எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 13 -- முருகபூபதி


வானுயர்ந்த கட்டிடங்கள், கோபுரங்களை அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் விரையும்போது காணும்  காட்சிகளின் பரவசத்தை ரசித்திருக்கின்றேன். ஆனால்,  அபூர்வமாகத்தான் அந்த நிர்மாணங்களின் பின்னணியிலிருந்த கடின உழைப்பைப்பற்றி நினைத்திருப்பேன். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதுதான் இயல்பு.  கட்டிடங்கள், கோபுரங்களுக்கு அடியில் கண்களுக்கு புலப்படாமலிருக்கும் அத்திவாரம் பற்றி யாருக்குத்தான் என்ன அக்கறை? என்ன கவலை.? யாருக்குத்தான் அதுபற்றிய  சிந்தனை?  நெடுஞ்சாலைகளுக்கு அடியில் நிரந்தரமாக உறங்கும் அந்தக்கற்களைப்பற்றி யார்தான் நினைத்துப்பார்க்கிறார்கள்.? 

 மழைவெள்ளத்தால் வீதியில் பள்ளமும் திட்டியும் தோன்றி அந்தக்கற்கள் விழித்து மேலெழுந்துவிடும்போது பயணிக்கும்பாதையை திட்டிக்கொண்டே செல்வோம்.  பேசாமடந்தைகளான


வீதிக்கற்களையும் கட்டிட கோபுர அத்திவாரங்களையும் போலவே இந்த உலகத்தில் பலர் மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகத்துக்கு தெரிவது அபூர்வம்.  எனது வாழ்வில் அப்படி ஒரு அபூர்வமான மனிதரை சந்தித்திருக்கின்றேன். எனது முதலாவது சிறுகதையை மல்லிகைக்காக அச்சுக்கோர்த்த சந்திரசேகரம் அவர்களைத்தான் இந்தப்பத்தியில் அபூர்வமான மனிதர்

எனக்குறிப்பிடுகின்றேன்.  எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியீட்டு நிகழ்வை யாழ்ப்பாணத்தில் மல்லிகைப்பந்தல் சார்பாக ஒழுங்குசெய்துவிட்டு , ஜீவா எனக்கு அஞ்சலட்டை மூலம் அழைத்திருந்தார்.   

யாழ். ராஜா தியேட்டருக்கு சமீபமாக கஸ்தூரியார் வீதிக்கும் காங்கேசன்துறை வீதிக்கும்  இடையில் சிறிய ஒழுங்கையில் சிறுநீரும் மணக்கும்.   மாதாமாதம் மலரும்  மல்லிகையின் அச்சு மையும்  மணக்கும்.   ஆண்கள் தங்களது அவசர உபாதையை  போக்குவதற்கு  ஒதுங்கும் ஒழுங்கை அது.   அங்கே ஒரு  சிறிய கட்டிடத்தை மட்டுமல்ல அதனுள்ளிருந்து அச்சுக்கோர்க்கும் சந்திரசேகரம் அண்ணரையும் அன்றுதான்             ( 1975 இல் ) பார்த்தேன். எல்லாம் நேற்று நிகழ்ந்ததுபோன்று நினைவில் தங்கிய காட்சிகள் அவை.  ஜீவா அறிமுகப்படுத்தினார். “இதுதான் எங்கட முருகபூபதி” மலர்ந்தமுகத்துடன் அன்று  என்னை வரவேற்றமைபோன்றுதான், அந்த மல்லிகை காரியாலயத்தின் படிக்கட்டுகளில்  ஏறிவந்தவர்களையும் உள்ளே அழைத்திருப்பார்.    

1975 முதல் 1986 இறுதி வரையில்,  அதாவது நான் அவுஸ்திரேலியா புறப்படும் வரையில் யாழ்ப்பாணம்

சென்ற பல சந்தர்ப்பங்களிலெல்லாம் மல்லிகை காரியாலயத்திற்கும் செல்லத்தவறுவதில்லை. புலம்பெயர்ந்தபின்னர் இலங்கைக்கு பலதடவைகள் வந்தபோதும் யாழ்.மண்ணை எட்டிப்பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல்  அந்தக்கவலையையும்  மனதில் சுமந்துகொண்டுதான் திரும்பி வருவேன்.   நீடித்தபோர் முடிவுக்கு வந்தபின்னர் 2010 ஆம் ஆண்டு இலங்கை சென்றபோது  அந்தப்பயணத்தில் நிச்சயமாக வடக்கு மாகாணத்துக்கு செல்லவேண்டும் என்ற நிகழ்ச்சிநிரலுடன்தான் புறப்பட்டேன். வடக்கு சென்றால் நான் சந்திக்கும் முக்கியமான அன்பர்கள் யார்…?யார்…?  என்று மனதில் பட்டியலிட்டபோது முதலிடத்திலிருந்தவர் சந்திரசேகரம் அண்ணன்தான். மற்றவர்களுடன் எனக்கு அவ்வப்போது கடித, தொலைபேசி தொடர்புகள் இருந்தன.  

ஆனால்,  எந்தத்தொடர்புகளும் இன்றியே என் நினைவில் நிறைந்திருந்தவர்தான் சந்திரசேகரம் அண்ணன்.  கம்பியூட்டர் யுகம் இலங்கையில் தோன்றியதும் நான் மிகவும் கவலைப்பட்டது, அதனால் தமது வேலைகளை இழந்த அச்சுக்கோப்பாளர்களைப்பற்றித்தான். விஞ்ஞான தொழில் நுட்பம் பலரதும் வயிற்றில் அடித்திருக்கிறது என்பதை நாம் முதலில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியாகிக்கொண்டிருந்தபோது ஜீவாவுக்கு எழுதும் கடிதங்களில் நான் மறக்காமல் பதிவுசெய்யும் பெயர் சந்திரசேகரம். மல்லிகையும் ஜீவாவும் கொழும்புக்கு இடம்பெயர்ந்தபின்னர் சந்திரசேகரம் பற்றி தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும்தான் ஜீவாவிடம் கேட்டுத்தெரிந்துகொண்டேன். 

அவர் இந்த வசதி வாய்ப்புகள் எதுவும் இன்றி நீர்வேலி கிராமத்தில் சுகமாக இருக்கிறார் என்ற தகவல்


மாத்திரம் எனக்குத்தெரிந்திருந்தது.  1983 இல் யாழ். மல்லிகை காரியாலய வாசலிலிருந்து நானும் ரத்தினசபாபதி ஐயரும் காவலூர் ஜெகநாதனும் இன்னுமொரு தாவடி நண்பரும் (பெயர் நினைவில் இல்லை) ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்தோம்.  ஜீவாவைத்தவிர எமது உரையாடலில் புலப்பெயர்வுதான் பேசுபொருளாக இருந்தது.  காவலூர் ஜெகநாதன் தான் தமிழ்நாட்டில் செட்டில் ஆகப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். 

நான் எங்கே செல்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஆனால் எங்காவது போய்விடுவேன் என்றேன்.  எமது உரையாடலை எரிச்சலுடன்  கேட்டுக்கொண்டிருந்த ரத்னசபாபதி அய்யர்,  “ போகிறவர்கள் எல்லாம் போங்கோ…நானும் ஜீவாவும் மல்லிகையும் எங்கட சந்திரசேகரமும்  எங்கேயும் போகமாட்டோம்.” என்றார்     அவர் அன்று சொன்ன வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை. காவலூர் ஜெகநாதன் தமிழகம் சென்றார் அங்கேயே காணாமலும் போய்விட்டார். நான் முகவரி தேடும் மனிதனாக அவுஸ்திரேலியாவில் அலைந்துழல்கின்றேன். தாவடி நண்பர் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றுவிட்டார். ரத்தினசபாபதி ஐயரும்  காலப்போக்கில் லண்டன் சென்றார்.  மல்லிகையும் ஜீவாவும் கொழும்போடு இடம்பெயர்ந்தனர்.  

ஆனால்,  அந்த  மூத்திர ஒழுங்கையிலிருந்த  மல்லிகை காரியாலயம்  அதே இடத்தில்  நீண்டகாலம்


பாழடைந்திருந்தது.  அதனுள்ளிருந்து வருடக்கணக்காக எங்கள் எழுத்துக்களையெல்லாம் அச்சுக்கோர்த்துக்கொண்டிருந்த சந்திரசேகரம் அண்ணரை 2010 ஆம் ஆண்டு நான் நீர்வேலி மதுவன் என்ற இடத்தில் சந்தித்தபோது,    இடுப்பில் சாரத்துடன் தோளில் சிறுதுண்டுடன் கிராமத்தனாகவே உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருந்தார்.  யாழ்ப்பாணத்துக்கு ஒரு இரவுப்பொழுது சென்றடைந்தபின்னர் மறுநாள் என்னுடன் வந்த நண்பர் எழுத்தாளர் டொக்டர் நடேசனையும் அழைத்துச்சென்று மல்லிகை யாழ். காரியாலயத்தை காண்பித்தேன். 

அவர் முகப்பை படம் எடுத்தார். கதவுசாத்தி  மூடப்பட்டிருந்த மல்லிகையின் அந்த வாயிலை சில கணங்கள் பரவசத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன். எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை பேராசிரியர்கள் அந்த வாசல் படிக்கட்டுகளில் ஏறிவந்து மல்லிகைக்கான தமது ஆக்கங்களை சந்திரசேகரத்திடம் அல்லது  ஜீவாவிடம் கொடுத்திருப்பார்கள்.  ஒழுங்கையூடாக ஆடி ஆடி வரும்


எங்கள் ஏ.ஜே.கனகரட்னா அந்த வாசலில்நின்று சொன்ன சுவாரஸ்யமான கதைகள்தான் எத்தனை?  ஏ.ஜே. அவர்கள் சந்திரசேகரத்துக்கு ஒரு பட்டமும் சூட்டியிருந்தார்.  

அதுதான் மல்லிகையின் எடிட்டர் இன் சார்ஜ் (Editor in Charge)  மல்லிகை அச்சிட்டதும் ஜீவா கொழும்புக்கு பயணமாகிவிடுவார். அதன் பின்னர் அவர் யாழ். திரும்பும் வரையில் சந்திரசேகரம்தான் காரியாலயத்தையும் மல்லிகையையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.  சிரித்திரன் சிவஞானசுந்தரம் ஜீவாவை காணும்போதெல்லாம், “ உமக்கென்னப்பா சந்தரசேகரம் என்ற சொத்து அச்சுக்கோப்பாளராக கிடைத்திருக்கிறார்” என்று சொல்வதுண்டு.  பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், படைப்பாளிகள் பலரதும் நல்லபிமானத்தைப்பெற்றவர்தான் சந்திரசேகரம்.  

சில படைப்பாளிகளிடம் உரிமையுடன், “அடுத்த முறைவரும்போது உமது படைப்புடன்தான்  வரவேண்டும். இல்லையென்றால் இந்தப்பக்கம் வரவேண்டாம்  “  என்று சொல்லியிருக்கிறார் இந்த


எடிட்டர் இன் சார்ஜ்.  2010 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வாயிலில்  எழுத்தாளர் நண்பர்  கருணாகரனை முதல் முதலில் சந்தித்ததும்,  நான் அவரிடம் விடுத்தவேண்டுகோள்:- “என்னை நீர்வேலிக்கு நீர்தான் அழைத்துச்செல்ல வேண்டும்.”  சந்திரசேகரம் அவர்களது வீட்டைத்தேடி அந்த செம்பாட்டு கிராமத்துக்கு பயணமானோம். தோட்டப்பயிர்ச்செய்கைக்கு  பெயர்போன அந்த கிராமத்தின் ரம்மியமான சூழல் என்னை பெரிதும் கவர்ந்தது.  

அவர் வீட்டுக்கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி குரல் கொடுக்கிறார். “ உங்களைத்தேடி யாரோ வந்திருக்கினம்”  “ இருக்கச்சொல்லும். வாரன்.” உடனே கருணாகரன் முற்றத்திலிருந்து குரல் கொடுக்கிறார்,               “ அண்ணை உங்களைப்பார்க்க ஒருவர் தொலைவிலிருந்து வந்திருக்கிறார். நான் கருணாகரன் அவரை அழைத்து வந்திருக்கிறேன்.”  “இதோ வாரன்.” அவர் குளித்து துவாயால் துவட்டிக்கொண்டு வருகிறார். என்னைப்பார்த்ததும்  அடையாளம் கண்டு, “  அட எங்கட முருகபூபதி”  எனச்சொல்லிக்கொண்டு என்னை கட்டி அணைத்துக்கொள்கிறார்.  நீண்ட நேரம் உரையாடினோம். மல்லிகை 45 ஆவது ஆண்டுமலரை  கொடுத்தேன். ஒரு குழந்தையை வாஞ்சையோடு;


அணைத்துக்கொள்வதுபோன்று அதனை  நெஞ்சோடு வைத்துக்கொண்டார்.  

பக்கங்களை புரட்டினார்.  பெருமூச்சு உதிர்ந்தது. தினமும் நீர்வேலியிலிருந்து சைக்கிள் மிதித்து வந்து, மல்லிகை காரியாலயத்தில்  காலை முதல் மாலை வரையில் கால் கடுக்க நின்று,  ஒவ்வொரு எழுத்துக்களாக கோர்த்து பக்கங்களை வடிவமைத்து, அதனைச்சுற்றி தடித்த நூலினால் பக்குவமாக கட்டி எடுத்து,  பின்வழியால் சென்று காங்கேசன் துறைவீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா அச்சகத்தில் கொடுத்து,  அச்சிட்ட பக்கங்களை தொகுத்து ஒவ்வொரு மல்லிகை இதழ்களையும் அடுக்கிக்கட்டி, மீண்டும் எடுத்து வந்து ஜீவாவிடம் விநியோகத்திற்காக ஒப்படைத்துவிட்டு, ஒரு பிரதியை எடுத்து தனது கண்களில் ஒற்றிக்கொண்ட  அவர்,  எங்கிருந்தோ வந்த கணினியினால் அச்சிடப்பட்டு தனது சுவாசமே படாமல் கொழும்பிலிருந்து வந்திருக்கும்   மல்லிகை மலரை  அணைத்துக்கொண்டு விட்ட பெருமூச்சிற்குள்ளிருந்த வலியை எழுதுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. நவீன தொழில் நுட்பம் அவரை கைகழுவிவிட்டது.  

வேறு எந்தத் தொழிலுமே தெரியாத அவர் நீர்வேலியில் மண்வெட்டியைத்தான் தூக்கினார்.  மண்ணைக்


கொத்தி பயிர்நட்டார். அன்று  1983 இல்  ரத்தினசபாதி அய்யரின் வாக்கினை ஆமோதித்தவாறு அந்த மண்ணை விட்டு வெளியே ஓடவில்லை.  படங்கள் எடுத்துக்கொண்டோம். எமது வாகன சாரதி நண்பர் படங்களை பல கோணங்களிலும் எடுத்தார்.  “ அண்ணர்,  உங்களைப்பற்றி ஒரு ஆவணப்படமே எடுக்கவேண்டும்.  “ என்றேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் மல்லிகை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டவர்தான் சந்திரசேகரம் அண்ணர். அத்துடன் அந்தக்காட்சி ஒளிப்படமாக மல்லிகையின் அட்டையிலும் பிரசுரமானது.  ஒரு இதழின் அச்சுக்கோப்பாளர் இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது உலகவரலாற்றில் அதுதான் முதல் தடவை என்று குறிப்பிடலாம். மல்லிகை பல படைப்பாளிகளை பிரமுகர்களை கல்விமான்களை அட்டையில் பிரசுரித்து கௌரவித்திருக்கலாம்.   

ஆனால், மல்லிகையின் அச்சுக்கோப்பாளரை கனம்பண்ணி இவ்வாறு கௌரவித்திருப்பதானது பலருக்கும் குறிப்பாக தமிழக இலங்கை இதழ்களுக்கு முன்மாதிரியானது. தொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது.


நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர். இவர்கள் தமது எழுத்தூழியத்தினால் மக்களிடம் பிரபலமானவர்கள். 

ஆனால்,  மற்றவர்களின் கையெழுத்துக்களை அச்சுவாகனம் ஏற்றி பிரபலப்படுத்திய மல்லிகை சந்திரசேகரம் அண்ணர்  குடத்துள் இட்ட விளக்காகவே வாழ்ந்தவர். ஒரு காலத்தில் எமது கையெழுத்துக்களை படித்து அச்சுக்கோர்த்து மல்லிகையில்  மெருகூட்டிய  அந்த அச்சுக்கோப்பாளரை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து  நான் தேடிச்சென்றதிலிருந்து அவரது பெறுமதியை கணித்துக்கொள்ளலாம்.  என்னைப்போன்ற பல படைப்பாளிகளின் ஆக்கங்களை இன்று கணினி உள்வாங்கி அச்சுவாகனம் ஏற்றலாம். ஆனால் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாக பொறுமையுடன் கோர்த்து அச்சுவாகனம் ஏற்றி எமது இருப்பை இலக்கிய உலகத்திற்கு மல்லிகை வாயிலாக அடையாளம் காட்டியவர்தான் இந்த  சந்திரசேகரம் அண்ணன்.   பல இலக்கிய நண்பர்களை அன்போடு விசாரித்தார். ஜீவாவின் மகன் திலீபன் யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் தம்மை வந்து பார்த்துச்செல்வதாக பெருமிதத்துடன் சொன்னார்.  

அவர் அன்று மிகவும் கவலையுடனும் அக்கறையுடனும் விசாரித்த படைப்பாளி எங்கள் புதுவை ரத்தின துரை.  திருகோணமலைக்கும் செல்கிறேன். அங்கே அவரது மனைவி பிள்ளைகளை  பார்ப்பேன். என்றேன். சொன்னபடி திருகோணமலையில் அவர்களையும் பார்த்தேன்.  1988 இற்குப்பின்னர் நான் பணியாற்றிய வீரகேசரியின்  அச்சுக்கூடத்திலும்  திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து,  பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார். மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார்.  அத்துடன் நில்லாமல், தனது மகளை  கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். 

அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார். ஒரு அச்சுக்கோப்பாளர் மலையகத்திலிருந்து பூக்களை வரவழைத்து பூமாலை கட்டி திருமணவீடுகளுக்கும் இதர வைபவங்களுக்கும் கொடுப்பதுடன்,  மலர்களினாலேயே அழகிய மணவறைகளும் செய்து வாடகைக்கு விடுகிறார்.  மற்றும் ஒருவர் சைவஹோட்டலில் சர்வராகிவிட்டார்.  

இவ்வாறு தமக்குச்சம்பந்தமில்லாத வேலைகளுக்குச்சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்ற அரும்பாடுபட்டனர். ஆனால், மல்லிகை சந்திரசேகரம் அண்ணர் வேறு எந்தத் தொழிலும் தெரியாமல்,  மண்ணை மாத்திரம் நம்பினார். மல்லிகை அவரை 1976 ஆம்  ஆண்டு நவம்பர் மாதம்  முகப்பில் பதிவுசெய்து பாராட்டியது. நான் அவரை மீண்டும் சந்தித்த செய்தியுடன் 2010 ஆம் ஆண்டு ஏப்ரில் இதழின் முகப்பினை வெளியிட்டது.  எனது எழுத்துலக வாழ்வில்  நான் சந்தித்த  வெளியுலகம் தெரியாத அத்திவாரங்களை -  குடத்துள்ளிருந்து ஒளிவீசிய விளக்குகளை  எனது பதிவின் ஊடாகவாவது  பதிவுசெய்ய விரும்புகின்றேன்.  ( தொடரும் ) 

No comments: