அவள் அப்படித்தான் ( சிறுகதை ) முருகபூபதி

ம்மா மீண்டும் அவளது திருமணப்பேச்சை ஆரம்பித்தமையால் அன்றைய காலைப்பொழுது அந்த வீட்டில் கோபத்துடன் விடிந்தது. இருவருக்கும் கோபம்.

அம்மா தனது கோபத்தை  சமையலறையில் காண்பித்தார். அவள் குளியலறையில் காண்பித்தாள்.

சாப்பாட்டு மேசையில் மெதுவாக வைக்கவேண்டிய கண்ணாடிப்பாத்திரம் வெடிப்பு கண்டது. குளியலறை பிளாஸ்ரிக் வாளி தண்ணீரோடு சரிந்தது.

 அவள் வேலைக்குப்புறப்படும்  வேளையில்,  தனது திருமணப்பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை அம்மாவிடம்  சொன்னாலும் அம்மாவின் பெற்றமனம் பித்துத்தான்.

அம்மா, மகள் பிரபாலினிக்கான மதிய உணவைத்தயாரித்து எவர்சில்வர் கரியரில் வைத்து மூடி, அருகே ஒரு சிறிய தண்ணீர்போத்தலும் வைத்தார்.

        

                                              " இன்றைக்கு அவர்கள் வருகிறார்கள். நீ நல்லதொரு முடிவாகச்சொல்லவேண்டும். சாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போகிறாய்...? "

" ஏய்... மிஸிஸ் குசலாம்பிகை வேல்முருகு... உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா...?"

பிரபாலினிக்கு அம்மாவிடத்தில் நேசம் அதிகரித்தாலும் கோபம் அதிகரித்தாலும் இவ்வாறு ஒருமையில்தான் அழைப்பாள். அம்மா என அழைப்பது அபூர்வம்.

மகள் இயல்பு தெரிந்தமையால் எந்தச்சலனமும் இன்றி, நேசத்தையும் கோபத்தையும் பெற்றமனம் சகித்து தாங்கிக்கொள்கிறது.

பிரபாலினி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

அவளுக்கு   அம்மா பேசும் வரன்கள்  விருப்பமில்லை.

கைநீட்டி அடிக்காத,  தாழ்வுச்சிக்கல்  இல்லாத  கணவன் வேண்டும்.  தன்னோடு  நட்பாக இணக்கமாக உறவாடவேண்டும்.   இந்த விதிமுறைகளுக்குட்படும்  துணையைத்தான் அவள் தேடுகிறாள்.   அந்தத் தெரிவுக்குள் இதுவரையில் எவரும் வரவில்லை.

ஒருதடவை பெண்பார்க்க வந்தவர்களுக்கு, அம்மா அன்று காலையே எழுந்து பக்குவமாக தயாரித்த, கேசரி, லட்டு,  முட்டை கலக்காத கேக், மீன் – இறைச்சி கலக்காத கட்லட் யாவற்றையும் தனித்தனி எவர்சில்வர் தட்டங்களில் அடுக்கிய பெரும் பணியை மாத்திரம் செய்தவள் பிரபாலினி.

அத்தருணத்திலும்  பெற்றமனதுடன் அவள் சச்சரவுபட்டாள்.

 “ முட்டை இல்லாத கேக் ருசிக்குமா…? மீன் – இறைச்சியில்லாத கட்லட்டை சாப்பிடத்தான் முடியுமா…? ஏன் இப்படி வீட்டுக்கு வருபவர்களுக்கு தண்டனை கொடுக்கிறீங்க  அம்மா…?  “ என்று அம்மாவை பன்மையில் கேட்டவள்.

அவள்  “ நீ “ என்று முடிக்காமல்,  “றீங்க…” எனக்கேட்டது சற்று ஆறுதல்தான்.

 “ மகளே… நடக்கப்போவது திருமணப்பேச்சு வார்த்தை.  எங்கட சைவமுறைப்படி ஆசாரமாக மீன், முட்டை, இறைச்சி  கலக்காத சிற்றுண்டிதான் பரிமாறவேண்டும். தெரிந்துவைத்திரு என் செல்ல மகளே… “  என்றாள் தாய்.

 “ இந்தியாவில் வடக்கில் பிராமணர்கள் மீன்  சாப்பிடுகிறார்களாம்.  அதனை கடல் புஸ்பம் என்கிறார்களாம். கண்ணப்ப நாயனார் கடவுளுக்கு காட்டில் வேட்டையாடிப்பெற்ற இறைச்சியையும் படைத்தாராம் என்று நீங்கதான் எனக்குச்சொல்லியிருக்கிறீங்க.  அப்படி இருக்கும்போது, என்னைப்பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டுக்காரருக்கு, மச்சம் மாமிசத்தையே கண்ணில் காட்டமாட்டேன் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்கள்.  வரும் மாப்பிள்ளை, என்னோடு தனியே பேசவேண்டும் எனக்கேட்டால்,   “ நீங்கள் என்ன,  தாவரபட்சினியா..? மச்சம் மாமிசம் சாப்பிடுவதில்லையா..? எனக்கேட்டால்,  என்ன சொல்வது மிஸிஸ்..?  சொரி மெடம்.!  “

இவ்வாறு மகள் கேட்டதும் தாய்க்கு அடக்கமுடியாத சிரிப்புத்தான் வந்தது.  ஆனால், அந்தச்சிரிப்பு அந்தக்கணத்தில் மாத்திரம்தான்.

அன்று மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்தபோது, மகள் பிரபாலினி எல்லோர் முன்னிலையிலும் நாணத்துடன் தலைகுனிந்திருக்காமல்,  நேரடியாக கேட்ட சில கேள்விகளினால்  வந்த மாப்பிள்ளையுட்பட அவனது அக்கா, அம்மா, அப்பா, அவர்கள் தரப்பு உறவினர்கள் அனைவரும் அதிர்ந்துவிட்டனர். வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

 “  என்னொருத்தியை பார்ப்பதற்கு ஏன் இத்தனைபேர் படை திரட்டி வந்தீர்கள்.  இவரை மாத்திரம் அனுப்பியிருக்கலாமே.  வேண்டுமென்றால், இவருக்குத் துணையாக இவருடைய அம்மா , அப்பாவாகிய நீங்கள் இருவரும் வந்திருக்கலாம்.  பாருங்கள், உங்களுக்காக இன்று  அதிகாலையே எழுந்து அம்மா எவ்வளவு  சிற்றுண்டி தின்பண்டங்கள் செய்திருக்கிறார்கள். ஒரு உண்மையை மாத்திரம் சொல்கிறேன். இதெல்லாம் அம்மாவின் கைப்பக்குவம்தான். நான் அம்மாவுக்கு வெங்காயம் கூட நறுக்கிக்கொடுக்கவில்லை.  பிறகு நான் ஏதோ கைதேர்ந்த சமையல்காரி என்ற கற்பனையுடன் புறப்பட்டுவிடாதீர்கள்.  எனக்கு சமைக்கத்   தெரியாது. தேநீர், கோப்பி மாத்திரம் தயாரிப்பேன்.  “

அவள் அப்படிச்சொன்னதும்,  வந்திருந்த டொக்டர் மாப்பிள்ளை, உரத்துச்சிரித்துவிட்டான்.  அவனது அக்காவின் பார்வையில் முறைப்பு  தென்பட்டது.

மாப்பிள்ளையின் தாய், மெல்லிய புன்முறுவலுடன் ஆசனத்தில் நெளிந்தாள்.

தந்தையார், தனது நாடியைத்தடவியவாறு, வீட்டின் சுவரில் காணப்பட்ட, பிரபாலினியின் அப்பாவின் உருவப்படத்தை பார்த்துவிட்டு,    ‘   வளர்ப்பு சரியில்லையாக்கும்   ‘ என்று மனதிற்குள் பேசிக்கொண்டார்

 சம்பிரதாயத்திற்கு சில வார்த்தைகளை பேசினர். அந்த மாப்பிள்ளைக்கு அவளது நேரடிப்பேச்சு மிகவும் பிடித்துக்கொண்டது. அவளது முகத்தை அடிக்கடி பரவசத்துடன்  பார்த்துக்கொண்டான்.  பிரபாலினி அவனைப்பார்க்கும் கணத்தில், முகத்தை திருப்பிக்கொண்டான்.

அவனது அக்கா, அருகில் அமர்ந்திருந்த தனது தாயின் இடுப்பில் மென்மையாக இடித்ததை பிரபாலினி கவனித்தாள். சேலை முந்தானையை  சரிசெய்துகொண்ட தாய்,   “ இதோ எங்கள் மகனின் சாதகக் குறிப்பு. உங்கட மகளின் குறிப்பையும் தாருங்கோ….  எதற்கும் பொருத்தம் பார்த்துவிட்டு யோசிப்போம்.  " எனச்சொன்னவாறு  சிறிய டயறிபோன்றிருந்ததை பிரபாலினியின்  அம்மாவிடம் நீட்டினாள். 

அந்த இடுப்பு இடியின் தாற்பரியத்தை மனதிற்குள் புரிந்துகொண்ட  பிரபாலினி, மனதிற்குள்ளேயே சிரித்தாள்.

 “ வேண்டாம்.  கலியாண புரோக்கர் ஏற்கனவே தந்திருந்தார். இரண்டுபேருடைய சாதகப்பொருத்தமும் பார்த்துவிட்டுத்தான் உங்களை வருமாறு சொல்லியிருந்தேன்  “ என்றாள் பிரபாலினியின் அம்மா.

  அம்மா, பூர்வாங்க ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டுத்தான் இந்த வரன் பற்றியும் தன்னிடம் சொல்லியிருப்பது அப்போதுதான் பிரபாலினிக்கு புலனாகியது.  

வந்த மாப்பிள்ளை அழகாக எடுப்பான தோற்றத்தில் இருந்தான். பார்த்த மறுகணம் அவளுக்குள் இரசாயனம் வேலை செய்தது.  எனினும், மனதில் தேக்கிவைத்திருந்ததை சொல்லியேவிட்டாள். அதற்கு எதிர்வினையாக அவனும், தனது வெளிப்படையான பேச்சைக்கேட்டு சிரித்ததையடுத்து, அந்த இரசாயனம்  மேலும் செறிந்தது.

அவனது அக்காவின் அழகான ஒரு மகளை அருகே அழைத்து, அணைத்து “  உங்கட பெயர் என்ன….?  “   எனக்கேட்டாள். அந்தக்குழந்தை,  “  மை நேம் ஈஸ்… மாயா…”  எனச்சொல்லிவிட்டு,  “  வட் ஈஸ் யுவர் நேம் அன்ரி…? “    என்று மழலையில் கேட்டதும், பிரபாலினி நெகிழ்ந்துபோய், குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, தன்னோடு அழைத்துச்சென்று, தனது அறையிலிருந்து,  சொக்லேட்டும், ஒரு சிறிய கரடி பொம்மையும் கொடுத்தாள்.

குழந்தை மாயா,   “ தேங்ஸ் அன்ரி  “ என்று உரத்துச்சொல்லிக்கொண்டு ஓடி வந்து தனது தாயின் – டொக்டர் மாப்பிள்ளையின் அக்காவிடம் காண்பித்தது.

அப்போது, அந்தப்பெண்,  முகத்தில் புன்னகை தவழ,                                   “ மாமிக்கு தேங்ஸ் சொன்னீங்களா.. மாயா “ எனக்கேட்டதும், பிரபாலினி சற்று அதிர்ந்துவிட்டாள்.

என்ன… இவள் முறை வைத்துச் சொல்வதற்கு இப்பொழுதே குழந்தைக்கு பழக்குகிறாள்.  தான்தான்  தனது தம்பிக்கு வரப்போகும் மனைவி என்று முன்தீர்மானம் எடுத்துவிட்டாளோ..?!

“  வீட்டுக்குப்போய் முடிவு சொல்கிறோம்.  உங்களது உபசரிப்புக்கு நன்றி “   முதலில் எழுந்தவர் மாப்பிள்ளையின் தகப்பன்.  அவர் எழுந்த தோரணையில்,  இது சரிவரப்போவதில்லை என்ற முடிவு பிரபாலினியின் மனதில் துளிர்த்துவிட்டது.

அவர்கள் புறப்பட்டுச்சென்று  ஒருவாரம் கடந்த நிலையில், அந்த கலியாணத்தரகரிடமிருந்து பிரபாலினியின் அம்மாவுக்கு  கோல் வந்தது.

“  அம்மா, மன்னிக்கவும். அந்த மாப்பிள்ளை ஒரு டொக்டர். அவையளுக்கு ஒரு டொக்டர் பொம்பிளைதான் வேண்டுமாம். “  என்றார்.

பிரபாலினியின் அம்மா, மிகுந்த ஏமாற்றத்துடன் அந்த முடிவை தாங்கிக்கொண்டு, மகளிடம் சொன்னாள்.

“  அப்படியா…?  அந்த மாப்பிள்ளைக்கு என்ன சுகவீனமாம்..?   என்று நீங்க  கேட்கவேண்டியதுதானே.  நான் அக்கவுண்ட்ஸ் படிச்சிருக்கிறன்  அப்படி ஒரு நிறுவனத்தில்தான் வேலை செய்யிறன் என்பதை தெரிந்துகொண்டுதானே வந்தாங்கள். பிறகு, இப்ப என்ன வந்தது…? நீங்க மினைக்கெட்டு செய்து கொடுத்த, கட்லட், கேசரி, கேக் எல்லாம் அவையளுக்கு செமிப்பதற்கு ஒரு வாரமாகியிருக்கிறது.  அவ்வளவுதான்.  வேறு வேலைகள் இருந்தால் பாராம்மா…  “

மீண்டும் இரண்டு மாதகாலத்தின் பின்னர், அன்று அவளிடம் மற்றும் ஒரு திருமணப்பேச்சை அம்மா   தொடங்கியதால், காலைப்பொழுது அபசகுணமாக விடிந்தது.

தாய் திருமணப்பேச்சு எடுக்கும் தருணங்களில்  பிரபாலினி வெகுண்டு எழுவாள். தன்னால் தனது அம்மாவைப்போன்று அடி உதை வாங்கமுடியாது. அவள் அந்தவீட்டில் முன்னர் கண்ட காட்சிகள்தான் அவளுக்கு திருமண பந்தம் மீதே வெறுப்புக்கு காரணம். அப்பா  வேல்முருகு குடித்துக்குடித்தே குடல் வெந்து செத்துப்போனவர்.

கையில் நல்ல படிப்பு இருக்கிறது. பிடித்தமான வேலை இருக்கிறது. வீடு இருக்கிறது. வருபவனும் மனதிற்கு பிடித்திருக்கவேண்டுமே!? அவளால் நன்றாகப்பேச முடியும். புத்தகங்கள், திரைப்படங்கள் பார்த்து ரஸனையோடு கருத்துச்சொல்லமுடியும். ஒரு விழாவின் இடைவேளையில்  சந்தித்த சிநேகிதிகளுடன் இலங்கையிலும் இந்தியாவிலும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலும் தொடரும்  சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி சற்று ஆக்ரோஷமாகவே பேசிவிட்டாள்.

அவளது முகம் கோபத்தினால் சிவந்தது. மூக்கு நுனி வியர்த்தது. கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள். அந்த விழாவின் இடைவேளையில் ஒருத்தி, அன்று தான் முகநூலில் பார்த்த இந்தியாவில் கூட்டு வல்லுறவில் பாதிக்கப்பட்ட வாய்பேசமுடியாத பெண்குழந்தைபற்றிய பேச்சினை எடுத்தபோதுதான் பிரபாலினி உணர்ச்சிவசப்பட்டாள்.

இலங்கையில் போதைவஸ்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றத்துடிக்கும் அரசாங்கம், ஏன் பெண்குழந்தைகளை மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு அந்தத்தண்டனையை தருவதற்கு காலம் தாழ்த்துகிறது என்பதும் அவளது வாதம்.

" அதுதான் சிலருக்கு மரணதண்டனை விதிச்சிருக்குத்தானே?" என்றாள் ஒருத்தி.

" செம்மணியில்  கிருஷாந்தியையும்  புங்குடுதீவில்  வித்தியாவையும் கெடுத்து கொன்றழிச்சவங்களுக்கும் பேரளவில்தான் அந்தத்தீர்ப்பு வந்ததே தவிர தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எல்லாம் வெறும் கண்துடைப்புத்தான்" என்றாள் பிரபாலினி.

அனைத்துலக மகளிர் தின விழாவுக்குச்சென்றவேளையில்தான் இடைவேளையில் அவர்களுக்குள் இந்த விவாதம் வந்தது. சிற்றுண்டி,  குளிர்பானம், தேநீர், கோப்பி விற்கும் பகுதிக்குச்சென்று அவர்கள் ஆளுக்கொரு கொத்துரொட்டி கண்டேயினர் வாங்கிவந்து சாப்பிட்டனர்.

பிரபாலினி  அதில் உப்புச்சுவை குறைந்திருப்பதை உணர்ந்துவிட்டு  அது விற்பனை செய்யப்பட்ட இடத்திற்குவந்து,  “ யார்… சமைத்தது…? ருசியே இல்லையே… ?!  “ என்றாள்.

அங்கு விற்பனையை கவனித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன்,   “  அப்படியா… நீங்களே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துவந்திருக்கலாமே… உங்களுக்கு சமைக்கத் தெரியாதா…?   “ என்று கேலியாகக்கேட்டது, அவளது தன்மானத்தை சுட்டுவிட்டது.

 “ ஹலோ… பேசுவதை அளந்துபேசும்… நாங்கள் பணம் கொடுத்துத்தான் வாங்கிறோம்.  “

“   மெடம்… இந்த விழாவுக்கு வந்த எத்தனையோபேர் வாங்கினதை சாப்பிடுறாங்க… ஆனால் எவரும் புகார் சொல்ல வரவில்லை.  ஆனால், உங்களுக்குத்தான் உப்பு அதிகம் தேவைப்படுது… இந்தாங்க…. உப்பு…. “ எனச்சொன்னவாறு,  அருகிலிருந்த Table Salt  பிளாஸ்ரிக் கிண்ணத்தை எடுத்து நீட்டினான்.   

 “ உங்களுக்குத்தான் உப்பு அதிகம் தேவைப்படுது  “  என்ற வார்த்தையால் பொசுங்கிப்போன பிரபாலினி, கையிலிருந்த கொத்து ரொட்டி கன்டேயினரை  அங்கிருந்த குப்பைக்கூடையில்  வீசி எறிந்தாள்.

அங்கு தோன்றிய அசாதாரண நிகழ்வினால் பதறிப்போன அவளது சிநேகிதிகள்  ஓடிவந்து, அவளை இழுத்துக்கொண்டு மண்டபத்திற்குள் சென்றனர்.

 “ இனிமேல்,  பெண்கள் தின விழாவில் கண்டீன் வைக்கிற வேலையும் பெண்களுக்குத்தான் கொடுக்கவேண்டும். இந்த ஆம்பிளைப்பசங்களுக்கு கொடுக்கக்கூடாது  “ பிரபாலினி பொரிந்து தள்ளினாள்.

 உடனே ஒருத்தி, “   உனக்கு சமைக்கத்தெரியுமா..? அப்படியென்றால், அடுத்த வருடம் நீயே அந்த வேலையை பொறுப்பெடுத்துக்கோ… சரியா.. உனக்கு ஏன் இப்படி மூக்கு நுனியில் கோபம் வருது….?  “ எனக்கேட்டாள்.

பிரபாலினி முகம் சிவக்க அமைதியானாள்.

"  ஒரு கலியாண ரிஷப்ஷனில  என்ர அம்மாவை சந்திச்ச உன்ர அம்மா, உன்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டாங்களாம். உன்னை புரிந்துகொள்ள முடியாதிருக்குதாம். எத்தனையோ கலியாணப்பேச்சு வந்தும் நீ எதற்கும் சம்மதம் சொல்லாமல் தட்டிக்கழிச்சுக்கொண்டிருக்கிறாயாம்." என்றாள் மற்றும் ஒரு தோழியான  வினோதினி.

அவளது  பேச்சும்  பிரபாலினிக்கு சினமூட்டியது. அவளுடைய சிநேகிதிகள் சிலருக்கு திருமணமாகிவிட்டது. குழந்தைகளும் பெற்றுவிட்டார்கள். சிலர் காதலர்களை வைத்திருக்கிறார்கள். ஒருத்தி திருமணம் செய்யாமல் காதலனுடன் Living together ஆக வாழ்கிறாள்.

தன்னை சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய எந்த ஆண்களும் இல்லை என்பதுதான் பிரபாலினியின் வாதம்.

அவளது குடும்பத்துடன் நெருக்கமாகவிருக்கும் விநோதினிக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவள், அடிக்கடி தொலைபேசியிலும் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் பிரபாலினியுடன் பேசுபவள்.

  ஏன், பிரபாலினி இப்படி சிடுமூஞ்சித்தனமாக இருக்கிறாள்…? ஆண்கள் விடயத்தில் ஏன் எடுத்தெறிந்துபேசுகிறாள்..? என்பது விநோதினியால் புரிந்துகொள்ளமுடிகிறது.

பிரபாலினியின் அப்பா, வேல்முருகுதான் அதற்கெல்லாம் அடிப்படைக்காரணம். அவரது கொடுமைகளை அவளது அம்மா அனுபவித்ததை நேரில் பார்த்திருப்பவள். ஒரு சமயம் குடிவெறியில் அம்மாவை  தகப்பன் அடித்தபோது, சற்றும் தாமதிக்காமல் பொலிஸை வரவழைத்தவள்.

குடும்ப மானம் போய்விடும் என்பதனால், வீடு தேடிவந்த பொலிஸ்காரர்களிடம்,  அம்மா, “  அவர்,  சும்மா குடிவெறியில் சச்சரவு பட்டார். அடிக்கவில்லை. மகள் அவசரப்பட்டு உங்களை அழைத்துவிட்டாள்  “ என்று பொய்சொல்லி அனுப்பிவிட்டாள். வந்த இரண்டு பொலிஸ்காரர்களும் வேல்முருகுவை எச்சரித்துவிட்டுச்சென்றனர்.

அதன்பிறகு அவர் அடங்கிவிட்டார். சில மாதங்களில் அவரது மூச்சும் அடங்கிவிட்டது. மரணச்சடங்கின்போது  பிரபாலினியின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை என்பது சிநேகிதி விநோதினிக்கு ஆச்சரியமில்லை. அம்மாதான் அழுதுகொண்டே இருந்தாள்.

பிரபாலினியின் குண இயல்புகளை நன்கு தெரிந்துவைத்திருந்த, விநோதினி ஒரு நாள்,   “  இங்கே பார் பிரபா,  நீ இப்படியே இருக்கமுடியாது. எல்லா ஆண்களும் உன்ர அப்பா மாதிரி இருப்பாங்க என்று சொல்லமுடியாது, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அதனையெல்லாம் கடந்துபோவதுதான் கெட்டித்தனம். எங்கட சிநேகிதிகள் வட்டத்தில் ஒவ்வொருத்தராக கரைசேர்ந்துகொண்டிருக்கிறோம் .  பிறகு நீ தனித்துப்போவாய். உன்னுடைய அம்மா இன்னும் எத்தனை காலம் உன்னோடு இருக்கப்போகிறார்.  முதலில் பேசி வந்திருக்கும் அந்த டொக்டர் மாப்பிள்ளை வீட்டாருடன் நான் பேசிப்பார்க்கிறேன். உன்னுடைய வாய் நீளம் என்பதனால்தான்,  அவர்கள், ஏதோ சாக்குப்போக்கு சொல்லியிருக்கவேண்டும்.  நான் விசாரித்துப்பார்த்ததில் அந்த டொக்டர்  நல்லவர். எங்கட அம்மா, அப்பாவுக்கு அவர்தான் குடும்ப டொக்டர் - General Practitioner.  உன்னைப்புரிந்துகொண்டு நடப்பார். சம்மதம் சொல்லு, நானே அந்தப்பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கின்றேன்.  “ எனச்சொன்னாள்.

அதுவரையில் அவள் பேசுவதையே பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பிரபாலினி,  “     நான் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன்.  எனக்கு ஒரு துணை வேண்டும் என்றுதானே நீயும் என்னுடைய அம்மாவும் நச்சரித்துக்கொண்டிருக்கிறீங்க… சரி… நான் ஒரு துணையை தேடிக்கொள்ளுறன். “  

“  வெரிகுட்…  “ எனச்சொன்னவாறு பிரபாலினியை அணைத்து அவள் கன்னத்தில் விநோதினி முத்தமிட்டாள்.

 “  நான் புருஷன் இல்லாமல் ஒரு பிள்ளையை பெறப்போகிறேன். அந்தப்பிள்ளை துணையாக இருக்கும். அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டேன். அதற்கெல்லாம் இங்கே இப்போது வசதிகள், சிகிச்சைகள் இருக்கிறது. உனக்குத் தெரியுமா..?  “ எனச்சொல்லி பெரிய குண்டை தூக்கி விநோதினியின் தலையில் போட்டாள் பிரபாலினி.

விநோதினி திக்பிரமை பிடித்தவளானாள்.

----0----

( நன்றி:  இலங்கை ஞானம் இதழ் 2020 செப்டெம்பர் )

letchumananm@gmail.com

 



No comments: