கவிஞர் அம்பியின் சொல்லாத கதைகள் - அங்கம் 29 ஈசன் பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த கதை அறிவீர் ! மணப்பெண்ணுக்கு பன்றியை பரிசளிக்கும் கதை அறிவீரோ…?

எனது சொல்லாத கதைகளின் அங்கம் 29 ஐ எழுத ஆரம்பிக்கின்றேன்.  அச்சமயம்  ஒரு தொலைபேசி அழைப்பு என்னை தொடர்ந்தும் எழுதவிடாமல் தடுக்கிறது.

எடுத்துப்பேசுகிறேன். மறுமுனையில் எனது நீண்டகால நண்பர் திரு. குலம் சண்முகம்.

அவர் சொல்கிறார்:   “ நீங்கள் பாப்புவா நியூகினி சென்று கல்விப்பணியாற்றி, அதன்மூலம் வருமானம் பெற்று உங்கள் பிள்ளைகளையும் படிக்கவைத்து ஆளாக்கினீர்கள். அதனைப்பற்றி  உங்கள் சொல்லாத கதைகளில் ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள்.  ஆனால், அந்த நாட்டைப்பற்றியோ, அம்மக்கள் பற்றியோ,  அங்கே உங்கள் வாழ்வியல் அனுபவம் தொடர்பாகவோ எதுவும் சொல்லவில்லையே…? ஏன்..? !  “

 “ மொரிஷியஸ் வாழ் மக்களிடம் படிப்படியாக தமிழ் அகன்றுவிட்டதை வேதனையுடன் சொல்லியிருந்தீர்கள்.  அவர்கள் தாய்மொழி தமிழை பேணவில்லை என்றும் மனக்குறை பட்டிருந்தீர்கள்.  அதுபோன்று பாப்புவா நியூகினி நாட்டைப்பற்றியும் நீங்கள் ஏதும் சொன்னால்தான் உங்களது தொடர் முழுமை பெறும்.  “

ஆம்,  நண்பர் குலம். சண்முகத்தின் ஆதங்கம் நியாயமானதுதான்.

அந்த நாட்டுக்குச்செல்ல விரும்புபவர்கள், அந்த நாட்டைப்பற்றி அறியவிரும்புவதும்  சரிதானே..? அதனால், இந்த அங்கத்தில் நான் எழுதத் தீர்மானித்த விடயத்தை அடுத்த அங்கத்திற்கு ஒத்திவைத்துவிட்டு,   குலம். சண்முகம் அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை எழுதுகின்றேன்.

இந்த நண்பரும் அங்கே சிறிதுகாலம் பணியாற்றியவர்தான். எனது இந்தத்  தொடரை கணினியில் பதிவுசெய்துவரும் எனது நண்பர் முருகபூபதியும் கடந்த ஆண்டின் இறுதியில் கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது.

அவருக்கும் அந்த நாட்டைச்சென்று பார்க்கவேண்டும் என நீண்டகாலமாக விருப்பம் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.   இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்ததும் செல்லவும் தீர்மானித்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையடுத்து, அவரது பயணமும் தடைப்பட்டுவிட்டது.

தொடர்ந்தும் உடல் உபாதைகளுடன்தான் இந்தத் தொடரை எழுதிவருகின்றேன்.  எம்பெருமான் முருகன் துணையிருப்பார் என்ற நம்பிக்கையில் கந்தசஷ்டி கவசத்தை படித்துவிட்டு எழுதுகின்றேன்.

 “ கைகள் இரண்டும் கருணைவேல் காக்க…”

எம்பெருமான் முருகனை நெற்றிக்கண்ணால் படைத்த ஈசன்  பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த கதையை எங்கள் புராணத்தில் படித்திருப்பீர்கள்.

தாய்ப்பன்றியை இழந்து, பசியால் பரிதவித்த அதன் குட்டிகளுக்கு அவர் பெண் பன்றிஉருவம் எடுத்து, பால் கொடுத்துள்ளார்.

அவரது மனைவி உமையாள்  திருஞானசம்பந்தர் என்ற குழந்தைக்கு பால் கொடுத்தார். எப்படியோ,  தாம் படைத்த குழந்தைகளும்  ஜீவராசிகளும்  பசியால் வாடிவிடக்கூடாது என்பதில்  அந்தத் தம்பதியர் கருணை காண்பித்துள்ளனர்.

மணப்பெண்ணுக்கு பன்றியை பரிசாகக்கொடுத்தால்தான் அவள் தன்னை திருமணம் செய்துகொண்ட மணமகனுக்குப்பின்னால் புகுந்தகம் செல்வாள்.                                          “   இல்லையேல்,  தற்போதைக்கு வீட்டுக்குப்போ…!  என்னை அழைத்துச்செல்ல ஒரு பன்றியோடு வா.., “  மணமகனை திருப்பியனுப்பிவிட்டு பிறந்தகத்திலேயே நின்றுவிடுவாள்.

ஒரு மணமகளுக்கு எத்தனை பன்றிகள் பரிசாக கிடைத்தன என்பதை வைத்து அந்தத் திருமணத்தின் பெருமை பேசப்படும் என்ற செய்தியை நீங்கள் அறிந்தால், அதிசயப்படுவீர்கள். அதிசயம்தான்…! ஆனால், அதுதான் உண்மை ! 

 

பாப்புவா நியூகினி பசுபிக் சமுத்திரத்தில் உள்ள ஒரு தீவு. ஒரு பெரிய தீவுடன் சிறிய சிறிய தீவுக்கூட்டங்கள் இணைந்த சிறிசுகளினால் பிஎன்ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் தேசம். அங்கே ஏறக்குறைய நாற்பது இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

நிலப்பரப்பு எங்கள் தாயகம் இலங்கையைப்போன்று எட்டு மடங்கு பெரியது.  பேசும் மொழிகள் 750 எனச்சொன்னால் வியப்படைவீர்கள்.  ஆனால், அவற்றிற்கு வரிவடிவம் இல்லை. வாய்மொழிதான்.

அரசமொழி ஆங்கிலம். பொதுவான மொழியாக பிஜின் இங்கிலீஸு.  அதாவது திரிபடைந்த வகையான ஆங்கிலம். அந்த நாட்டு மக்களுக்கேயுரித்தான பண்பாட்டுக்கோலங்களுடன் ஆடல், பாடல், இசை, கலை என்பனவுண்டு.

பழங்காலத்திலே அம்மக்கள் பானை, சட்டி போன்ற மட்பாண்டங்களை செய்தனராம்.  அவற்றை அயல்நாடுகளுக்கு பண்டமாற்றாக விநியோகித்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்துள்ளனர்.

தமது உணவுக்காக ஏனைய நாடுகளிலிருந்து   “ சேகோ “   என்ற சவ்வரிசியை பெற்றார்களாம்.

ஆழ்கடலைக்கடக்க பேரலைகளுக்கூடாக பயணங்களும் மேற்கொள்வார்கள்.  அதற்கென பாய்மரக்கப்பல்களையும் செய்துள்ளார்கள். அதற்கு லக்ரோய் ( Lakatoi ) எனப்பெயர். அதன் படத்தை நீங்கள் இங்கே காணலாம்.

இவை போன்ற கப்பல்களில் பயணம் மேற்கொண்டும், பண்டமாற்று வியாபாரம் செய்தும், வாழ்ந்த அம்மக்கள் நாளடைவில் பிறநாட்டவரின் வருகையாலும் பூமிப்பந்தை அகழ்ந்தெடுத்து கனிம வளங்களைப்பெற்று பொருளாதார அபிவிருத்தியடைந்தனர். ஆனால், சுதந்திரநாடாக தலைதூக்கவில்லை. இன்றும் பிரித்தானியாவின் ஆளுகைக்குள் குடியேற்றநாடாகவே விளங்குகிறது.

அவுஸ்திரேலியாவின்  தார்மீக ஆதரவு அதற்குண்டு.

பண்டமாற்றம் செய்யும் பொருட்களை, சுமந்துசெல்வதற்கும் பிற தேவைகளுக்கும் கையையும் முதுகையும் பயன்படுத்தினார்கள்.  அதற்காக தாமே தயார்செய்த  உபகரணம்தான்  வலிமையான நூலினால் நெய்யப்பட்ட பை போன்ற உருவம்.

அந்த நாட்டில், மக்கள் பொருட்களையும் குழந்தைகளையும் சுமந்துசெல்வதற்கு இந்தப்பையைத்தான் பயன்படுத்தினர். அதற்கு பிலும் என்று பெயர். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.

இந்தப்படங்களையும் வேறு சில படங்களையும் எனக்கு அங்கே வரைந்து தந்தவர் நான் பணியாற்றிய கல்லூரியிலிருந்த ஓவியர் குவா சிம்பாய். ( Kua Simbai )

இந்த சொல்லாத கதைகளில் இடம்பெறும் ஓவியங்களையெல்லாம் எனக்கு வரைந்து தந்தவர் அவர்தான். நடனத்தை அவர்கள்  “சிங் சிங்  “ என்பர்.

அவர்களின் நடனத்திற்கான வாத்தியக்கருவிகளின் படங்களையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

வளர்ந்தவர்களாயினும் சிறியவர்களாயினும் வெறும்மேலுடன்தான் நடனமாடுவர்.

அவர்கள் விரும்பி வளர்க்கும் பிராணி பன்றி. இந்தப்பிராணிக்குப்பின்னாலும் ஒருவகையான பண்பாட்டுக்கோலம் இருக்கிறது.

ஒரு ஆடவன் மணமுடிக்கும்போது, தனக்கு மனைவியாக வருபவளுக்கு சீதனமாக பன்றி கொடுக்கவேண்டும்.  எத்தனை பன்றிகளை கொடுத்தார் என்பதையும் பெருமையாக பேசும் வழக்கம் அவர்களிடமிருக்கிறது.

மணமகளுக்கு பன்றியை வழங்காமல் திருமணம் முடிக்கலாம். ஆனால், அவளை மணமகன் தனது வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடியாது. 

இதனைப்படிக்கும் நீங்கள் மனதிற்குள் சிரிப்பது தெரிகிறது.

பன்றிக்குட்டிகளுக்கு சிவபெருமான் பால் கொடுத்த கதையை நாம் அறிவோம்.  புராணத்தில் வந்த பன்றிகளின் சந்ததி, பாப்புவா நியூகினியில்  மணமகளுக்கு பரிசாகிறது.

அம்மக்களிடத்தில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கமும் இருக்கிறது. நாம் தாம்பூலம் தரித்தல் என்போம்.  வெற்றிலை பாக்கு வைத்துத்தான் நாம் திருமண அழைப்பிதழ்களை நேரில் சென்று கொடுத்து வந்தவர்கள்.

பிற்காலத்தில்  இந்த நடைமுறை எமது தமிழ் கிராமங்களிலும் தொடர்ந்தாலும்,  நாகரீகம் வளர வளர நகரப்புறங்களில்  திருமண அழைப்பிதழ்கள் தபாலில் அனுப்பப்படுகின்றன.

இக்காலத்தில் திருமண அழைப்பிதழ்களை  மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ் அப்பில் அனுப்புவதற்கும் நவீன உலகம் வசதி செய்துகொடுத்துள்ளது.

பாப்புவாநியூகினியில் வெற்றிலைபோடும் மக்கள்,  வெற்றிலை எச்சிலை துப்புவதற்கென படிக்கம் கொண்டு அலையமாட்டார்கள்.  பூமாதேவியிடமே துப்பலை பன்னீராக தெளித்துவிடுவார்கள்.

நான் அந்த நாட்டிலும் சிறுவர் இலக்கியம் படைத்திருக்கின்றேன்.  எமது தமிழ்க் குழந்தைகளுக்காக ஏற்கனவே கொஞ்சும் தமிழில்  பல கவிதை எழுதியிருப்பதுபோன்று பாப்புவாநியுகினியில் வாழும் குழந்தைகளுக்காக Lingering Memories என்ற கவிதை தொகுப்பினையும் 1993  ஆம் ஆண்டில் வெளியிட்டேன்.

அதில் இடம்பெற்ற கவிதைகளுக்குப்பொருத்தமான ஓவியங்களை   எனது நண்பர்  ஓவியர் குவா சிம்பாய் அழகாக வரைந்து தந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் அவரையும் நன்றியோடு நினைவுகூர்ந்துகொள்கின்றேன்.

Lingering Memories முதற்பதிப்பை பாப்புவாநியுகினி ஆளுநர் Sir Serei Eri  அவர்கள் அதன் வெளியீட்டு அரங்கில் வெளியிட்டு வைத்தார்.

இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1996 ஆம் ஆண்டு வெளியிடவிருந்த காலப்பகுதியில் ஆளுநர் Sir Serei Eri  மறைந்துவிட்டார்.

அதனால், அவருடைய படத்தையும் பதிவுசெய்து இரண்டாம் பதிப்பினை வெளியிட்டேன்.

பாப்புவாநியுகினி பிரதமர் இந்நூல் தொடர்பாக செய்தியும் வெளியிட்டது.

( தொடரும் )

 

 

 


No comments: