இலங்கைச் செய்திகள்


கொரோனா; சந்தேகத்தில் இதுவரை 19 பேர் அனுமதி

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்

கதிர்காமம் ஆலயத்தை ஒப்படைக்க கோரி மூவர் வழக்கு தாக்கல்

தென்மராட்சியில் 896 ஹெக். நிலத்தை அபகரிக்க வனவளத் திணைக்களம் முயற்சி

பாராளுமன்றம் இன்று கலைப்பு: ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் சாத்தியம்



கொரோனா; சந்தேகத்தில் இதுவரை 19 பேர் அனுமதி



பதுளையில் மூவர் கண்காணிப்பில் 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாடு முழுவதும் அடையாளப் படுத்தப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் 19 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் நேற்றையதினம் இரண்டு பேர் மேலதிகமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.  
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டே உள்ளன. சந்தேகத்துக்கு உட்படும் சில சுற்றுலாப் பயணிகளும் 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படுகின்றனர்.   வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதியாகி சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று கொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இரண்டு பேர், பதுளையில் அனுமதிக்கப்பட்டனர். பதுளையில் ஏற்கனவே மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மொத்தமாக 19 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், எவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர், பதுளை அரசினர் மருத்துமனை விசேட சிகிச்சைப்பிரிவில் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
தாய், தந்தை, ஏழு வயது மகன் என்ற வகையில்,மூவரும் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஏழு வயது நிரம்பிய சிறுவனுக்கு தடிமன், காய்ச்சல் காணப்பட்டதால் கொரோனா நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதையடுத்து, பெற்றோர் அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.  இதையடுத்து, அச்சிறுவனின்  தாயையும், தந்தையையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.
அத்துடன் இம்மூவரும் தனித்தனியாக விசேட சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இம்மூவரும் தென்கொரியாவில் வசித்து வந்த இலங்கையர்களாவர். தென்கொரியாவில் கொரோனா நோய் பரவுவதையடுத்து, இம்மூவரும் அச்சம் கொண்டு தமது சொந்த நாடான இலங்கைக்கு பண்டாரவளைப் பகுதியில்  அம்பிட்டிய என்ற கிராமத்து வந்து சேர்ந்தனர். கடந்த 27ஆம் திகதி வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்தே, இம்மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுப்பிரமணியம் நிஷாந்தன், பதுளை தினகரன் விசேட நிருபர்    - நன்றி தினகரன் 









வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்

நெதர்லாந்து தூதுவரிடம் இரா. சம்பந்தன்
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு, திறன் அபிவிருத்தி உள்ளடக்கிய பூரண அபிவிருத்தித் திட்டவரைபை முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டுமென
நெதர்லாந்து தூதுவரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் நேற்றைய தினம் (03) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பதிலளித்த நெதர்லாந்து தூதுவர்: வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு தமது பூரண ஓத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.
இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்:
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் சிங்கள மக்களின் இருப்புக்குப் பாதகம் ஏற்படப்போவதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.வெற்றியை இலக்கு வைத்த பிரச்சாரங்களே இவை.
மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை அரசின் முடிவானது நாட்டிற்கு நன்மைபயக்காது. மனித உரிமைகள் தொடர்பில் தமிழ், சிங்கள பேதமோ பிரச்சினைகளோ இல்லை. எவரேனும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியிருப்பின் அத்தகைய நபர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும்.
மனித உரிமை பேரவையின் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் மூன்று முக்கிய விடயங்கள், உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நிலையான சமாதானத்தை அடைய இந்த மூன்று அம்சங்களையும் அடையவேண்டியது அவசியம். மேலும், உண்மை நிலைநாட்டப்பட்டு நீதியானது நியாயமான ஒரு நீதிப்பொறிமுறையூடாக இவற்றை அடைய வேண்டும்.
ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தை முன்னெடுத்த அரச படைகள், பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.
அப்படியாக நடந்துகொள்ளவேண்டியவர்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணாக செயற்பட்டிருந்தால் அத்தகையவர்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு பொறுப்புகூறுவதும் அவசியம். யுத்தகாலத்தின்போது அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.  
இந்த விடயங்கள் குறித்து தீர்வு காணத் தவறின் நாட்டில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு பல்வேறு வரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் அநேக விடயங்களில் பாரியளவு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.   நன்றி தினகரன் 











கதிர்காமம் ஆலயத்தை ஒப்படைக்க கோரி மூவர் வழக்கு தாக்கல்



கதிர்காம ஆலயத்துக்கு உரிமைக் கோரி முன்னாள் கப்புராளையின் மூன்று மகன்மார் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
கதிர்காம ஆலயத்தில் கப்புராளையாக செயற்படுவதற்கு தமக்கு பரம்பரை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
முன்னாள் கப்புராளை பத்மசிறி அதிகாரம் என்பவரின் புதல்வர்களான அநுராத பண்டார அதிகாரம், ரொஷான் அனுருத்த அதிகாரம் மற்றும் தேவிந்த சீவலி அதிகாரம் ஆகிய மூவருமே இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் தற்போது பதவியிலிருக்கும் ஐந்து கப்புராளைகளையும் அவர்கள் எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டுள்ளனர்.
காவந்திஸ்ஸ மன்னர் காலத்திலிருந்து கதிர்காமம் ஆலயத்தின் பராமரிப்புப் பணிகளை தமது குடும்பத்தவர்களே முன்னெடுத்து வருவதாகவும் ஆலய பராமரிப்புகளுக்காக துட்டகைமுனு மன்னர் தனது பூட்டனான நந்திமித்ர அதிகாரம் என்பவரிடமே கடமைகளை பொறுப்பு வழங்கியிருந்ததார்.
இதன்படி 2,300 வருடங்களாக தமது பரம்பரையினரே கதிர்காம ஆலயப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பணிகளை முன்னெடுத்துவரும் ஐந்து கப்புராளைகளுக்கும் கதிர்காம ஆலயத்தில் பணிகளை முன்னெடுப்பதற்கு எவ்வித அதிகாரமோ பரம்பரை உரிமையோ இல்லையென்றும் அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 











தென்மராட்சியில் 896 ஹெக். நிலத்தை அபகரிக்க வனவளத் திணைக்களம் முயற்சி



பிரதேச மக்கள், பிரதேச சபை எதிர்ப்பு
தென்மராட்சி-−சரசாலை குருவிக்காட்டு பகுதியில் 896 ஹெக்டேயர் காட்டு பகுதி மற்றும் விவசாய நிலங்களை வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்க முயற்சி எடுத்திருப்பதாக சாவகச்சேரி பிரதேச சபையினர் மற்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சரசாலைப் பகுதியில் உள்ள அரச காணிகள், தனியாரின் விவசாய நிலங்கள், மயானம்,மேச்சல் தரவைகள், மீன்பிடி குளங்கள் மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு சவாரித் திடல் ஆகியவற்றை உள்ளடக்கி வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
எல்லைப்படுத்தல் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபைக்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் இரகசியமான முறையில் ஓரிரு தினங்களுக்கு முன்னராக மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக விழிப்படைந்த பொதுமக்கள் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினர் நேற்று திங்கட்கிழமை மாலை எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.
சரசாலை நிருபர் - நன்றி தினகரன் 









பாராளுமன்றம் இன்று கலைப்பு: ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் சாத்தியம்



பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அழைப்பைவிடும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இன்று நள்ளிரவு வெளியிடப்படலாமென  எதிர்பார்க்கப்படுகிறது.  
பாராளுமன்றத்தை கலைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளருக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து  தெரிய வருகிறது. 
19ஆவது திருத்தச்சட்டத்திற்கிணங்க புதிய பாராளுமன்றமொன்று அமைந்ததும் அதனை ஜனாதிபதியால் நான்கரை வருடங்களின் பின்னர்தான் கலைக்க முடியும். அதன் பிரகாரமே நேற்றைய தினம் நள்ளிரவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது.  
பாராளுமன்றம்  கலைக்கப்பட்டதும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அமையும் காபந்து அரசாங்கமே அதிகாரம் மிக்கதாக காணப்படும். காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் மாத்திரமே அங்கம் வகிப்பார். ஏனைய பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தானாக செயலிழந்துவிடும்.  
பாராளுமன்றம் கலைக்கப்படும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டதும் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நகர்வுகளை கொண்டுசெல்லும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குரியதாகும்.  
தேர்தல் ஆணையாளர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சில திகதிகளை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை தேர்தலை நடத்தப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளதாகத் தெரிய வருகிறது. 
தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் மற்றும் வெசாக் ஹஜ் பெருநாளுக்கு முன்னர் 25ஆம் திகதியே பொருத்தமான தினமாக காணப்படுவதால் இத்திகதியை தேர்தலை நடத்தும் தினமாக ஜனாபதியின் அதிவிசேட வர்த்தமானி தாங்கி வரும் என ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.  
ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமையை தேர்தல் தினமான ஜனாதிபதி அறிவித்தால் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்குமிடையில் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான காலமாக தேர்தல் திணைக்களம் அறிவிக்கும்.  
17ஆம் திகதி காலை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 10 மணிமுதல் 10.30 வரை ஆட்சேபனைக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு பகல் 11 மணிக்கு வேட்புமனுக்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.  
இம்முறை சுயேச்சைக் குழுக்கள் ஒரு வேட்பாளருக்கு கட்டுப்பணமாக இரண்டாயிரம் ரூபா செலுத்த வேண்டும். பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை.  
2019ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்புக்கமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 885 பேர் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.  
இதேவேளை, நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் கட்டாயம் இன்றைய தினம் பாராளுமன்ற கலைப்புக்கான வர்த்தமானியை ஜனாதிபதி நள்ளிரவு வெளியிடுவார் எனக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தினகரன் சுப்பிரமணியம் நிஷாந்தன்   - நன்றி தினகரன் 









No comments: