சவூதியின் அதிகாரிகள் பலர் திடீர் பணி நீக்கம்
லெபனானின் புதிய பிரதமர் தேர்வு
தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
மற்றொரு கறுப்பினத்தவர் பொலிஸார் பிடியில் பலி
இஸ்ரேல் விமானங்களுக்கு சவூதி அரேபியா அனுமதி
6000 கால்நடைகள், 40 பேருடன் சூறாவளியில் சிக்கி கப்பல் மாயம்
MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்
இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்ன?
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு பொலிஸாரும்; இடைநிறுத்தம்
ஹமாஸ் தலைவர் லெபனான் விஜயம்
சவூதியின் அதிகாரிகள் பலர் திடீர் பணி நீக்கம்
அரச குடும்பத்தின் இரு உறுப்பினர்கள் உட்பட பல சவூதி அரேபிய அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி தலைமையிலான யெமன் கூட்டணியின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள இளவரசர் பஹத் பின் துர்கி தமது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு மன்னர் சல்மானின் அரச ஆணை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது மகனான அப்துல் அஸிஸ் பின் பாஹத் பிரதி ஆளுநர் பதவி ஒன்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தில் அவருடன் மேலும் நால்வர் விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளனர்.
சவூதி மன்னரின் மகனும் முடிக்குரிய இளவரசருமான முஹமது பின் சல்மான் அந்நாட்டில் மறைமுக ஆட்சி புரிபவராக பார்க்கப்படுவதோடு, அரசில் ஊழல் விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
எனினும் முடிக்குரிய இளவரசர் அதிகாரத்தில் இருப்பதற்கான முட்டுக்கட்டைகளை அகற்றும் நடவடிக்கையாகவே உயர் அதிகாரிகள் மீதான செயற்பாடுகள் இருப்பதாக விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு ஆரம்பதில் மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அஹமது பின் அப்துல் அஸிஸ் மற்றும் முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் முக்கிய நிகழ்வாக 2017இல் ரியாதில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் பலரும் தடுத்து வைக்கப்பட்டனர்.
சவூதி அரசுடன் மொத்தம் 106.7பில்லியன் டொலர் வரை உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மிகவும் பழமைவாத நாடான சவூதிக்கு, 2016ஆம் ஆண்டு முடிக்குரிய இளவரசரான பின் தாம் மேற்கொண்டு வரும் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் 35வயதாகும் முகமது பின் சல்மான் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.
எனினும் அவர் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முஹமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு உள்ளது. நன்றி தினகரன்
லெபனானின் புதிய பிரதமர் தேர்வு
லெபனானின் புதிய பிரதமராக ஜெர்மனிக்கான அந்த நாட்டுத் தூதர் முஸ்தபா ஆதிப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெய்ரூட்டில் ஓகஸ்ட் 4ஆம் திகதி நிகழ்ந்த வெடிவிபத்து சம்பவத்தால், ஹசன் தியாப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அழுத்தம் காரணமாக ஓகஸ்ட் 11ஆம் திகதி ஹசன் தியாப் தலைமையிலான அரசு இராஜினாமா செய்தது.
இதைத் தொடர்ந்து ஜெர்மனிக்கான லெபனான் தூதர் முஸ்தபா ஆதிப் தற்போது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 128பாராளுமன்ற வாக்குகளில் 90வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஆதிப் தெரிவிக்கையில், "லெபனான் மக்கள் நிகழ்காலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலையில் உள்ளனர். சீர்திருத்தங்களை செயல்படுத்த தொழில்முறை நபர்களுடன் இணைந்து அரசை அமைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
பெய்ரூட் வெடிவிபத்தால் பலியானோரின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது. 6,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாகவும், கதவு ஜன்னல் அல்லாத வீடுகளில் வசிக்கும் நிலையிலும் உள்ளனர். நன்றி தினகரன்
தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொவிட்-19தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் வழங்குவது குறித்து மிகவும் கவனமாகச் சிந்திக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா கொவிட்-19நோய்த்தொற்றுக்கான உத்தேசத் தடுப்பூசிகளின் பயன்பாட்டைத் துரிதப்படுத்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
“முழுமையான பரிசோதனைகளை முடிக்கும் முன்னர், தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்க எந்த ஒரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. இருப்பினும் அது சாதாரணமாகக் கருதக்கூடிய ஒன்றல்ல” என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.
பாதிப்புகளை விட நன்மைகள் அதிகமாக உள்ளன என்ற நம்பிக்கை அதிகாரிகளிடம் இருந்தால் வழக்கமான ஒப்புதல் பெறாமல் தடுப்பூசியை நோயாளிகளுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நன்றி தினகரன்
மற்றொரு கறுப்பினத்தவர் பொலிஸார் பிடியில் பலி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொலிஸாரின் தாக்குதலில் மற்றொரு கறுப்பினத்தவர் உயிரிழந்துள்ளார்.
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 41 வயது டனியேல் ப்ரூடோ கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் தடுக்கப்பட்டு அவரது தலையில் முகக்கவசம் அணியப்பட்டு அவரது கழுத்துப் பகுதி அழுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தபோதும் இந்த சம்பவம் தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் உலகெங்கும் இனவெறிக்கு எதிரான சீற்றத்தை ஏற்படுத்திய ஜோர்ஜ் பிளோயிட் என்ற கறுப்பினத்தவரின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே இவர் இறந்துள்ளார். மின்னசோட்டாவில் கடந்த மே மாதம் பொலிஸார் பிளோயிட்டின் கழுத்தை சுமார் எட்டு நிமிடங்கள் காலால் இறுக்கிப் பிடித்ததை அடுத்தே அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி ஜகொப் பிளோக் என்ற மற்றொரு கறுப்பினத்தவர் மீது பொலிஸார் பின்புறமாக ஏழு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது அமெரிக்காவில் புதிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது. நன்றி தினகரன்
இஸ்ரேல் விமானங்களுக்கு சவூதி அரேபியா அனுமதி
இஸ்ரேலிய விமானங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வரும் மற்றும் செல்கின்ற எந்த ஒரு விமானத்திற்கும் தமது வான்பகுதியில் அனுமதி அளிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் முதல் நேரடி விமானப் பயணத்திற்குப் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியம் விடுத்த கோரிக்கையை அடுத்தே சவூதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பெரும் திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
“எமது நாட்டின் சுற்றுலா மற்றும் அபிவிருத்திக்கு வழிவகுப்பதாக விமானப் பயணங்கள் குறுகியதாகவும் மலிவானதாகவும் அமையும்” என்று நெதன்யாகு தெரிவித்தார்.
எனினும் விமானங்களுக்கு அனுமதி அளிக்கும் இந்த முடிவினால் பலஸ்தீன அபிலாசைகள் தொடர்பான நாட்டின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
6000 கால்நடைகள், 40 பேருடன் சூறாவளியில் சிக்கி கப்பல் மாயம்
40க்கும் அதிகமான பணிக் குழுவினர் மற்றும் 6000 கால்நடைகளுடனான சரக்குக் கப்பல் ஒன்று சூறாவளியில் மூழ்கியதாக அஞ்சப்படும் நிலையில் அந்தக் கப்பலில் இருந்த ஒருவர் ஜப்பான் கடலோரக் காவல்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
உயிர்காப்பு அங்கியுடன் கடலில் தத்தளித்த நிலையில் காப்பற்றப்பட்ட அந்த நபர் தமது கப்பல் மூழ்கியதாக தெரிவித்துள்ளார்.
மேசக் சூறாவளியில் சிக்கிய நிலையில் கிழக்கு சீனக் கடலில் இருந்து இந்தக் கப்பல் கடந்த புதன்கிழமை அபாய சமிக்ஞை அனுப்பியுள்ளது.
கப்பல் மற்றும் அதில் இருந்த ஏனையவர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில் உயிர்தப்பிய வேறு எவரும் மீட்கப்படவில்லை.
இதில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரே காப்பாற்றப்பட்டிருப்பதோடு, அலை ஒன்றால் தாக்கப்பட்ட கப்பலின் எஞ்சின் செலிழந்ததை அடுத்தே அது மூழ்கியது என்று அவர் கூறியதாக ஜப்பான் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டு சீனாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக நியூசிலாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்
- பாதுகாப்பான கடல் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய கரையோர பாதுகாப்புப்படை இதனை அறிவித்துள்ளது.
அதில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் நேற்று (03) முதல் இந்திய கரையோர பாதுகாப்புப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை மற்றும் வான்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மாலை 7.00 மணியளவில் அதில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் அனர்த்தத்திற்கு உள்ளான இக்கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம், பாரிய அசம்பாவிதம் மற்றும் கடல் சுற்றாடல், கடல் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, சூழலியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் பின்புறத்தில் உள்ள தீப்பிடித்த குறித்த பகுதியில் ஏற்படும் அபாயம், எண்ணெய் சேமிப்பு பகுதிக்கு விரைவாக செல்லாத வகையிலான சிறப்பம்சங்களுடன் குறித்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஏ.எல்.பி ‘விங்கர்’ (ALP ‘Winger’) ALP Winger இழுவைக் கப்பலுடன் குறித்த கப்பல் இணைக்கப்பட்டு, இந்திய கரையோர பாதுகாப்புப் படையின் விசேட குழுவினரினால் பாதுகாப்பான கடல் பகுதிக்குள் அக்கப்பலை கொண்டு செல்லும் நடவடிக்கையில், இந்திய கரையோர பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பில், இலங்கை கடற்படை மற்றும் விமானப் படைக்கு, இந்திய கரையோரப் பாதுகாப்புப்படை மற்றும் குறித்த சர்வதேச நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்த இரண்டு ரஷ்ய கப்பல்கள், நேற்று (03) மீட்புப் பணியில் ஈடுபட்டு தேவையான உதவிகளை வழங்கிய பின்னர் நேற்று மாலையளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.
குவைத்திலிருந்து இந்தியாவுக்கு, கச்சா எண்ணெயை போக்குவரத்து செய்வதற்காக, கூலிக்கு அமர்த்தப்பட்ட குறித்த கப்பல் நேற்று (03) முற்பகல் 8.00 மணியளவில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த, நிலையில், அதன் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது.
இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதிலிருந்த 23 பணியாளர்களில் 22 பேரை இலங்கை கடற்படை மீட்டதோடு, இவ்விபத்தில் காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியியல் அதிகாரி உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நன்றி தினகரன்
இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்ன?
நிபுணர்கள் விளக்கம்
இந்தியாவில் ஒரே வாரத்தில் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.
கொரோனா தொற்றின் வேகம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 70 ஆயிரத்துக்கு அதிகமான புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர்.
அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடான இந்தியாவில் இத்தகைய தொற்று வேகம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. எனவே இந்த தொற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல், நோயாளிகளை கண்டறிதல் மற்றும் தீவிர சிகிச்சை அளித்தல் என்ற தாரக மந்திரங்களை அரசுகள் பின்பற்றி வருகின்றன.
இந்தியாவில் இவ்வாறு கொரோனாவின் வேகம் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கண்டறிந்த விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பண்டா கூறுகையில், ‘கொரோனா பரிசோதனையின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அத்துடன் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக மக்களிடம் நிலவும் மெத்தனப்போக்கு போன்றவையும் தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்கள் ஆகும்’ என்று தெரிவித்தார்.
அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்டவர்களால் இந்த நோய் அதிகமாக பரவுவதாக தெரிவித்த பண்டா, எனவே இத்தகைய பரவல் முறையை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்தியாவில் கொரோனாவின் இந்த வேகம் எதிர்பார்த்ததுதான் எனவும், எனினும் மாநிலங்களில் ஒரே சீராக இல்லாதது ஆறுதலானது என்றும் தெரிவித்தார்.
முன்னணி வைராலஜிஸ்டான டாக்டர் சாகித் ஜமீல் கூறும்போது, ‘முக கவசம் அணிதல், கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அறிவுரைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம், நாட்டில் தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவான சாவு விகிதம் போன்ற அறிவிப்புகளால் ஏற்பட்டுள்ள மெத்தனமே ஆகும். ஆனால் நாம் அதிக தினசரி பாதிப்பை கொண்டுள்ளோம். உலக அளவில் 3-வது அதிக நோயாளிகளை பெற்றிருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார்.
இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவரும், ஆசியா-ஓசியானியா மருத்துவ சங்க கூட்டமைப்பு தலைவருமான டாக்டர் அகர்வால் கூறுகையில், ‘இப்படியே போனால் இந்தியா கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பிரேசில் மற்றும் அமெரிக்காவையும் மிஞ்சிவிடும். இது 6 வாரங்களிலேயே நடக்கலாம். தற்போதைய சூழலில் பரிசோதனைகளை அதிகரிப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஆனால் தனி மனிதர்கள் மட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது’ என்று கூறினார்.
ஊடரங்கு தளர்வுகள் புதிய நோயாளிகளை உருவாக்கும் எனக்கூறிய அவர், தற்போதைய நிலையில் பலி எண்ணிக்கையை குறைப்பதே முக்கியமானது எனவும், இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். நன்றி தினகரன்
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு பொலிஸாரும்; இடைநிறுத்தம்
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸ் பிடியில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஏழு பொலிஸார் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த டானியல் ப்ரூட் என்ற அந்த ஆடவர் பொலிஸார் மீது உமிழ்வதை தடுக்க அவருக்கு முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் இடைநிறுத்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரோசஸ்டர்ஸ் மேனர் லொவ்லி வொர்ரன், திட்டமிட்ட இனவாதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ப்ரூட் கடந்த மார்ச் மாதமே உயிரிழந்தபோதும் அதுபற்றி தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டங்களை தூண்டிய ஜோர்ஜ் ப்ளொயிட்டின் உயிரிழப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ப்ரூட் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கறுப்பினத்தவரான ப்ளொயிட்டின் மரணமும் இதனை ஒத்துள்ளது. இந்த இருவரும் பொலிஸாரால் தடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனை அடுத்து பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிராக உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
ஏழு பொலிஸாரின் இடைநிறுத்தமானது ப்ரூட் உயிரிழந்த பின் எடுக்கப்படும் முதல் ஒழுக்காற்று நடவடிக்கையாக உள்ளது. இந்த ஒப்பந்த விதிகளின்படி நிறுத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று நகர அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேயர் வொர்ரன், 'சபையின் ஆலோசனைக்கு எதிராக விசாரணையில் உள்ள அதிகாரிகளை நான் இன்று இடைநிறுத்தம் செய்வதோடு, விசாரணைகளை பூர்த்தி செய்யும்படி சட்டமா அதிபரை நான் வலியுறுத்துகிறேன்' என்றார்.
'டானில் ப்ரூட்டின் முன் எமது பொலிஸ் திணைக்களம், எமது உளச் சுகாதார அமைப்பு, எமது சமூகம், நானும் தோல்வி அடைந்துவிட்டேன்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த மாத ஆரம்பம் வரை இந்த சம்பவம் குறித்து தம்மை அறிவுறுத்த நகர பொலிஸ் தலைவர் லாரொன் சிங்லேட்டரி தவறிவிட்டதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கோரிக்கைக்கு அமைய பொலிஸார் உடலில் அணிந்திருக்கும் கெமராவின் வீடியோ பதிவு கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தாம் அந்த வீடியோவைப் பார்த்தபோது பொலிஸ் தலைவர் தமக்கு கூறியதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதாக கண்டறிந்தேன் என்று வொர்ரன் தெரிவித்தார். நன்றி தினகரன்
ஹமாஸ் தலைவர் லெபனான் விஜயம்
இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்புகள் தொடர்பில் பலஸ்தீன தரப்புகளை சந்தித்து பேசுவதற்காக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியே லெபனான் சென்றுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் அறிவிப்பு கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி வெளியான நிலையில் 27 ஆண்டுகளின் பின்னரே ஹனியே, லெபனான் பயணித்துள்ளார்.
மிக அரிதான ஒரு சந்திப்பாக ஹனியே நேற்று பலஸ்தீன தரப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அமெரிக்கா இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்த மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
மூன்றாவது அரபு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை பலஸ்தீனர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மேலும் பல அரபு, முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment