மெல்பனில் நடந்த கலைவளன் சிசு.நாகேந்திரன் நினைப்பகிர்வு நிகழ்வு: தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இரங்கலுரை நவரட்ணம் வைத்திலிங்கம்


 “  அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்ற காலம் முதல் தமிழ் சமூகப்பணியாளராகவும், தாயகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் பாடுபட்டவரான எழுத்தாளரும், நாடகக் கலைஞரும், மொழிபெயர்ப்பாளரும், நூலாசிரியருமான கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்கள் அண்மையில் சிட்னியில் மறைந்துவிட்டாலும், அவரைப்பற்றிய பசுமையான நினைவுகள் என்றென்றும் எம்முடனேயே வாழ்ந்துகொண்டிருக்கும். “   என்று மெல்பனில் கடந்த சனிக்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக தெரிவித்தனர்.
 
இந்நிகழ்வினை அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின் மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரசைகள்  அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

இவ்வமைப்பின் தலைவர் திரு. சிவசுப்பிரமணியம்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர் சிசு. நாகேந்திரன் அய்யாவின் உருவப்படத்திற்கு  மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

சிசு. நாகேந்திரன் அவர்கள்,  கேசி தமிழ்மன்றத்தையும் அதனோடிணைந்த தமிழ் மூத்த பிரசைகள் ஒன்று கூடல் என்ற மூத்தோருக்கான ஒரு அமைப்பையும் உருவாக்க உறுதுணையாகவும், ஆலோசகராகவும் செயற்பட்டு, அதன் வளர்ச்சியில் தள்ளாத வயதிலும் தன்னால் முடிந்தவரை அயராது உழைத்து, இதற்குமேல் இயங்க முடியாது எனும் நிலை வந்தபோதும்,   பிள்ளைகளின் வற்புறுத்தலினால் இடம் பெயர்ந்து சிட்னி மாநகரின்   ஒரு முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்தவர்.


கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி, தனது 98 வயதும் நிறைவுற்ற நிலையில் மறைந்தார்.  இந்த முதியவயதிலும் எமது தமிழ் சமூகம், தமிழ் இலக்கியம் குறித்து பேசியும் எழுதியும் வந்தவர்.
அவரது எழுதிய நூல்களான அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும் மற்றும் மொழிமாற்று தமிழ் – ஆங்கில அகராதி என்பன சமூகப்பயன்பாடு மிக்கவை. அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற தேகப்பயிற்சி தொடர்பான இறுவட்டையும் பதிவுசெய்து வெளியிட்டவர்.
 
காப்பகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையிலும் அகராதியின் இரண்டாம் பாகத்தையும் எழுதி முடித்துவிடவேண்டும் என்பதில் தீவிர அக்கறை காண்பித்தவர். அதற்கான தேடுதல்களில் ஈடுபட்டவர்.  சிசு. நாகேந்திரன் அய்யாவின் மறைவு எமது தமிழ்சமூகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

நினைவுப்பகிர்வில்

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள  மூத்த பிரசைகள் அமைப்பின்  நிகழ்ச்சிகள் பற்றி தலைவர் திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கேசி. தமிழ் மன்றத்தின் தொடக்ககால உறுப்பினர் திரு. சிவசுதன்,  நினைவேந்தல் நிகழ்வை தொடக்கிவைத்து உரையாற்றினார்.

 “  கலை, இலக்கியம், சமூகப்பணிகள் முதலானவற்றில் எமக்கு சிறந்த வழிகாட்டியாகவும், அதே சமயம் முன்மாதிரியான செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் சிசு அய்யா. மூத்த – இளம் தலைமுறையினருக்கு மத்தியில் அயராமல் இயங்கி இரண்டு தலைமுறையினருக்கும் பாலமாகவும் விளங்கியவர். “ என்றார் திரு. சிவசுதன்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் சிசு அய்யாவின் குடும்ப  மருத்துவருமான  ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் உரையாற்றுகையில், “ சிசு அய்யாவை எனது காரில் ஏற்றிச்செல்லும் சந்தர்ப்பங்களை மிகுந்த ஆர்வத்துடன் அனுபவித்துள்ளேன். அவர் எம்முடன் பல செய்திகளை பகிர்ந்துகொள்வார். அவரது  தொடர்ச்சியான உரையாடலில்  எப்போதுமே தாயகத்தில் போரினால் துன்பப்பட்ட மக்களைப்பற்றிய சிந்தனையே இருக்கும். அவர் பேச்சுடன் நிற்பவர் அல்ல, எமது மக்களின் புனர்வாழ்வுக்காக  தொடர்ச்சியாக நிதிப்பங்களிப்பு செய்தவர்.  “ என்றார்.


அவரைத்தொடர்ந்து உரையாற்றிய  தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த திரு.  விவேகானந்தன் அவர்கள் சிசு ஐயா அவர்களுடன் தான் கழித்த நாட்களை நினைவுகூர்ந்தார்.  “ ஏதாவது எழுதும்போது தமிழாக இருந்தாலும் சரி ஆங்கிலமாக இருந்தாலும் சரி சிறு பிழை விட்டாலும் அவற்றைத் திருத்தி இதை இப்படித்தான்  எழுதவேண்டும் என்று வலியுறுத்தியவர்.  அவருடைய ஆங்கில -  தமிழ் புலமை பிரமிப்பானது  “ என்றார்.
 
 எழுத்தாளர் திரு.  முருகபூபதி  உரையாற்றுகையில்,   “ சிசு அய்யா எழுதியிருக்கும் மூன்று புத்தகங்களையும் பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்சியை நடத்தவேண்டும் எனக்கூறியதுடன், சிசு அய்யா மறைந்திருந்தாலும், இன்றும் அவர் முன்னர் நடித்த கட்டிடக்கலைஞர் வி. எஸ். துரைராஜாவின் குத்துவிளக்கு திரைப்படத்தில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இத்திரைப்படத்தை இப்போதும் கணினியில் யூ டியூப்பில் பார்க்கமுடியும்  “ என்றார். 
 
திரு ராஜ ராஜேஸ்வரன்,   தனது நினைவுப்பகிர்வில்,   மெல்பனில் 90 கள் தொடக்கம்  சிசு ஐயாவுடனான முதல் சந்திப்பு முதல் கடந்த மாதங்களில் இரண்டு தடவைகள் சிட்னி சென்று அவரைப்பார்த்து வந்ததிலிருந்து  பெற்ற தன்னுடைய அனுபவங்களை  தெரிவித்தார்.

                      எழுத்தாளர் ஆவூரான் சந்திரன் உரையாற்றுகையில்,  “  இயல்பிலேயே ஒரு நாடக கலைஞராக சிசு அய்யா அவர்கள் திகழ்ந்தமையால், எத்தகைய உரையாடல்களின்போதும், அங்கதச்சுவையுடன் பேசும் கலையையும் கற்றிருந்தவர். அவரது வயது மூப்பின் காரணமாக ஒரு செவியில் புலன் மந்தமாகவிருந்தபோதும், அதனையும் நகைச்வையாக இவ்வாறு சொல்வார்.  ஒரு காதைக்காட்டி, “  இது  காது என்பார். மற்றதைக்காண்பித்து இது கேட்காது  “  என்பார். இவ்வாறு நகைச்சுவையுடன் பேசும் இயல்புகொண்டிருந்தவர்.  ஒரு சமயம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சந்தித்து அவரது அன்பான உபசரிப்பில் திழைத்தவர்.  அத்துடன்  நாடகம், இலக்கியம் தொடர்பாக விவாதங்களிலும் ஆர்வமுடன் ஈடுபடுபவர்  “ என்றார்.
 
லயன் சத்தியலிங்கம் உரையாற்றுகையில்,   “ பல சந்தர்ப்பங்களில் எனது காரில் அவருடன் பயணித்திருக்கின்றேன். அதனால் அவரிடமிருந்த நல்லாற்றல்களையும் நல்லியல்புகளையும் அறிந்துகொள்ளமுடிந்தது. எமக்குத் தெரியாத பல தமிழ் இலக்கிய புதினங்களையெல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியும். அதனால் அவர் பல்களஞ்சியமாக திகழ்ந்தார்.  “ என்றார்.

பல்மருத்துவர் மதியழகன் உரையாற்றுகையில்,  “ சிசு அய்யாவிடமிருந்து நாம் தப்பிக்கமுடியாத பல்வேறு நிகழ்வுகள் மனதில் நிழலாடுகின்றன. ஒரு விடயத்தை சரியாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அத்துடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் உறுதியான நிலைப்பாடுகளையும் கொண்டிருந்தார். அவரிடத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த இயல்பு பொதுநலன் சார்ந்தது.  “ எனத் தெரிவித்தார்.

 மெல்பன் 3 zzz   தமிழோசை வானொலி ஊடகவியலாளர் திரு. ரமேஷ் பாலகிருஷ்ணன் உரையாற்றுகையில்,   “ சிசு அய்யா, சிறந்த வாசகர். அத்துடன் கிரமமாக இங்கு ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகளின் அபிமான நேயருமாவார். வானொலி ஊடகத்தில் நான் சம்பந்தப்பட்ட ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை செவிமடுத்து செம்மைப்படுத்தியுமிருக்கிறார். வாராந்தம் எமது ஒலிபரப்பை கேட்டுவிட்டு, உச்சரிப்பில் நாம் ஏதும் தவறுகள் நிகழ்த்தியிருப்பின் தாமதமின்றி தயங்காமல் தொலைபேசி ஊடாக சுட்டிக்காண்பிப்பார்.  அந்தளவுக்கு அவர் தமிழ்மீது வற்றாத வாஞ்சையை கொண்டிருந்தவர்.  அத்துடன் எமக்கு முன்னுதாரணமாகவும் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்  “ என்றார்.

சிசு. நாகேந்திரன் அய்யா மெல்பனில் வசித்த காலப்பகுதியில் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவரான திரு. முகுந்தன் உரையாற்றுகையில்,  “ நாளாந்தம் அவருடன் கழிந்த பொழுதுகள் யாவும் பசுமையானவை. எம்மோடு அவர் வாழ்ந்தபோது, குறியீட்டு மொழிகளில் சைகை காண்பித்து பேசி கலகலப்பூட்டுவார். மெல்பனில் டன்டினொங் மருத்துவமனையிலிருந்து அவர் வெளியேறியபோது, அவரது வயது மூப்பின் காரணமாக இனிமேல் அவரை முதியோர் காப்பகத்தில்தான் பராமரிக்கவேண்டும் எனச்சொன்னார்கள். அவ்வாறு நிகழ்ந்த பின்னர், சிட்னிக்கு இடம்பெயர்ந்துசென்றார்.  தனது பிரியாவிடையை கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரசைகள் அமைப்பிற்கு தெரிவிக்கவேண்டும் என்பதில் தீவிரமாகவும் இருந்தவர். அவரது விருப்பமும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் இங்கு மீளவும் வராமலேயே தனது நினைவுகளை எம்மிடம் தந்துவிட்டு நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுக்கொண்டுவிட்டார்.  “  எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவாறு எழுத்தாளர் திரு. முருகபூபதி எழுதியிருக்கும்   “ இலங்கையில் பாரதி  “ ஆய்வு நூலை எழுத்தாளரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் துணைத்தலைவருமான திரு. சங்கர சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

நூலின் சிறப்பு பிரதிகளை திரு. சிவசுப்பிரமணியம் மற்றும் இலக்கிய ஆர்வலர் எழுத்தாளர் திருமதி சகுந்தலாதேவி கணநாதனும் பெற்றுக்கொண்டனர்.
 நூலாசிரியர் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வுகளையடுத்து,  மூத்த பிரசைகள் சார்பில் திரு. நவரத்தினம் நன்றியுரை வழங்கி நினைவேந்தல் நிகழ்வை நிறைவு செய்தார்.

இதனையடுத்து  2020 ஆம் ஆண்டு  தை, மாசி மாதங்களில் பிறந்தவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு பிறந்த நாள்  வாழ்த்து தெரிவிக்கப்பட்டு  கேக்வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

மதியபோசன விருந்துபசாரத்துடன் அதிர்ஷ்ட சீட்டு குலுக்கப்பட்டு,   முறையே திரு. பரதன், திருமதி.  கமலவதனி, திரு ராஜராஜேஸ்வரன்  ஆகியோர் பரிசுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

இறுதியில்  எழுத்தாளர்  திரு சங்கர சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் மொழியின் தொன்மை வளர்ச்சி என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

---0---


















No comments: