பொறிபுலன் கடந்து நிற்கும் இறையினைப் போற்றி நிற்போம் !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. ஆஸ்திரேலியா

  

ஆசைகள் அகல வேண்டும்

ஆணவம் அழிய வேண்டும்

அகமெலாம்  இறையின் நாமம்

அரணென நிற்க வேண்டும்

 

வாய்மையே ஓங்க வேண்டும் 

வன்முறை மடிய வேண்டும்

தாய்மையே எழுதல் வேண்டும்

தரணியே சிறந்து நிற்கும்  !

 

வேற்றுமை விலக வேண்டும்

விரக்தியை விரட்ட வேண்டும்

சாற்றிடும் வார்த்தை எல்லாம்

சன்மார்க்கம் நிறைய வேண்டும் 

 

தூற்றிடும் குணமும் வேண்டாம்

துட்டரின் தொடர்பும் வேண்டாம் 

ஏற்றியே போற்ற வேண்டும்

இறையது நாமம் நாளும்  !

 

வறுமையும் தளர வேண்டும்

சிறுமையும் சிதைய வேண்டும்

பொறுமையே எழுதல் வேண்டும்

புகலுவோம் இறையின் நாமம்

 

நெறியினை வகுத்துக் கொள்வோம்

நீதியை துணையாய்க் கொள்வோம் 


பொறிபுலன் கடந்து நிற்கும்

இறையினைப் போற்றி நிற்போம்  




No comments: