மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 26 - முருகபூபதி

பிதா, வழக்கம்போன்று காலை ஐந்து மணிக்கே துயில் களைந்து எழுந்துவிட்டாள். வீட்டில் நிசப்தம் இழையோடியிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கூடத்தில் இருக்கும் நீண்ட சோபாவில் யாரோ உறங்குவது தெரிந்தது.
மெதுவாக நகர்ந்து வந்து பார்த்தாள். போர்வைக்கு வெளியே நீண்ட கூந்தல் தெரிந்தது. அது ஜீவிகாதான் என்பதை சட்டென புரிந்துகொண்டாள். இரவு நெடுநேரம், ஜீவிகா, லண்டனிலிருந்து வந்திருந்த பெரியப்பா சண்முகநாதனுடன் பேசிக்கொண்டிருந்தது அபிதாவுக்குத் தெரியும்.
முதல் நாள் இரவுக்காட்சிகள் அவளது மனதில் விரிந்தன. குளியலறை சென்று வந்து, தனக்கென தேநீர் தயாரித்து அருந்தினாள்.
ஜீவிகா, முதல்நாள் வேலைமுடிந்ததும் நேரே விமான நிலையம் சென்றிருக்கிறாள். அவளை அழைத்து வரும் பத்திரிகை நிறுவனத்தின் வாகனம், விமான நிலையத்தில் விட்டுச்சென்றிருக்கிறது.
லண்டனிலிருந்து புறப்படுமுன்னர் பெரியப்பா சண்முகநாதன், ஜீவிகாவுக்கு தனது பயண நிகழ்ச்சிகளை சொல்லத்தவறியிருக்கிறார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்து அங்கு இரண்டு நாட்கள் நின்றுவிட்டு, அங்கிருந்துதான் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து ஜீவிகாவுக்கு தகவல் தந்துள்ளார்.
அவரது பயண ஒழுங்குகளில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்களினால், வேலை முடிந்து வரும் வழியில் பெரியப்பாவை அழைத்து வந்திருக்கிறாள்.
அவர் சரியான திட்டமிடலுடன் செயல்படுபவர் இல்லை. சிலவேளை விமான நிலையத்திலிருந்து நேரே யாழ்ப்பாணம் போய்விடுவார் என்ற எண்ணத்தில்தான் ஜீவிகா வந்திருக்கிறாள். முதலில் அப்படித்தான் சொன்னாராம். பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம்.
அதனால்  ஜீவிகா எதுவித முன்னேற்பாடும் இன்றி நேரே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாளாம்.
தனது கைத்தொலைபேசிக்காவது தெரிவித்திருக்கலாமே என்றுதான் அபிதா முதலில் நினைத்தாள். ஜீவிகா ஏன் இதுவிடயத்தில் அலட்சியமாக இருந்தாள்…?!
நல்லவேளை இரவு உணவு போதியளவு இருந்தது. பெரியப்பாவுக்கு மஞ்சுளாவையும் சுபாஷினியையும் அவள் அறிமுகப்படுத்தியபோது, அவர்கள் இருவரும் ஏக குரலில் . “அங்கிள் வணக்கம்  “  என்றனர்.
அபிதாவை அறிமுகப்படுத்தும்போது,   “ பெரியப்பா,  இது அபிதா. இவதான் இப்போது இங்கே வேலைக்கு இருக்கிறா. வவுனியா பக்கம்.  “ என்றாள்.
 “ இல்லை… இல்லை  அய்யா. என்ர ஊர் முல்லைத்தீவு உடையார்கட்டு.  “ என்று சொல்லியவாறு  அபிதா இருகைகளும் கூப்பி வணங்கினாள்.
பெரியப்பா பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், முகத்தை திருப்பிக்கொண்டு,  சுவரிலிருந்த தனது மனைவியின் படத்தைப்பார்த்தார்.  முதல் நாள் அபிதா அதற்கு அணிவித்த பூச்சரம் சருகாகிக்கொண்டிருந்தது.
 “  குளிக்கவேணும்.  ஷவரில் சுடு தண்ணீர் வருமா..?  “ எனக்கேட்டார்.

 “ ஓம் அய்யா…. “ எனச்சொல்லிவிட்டு,  ஏற்கனவே தினமும்  அவளால் சுத்தம் செய்யப்படும் குளியலறையை மீண்டும் சுத்தம் செய்வதற்கு விரைந்தாள்.
அங்கிருந்த  வோஷிங் மெஷினருகே கிடந்த அந்த வீட்டுப்பெண்களின் உடைகள் யாவற்றையும் எடுத்து பெரிய பிளாஸ்ரிக் கூடையினுள் போட்டு  வெளியே எடுத்து வந்து, பின்வளவுக்குச்செல்லும் கொரிடோரின் மூலையில் வைத்தாள்.
புதியதொரு லக்ஸ் சோப்பையும் பெரியப்பாவின் கண்ணில் தென்படும்படி வைத்தாள்.
தன்னை அவர் ஏறெடுத்தும் பார்க்காதிருந்தது ஏமாற்றமாக இருந்தது.
“  கற்பகம் எங்கே..?  “ அவர் ஜீவிகாவிடம் கேட்டபோது, அபிதாவின் பார்வை வீட்டுக்கூடத்திற்கு வெளியே தரையில் கிடக்கும் பாதணிகள் பக்கம் ஒரு கணம் நிலைகுத்தி நின்று அகன்றது. மனதிற்குள் சிரித்தாள்.
குறட்டை ஒலி வரும் அறையை  ஜீவிகா பெரியப்பாவுக்கு சைகையால் காண்பித்தாள். அந்த அறையை ஒருகணம் பார்த்துவிட்டு தோள்களை உயர்த்தி முகத்தை சுருக்கிக்கொண்டதையும் அபிதா அவதானித்தாள்.
அபிதாவுக்கு ஜீவிகா, ஏன் கூடத்தில் உறங்குகிறாள் என்பது சட்டென புரிகிறது.  பெரியப்பாவுக்கு தனது அறையை ஒதுக்கிக்கொடுத்துவிட்டு, இங்கே வந்து படுத்திருக்கிறாள்.
மேலே மின்விசிறி சுழன்றுகொண்டிருக்கிறது.
அபிதாவுக்கு தனது  அன்றாட நிகழ்ச்சி நிரலில் குழப்பம் வரப்போகிறதே என்ற தடுமாற்றம் வந்தது. ஜீவிகா இன்று வேலைக்குச்செல்வாளா..? பெரியப்பா இன்று என்ன செய்யப்போகிறார்…?   தனது கம்பியூட்டர் பயிற்சிக்கு இன்று என்ன நேர்ந்துவிடும்…? பெரியப்பாவின் திடீர் வருகையை கற்பம் ரீச்சர் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறாள்..?  சுபாஷினியும் மஞ்சுளாவும் இந்தவாரம் செல்வதற்கு திட்டமிட்டிருந்த நுவரேலியா பயணம் என்னவாகும்..?
அபிதா, இந்தக்கேள்விகளின் நாயகியாக வீட்டுக்குள் வலம் வந்தவாறு,  காலை உணவாக எதனை தயாரிப்பது என்ற கேள்வியிலும் மூழ்கினாள்.  முதல்நாள் அரைத்துவைத்திருந்த இட்டலி மாவை எடுத்து அவிக்கக் தொடங்கலாம்.
ஆனால், இட்டலி அவிந்து வரும் போது எழும் விசில் சத்தம், கூடத்தில் படுத்திருக்கும் ஜீவிகாவின் உறக்கத்தையும் கெடுத்து,  லண்டன் – இலங்கை நேரவித்தியாசத்தின் பிரகாரம் அறைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் பெரியப்பாவையும் குழப்பலாம்.
என்னதான் செய்வது..?
ற்பகம் ரீச்சர், தனது அறையிலிருந்து சோம்பல் முறித்தவாறு எழுந்து வந்தாள்.
 “  என்ன செய்யிறாய்…?   இது யாரு, இங்கே படுத்திருக்கிறது…? ஓ… ஜீவிகாவா…? இராத்திரி மோசமான புழுக்கம்தானே… அதுதான் இங்கே வந்து படுத்திருக்கிறா…. “ எனச்சொல்லிக்கொண்டு கற்பகம் குளியலறைப்பக்கம் திரும்பியபோது, அபிதா தரைநோகாமல் கால் பாதங்களை பூனையைப்போன்று அடியெடுத்து  வைத்து அருகில் சென்று காதுக்குள்,    “  பெரியப்பா வந்துள்ளார்….“ என்றாள்.
கற்பகத்தின் முகம் இறுகி வியர்த்தது. இக்காலைவேளையிலும் வியர்ப்பது எப்படி..? என்ற மற்றும் ஒரு கேள்விக்கும் அவள் விடைதேடவேண்டியவளானாள்.
சில நிமிடங்களில் குளியலறையிலிருந்து வெளியே வந்த கற்பகம், தேநீர் கேட்டுவிட்டு, உணவருந்தும் மேசையை பிடித்துக்கொண்டு தலைகுனிந்தவாறு நின்றாள்.
மெதுவான குரலில், தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.
 “ ஜீவிகா, ஏன் முதலிலேயே சொல்லவில்லை…? வாரார் என்பது தெரியும். ஆனால், நேற்றைக்குத்தான் வருகிறார் என்பதை  , அபிதா, உனக்காவது சொன்னாளா…?  “
எதுவும் கேட்காததுபோல் நின்று தேநீர் தயாரித்துக்கொண்டிருந்த அபிதா,   “ என்ன ரீச்சர் கேட்டீங்க….?“
“  அவர்  நேற்று இரவு வருவது உனக்கு முற்கூட்டியே தெரியுமா..? அதுதான் கேட்டேன். “ 
“  இல்லை ரீச்சர், காலமைக்கு இட்டலி அவிக்கவிருந்தேன். இப்போது,  வேறு ஏதும் செய்யலாம் என்று பார்க்கிறேன்.” 
 “ ஏன்…? இட்டலி மாவு இன்னமும் புளிக்கவில்லையா..?இந்தப்புழுக்கத்திலா புளிக்காமல் இருக்குது… எங்கே பார்ப்போம்  “ கற்பகம் தேநீரை வாங்கி அருந்தியவாறு எழுந்தாள்.
 “ இல்லை… ரீச்சர், இட்டலி மாவு நன்றாக புளித்துத்தான் இருக்கிறது.  அவிக்கும் போது விசில் சத்தம் வரும்,.. சட்னிக்கு அறைக்கும்போது கிரைண்டர் சத்தம் வரும். இங்கே சிலரது உறக்கத்தை அந்தச்சத்தங்கள் குலைத்துவிடும் என்று பார்க்கிறேன் ரீச்சர். “
கற்பகம் அதனைக்கேட்டு சிரித்தாள்.
“ யாருடையதோ உறக்கத்திற்காக என்னுடைய வயிற்றை காயப்போட்டுவிடாதே. இட்டலியே அவிக்கப்பார்.  நான் இன்று இரவு முதல் மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டுக்கு தற்காலிகமாக இடம் மாறப்போகின்றேன்.  “ என்று சொன்னதும் அபிதா திகைத்துவிட்டாள்.
வந்திருக்கும் பெரியப்பாதான் ரீச்சரின் இந்தத்  திடீர் மாற்றத்துக்கு காரணம் என்பதை புரிந்துகொள்வது சிரமமானது அல்ல.
“  ஏன்… ரீச்சர்… இந்தத்  திடீர் மாற்றம்….? எதற்காக பயப்படுறீங்க… நாங்கள் எல்லாம் இருக்கிறோம்தானே…! அவர், இன்றைக்கோ, நாளைக்கோ யாழ்ப்பாணம்  போய்விடுவார். எதனைப்பற்றியும் கடுமையாக யோசிக்காமல் பேசாமல் எங்களோடு இருங்கள். உங்கட மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டில் நீங்கள் தற்காலிகமாகவாவது தங்குவதற்கு இடவசதி இருக்கிறதா…? “
 “ இருக்கிறது. அவவின்ர மகன் போனவாரம்தான் அவுஸ்திரேலியாவுக்கு படிக்கப்போயிருக்கிறான். அவன்ர ரூம், ஃபிரீயாத்தான் இருக்கும். “ 
குளியலறையிலிருந்து ரீச்சர் வகுத்த திட்டத்தை அபிதா புரிந்துகொண்டாள்.
கற்பகம் மீது அபிதாவுக்கு அனுதாபம் வந்தது.  இல்லற வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண் அவள். விதி, ஊழ்வினை, கர்மவினை,  என்றெல்லாம் அடிக்கடி சொல்லும் அம்மாவின் நினைவும், எல்லாம் திமிர், கொழுப்பு, ஆணவம், என்று எதிர்வினையாற்றி பகுத்தறிவு வாதம் புரியும் அப்பாவும், விதியை நம்புபவர்களை விதி காப்பாற்றட்டும், புத்தியை நம்புபவர்களை புத்தி காப்பற்றட்டும் எனச்சொல்லும் கணவன் பார்த்திபனும் நினைவுக்கு வந்தார்கள்.
கற்பகம் ரீச்சருக்கு நேர்ந்த அவலத்தை அரையும் குறையுமாக ஜீவிகாவும், மஞ்சுளாவும், சுபாஷினியும்  பின்நவீனத்துவப்பாங்கில் சொன்னவற்றை  நேர்கோட்டில் பதிவுசெய்தால், இந்தக்கதை பிறக்கும்:
கற்பகத்தின் அம்மாவின் வழி உறவினான  மதிமாறன் ஏஜன்ஸிக்கு பணம் கொடுத்து, எங்கெல்லாமோ சுற்றியலைந்து இறுதியில் ஜெர்மனியில்  பெர்லின் போய்ச்சேந்தான். ஏஜன்ஸிக்கு கொடுத்து முடிக்கவேண்டிய பாக்கிப்பணத்திற்காகவும் ஊரில் இருந்த தங்கைக்காரியை மணம் முடித்துக்கொடுப்பதற்காக சீதனத்திற்காகவும் இரவு பகலாக உழைத்தான். ஊரில் இருக்கும்போது ஓ. எல். வரையும் படித்துவிட்டு, ஊர் சுற்றியவன். இயக்கம் இழுத்துக்கொண்டு போய்விடும் என்பதற்காக தாலிக்கொடி, நகைகளை விற்று ஏஜன்ஸி மூலம் அனுப்பப்பட்டவன். வந்த கடனுக்காகவும் தங்கையின் திருமணத்திற்காகவும் இரவு பகலாக இரண்டு மூன்று வேலைகளைச்  செய்து இயந்திரமயமானவன்.  சுமார் இருபது வருடகாலத்தில் எந்தவொரு திருமண நிகழ்வையோ, குடும்ப ஒன்றுகூடல்களையோ பார்த்தறியாதவன். வேலை முடிந்து வந்தால் உடல் அலுப்பை போக்குவதற்கு விஸ்கி அருந்திவிட்டு, அடித்துப்போட்டதுபோல் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியவன். வேலை, வேலையே வாழ்க்கை என்று  காலத்தைப்போக்கியவன். உடல் தினவெடுத்தபோது சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்று வந்திருப்பவன்.
அவனுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதற்காக ஊரெல்லாம் தங்கள் சாதிக்குள் ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்த  அவனது தாயின் தீவிர தேடுதலில் கிடைத்தவள் பட்டதாரி ஆசிரியையான கற்பகம்.
வயதிலும் மதிமாறனை விட பன்னிரண்டு வயது குறைவு. படிப்பும் அதிகம். நல்ல வரன் ஊரில் கிடைக்காமல் இறுதியில் ஜெர்மனியில் வதிவிட உரிமை பெற்றிருந்த மதிமாறனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்தது.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சமாதான காலத்தில் ஊருக்கு வந்து கற்பத்தை மணமுடித்தான். சின்னவயதில்தான் அவன் கற்பகத்தை பார்த்திருக்கின்றான். அப்போது, அவன் சனசமூக நிலைய வாசிக சாலையருகிலும் கோயில் வேப்பமரத்தடியிலும் சைக்கிளில் அமர்ந்தவாறு , ஒரு காலை தரையில் ஊன்றியவாறே சிநேகிதர்களுடன் வம்பளந்தவாறு  தெருவில்  ரியூஷன் வகுப்புகளுக்கு சென்று வரும் மாணவிகளுக்கு ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்தவன்.
பாரதிதாசன்,  காதல் காதல் காதல் போயின் சாதல் என்றதை, டாவு டாவுடா டாவில்லாட்டி டையடா… என்று பிதற்றிக்கொண்டிருந்தவன்.
ஜெர்மனியின் புகலிட வாழ்வில் எப்படி மெல்லுணர்வேயின்றி வக்கிரப்புத்திக்கு பலியானான்….?
தன்னை முழுமையாக நம்பி வந்த கற்பகம்  மீது அநாவசியமாக சந்தேகம் கொண்டு, தனது வாழ்க்கையிலும் மண் அள்ளிப்போட்டுக்கொண்டு, கற்பகம் வாழ்விலும் நெருப்பள்ளிப் போட்டுவிட்டான்.
கற்பகம் யாருடன் பேசினாலும் சந்தேகம், அதனால் வெளியே அழைத்துச்செல்லாமல் காரணங்களை கற்பித்து வீட்டுக்குள்ளேயே சிறைப்படுத்திவைத்த சைக்கோ.  இரவு நேர வேலைக்குச்செல்வதாக சொல்லிவிட்டு,  பின்கதவால் மீண்டும் உள்ளே வந்து மறைந்திருந்து கற்பகத்தை அவதானித்தவன்.
அந்தக்காட்சியை ஒரு நாள் மஞ்சுளா, கற்பகத்திடம் கேட்டறிந்து  அபிதாவிடம்  சொன்னபோது,  பாலச்சந்தரின் மனதிலுறுதி வேண்டும் படத்தில் வரும் நாயகியின்   கணவனைப்பற்றிச்சொன்னாள்.
அபிதா அந்தப்படத்தை  மீண்டும் ஒரு தடவை பார்க்கவிரும்பினாள்.  போர்க்காலத்தில் புலிகள் தரப்பில் பார்க்கப்பட்டம் அது என்பது அவளுடைய நினைவுப்பொறியில் தட்டியிருந்தது.
கற்பகம், ஆசிரியப்பணியில்  சம்பளமற்ற லீவு எடுத்துக்கொண்டு சென்றதனால் தப்பினாள். வக்கிரம் பிடித்த கணவனுடன் வாழப்பிடிக்காமல் திரும்பி வந்து  ஆசிரியப்பணியை மீண்டும் பொறுப்பேற்று, சிறிது காலத்தில் இடமாற்றம் பெற்று நிகும்பலைக்கு வந்தாள்.
தனக்குத்தானே கழிவிரக்கம்கொண்டு வாழப்பழகிவிட்ட கற்பகம், எதிலும் பிடிப்பின்றி, பற்றின்றி, தனது விதியை நொந்துகொண்டு தினமும் தனது எதிர்காலத்தை தொலைக்காட்சியில், பத்திரிகையில் வரும் சோதிடப்பகுதியில் தேடிக்கொண்டிருக்கிறாள்.
 “ இனியென்ன எதிர்காலம்…? இல்லற வாழ்க்கையே போய்விட்டது.  சாத்திரகாரன் புதிய துணையை தேடித்தருவான் என்று நம்பிக்கொண்டிருக்கிறாவா..?  “ என்றும் மஞ்சுளா,  அபிதாவிடம் சொல்லியிருக்கிறாள்.
அந்த கற்பகம்தான், இப்போது லண்டனிலிருந்து வந்து இறங்கியிருக்கும் மற்றும் ஒரு வக்கிரத்திடமிருந்து தப்பி ஓடுவதற்கு மார்க்கம் தேடுகிறாள்.
கூடத்தில்  சோபாவில் உறங்கும்  ஜீவிகாவில் அசைவு தென்பட்டது.  அபிதா அருகில் வந்தாள்.
ஜீவிகா கண்ணைத்திறந்து பார்த்து, கொட்டாவிவிட்டாள்.
 “ நேரம் என்ன…? அபிதா…  “
 “ ஆறுமணியாகிறது. இன்றைக்கு நீங்க வேலைக்குப்போகவில்லையா…?  “
 “ இல்லை பெரியப்பா வந்திருக்கிறபடியால், இன்றைக்கு லீவு எடுத்திட்டன்.   “
 “ இன்றைக்கு நான் கம்பியூட்டர் கிளாஸ் போகலாமா…?   “
 “ அதற்கென்ன போங்கோ… பெரியப்பா எழும்புவதற்கு நேரம் ஆகும். நான் வீட்டில் நிறகிறேன்தானே.. காலை சாப்பாட்டை மாத்திரம் செய்திட்டு போங்கோ. “
கற்பகம், இன்று மங்களேஸ்வரி ரீச்சரின் வீட்டுக்கு இடம்மாறவிருக்கும் தகவலை அபிதா, ஜீவிகாவிடம் சொல்லவில்லை.
லண்டன் பெரியப்பாவின் திடீர் வருகை அந்த வீட்டில் ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்களை  யோசித்துக்கொண்டே இட்டலிச்சட்டியை அடுப்பில் வைத்தாள்.
( தொடரும் )

















No comments: