ஒரு வெறுமையும் சூழ்ந்து கொள்கின்றது.
நித்தியகீர்த்தி அவர்களின் புகைப்படத்தினை இணையத்தில் தேடியபோது அவரைப் பற்றிய இன்னொரு புதிய தகவலும் கிட்டியது. அம்மா http://ammavin.blogspot.com/ என்ற பெயரில் யூன் 2005 இல் வலைப்பதிவு ஒன்றைக் கூட ஆரம்பித்து எழுதியிருக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மன ஓசை வெளியீடாக நூலுருக்கண்ட தனது “தொப்புள் கொடி” என்ற நாவலைக் கூடத் தன் ஈழ நேசத்தின் பிரதிபலிப்பாகத் தான் எழுதி வெளியிட்டார் என்பதை அந்த நாவலுக்கான சிறப்புக் குறிப்புக்கள் காட்டி நிற்கும். இந்த நாவல் வெளியீட்டின் அரங்கத்தைக் காணாது நிரந்தர உறக்கத்திற்குப் போய்விட்டார்.
அப்போது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாயிலாக , விக்டோரியா ஈழத்தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் , படைப்பாளி “பாடுமீன்” சிறீகந்தராசா Paadum Meen Srikantharajah அவர்களை அமரர் நித்திய கீர்த்தி நினைவுப் பகிர்வை வழங்க அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.


விக்கிபீடியா தளத்தில் நித்தியகீர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள்

தெ. நித்தியகீர்த்தி (மார்ச் 4, 1947 – ஒக்டோபர் 15, 2009, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி, இலங்கை). அவுஸ்திரேலிய, ஈழத்து எழுத்தாளர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

இவர் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வந்தார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.

இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
* மீட்டாத வீணை (புதினம்), கமலா வெளியீடு, முதற் பதிப்பு – மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்
* தொப்புள் கொடி (நாவல்) மனஓசை வெளியீடு, முதற் பதிப்பு – சித்திரை 2009, சுவடி, இந்தியா
ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
* தங்கப் பதக்கம்
* தங்கம் என் தங்கை
* நீதி பிறக்குமா?
* மரகதநாட்டு மன்னன்
* பாட்டாளி * பிணம்
* வாழ்வு மலருமா
நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
* கூடு தேடும் பறவைகள்
* மரணத்தில் சாகாதவன்
அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
* பறந்து செல்லும் பறவைகள்
* ஊருக்குத் தெரியாது
* வேங்கை நாட்டு வேந்தன்
இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.
நூலகத் திட்டத்தில் இவரது “மீட்டாத வீணை” நாவல்

தொப்புள்கொடி நாவல் இணைப்பு
நன்றி:
அஞ்சலியைப் பகிர்ந்து கொண்ட பாடுமீன் சிறீஸ்கந்தராஜா
அமரர் நித்தியகீர்த்தியின் வாழ்க்கைக்குறிப்பைப் பகிர்ந்த விக்கிப்பீடியா 

மன ஓசை கூகிள் குழுமம் 




No comments: