சூரிய வளைவு/சந்திர வளைவு – தோற்கருவிகள்
பன்னெடுங்காலம் தொட்டே தமிழர்கள் பல தோலிசைக் இசைக் கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். தோலிசைக் கருவிகளின் ஆதார பொருளாக இருப்பது விலங்குகளின் தோல். பெரும்பாலும் ஆட்டுத்தோல், மாட்டுத் தோல் அல்லது எருமைத் தோல் போன்ற தோல்களை பயன்படுத்தித்தான் தமிழகத்திலும் இந்தியாவிலும் இசைக்கப்படும் பல கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுவும் ஆண் விலங்குகளின் தோல் இசைக்கு ஏற்றது அல்ல என்கிறார்கள் இசைக்கருவி தயாரிப்பாளர்கள். பெண் விலங்குகளின் தோல் தான் விரிந்து சுருங்கும் தன்மையை உடையது. இது தான் இசைக்கு உகந்தது. இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வைத்து பலர் மத அரசியல் செய்கிறார்கள். ஆனால் கோவில்களில் இசைக்கப்படும் பெரும்பாலான இசைக்கருவிகள் மாட்டைக் கொன்று தான் செய்யப்படுகிறது. அதுவும் சில கருவிகளுக்கு கன்றுகுட்டியின் தோல் தான். இறந்த மாட்டின் தோலைக் கொண்டு இசைக்கருவிகள் செய்யப்படுவது இல்லை. காரணம் இறந்த மாட்டின் ரத்தம் அதன் தோல்களில் உறைந்து அது இசைக்கு ஏற்றதாக இருப்பதில்லை. மாடுகளைக் கொன்று அந்த தோலைத்தான் இசைக் கருவிகளுக்கு தமிழர்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள். சபாக்களில் “சுதி சேரலையோன்னோ” என்பவர்கள் முதல் ”போட்றா அடியை” என்னும் விளிம்பு நிலை இசைக்கலைஞன் வரை பயன்படுத்தும் இசைக்கருவிகள் விலங்குகளைக் கொன்று செய்யப்படுபவை தான். இசைக்கருவிகள் பாவ புண்ணியம் பார்த்து செய்யப்படுவதில்லை. வேட்டை சமூக மக்களின் தொடர்நிலை பண்பாடு தான் தோலிசைக் கருவிகள்.
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் என்கிற தலைப்பில் நாம் 29 வாரங்கள் பயணித்து வந்தோம். அவ்வகையில் இந்த வாரம் நாம் பார்க்க போகும் இசைக்கருவிகள் எற்கனவே அழிந்துவிட்ட இசைக்கருவிகள். தமிழர் நிலத்தில் புழங்கிய மிக எளிய இரண்டு தோலிசைக்கருவிகள் சூரிய வளைவும் சந்திர வளைவும். சூரிய வளைவு, சூரிய பறை, சூரிய பிறை எல்லாம் ஒன்று தான். அதே போல் சந்திர வளைவு, சந்திர பறை, சந்திர பிறை இவை எல்லாம் ஒரே கருவி தான். இதன் பெயர்கள்களை வைத்து நாம் இக்கருவியின் அமைப்பை புரிந்து கொள்ளலாம். வட்ட வடிவில் வளைக்கப்பட்ட இரும்பு கம்பியில் தோலை தைத்து செய்யப்படும் கருவி சூரிய பறை. நிலவின் பிறை வடிவான முக்கால் வட்ட வடிவ கம்பியில் கட்டப்படும் கருவி சந்திரப் பிறை. மிக மெல்லிய தோல் பயன்படுத்தப்பட்டது. 25 செ.மீ விட்டம் கொண்டது. தலையில் கட்டிக்கொண்டு குருவிக்கொம்பு குச்சியின் மூலம் இசைக்கப்படும் கருவி இது. சூரிய வளைவு காலையிலும், சந்திர வளைவு மாலையிலும் இசைக்கப்பட்டது.
சில பத்தாண்டுகள் முன்பு வரை காஞ்சிபுரம் வரதர் கோவிலில் புழக்கத்தில் இருந்தது. ஆனால் தற்பொழுது அனைத்தும் கடந்த காலத்தின் ஒரு கனவாகிவிட்டது. “காஞ்சி வரதர் கோயிலில் சூரிய பறையின் ஒலி எதிரொலித்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தேனம்பாக்கம் முத்து என்பவர் இசைத்து வந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அது நின்றுவிட்டது. காஞ்சி வரதர் கோயிலில் புறப்பாடு மற்றும் பெருவிழாவின் போது இந்த பறைகள் இசைக்கப்பட்டன.
தமிழகத்தில் மாரியம்மன் மற்றும் கிராம தெய்வங்களின் விழாக்களில் இசைக்கப்பட்டு தற்பொழுது முற்றாக அழிந்துவிட்டது இந்த பழம்பெரும் இசைக்கருவி. ஆந்திராவின் சில பகுதிகள் மற்றும் காளஹஸ்தியில் இசைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். தெரியவில்லை. இந்தக் கருவி இருந்தது என்பதை சென்னை அரசு அருங்காட்சியகம், பழனி அருங்காட்சியகம் மூலம் தான் நாம் அறிகின்றோம். எஞ்சியுள்ள சில கருவிகள் வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு உள்ளது.
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai
2. Lalitha M/Nandhini M - Proceedings of National Seminar on PRISTINE GLORY of Kanchipuram, Sankara University, Enathur, Kanchipuram)
3. வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு பொன்னுசாமி அவர்கள், பல்லடம்
No comments:
Post a Comment