எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -07 நெஞ்சிலிட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை ! வாழ்வின் தரிசனங்களே செய்தியும் படைப்பு இலக்கியமும் !! முருகபூபதி

 


இலங்கையில்  1970 ஆம் ஆண்டு,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் லங்கா சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும்  இணைந்து  கூட்டரசாங்கம் அமைத்தபோது, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இரட்டைக் கலாநிதி எனவும் தங்கமூளை எனவும் அறியப்பட்ட நிதியமைச்சர் என். எம். பெரேரா,  இரவோடு இரவாக நூறு ரூபா , ஐம்பது ரூபா நாணயத்தாள்களை தடைசெய்துவிட்டு,  புதிய நாணயத்தாள்களை அறிமுகப்படுத்தினார்.

   

இதனால், மக்கள் அதிகாலையே எழுந்து வங்கிகளின் முன்னால் வரிசையில் நின்று  பழைய நாணயத்தாள்களை கொடுத்து,  புதியதை வாங்கநேர்ந்தது.

செல்வந்தர்களிடம் பதுங்கியிருந்த கறுப்புப்பணத்தை வெளியே எடுப்பதற்கான அந்த தங்கமூளையின் திட்டம் வெற்றிபெற்றது.  எனினும் பல கோடீஸ்வரர்கள்,  தாம் பதுக்கிய நாணயத்தாள்களை இரகசியமாக எரித்துவிட்ட செய்திகளும் கசிந்தன.

அரிசி பதுக்கல்காரர்களை பிடிப்பதற்காகவும்  அன்றைய அந்த அரசு பல திட்டங்களை அறிவித்தது. கோதுமை மாவின் விலையும் உயர்ந்தது. சீனிக்கும் தட்டுப்பாடு வந்தது.

சமதர்ம ஆட்சியை அமுலுக்கு கொண்டுவருவதற்கு அந்த அரசு மேற்கொண்ட  முயற்சிகளினால், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும் மத்தியதர வர்க்கத்தினரும்தான்.

மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கியவாறு  தேநீர், கோப்பியை அருந்தினர்.  அதனால் எதிராணி ஐக்கிய தேசியக்கட்சியினர் அதற்கு எதிர்வினையாற்றி, தங்கள் கரங்களிலிருந்த ரேகைகளும் அழிந்துவிட்டதாக எள்ளிநகையாடினர்.

உள்நாட்டில் கித்துல் கருப்பட்டி, பனம் கருப்பட்டிக்கு என்றுமில்லாத மவுசு தோன்றியது.  வீட்டு முற்றங்களிலும்  மக்கள் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டு  வாழ்வாதாரத்தை தேடினர்.

புதிய நாணயத்தாளுக்காக அதிகாலையே எழுந்து வங்கிகளின் முன்னால் தவமிருந்த மக்கள்,  பாண்பேக்கரிகளுக்கு முன்பாகவும் அவ்வாறு வரிசையில் நின்று பாண் வாங்கநேர்ந்தது. கோதுமை மாவின் விலையேற்றமும் தட்டுப்பாடும்தான் அதற்குக் காரணம்.

எரிபொருள் விலையேற்றத்தினால், பஸ் கட்டணமும் உயர்ந்தது. 

      

அந்த நெருக்கடிக்கெல்லாம் “ முன்னைய ஐக்கியதேசியக்  கட்சியின் அரசு, திறைசேரியை ( கஜானாவை )  காலி செய்துவிட்டுச் சென்றதுதான் காரணம் “   என்றது ஶ்ரீமாவின் தலைமையிலான  அந்தப்புதிய அரசு.

1970 நடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த ஐக்கியதேசியக்கட்சியினால்,  நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர். ஜெயவர்தனா தெரிவாகியிருந்தார்.

தெதிகம தொகுதியிலிருந்து தெரிவாகி நாடாளுமன்றம் வந்திருந்த முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்காவும் உடல்நலக்குறைவினால்  சில மாதங்களில் மறைந்தார்.

அவர் அரிசிச்சோறு சாப்பிடாதவர். எனினும் உள்நாட்டில் விவசாய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக,  பல  சிறந்த விவசாயிகளுக்கு விவசாய மன்னர் பட்டம் வழங்கியவர்.  திருமணமாகாத பிரம்மச்சாரி. 

1965 முதல்  எங்கள் ஊரில் நடந்த அரசியல் கூட்டங்களுக்கெல்லாம் சென்று முன்வரிசையில் நின்று தலைவர்களின் உரையை கேட்டுள்ளேன்.  பாடசாலையில் சிங்களத்தையும் ஒரு பாடமாகக்கற்றிருந்தமையால், அவர்களின் உரைகளை கிரகிக்கவும் முடிந்திருக்கிறது.

டட்லிசேனாநாயக்கா ஆணழகன்தான்.  அவர் சுங்கானுடன்  மேடையில் அமர்ந்திருக்கும்  தோரணையை பல தடவைகள் ரசித்திருக்கின்றேன்.  அதுபோன்று  ஐக்கியநாடுகள் சபையில் பேசிவிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழ்க்காங்கிரஸ் தலைவர்  ஜி. ஜி. பொன்னம்பலம்  தமக்கு வழங்கப்பட்ட மாபெரும் வரவேற்புக் கூட்டத்தில் மேடையில் அமர்ந்து  சிகரட் புகைத்த லாவகத்தையும் அருகே நின்று ரசித்துள்ளேன்.

இவ்வாறு கடந்த 55 வருடகாலமாக  இலங்கை அரசியல் தலைவர்களின் உரைகளை  முன்னர் மேடைகளிலும்  புலம்பெயர்ந்த பின்னர் காணொளிகளிலும்  கேட்டு வந்திருப்பதனால், அவர்களின் அரசியல் ராஜதந்திரத்தையும்,  எங்கே எப்படிப்பேசினால் மக்களை கவரலாம் என்ற அவர்களின் எண்ணப்பாடுகளையும் புரிந்துகொள்ளமுடிந்திருக்கிறது.

வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு பிரதேச நிருபரானதும்  அரசியல் கூட்டங்களுக்கும் சென்று செய்தி சேகரித்து அனுப்பினேன்.  அத்துடன்  கொழும்பில் நடக்கும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு,  இலக்கிய மடல்களை எழுதி மல்லிகைக்கு அனுப்பிவைத்தேன்.

அதனால் எனது எழுத்துப்பணி சமாந்தர ரேகைகளுக்கு ஒப்பானதாக மாறியிருந்தது.  செய்திக்கட்டுரையும் அதே சமயம்  சிறுகதையும் எழுதும்போது மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும் என்ற பயிற்சியையும் பெறமுடிந்தது.

சிறுகதைகளில் அழகியல் குன்றி நடைச்சித்திரமாகிவிடாமலிருக்கவேண்டும்.  செய்தியை படிக்கும் வாசகருக்கும்  எளிமையாக விடயத்தைச்  சொல்லவேண்டும். 

செய்திகளுக்காக அலைந்தபோது,  சிறுகதைகளுக்கான கருக்களும்  கிடைத்தன.

      

1972 ஜூலை முதல் கனவுகள் ஆயிரம், தரையும் தாரகையும், அந்தப்பிறவிகள்,  நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன, சுமையின் பங்காளிகள், பேரலைகள் மடிகின்றன முதலான  ஆறு சிறுகதைகளை எங்கள் பிரதேசத்து கடற்றொழிலாளர்களின் பேச்சு வழக்கில் அந்த மண்வாசனையோடு எழுதியிருந்த நான்,  திடீரென்று  ஏனைய மக்களைப்பற்றியும் எழுத நேர்ந்தமைக்கு அன்று நிலவிய அரசியல் பொருளாதார மாற்றங்களும் முக்கியமானது.

ஏழை மக்கள் அதிகாலையே எழுந்து பேக்கரிகளுக்கு முன்னால் பாண் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது,  செல்வந்தர் வீட்டு வேலைக்காரர்களும் அந்த வரிசையில் கால் கடுக்க நின்றதையும் கண்டிருக்கின்றேன்.

ஏழை – பணக்காரன் என்ற பேதமும் ஏற்றதாழ்வும் வர்க்கவேறுபாடும் அந்த மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து நான்  கற்றுக்கொண்ட  பாடமாகும்.

ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணம் படிக்கச்சென்று,  அங்கிருந்த சாதிவேற்றுமைகளையும்  கொடுமைகளையும் அறிந்துகொண்டு திரும்பியிருந்த எனக்கு,  நான் எழுதும் செய்திகளிலும் கதைகளிலும் சமூகப்பார்வை இருக்கவேண்டும் என்ற எண்ணமும்  1972  காலப்பகுதியிலேயே மனதில் துளிர்த்துவிட்டது.

எனினும்  மார்க்ஸீய, சோஷலிஸ பார்வையில் எழுதாமல், யதார்த்தப் பார்வையிலேயே மனிதநேயத்தை அடிப்படையாக வைத்து எழுதிக்கொண்டிருந்தேன்.

நீர்கொழும்பு பஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த மாநகர நூல் நிலையத்திலிருந்து மு. வரதராசனின்  நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு,  அகல் விளக்கு,  பெற்றமனம், கள்ளோ காவியமோ, அல்லி  முதலான நாவல்களை படித்துமுடித்துவிட்டிருந்த நான்,  புதுமைப்பித்தன்,  தொ. மு. சி. ரகுநாதன்,  ஜெயகாந்தன் ,  சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன், தி. ஜானகிராமன்,  இந்திரா பார்த்தசாரதி, அசோக மித்திரன் ஆகிய தமிழக எழுத்தாளர்கள், மற்றும் டொமினிக் ஜீவா, கே. டானியல்,  மு. தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, செ. கணேசலிங்கன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களின் பக்கமும்  மலையாள இலக்கியவாதிகள் தகழிசிவசங்கரன் பிள்ளை,  பொற்றேகாட்,  கேசவதேவ், கன்னட எழுத்தாளர்  காண்டேகர்  பக்கமும்  தாவிவிட்டேன்.

இதனால்,  இன்றும் எம்வர்களினால் பேசப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வனோ, சிவகாமியின் சபதமோ, சாண்டில்யனின் யவனராணியோ,  கடல்புறாவோ என்னை நெருங்கவில்லை.

எனினும்  அகிலனின் வெற்றித்திருநகரும், கொத்தமங்கலம் சுப்புவின் பொன்னிவனத்துப்பூங்குயிலும் கல்கியில் தொடராக வந்தபோது படித்திருக்கின்றேன்.

அத்துடன், கல்கி வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட  தொடர்கதைப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசில்களை முறையே பெற்ற, உமாசந்திரனின் முள்ளும் மலரும்,  ரா.சு. நல்லபெருமாளின்  கல்லுக்குள் ஈரம்,  பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகியனவற்றை கல்கியிலேயே படித்துவிட்டிருந்தேன்.

இவை சமூக நாவல்கள்.  சரித்திர நாவல்களை விட எனக்கு அம்புலிமாமா கதைகள் மிகவும் பிடித்தமானது.

பிற்காலத்தில்,  “  கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்காத நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்..?  “ என்று எனது மனைவி என்னை கேலிசெய்யும்போதெல்லாம்,   “  அதனால்தான் எழுத்தாளராக இருக்கிறேன் “   என்று பதில்சொல்வதும் எனது வழக்கமாகியது.

ஏனென்றால் கல்கி, சாண்டில்யனை படித்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் எத்தனைபேர்  அவர்களின் பாதிப்பினால் எழுத்தாளர்களாக பின்னாளில் பிரகாசித்தார்கள்…?  என்பதும் எனது வாதமாக இருந்தது.

அண்மையில்  நியூசிலாந்திலிருந்து ஊடகத்துறை நண்பர் சத்தார் அவர்களும்,  என்னை தமது நம்தமிழ் இணையத்தள ஊடகத்திற்காக நடத்திய நீண்ட காணொளி  நேர்காணலிலும்  நான் பொன்னியின் செல்வன் படிக்கவில்லை என்பதை கேட்டறிந்து ஆச்சரியமுற்றார்.

அடுத்தவேளை சாப்பாட்டுக்காக ஏழை – மத்தியதர  மக்கள் அதிகாலையே எழுந்து பாண்பேக்கரிகளுக்கு முன்னால்  வரிசையில் நின்ற காட்சியையும்,  கொழும்பு பஸ் நிலையத்தில் ஒரு  ஏழை இளம்பெண் கைக்குழந்தையுடன்  தனக்கு அங்கிருந்த அப்பம் சுடும் கடையிலிருந்து இரண்டு அப்பம் வாங்கித்தருமாறு ஒருவனைக்கேட்டபோது, அவன் அதற்கு பிரதியுபகாரமாக  பாலியல் லஞ்சம் கேட்ட காட்சியையும்,  நோயுற்ற தனது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல கார் உதவிகேட்ட ஏழை மீனவனின் வேண்டுகோளை ஒரு செல்வந்தன் தட்டிக்கழித்து, அந்தக்குழந்தை இறந்துபோகக் காரணமாயிருந்த  கொடுந்துயரத்தையும் நேரில் பார்த்திருந்த எனக்கு,   நான் அறியாத காலத்து மன்னர்களின்,  மூவேந்தர்களின்  அந்தப்புரம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கவில்லை.

அவர்களின் வீரம்செறிந்த கதைகளுக்கு முன்னால், இந்த ஏழைகளின் அன்றாடக்கதைகளின்  வலியே  எனக்குப் பெரிதாகத் தெரிந்தது.

அந்த வலியை தரையும் தாரகையும்,  எதற்காக..? பசி  முதலான கதைகளில் சித்திரித்திருந்தேன். வேலை தேடி அலைந்த இளைஞர்களிடம்  நண்டும், மீனும் லஞ்சமாகக்  கேட்ட அரசியல்வாதிகளை கண்டேன். அதனால், நான் சிரிக்கிறேன் என்ற கதையையும் எழுதினேன்.

பாடசாலைப் படிப்பறிவேயற்ற பாமர மக்களிடமிருந்த மனிதநேய உணர்வுகளை எனது கதைகளில் வெளிப்படுத்தினேன்.

தந்தையாலே,  பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து,  மனைவியாக்கிக்கொண்ட  நகரசுத்தித் தொழிலாளி, வீடு வீடாகச்சென்று மலம் மட்டும் அள்ளிவரவில்லை.    ஒரு பெண்மீது சுமத்தப்பட்ட அழுக்கையும் நீக்கினான் என்பதை சித்திரிக்கும் விடிவை நோக்கி என்ற சிறுகதையும் எழுதினேன்.

செல்வந்தர்களினால் சுரண்டப்பட்ட,  மத்தியதர வர்க்கத்தைச்சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் பற்றி விழிப்பு என்ற கதையையும் படைத்தேன்.

இச்சிறுகதைகள் நான் நிருபராக பணியாற்றிய வீரகேசரியில் வெளிவரவில்லை. மல்லிகை, பூரணி, புதுயுகம் முதலான சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன.

அக்காலப்பகுதியில் கொழும்பிலிருந்து கே.வி. எஸ். மோகன் நடத்திய கதம்பம்,  சரோஜினி நடத்திய மாணிக்கம் முதலான மாத இதழ்களிலும்  ஒவ்வொரு சிறுகதைகளை எழுதியிருந்தாலும், அவற்றை எனது முதலாவது கதைத் தொகுப்பில் நான் சேர்த்துக்கொள்ளவில்லை.

எனினும் கதம்பம் இதழில் எழுதியிருந்த எனக்குப் புரியவில்லையே..!?  என்ற சிறுகதை எங்கள் ஊரில் மேல்வகுப்பு மாணவர்கள் மத்தியில் பரபரப்பாகப்பேசப்பட்டது.  அதனை தனது மாணவப்பருவத்தில் (G.C.E A/L )  படித்திருக்கும் எனது மனைவி, பிற்காலத்தில்,  நான் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் அடிக்கடி  என்னிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கிறாள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு எனக்கு மெல்பனில் மணிவிழா நடந்தபோது, அதில் உரையாற்றிய மனைவி எனது அந்தக்கதையின் பெயரை   சபையோரிடத்தில் பகிரங்கப்படுத்திவிட்டு, அதன் உள்ளடக்கத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஏதோ ஒரு  மர்மத்தை  அவிழ்த்துவிட்ட புளகாங்கிதத்துடன் மேடையிலிருந்து இறங்கினாள்.

நீர்கொழும்பிலும், கொழும்பிலும் அக்காலப்பகுதியில் நடந்த இலக்கிய கூட்டங்கள் பற்றிய செய்திகளை மல்லிகை, பூரணி யிலும் எழுதியதனால்,  இவ்விதழ்களின் ஊடாக வெளியூர்களில் வாழ்ந்த எழுத்தாளர்கள், வாசகர்களின் நட்புறவும் கிடைத்தது.

எமது ஊர் இந்து இளைஞர் மன்றம், விஜயரத்தினம் வித்தியாலயம்,  மாநகரசபை மண்டபம், கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம்,  வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம்,  இராம கிருஷ்ண மிஷன் மண்டபம், கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் ஆகியனவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றியெல்லாம் செய்திக்கட்டுரைகளை எழுதினேன்.

அதனால்   பல்கலைக்கழக விரிவுரையாளர்களான பேராசிரியர்கள், கலாநிதிகள்,  பத்திரிகை ஆசிரியர்கள்,  கலை, இலக்கியவாதிகள்,  சட்டம் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,  நாடகக்கலைஞர்கள், உட்பட பலரதும் நட்புறவு கிட்டியது.

ஒரு சமயம் பூரணி காலாண்டிதழின் அறிமுகக்கூட்டம் சட்டக்கல்லூரியில் நடந்தபோது, அதற்கு அச்சமயம் தலைமை தாங்கியவர் தமிழ் மாணவர் மன்றத்தலைவர் குமாரசாமி விநோதன்.   இந்நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய விரிவான இலக்கிய மடல் பூரணியிலும் வெளியானது.  அதில் உரையாற்றிய மாணவர்களான அஷ்ரப், ஶ்ரீகாந்தா,  கனக. மனோகரன் ஆகியோர்  பின்னாளில் அரசியல் பிரவேசம் செய்தார்கள்.

கட்டுப்பத்தை பல்கலைக்கழகத்தின் வருடாந்த தமிழ் விழா, ஆறுமுகநாவலர் 150 ஆவது ஜனனதின விழா, எழுத்தாளர்   இளங்கீரனுக்கு பாராட்டுவிழா  மற்றும்  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  தேசிய ஒருமைப்பாடு மாநாடு தொடர்பான பிரசார கூட்டங்கள்  என்பன  கொழும்பில் நடந்தவேளைகளில் அவற்றில் எல்லாம் கலந்துகொண்டு,  செய்திக்கட்டுரைகளும் எழுதியிருக்கின்றேன்.

என்னைப்போன்றே நண்பர் நெல்லை க. பேரனும்  அடிக்கடி இலக்கிய நிகழ்வுகளை சிற்றிதழ்களில் எழுதினார்.

அக்காலப்பகுதியில் நான் எழுதிய செய்திகளில் இடம்பெற்ற பலர் இன்றில்லை.  சிலர் கொல்லப்பட்டார்கள். சிலர் அகாலமரணம் எய்தினார்கள்.  அவர்கள் பற்றிய நினைவுகளை இன்றும் சுமந்துகொண்டிருப்பதனால்,  முடிந்தவரையில்  அவர்கள் பற்றிய பதிவுகளையும் எழுதிவந்துள்ளேன்.

எனது காலமும் கணங்களும்  தொடரில்  அவர்கள் நினைவுகளாக வாழ்கிறார்கள்.

நண்பர் நெல்லை க. பேரனும், அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும்   நெல்லியடியில் ஷெல்வீச்சினால் ஒரே சமயத்தில் கொல்லப்பட்ட  சம்பவம் நடக்கும்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்து கலங்கிப்போனேன்.

நண்பர்கள்  குமாரசாமி விநோதன்,  நெல்லை நடேஸ்,  தராக்கி சிவராம்,  பத்திரிகையாளர் மட்டக்களப்பு நித்தியானந்தன், காவலூர் ஜெகநாதன்,  கலா. பரமேஸ்வரன்   உட்பட பலர்  கொல்லப்பட்டபோதும், அஷ்ரப் அகால மரணடைந்தபோதும்  அந்த அதிர்ச்சிகளிலிருந்து நான்  மீண்டு வருவதற்கு காலம் எடுத்தது.

 ஊடகம்  மற்றும் இலக்கிய வாழ்வில் நான் இணைந்தும்  என்னோடு தொடர்ந்தும்  பயணித்த பலரை இழந்துவிட்டேன்.  முடிந்தவரையில் அவர்கள் பற்றி விரிவான கட்டுரைகளை பதிவுசெய்துள்ளேன்.

அவர்களைப்பற்றி எனது நெஞ்சில் இட்டகோலங்கள் அழிவதில்லை.

( தொடரும் )

letchumananm@gmail.com



No comments: