சுற்றிக் கொண்டே நகர் வதனால் புவியே எதையும் மாற்றிப் போடும் - பரமபுத்திரன்

எங்கே  இருந்தீர்  இவ்வளவு நாளும்

எடுத்தடி வைத்ததும் குழம்புது சிங்களம்

தோசைக் குச்சம்பல் தொடுவது போல  

முள்ளி வாய்க்கால் நினைவுக்கு மட்டுமே  

முக்கி  யத்துவம் தேவையே இல்லை

இழந்தவர் மட்டும் பொங்கி வெம்ப  

உள்ளூர் அல்ல உலகம் முழுவதும்

அதுக்கொரு நாள்  அத்துடன் நிறுத்தி

அடுத்து நம்வேலை அதுதான் வழமை

அழிந்த மக்களை நெஞ்சினில் நிறுத்தி

நீதிக்கு வணங்கும் பொறுப்புடை மனிதனாய்

இருப்போர் மனதில் சிந்தனை விதைத்தாய்

அளித்தாய்  அவர்கள் சாவுக்கும் மதிப்பு

ஆளுமை அற்ற அறிவிலித்  தலைமை

அவரால் பயனேதும் இங்கில்லை  என்றே

பழுத்துப் புழுத்த பழங்கதை பேசும்

பலபேர் அடுக்கிய கதைகள் படித்தேன்

உள்ளே புகுந்து கட்சிகள்  உடைத்து

பிரிவினை கொடுத்த கொடியவன் நீராம்  

சேர்ந்த உடனே தகர்க்கும் வகையில்

கண்ணாடி போல ஒட்டிய  இணைப்புகள்

உடைந்தே போகலாம் தப்பே இல்லை  


சிறுசிறு குழுக்களாய் தமக்குள் கூடி 

மற்றோரைத்  திட்டி உணர்ச்சியைக் கூட்டி

முன்னமும் பலபேர் முன்னுக்கு நின்று  

பாராளு  மன்றுக்குப் பாய்ந்து சென்று

இலக்கினை விடுத்து இன்பத்தை விரும்பி 

ஒன்றும் விளங்காத  எங்களைப் பார்த்து 

முட்டுக்  கொடுத்தால்  மட்டுமே வாழலாம்

காரணம் அவர்கள் பெரும்பான்மை  என்று

ஒதுங்கி ஒடுங்கி  ஏங்கிப் பயந்து

கும்புடு  போட்டு குனிந்து கைகட்டி

உரிமை உரிமையென உரத்துக் கூவி

நாங்களும் தேர்தலில் ஓட்டும்  போட்டு 

தங்கு  தடையின்றி எழுபது ஆண்டுகள்

என்னமாய் போச்சுது எமக்கே தெரியவில்லை

அன்றொரு பெரியவர் ஆகாயம் நோக்கி  

கடவுளை வேண்டிக் கலங்கிச்  சொன்னாராம்

தமிழரைக்  காத்திட நீதான் உண்டு

நடிப்பினில் சிறந்த தமிழரை எண்ணி  

ஆற்றாமை அவலமாய் எழுந்தது போலும்

அடம்பன் கொடியும் திரண்டால்  மிடுக்கு

ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

என்றே மொழிதல் எங்களின் வழமை

உண்மையில் நாங்கள் எப்பவும் சண்டை

கதிரினால் என்றொரு இயேசுவின் ஊழியம்  

கதறுது மொழியினை நினைப்பது தவிர்த்து

ஒடுக்  கட்டாம் இனமத வேறுபாடு

முடுக் கட்டாம் முழுதான  தேடலொன்று 

ஞாயிறு தாக்குதல் நடந்தமை தொடர்பில்   

சிங்களம் பெளத்தம் இணைந்ததே இலங்கை

என்பதே அங்கவர் மொத்தக் கூச்சல்

பௌத்தமே இலங்கையின் மதிப்புடை மதமென

நாமும் அறிவோம் நீரும் அறிவீர்

இயேசுவின் தொண்டர்கள் பலபேர் ஈழத்தில்

இடர்கள் பட்டு உயிர்களை இழந்தனர்  

இருப்பினும் ஒருமுறை விவிலியம் நோக்கின்

இயேசுவைப்  பிடித்தனர் எரிச்சலும் கொடுத்தனர்  

கேலிகள் கிண்டல்கள் அள்ளி இறைத்தனர்

அடித்தனர் வதைத்தனர் முள்முடி சூட்டினர்  

சிலுவை சுமந்து  நடக்க வைத்தனர்

பொறுமை காத்தார் அமைதியாய் இருந்தார்

தனக்கு என்பதால் பொறுத்தும்  கொண்டார்

ஆனால் இறைமகன் வெகுண்டதும் காண்பீர்  

எளியோரை  வாட்டும் கொடிய மனிதர்  

பிறர்நலன் மறந்த கடின மனங்கள்

செருக்கு மிகுந்த  தாழ்மையின் எதிரிகள்

ஆலய  மகிமையை கேடுறச் செய்வோர்

போன்றோர் கண்டு கோபம் மேலிட  

மக்களை அடித்து விரட்டியு முள்ளார்

மதமே உங்கள் அடையாளம் பின்னும்

மற்றோரைக் குறைத்தல் ஏனோ வறியோம்  

யுத்தம் என்னும் போர்வை போர்த்தி

சிறியவர் பெரியவர் குழந்தைகள் வளர்ந்தவர்

எவரையும் தவிர்க்காது எல்லோர் மீதிலும்

குண்டுகள் புகைகள் உணவுத் தடைகள்

இன்னும் பலவகை உத்திகள் கோர்த்து

வலிந்து உயிர்கள் பறித்த  போதிலும்   

நலிந்த மக்களின் கடைசிக் குரல்கள்

யாருக்கும் உலகில் கேட்கவே இல்லை

கருணையே  வடிவான ஏசுவின் ஊழியன்

கடமை யாதேன சிந்திக்க வேண்டும்

எல்லாம் எவர்க்கும் எப்போதும் ஒன்றல்ல

சுற்றிக் கொண்டே நகர்  வதனால்

புவியே எதையும் மாற்றிப் போடும்

 

 

 

 

 

 



No comments: