ஒரு நாள் மேலும் தாமதமானதற்கும் காரணங்கள் சொன்னாள்.
ஜீவிகா, தன்னிடம் அதனையெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லையே.., எதற்காகச் சொல்லவேண்டும்…? அபிதா, பதிலுக்கு எதுவும் சொல்லாமல், “ ம்… அப்படியா…? ஓ…. சரி… “ என்று அக்கறையற்று தலையை ஆட்டினாள்.
காதலனுடன் நாட்களை செலவிடச்சென்றவள், அதற்காக நிறைய காரணங்களை வைத்திருக்கலாம்.
வீடு திரும்பிய ஜீவிகா, அறைகளை எட்டிப்பார்த்து திருப்தியடைந்தவளாக, “ அபிதா… இந்த இரண்டு மூன்று நாட்களும் உங்களுக்கு எப்படி பொழுது போனது…? மஞ்சு, சுபா, கற்பகம் ரீச்சரிடம் இருந்து ஏதும் தகவல் இருக்கிறதா..? “ எனக்கேட்டுவிட்டே, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு பற்றியும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவற்றில் ஆர்வமற்ற அபிதா, லண்டன் பெரியப்பா தொடர்புகொண்டதை நினைவுபடுத்தினாள்.
“ பேக்கில் இருக்கும் உடுப்புகளை வோஷிங் மெஷினில் போட்டுவிடுங்க அபிதா…. கையில் இப்போது உங்களுக்கு வேறு வேலை இல்லையென்றால், வாங்க சில விடயங்கள் பேசவேண்டியிருக்கிறது. “ எனச்சொல்லிவிட்டு, தான் வரும்போது எடுத்துவந்திருந்த பேக்கை அபிதாவிடம் கொடுத்தாள்.
ஜெயசீலன் வீட்டில் வோஷிங் மெஷின் இல்லாதிருக்கவேண்டும். அல்லது அவன் வாடகைக்கு குடியிருக்கும் மாடி வீட்டில், உடைகளை காயப்போடுவதற்கு போதிய இடவசதி இல்லைப்போலும், அப்படியும் காரணம் இல்லையாயின் பெண்ணின் உள்ளாடைகள் அங்கே உலர்ந்துகொண்டிருப்பதை எவரேனும் பார்த்துவிடலாம் என்பதற்காக, அங்கே துவைக்காதிருந்துவிட்டு, எடுத்து வந்திருக்கலாம். அபிதாவுக்கு பலவாறு யோசனை ஓடியது.
அந்த யோசனைகளின் ஊற்றுக்கண்ணாக தனது எதிர்காலம் இருப்பதையும் அபிதாவால் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த வீடு விற்பனைக்கு வந்தால், ஜீவிகாவும் கொழும்போடு போய்விடலாம். லண்டன்காரர் ஏதும் சொல்லியிருக்கக்கூடும். லண்டனிலிருக்கும் அவரது மகளுக்கு சேரவேண்டிய வீடு. பெண்களின் விடுதியாக இருக்கமாத்திரமே அவள் அனுமதித்திருக்கலாம். ஜெயசீலன் என்ற ஒரு அந்நியன், இங்கே வந்துபோவதையும், அவனே ஜீவிகாவின் காதலன், வருங்காலக் கணவன் என்பதையும் அந்தப்பெண் தகப்பன் மூலமோ அல்லது வேறு வழிகளிலோ அறிந்திருக்கவும் கூடும்.
லண்டன்காரர் ஜீவிகாவை தொடர்புகொள்ள சில தடவைகள் முயன்று, முடியாதவிடத்து, தன்னோடு பேசியதும், அதன்பிறகு, சில மணித்தியாலங்கள் கடந்து தனது கைத்தொலைபேசிக்கு வந்த மற்றும் ஒரு அழைப்பிலிருந்து கேட்ட பெண்குரலும் அபிதாவுக்கு மனக்குழப்பத்தை தந்திருந்தது.
அந்தக்குரலுக்குரியவளின் எஜமானித் தோரணையால், அபிதா சற்று கலவரமடைந்திருந்தாள்.
ஜீவிகாவின் உடைகளை வோஷிங் மெஷினில் போட்டு, சவர்க்கார தூளை இட்டு, இயக்கியவாறு, லண்டன்காரரின் மகள் தர்ஷினி பேசியதை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தாள்.
“ யாரு…. அபிதாவா…? எப்படி இருக்கிறாய்… நீதான் இப்போது அங்கே வேலைக்காரியா…? அப்பா வந்து சொன்னார். உனக்கு லப்டொப்பெல்லாம் வாங்கிக்கொடுத்தாராமே…?! இந்த வயதில் என்னத்தை படித்து கிழிக்கப்போகிறாய்… ?! நீ.. நன்றாக சமைப்பாய் என்றும் அப்பா சொன்னார். அந்த வேலையுடன் நிற்கவேண்டியதுதானே…? அதுசரி, ஜீவிகாவைப்பார்க்க அங்கே அடிக்கடி வருபவன், எந்த ஊராம்….? யாழ்ப்பாணமா…? கொழும்பா…? மலைநாடா…? தமிழன்தானே…? “
லண்டனுக்குச் சென்று குடியேறி பலவருடங்கள் வாழ்ந்தாலும், அங்கிருக்கும் பூர்வகுடி வெள்ளைக்காரர் கூட அந்த தர்ஷினியிடம் இத்தகைய கேள்விகளை கேட்டிருக்கமாட்டார்கள்.
“ தெரியாதம்மா… அவரும் ஜீவிகாவுடன் வேலைசெய்கிறார் என்பது மாத்திரம்தான் தெரியும். வேறு எதுவும் தெரியாது, ஜீவிகா வந்ததும் அல்லது அவுங்களின் போனுக்கு எடுத்து நீங்களே கேட்டுப்பாருங்க அம்மா. “ என்றாள் அபிதா. எஜமானிகளிடம் அம்மா போட்டுப்பேசினால் அந்த எஜமானிகளின் மனம் குளிர்ந்துபோகும்தானே.
“ அவளிட்ட என்ன கேட்கிறது. சுபாவிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். “ என்று அந்த தர்ஷினி சொன்னதும் அபிதா திடுக்கிட்டாள்.
“ சுபாவை உங்களுக்குத் தெரியுமா அம்மா…? “
“ தெரியும்… தெரியும்…. அங்கே நடப்பதெல்லாம் தெரியும் “ என்று தர்ஷினி சொன்னதும், லண்டனுக்கு தூதுசொல்லும் ஒற்றன் வேலை செய்வது யார் என்பது அபிதாவுக்கு சட்டென புரிந்துவிட்டது. அடுத்த கணம் ஒற்றன் ஆண்பால். ஒற்றனுக்கு பெண்பால் ஒற்றியா…?! அபிதாவுக்கு சிரிப்பு வந்தது.
அந்த ஒரு சில மணித்துளி உரையாடலுக்குள் அபிதாவின் மனத்திரையில் பல காட்சிகள் விரிந்தன. ஊகங்கள் உதிர்ந்தன.
அந்த தர்ஷினிக்கும் இந்த ஜீவிகாவுக்கும் இடையில் முகநூல் விவகாரத்தில் ஏதோ முரண்பாடு வந்ததையும், ஜீவிகா, அவளுடனான முகநூல் தொடர்பை துண்டித்துக்கொண்டிருப்பதையும் ஒரு நாள் பேச்சுவாக்கில் சுபாஷினி சொல்லிவிட்டு அதன்பின்னர் சடாரென பேச்சை திசைமாற்றியதும் அப்போது அபிதாவின் நினைவுப்பொறியில் தட்டியது.
இந்த வீட்டில் தனக்கும் தெரியாமல் ஏதேதோ நடந்துகொண்டிருப்பதையும் அபிதாவால் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
ஏற்கனவே சுபாஷினிக்கும் ஜீவிகாவுக்கும் ஏழாம்பொருத்தம். இதனை நன்கு தெரிந்துகொண்டுதான் லண்டன்காரரின் மகள், இங்கு நடப்பவற்றை ஆராயக்கூடும்.
ஜீவிகா வந்துவிட்டாள். இனி அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதையும் கேட்போம்.
எதற்கும் கொண்டோடி சுப்பினி வேலை பார்க்காமல் இருப்பதுதான் தனக்கு நல்லது என்ற முன்தீர்மானத்துடன் வோஷிங் மெஷினை ஒரு முறை பார்த்துவிட்டு வெளியேவந்தாள் அபிதா.
உடைகளை கழுவுவதற்கு இப்படி ஒரு வோஷிங் மெஷின் இருப்பதுபோல், மனித மனங்களை கழுவுவதற்கும் கடவுள் எதனையும் கண்டுபிடித்திருக்கலாமே என்றும் அவளுக்கு எண்ணத்தோன்றியது.
ஜீவிகா, கூடத்தில் இருந்து கைத்தொலைபேசியில் முகநூல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ உடுப்பெல்லாம் போட்டுவிட்டேன். உங்கட சீலன் அந்த ரீ.வி. நிகழ்ச்சி பற்றி ஏதும் சொன்னாரா…? நீங்கள் இரண்டுபேரும் என் கண்களைக்கட்டி காட்டுக்குள்ளே தள்ளிவிட்டீங்களோ தெரியாது அம்மா. “ அபிதா, ஜீவிகாவின் கவனத்தை தனது பக்கம் திருப்பினாள்.
“ அந்த நிகழ்ச்சி முன்னறிவித்தல் எப்படி இருந்தது…? அது ரெலிகாஷ்ட்டாகும்போது நானும் அங்கே சீலனுடன்தான் நின்றேன். அதுதான் உங்களுக்கும் உடனே தெரியப்படுத்தினேன். மஞ்சு எனக்கெடுத்து தனது சந்தோசத்தை சொன்னாள். அவள் சொல்லி சுபாவும் பார்த்திருக்கலாம். ஆனால், சுபாவிடமிருந்து ஒரு கோலும் இல்லை அபிதா. நீங்கள் வாரம் ஒரு தடவை கொழும்புக்கு வரவேண்டியிருக்கும் என்றுதான் நானும் சீலனும் முதலில் நினைத்திருந்தோம். ஆனால், நாம் எதனைத் திட்டமிட்டாலும், எதிர்பாராதவிதமாக ஏதும் இடையில் புகுந்து குழப்பிவிடுகிறது. அதுதான் சில விடயங்களை உங்களிடம் முதலிலேயே சொல்லிவிடலாம் என்று யோசிக்கிறேன் அபிதா. “
ஜீவிகா பேசிய தோரணையால் அபிதாவின் நெற்றி ரேகைகள் சற்றுச்சுருங்கின. தொடர்ந்தும் அவள்பேசவிருப்பதை ஜீரணித்துக்கொள்ளத்தக்கதாக தன்னை தகவமைத்துக்கொள்ளவும் அபிதா தயாரானாள்.
“ பெரியப்பாவும் அவருடைய மகளும் இந்த வீட்டை சிலவேளை விற்பதற்கு முயற்சிக்கலாம். நானும் சீலனுடன் கொழும்போடு போய்விடலாம். மஞ்சுளா, சுபாஷினி, கற்பகம் ரீச்சர்…. அவரவர் எதிர்காலத்தை பார்த்துக்கொண்டு போய்விடப்போவதாகவும் தெரிகிறது. அவ்வாறெல்லாம் நடந்தால் நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம் அபிதா….? “
“ இதென்ன கேள்வியம்மா…? என்னை வீட்டு வேலைக்கு கூப்பிட்டீங்க. வவுனியாவிலிருந்து வந்தேன். போகச்சொன்னால், போய்விடுவேன். நான் வேலைக்கு வந்தவள்தானே…? வேறு எதற்கும் இல்லையே “ மனதை திடப்படுத்திக்கொண்டு சொன்னாலும், பீறிட்டு வரவிருந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டே சுவரைப்பார்த்துச்சொன்னாள் அபிதா.
“ என்ன… அபிதா… நான் இங்கே இருக்கிறேன். என்னைப்பார்த்துப்பேசுங்க… சுவரோடு பேசவேண்டாம். முகத்தை திருப்புங்க அபிதா. “
“ வேண்டாம் அம்மா. உங்களைப்பார்த்தால் அழுதுவிடுவேன் என்று பயமாக இருக்கிறது. “ அபிதா வலதுதோளை உயர்த்தி முகத்தை உராய்ந்துகொண்டாள்.
“ அபிதா… டோன்ட் வொரி… நான் உங்களை கைவிட மாட்டேன். பயப்படவேண்டாம். இந்த வீட்டு வேலை நான் இங்கே இருக்கும்வரையில்தான் உங்களுக்கிருக்கும் என்பதை சொல்லவேண்டும் அல்லவா. கற்பகம் ரீச்சர் இடமாற்றம் கிடைத்தால் எப்படியும் போய்விடுவா. மஞ்சுளாவையும் தாய் எப்பாடு பட்டாவது கண்டிக்கு மாற்றலெடுக்கச்செய்து தன்னோடு அழைத்துவிடுவா. பிறகென்ன சுபாஷினி. அவளுக்கும் கலியாணம் முடிந்துவிட்டால் அவளும் நுவரேலியாவோடு போய்விடுவாள். நான் எங்கே போவது..? எனக்கு வேலை கொழும்பில். இனி நான் சீலனுடன்தான் இருக்கவேண்டி வரலாம். அவ்வாறு போனால், உங்களையும் என்னோடு அழைத்துப்போய்விடுவேன். நீங்கள் என்னோடு இருந்து, அந்த ரீ.வி. ஷோவுக்கு போய்வரலாம். பிரச்சினை தீர்ந்தது. அதுபற்றி சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். இதற்குப்போய் வீணாக உணர்ச்சிவசப்படுறீங்களே… இன்னும் நீங்கள் சின்னப்பிள்ளையா…? வருங்கால தொலைக்காட்சி தொகுப்பாளினி இப்படியா தொட்டதற்கெல்லாம் சிணுங்கவேண்டும். “
இதனைக்கேட்டதும் அபிதாவுக்கு சிரிக்கவேண்டும்போலத் தோன்றியது. சிரித்துவிடலாமா…? வேண்டாமா…?
“ அபிதா… உங்களுக்கு விதியில் நம்பிக்கை இருக்கிறதா… ஒரு விடயம் சொல்கிறேன். கேளுங்க… ஆனால், ஆங்கிலத்தில்தான் சொல்வேன். உங்கட கண்ணைக்கட்டி காட்டில் விடப்போகிறேன் என்று நீங்கள் சொன்னதனால்தான் இதனையும் ஒரு பதிலாகச்சொல்கிறேன். என்ன… கேட்கிறீங்களா…? “
“ ஓம்… அம்மா… கேட்கிறேன். சொல்லுங்க… “
“Faith is like a small lamp in a dark forest. It does not show everything at once, but gives enough light for the next step to be safe. “ என்று ஜீவிகா சொன்னதும், அபிதா முகத்தை திருப்பி, “ பிளீஸ்… பிளீஸ் இன்னும் ஒரு தடவை சொல்லுங்க.. எழுதிக்கொள்கிறேன் “ எனச்சொல்லிக்கொண்டு தான் தங்கும் களஞ்சிய அறைக்கு ஓடிச்சென்று தனது நாட்குறிப்பினை எடுத்துவந்தாள்.
ஜீவிகா, மீண்டும் ஒவ்வொரு சொல்லாக சொன்னதும் எழுதிக்கொண்டாள்.
“ இதுபோன்று உங்களுக்கு வேறு எதுவும் தெரிந்தாலும் சொல்லுங்க. எழுதிக்கொள்கிறேன் “ என்ற அபிதாவின் முகத்தில் தோன்றிய பரவச ரேகைகளை ஜீவிகாவும் பரவசத்துடன் ரசித்தாள்.
“ ஓகோ….! டயறியெல்லாம் எழுதுறீங்களா அபிதா…? “
“ டயறி மட்டுமல்ல, ஒரு பெரிய கதையும் எழுதுகிறேன். உங்களுடைய பத்திரிகையில் வரச்செய்யமுடியுமா… ? “ எனக்கேட்டாள் அபிதா.
“ எப்போதிருந்து…? நீங்கள் சகலகலாவல்லிதான் அபிதா. எங்களையெல்லாம் மிஞ்சப்போகிறீங்க… ! பெரியப்பா என்ன சொன்னார்..? “
“ உங்களை கேட்டார். நீங்கள் வேலையில் பிஸி எனச்சொன்னேன். “ என்ற அபிதா, அவரது மகள் தர்ஷினி தொடர்புகொண்டதை மாத்திரம் சொல்லாமல் மறைத்தாள்.
ஜீவிகா – பெரியப்பா குடும்பத்துக்கு மத்தியில் ஏதோ ஒரு அரசியல் நகர்ந்துகொண்டிருப்பது மாத்திரம் அபிதாவுக்குப்புரிந்தது. லண்டன் தர்ஷினி இங்கிருக்கும் சுபாஷினியை தனது உளவாளியாக பயன்படுத்தி, தகவல் திரட்டுவதும் தெரிந்தது.
பெண்களின் இயல்புகளை என்னைப்போன்ற ஒரு பெண்ணாலேயே புரிந்துகொள்ளமுடியவில்லையென்றால், ஆண்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்.
ஜீவிகா, தனது எதிர்காலம் பற்றிச்சொல்லும்போது தானும் மனதில் எடுத்திருக்கும் தீர்மானத்தை சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு அபிதா வந்திருந்தாள்.
“ நான் எப்படியம்மா, கொழும்புக்கு உங்களோடு வரமுடியும். நான் இங்கேயே இருக்கிறன். “ என்றாள்.
“ எப்படி… அபிதா…? அவள்… லண்டன் பெரியப்பாவின் மகள் தர்ஷினி இந்த வீட்டை விற்பதற்கு திட்டம்போட்டுவிட்டாள். எனக்கு அது புரிகிறது. பெரியப்பாவிடம் துருவிதுருவிக்கேட்டு அறிந்துகொண்டேன். நான் இந்த வீட்டை எனது உடைமை ஆக்கிக்கொள்ளலாம் என்ற பயம் அவளுக்கு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் இந்த வீட்டை எப்படி பராமரித்தேன் என்பது அவளுக்குத் தெரியாது. எனக்கும் ஒரு துணை வரப்போகிறது எனத் தெரிந்ததும், அவளுக்குப்பொறாமை வந்துவிட்டது. வருபவரும் இந்த வீட்டிலேயே கேம்ப் அடித்துவிடலாம் என்ற பயம்தான். வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய முகநூல் படங்களை, மஞ்சுளாவின் முகநூல் கணக்கின் ஊடாக திறந்து பார்த்திருக்கிறாள். “ என்று ஜீவிகா சொன்னதும்,
“ அப்படியெல்லாம் பார்க்கமுடியுமா அம்மா..? “ என்று வெகுளியாகக் கேட்டாள் அபிதா.
“ உங்களிடம் முகநூல் இல்லையல்லவா…? நல்லது. அவ்வாறே இருங்கள். பிரச்சினைகளை சந்திக்காமல் நிம்மதியாக இருக்கமுடியும். “
“ நான் சந்திக்கவேண்டிய பிரச்சினைகளையெல்லாம் கடந்து வந்துவிட்டேன். என்னிடம் பேச்சுப்போட்டிக்கு எழுதி வாங்கி பரிசு வாங்கிய ஒரு மாணவன் – பெயர் உதயசங்கர்… முன்பு சொல்லியிருக்கிறேன். அவனின்ட தாய் - பெயர் தமயந்தி. என்னுடைய நல்ல சிநேகிதி. இடைக்கிடை இங்கே வந்து பேசியிருக்கிறா. நீங்கள் எல்லாம் இல்லாதபோது அவதான் பேச்சுத்துணைக்கும் இங்கே வந்தா. அவவின் புருஷன் சவூதியில் வேலை. ஒரு மகன்தான். இங்கே அவ அறநெறிப்பாடசாலையில் சமயம் கற்பிக்கும் ரீச்சர். தன்னோடும் வந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறா. நீங்களும் நிகும்பலைக்கு வரும்போது என்னை வந்து பார்க்கலாம். எனக்கு இந்த ரீ.வி. நிகழ்ச்சி எதுவும் வேண்டாம் அம்மா. ஊரில் இருக்கும் என்ர அவரின் உறவுகள் அதனைப்பார்த்தால், ஆட்டக்காரியை ரீ.வியில் பாருங்கள் என்று கரித்துக்கொட்டலாம். எனக்கு சமைக்கத் தெரியும்தானே. இங்கே தமிழ் வீடுகளில் ஏதும் விசேடங்கள் வந்தால், பலகாரம் , சாப்பாடு செய்து கொடுத்து என்னுடைய எஞ்சிய காலத்தை போக்கிக்கொள்வேன். நீங்கள் சொல்லும் விதி எனக்கு விளக்காக இருந்து முழுவதையும் காண்பிக்காது போனாலும், அடுத்த காலடியை எவ்வாறு எடுத்துவைக்கவேண்டும் என்பதற்கு சிறிய வெளிச்சத்தையாவது காண்பிக்கும், “ எனச்சொல்லிவிட்டு ஜீவிகாவை ஏறிட்டுப்பார்த்தாள்.
அவளது கண்களிலிருந்த தீட்சண்யத்தை ஜீவிகா கூர்ந்து பார்த்தாள்.
யன்னல் திரைச்சேலைகள் காற்றில் படபடத்தன. வீட்டுக்குள் குளிர்ந்த காற்று வந்தது.
“ என்ன திடீரென காற்றடிக்குது. மழைவரப்போகுது அம்மா. உங்கள் உடைகளை வீட்டுக்குள்ளேதான் காயப்போடவேண்டும். அடித்த வெய்யில் இந்த மழைக்கான அறிகுறிதானோ…? “ எனச்சொல்லிக்கொண்டு யன்னல்களை அபிதா மூடினாள்.
இயற்கையும் இந்தப்பெண்களைப்போலத்தான். அடிக்கடி அது தனது இயல்புகளை மாற்றிக்கொள்ளும் என்று மனதில் நினைத்ததை ஜீவிகா சொல்லாமல், அபிதாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment