இலங்கையின் உயரமான கட்டடங்களில் ஒன்றான Altair ஐ பார்வையிட்ட ஜனாதிபதி
இலங்கையில் முதல் தடவையாக எம்.பி. பதவிக்கு நாணயச் சுழற்சி?
10 புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு நடவடிக்கை
உயிரைப் பணயம் வைத்து போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
இலங்கையில் பதிவாகும் நில அதிர்வுகள்
20ஐ அமுலாக்க முன் இன, மத, அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல் அவசியம்
இலங்கையின் உயரமான கட்டடங்களில் ஒன்றான Altair ஐ பார்வையிட்ட ஜனாதிபதி
பேர வாவிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டு வரும் Altair வதிவிட மற்றும் வர்த்தக கட்டடத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (31) பார்வையிட்டார்.
பேர வாவியுடன் இணைந்ததாக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டடத்தின் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இக்கட்டடத்தின் அடிப்பரப்பு 40,000 சதுர அடிகளை கொண்டதாகும். 404 அதி சொகுசு வீடுகளையும் உயர்தரத்திலான கடைத் தொகுதிகளையும் இது கொண்டுள்ளது.
இரண்டு கோபுரங்களைக் கொண்ட Altair கட்டடத் தொகுதியின் ஒரு கோபுரத்தில் 68 மாடிகளும் அடுத்த கோபுரத்தில் 63 மாடிகளும் உள்ளன. முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணப் பணிகளை கண்காணித்து வருகின்றது.
இக்கட்டடத் தொகுதியின் சுமார் 98% வீதமான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இத்தகைய நிர்மாணப் பணிகள் சுற்றுலாத்துறையினரை ஈர்ப்பதற்கு காரணமாக அமையுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பிரதீப் மொராயஸ் ஆகியோரும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
இலங்கையில் முதல் தடவையாக எம்.பி. பதவிக்கு நாணயச் சுழற்சி?
- பிரேமலால் ஜயசேகர எம்.பி.யாக தகுதி இல்லை என்கிறார் சட்ட மாஅதிபர்
- உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்கிறார் சபாநாயகர்
- பாராளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்கிறார் வாசுதேவ
- பதவி இழந்தால் அடுத்த இடத்திற்கு நாணயச் சுழற்சி
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய தகுதியற்றவர் என, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது ஒருங்கிணைப்பு அதிகாரியான, அரச தரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமையவும், அரசியலமைப்பின் 89ஆவது பிரிவின் (இ) மற்றும் 91 (1) (அ) ஆகிய உப பிரிவுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதனால், அவருக்கு பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பதற்கோ உரிமை இல்லை என, சட்ட மாஅதிபர் தனது கருத்தை, கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாக, நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
சபாநாயகரின் கருத்து
இதேவேளை, இது குறித்து சட்ட மாஅதிபருக்கு தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, இதனை உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில், பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதோடு, அதனைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களிலேயே சட்ட மாஅதிபர் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதே தனது கடமை என்றும், அதற்காக தான் முன்னிற்பேன் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவாதம்
பாராளுமன்ற அமர்வுகளில் பிரேமலால் ஜயசேகரவை கலந்து கொள்ள அனுமதிப்பது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பில் பதிலளித்த சபாநாயகர், பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வைப்பது எனது கடமை எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வைப்பது தொடர்பான வாய்ப்பு தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணைகாளர் நாயகம் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி, நீதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கோரிக்கை தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு அன்றையதினமே (19) சட்ட மாஅதிபருக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளமன்றத்திற்கும், சபாநாயகருக்குமே இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாகவும், சட்ட மாஅதிபருக்கு இது தொடர்பில் எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்தார்.
எம்.பி. பதவிக்கு முதல் தடவை நாணயச் சுழற்சி
அதற்கமைய, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக, நாணயச் சுழற்சி மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர பதவி இழக்கப்படுவாராயின் அல்லது தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பின் மேன்முறையீட்டின் தீர்ப்பில் குற்றவாளி என நிரூபிக்கப்படுமாயின், அவர் பதவி இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதால் உருவாகும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, பாராளுமன்றத் தேர்தலில் அடுத்த இடத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் நியமிக்கப்படுவார்.
ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 08 எம்.பிக்கள் தெரிவானதோடு, அதில் 2ஆம் இடத்தில் 104,237 பிரேமலால் ஜயசேகர பெற்றிருந்தார்.
இரத்தினபுரி மாவட்டம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 08
1. பவித்ரா வன்னியாராச்சி - 200,977
2. பிரேமலால் ஜயசேகர - 104,237
3. ஜானக வக்கும்புர - 101,2250
4. காமினி வலேபொட - 85,840
5. அகில எல்லாவல - 71,179
6. வாசுதேவ நாணயக்கார - 66,991
7. முதிதா பிரஷாந்தி - 65,923
8. ஜோன் செனவிரத்ன - 58,514
அதற்கமைய அப்பட்டியலின் 9ஆம் இடத்தில் இருப்பவரே குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், குறித்த விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த அதிகூடிய வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களும் ஒரே எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே எண்ணிக்கையான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சன்னி ரோஹண கொடித்துவக்கு மற்றும் ரஞ்சித் பண்டார
வேட்பாளர்களான ரஞ்சித் பண்டார மற்றும் சன்னி ரோஹண கொடித்துவக்கு ஆகிய இருவரும் 53,261 எனும் ஒரே எண்ணிக்கையான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில், அவ்வாறான நிலையில், குறித்த நபரை தெரிவு செய்ய நாணயச் சுழற்சிசே மேற்கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதில், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியினால் குறித்த நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்பட்டு, வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் எனவம் அவர் சுட்டிக்காட்டினார்.
2015 கொலைச் சம்பவம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 05.ஆம் திகதி காவத்தை நகரில் அப்போதையை ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர், 'தொடங்கொட சுசில் பெரேரா' என அழைக்கப்படும் ஷாந்த தொடங்கொட என்பவராவார். கே. கருணாதாஸ வீரசிங்க மற்றும் எம். இல்ஷான் என்பவர்களே இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனையவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 31ஆம் திகதி, இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி, யொஹான் ஜயசூரியவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்தீர்ப்பில், பிரேமலால் ஜயசேகர உட்பட முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, காவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷண சில்வா ஆகிய மூவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஏனைய நான்கு சந்தேகநபர்களும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரும் குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
றிஸ்வான் சேகு முகைதீன் நன்றி தினகரன்
10 புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு நடவடிக்கை
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு
நாட்டில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்து வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி தினகரன்
உயிரைப் பணயம் வைத்து போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
நியூ டயமண்ட் கப்பல் 40 கடல்மைல் தொலைவில் பாதுகாப்பான கடல் பரப்பில்
"MT New Diamond கப்பலின் தீயை அணைக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் உங்கள் பணியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்."
இவ்வாறு தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் மற்றும் பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
MT New Diamond கப்பலின் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, நேற்று (04) மாலை 7.00 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தற்போது இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பான கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொதிகலன் வெடிப்பு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (03) முற்பகல் 8.00 மணியளவில், சுமார் 270,000 மெற்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த, MT New Diamond எனும் பாரிய எண்ணெய் தாங்கி கப்பல் , இலங்கைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் பகுதியில் தீப்பிடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியன, இந்திய கரையோர பாதுகாப்புப் படையுடன் இணைந்து ஒன்றரை நாளாக மேற்கொண்ட தொடர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து, நேற்று (04) மாலை 7.00 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நங்கூரமிடப்படாத குறித்த கப்பல், இலங்கையிலிருந்து 38 கடல் மைல் தொலைவிலிருந்த நிலையில் ஒன்றரை நாளில் இலங்கையை நோக்கி நகர்ந்து 25 கடல் மைல் தூரத்தை நெருங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து கப்பலை பாதுகாப்பான கடல் பிரதேசத்திற்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அதனுடன் இணைந்தவாறு தீயை முற்றாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் தொடரப்பட்டு வருகின்றது.
தற்போது குறித்த கப்பல் இலங்கையை நோக்கி நகராத வகையில் இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பேணப்பட்டு தீயை முற்றாக அணைக்கும் பணி தொடரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை கடலுக்குள் எவ்விதமான எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை என, இந்திய கரையோர பாதுகாப்புப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிஸ்வான் சேகு முகைதீன்
இலங்கையில் பதிவாகும் நில அதிர்வுகள்
மக்கள் மத்தியில் அச்சம், களத்தில் ஆய்வாளர்கள்
கண்டி நகருக்கு அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கண்டி நகரை அண்மித்துள்ள திகண, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மை காலமாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயத்தை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராச்சி பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 29ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் முதல் தடவையாக பாரிய சத்தத்துடன் நிலஅதிர்வொன்று பதிவாகியிருந்தது. இந்த நில அதிர்வினால் குறித்த பகுதிகளிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இது ஒரு நிலஅதிர்வேயன்றி நிலநடுக்கம் அல்ல எனக் குறிப்பிட்ட புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி. சச்சன டி சில்வா இதனை இயற்கையாக ஏற்பட்ட நில அதிர்வாகக் கருத முடியாது எனவும் கூறினார்.
என்றாலும், இந்நாட்டிலுள்ள நில நடுக்கத்தை பதிவு செய்யும் கருவியில் அதிர்வுகள் ஏற்பட்டமைக்கான பதிவுகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து, நில அதிர்வு பதிவான கண்டி பகுதிக்கு புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் விசேட குழுவொன்று ஆய்வுகளுக்காக சென்றுள்ளது.
இதேவேளை, சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையத்தின் புவிசரிதவியல் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி நில்மினி தல்தெனவின் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.
இக்குழுவினர் இற்றை வரையும் நடத்தியுள்ள விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் ஊடாக குறித்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான பின்னணியில், முதல் அதிர்வு பதிவாகி நான்கு நாட்கள் கடந்த பின்னர் நேற்று (02.09.2020) காலை 7.10 அளவில் மீண்டும் ஒரு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாரிய சத்தமொன்றை அடுத்து, நில அதிர்வொன்று பதிவானதாக அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம்
கண்டி நகரை அண்மித்த சில பகுதிகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளது.
நிலநடுக்கம் பதிவாகும் கருவியிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலஅதிர்வு ஏற்படுவதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தொடரான விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளை ஏற்கனவே தென்பகுதியின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் அண்'மைக் காலத்தில் உணரப்பட்டமை தெரிந்ததே. நன்றி தினகரன்
20ஐ அமுலாக்க முன் இன, மத, அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல் அவசியம்
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசாங்கம் இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனூடாக 19 ஆவது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment