Thursday, September 3, 2020 - 6:00am
இலங்கை தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் குறிப்பிடத்தக்கவராவார். இவரிடம் மூன்று முக்கிய பண்புகள் காணப்பட்டன. அவற்றுள் முதலாவது அவர் மக்களிடம் வைத்திருந்த நம்பிக்கை. இந்நம்பிக்கை அவரை காட்சிக்கு எளியராக மனம் திறந்து உரையாடதக்கவராக வைத்திருந்தது. சர்வதேச மட்டத்தில் அவர் சமதர்ம நாடுகளின் நண்பனாகவும் சோஷலிச போராட்டங்களின் ஆதரவாளனாகவும் விளங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னர் சமூக சமத்துவம், சமூக சீர்திருத்தம், கூட்டுறவுத்துறை, கிராம அபிவிருத்தி, உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றில் ஈடுபட்டு தம்மைப் பக்குவப்படுத்தி கொண்ட அவரது நேர்மையும், தியாகமும் அவரை முன்னணித் தமிழ் தலைவர்களில் ஒருவராகத் திகழ வழிவகுத்தது.
இலங்கைத் தமிழசுக்கட்சியின் தீவிர ஆதரவாளனாக 1952ஆம்ஆண்டு தேர்தலுடன் தன்னை ஈடுபடுத்தி செயற்பட்ட இவர், அந்த ஆண்டு தந்தை செல்வா முதல் முதல் தமிழரசுக்கட்சி சார்பில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கி தனது தமிழ் பற்றை வெளிப்படுத்தினார். 1959இல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு 'உடுவில்' என்ற புதிய பாராளுமன்ற தொகுதியை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து 1960ம்ஆண்டு பங்குனி மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தந்தை செல்வாவின் விருப்பத்திற்கமைய உடுவில் தொகுதியில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பல தேர்தல்களிலும் உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டி தொடர்ச்சியாக 23 வருடங்கள நற்பணி புரிந்து 1983ம்ஆண்டு அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தச்சட்ட மூலத்தை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் இதயத்தில் தமக்கென்று தனியிடம் பெற்ற 'தர்மர்' தான் சார்ந்த கட்சிக்கு என்றும் விசுவாசமாகவும் இலட்சியப் பற்றுடனும் முழுநேர ஊழியனாக செயற்பட்டார். இளம் வயதிலேயே இடதுசாரி கொள்கைகளினால் கவரப்பட்ட இவர், சாதிக்கொடுமைகளுக்கு எதிராகத் துணிந்து செயற்பட்டார். அதன் விளைவாக பெரும்பான்மை இன மக்கள் சேர்ந்து ஆபிரிக்க- -ஆசிய விடுதலை இயக்கத்தின் உப தலைவராகவும் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கத்தின் முக்கியஸ்தராகவும் இவரை தெரிவு செய்து கௌரவித்தனர்.
'தர்மரின்' பாராளுமன்ற வாழ்க்கை ஒரு காவியமாகும். இவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளைப் பார்ப்போமானால் தெளிந்த சிந்தனையும், இனப்பற்றும், மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் சமரச நோக்கும் செறிந்து காணப்படுவதைக் காணலாம். பாராளுன்றத்தில் ஆழமான கருத்துக்களை சாதாரணமான வார்த்தைகளில் நகைச்சுவையாகக் கூறும் பண்பு அவரிடம் காணப்பட்டது.
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 1918ம் ஆண்டு மார்கழி மாதம் 05ம் திகதி பிறந்த ‘தர்மர்' அரசியலில் மட்டுமன்றி ஆன்மீக வழியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். தாவர போசனத்தை இறுகக் கடைப்பிடித்தவர். இவர் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலராக விளங்கி ஆலய வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். ஆலய சூழலில் ஆதரவற்றோருக்கான இல்லத்துக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தவரும் இவரேயாவார்.
'இலங்கையர்' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் 'தர்மர்' கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர். சொல்லிலும் செயலிலும் எவரையுமே புண்படுத்தாத நல்ல மனிதர். 'தரமர்' சமூக சேவையிலும் அரசியலிலும் ஈடுபட்டு தனது ஏராளான காணி நிலங்களையும் சொத்துக்களையும் ஏழைகளுக்கும், கல்விசாலைகளுக்கும் வழங்கி இன்பம் கண்டவர்.
இன்று கோப்பாயில் அமைந்துள்ள கல்விவியல் கல்லூரி அமைவற்கு தர்மரின் குடும்பம் தான் காரணம். இக்கல்லூரிக்கு இருநூறு பரப்பு காணியை இவரின் ஏகபுத்திரனும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இலவசமாக வழங்கியதால் கல்வியில் கல்லூரி அமைக்கப்பட்டு வருடாவருடம் பலநுற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உருவாகி வருகின்றனர்.
அமரர் 'தர்மர்' பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த பின் 1983 யூலை வன்செயலைத் தொடர்ந்து பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த போதிலும் 'தர்மர்' எந்தவொரு நாட்டிற்கும் செல்லாது தம் நாட்டிலே தங்கியிருந்து மக்களுக்கு தன்னாலான தொண்டுகளை ஆற்றிவந்தார்.
என்றாலும் தமிழ் பேசும் மக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டுவந்த இவர் ஒரு திருமண விழாவில் பங்கு பற்றிக்கொண்டிருந்த போது கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலையையிட்டு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலதிபருமான அமரர் தர்மலிங்கம் கூறுகையில், 'தர்மர்' தமிழினாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று எண்ணும்போது ஒவ்வொரு தமிழனும் வெட்கத்தினால் தலைகுனிய வேண்டிய நிலையை இப்பாதகச் செயலை செய்தவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்' எனக் கூறினார். தர்மரின் படுகொலையைக் கேள்வியுற்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி இக்கொலை கொடுமையானதும் கொடூரமானதும் என துயரம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி தினகரன்
No comments:
Post a Comment