மீண்டும் தொடங்கும் மிடுக்கு ............... பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.

வண்டமிழ் அறிஞர் வாழ்ந்த நவாலியில்

வரதன் என்னுமோர் வாலிபன் வாழ்ந்தான்

கண்டவர் மதித்திடக் கடமை உணர்வுடன்

கமம்செய விரும்பியோர்; காணியும்; தேடினான்

வாங்க முடிந்ததே பெரிதென நினைத்தான்

முயற்சி என்றும் திருவினை யாக்கும்

முதுமொழி நினைந்து செயற்பட விழைந்தான்

பத்துப் பரப்புக் காணியை அவனும்

பதப்ப டுத்தப் பெரும்பா டுபட்டான்

மெத்தப் பொறுமையாய்ப் பாறைகள் பிழந்து

வேண்டாக் கற்களால் மதில்தனை அமைத்தான்

நீரிலாக் குறையை நினைந்து வரதன்

நித்திரை இன்றி உடலை வருத்தி;

வாரி வாரி நிலத்தைத் தோண்ட

வந்தநல் லூற்றும் தந்தது நன்னீர்;

பகலிர வாக உழுது  உழுது

பரவலாய் எங்கும் உரமும் தூவி

நிகரே இலாத விழைநில மாக்கி

நெல்விதை தன்னை எட்டுப் பரப்பிலும்

பிறதா னியங்களை மீது நிலத்திலும்

பிரியமாய் விதைத்து நீரும் பாய்ச்சினான்

மறவா தங்கொரு 'வெருளி'யும்; மாட்டினான்

திறமாய்ப் பயிர்கள் முளைவிடக் கண்டான்.

நெற்பயிர் வளர்வதைக் கண்டு நெகிழ்ந்து

நீக்க வேண்டிய களைதெரிந் தகற்றி

வெற்றிடம் பார்த்து நாற்றினை நட்டும்

வீரியத் தோடு வளரும் மற்றைய

தானிய வகைப்பயிர் தழைத்திடப் பந்தல்

தனித்தனி யாக முறைப்படி அமைத்தும்

கண்ணும் கருத்துமாய்க் காத்து வந்தான்

முத்துக் கொத்தாய் நெற்கதிர் முகிழ்த்தன

முளைக்கீ ரையொடு பயித்தங் காயும்

கத்தரி புடோலும் பாகற் காயும்

கறிமிள காயொடு; வெண்டைக் காயும்

காய்க்கும் செடிகள் செழித்து வளர்ந்தன!

கண்படு மோவென வரதன் இருக்கையில்

பேய்க்காற் றுடனே அடைமழை பெய்தது

பெரும்இடி முழக்கமும் மின்னலும் தோன்றின!

தொடர்ந்து பெய்த மழையினால் வெள்ளம்

சூழ்ந்து பயிர்களை மூடி அழித்தது

படர்ந்த கொடிகளைக் காற்றுப் பிடுங்கின!

பார்த்த வரதனோ பதறிச் சோர்ந்தான்;

கோரத் தாண்டவம் ஆடிய இயற்கை 

கொடுத்த நட்டமோ ஈடிணை யற்றதே!

ஆராத் துயரை வரதனுக் களித்து!

அழிவைச் செய்த வெள்ளம் வற்ற 

ஐயிரு வாரம் ஓடி மறைந்தது

அழகன் வரதனின் துயரமும் தணிந்தது

இயற்கை அழித்ததை யாரிடம் சொல்வான்?

இறைவனின் திருவிளை யாடலென் றெண்ணித்

தயக்கம் நீக்கினான்!  சாதனை யாகத் 

தானியம் விதைத்துச் சரித்திரம் படைக்க

வியக்க வைக்கும்; சபதம் ஏற்றான்!

மீண்டும் தொடங்குமென் மிடுக்கென் றெழுந்தான்!

ஆண்டாண் டாக அழிவுவந் தாலும் 

அளந்தவன் மீண்;டும் தருவான் என்றே

மீண்டும் தொடங்கும் மிடுக்கை உணர்வில்

மிகுவாய்க் கொண்டவர் ஈழத் தமிழரே!

 

பின் குறிப்பு :- நவாலியூர் 'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவர் எழுதிய மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்னும் சிறுகதை  1977ஆம்(?) ஆண்டுகளில் 7ஆம் வகுப்புக்குரிய தமிழ்ப் புத்தகத்திலே இடம்பெற்றிருந்தது. அதன் கருப்பொருள் என்கற்பனையிற் கவிதையாய் மலர்ந்தது.       

               

 

 





No comments: