எம் மக்களின் வாழ்வைச் சொல்லும் ‘சினம் கொள்’ - தாமரைச்செல்வி


.


‘சினம் கொள்’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்த போதே அதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் எழுந்திருந்தது. எமது மண்ணின் சினிமா என்ற ஆர்வம் தந்த எதிர்பார்ப்பு அது.
ஒரு மணிநேரம் பயணம் செய்து பிரிஸ்பேன் பல்கலைக்கழக திரையரங்குக்கு சென்றால் முன் மண்டபம் ஆட்களினால் நிறைந்து போயிருந்தது. அரங்கின் கதவு திறப்பதற்காய் காத்திருந்த கூட்டத்தினுள் ஐந்தாறு வெள்ளைக்காரர் நின்றது ஆச்சரியம். அதில் ஒருவர் கையில் புகைப்படக் கருவியும் காணப்பட்டது.
அரங்கில் நாலைந்து இருக்கைகள் தவிர மற்றவை நிரம்பியிருந்தன. இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. படம் முடிந்த போது இறுதிக் காட்சி தந்த அதிர்வில் ஒரு கணம் உறைந்து போயிருந்த அரங்கு மறுகணம் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்து எழுந்த கைதட்டலில் சுவரெல்லாம் அதிர்ந்தது. அப்போதே இது கொண்டாடக் கூடிய சினிமா என்பதை உணர முடிந்தது.
இலங்கையில் சிங்கள சினிமா முன்னேறிய அளவுக்கு தமிழ் சினிமா முன்னேறவில்லை என்ற கருத்தைப் பலர் தொடர்ச்சியாக ஆதங்கத்தோடு சொல்லி வந்திருக்கிறார்கள். சில தமிழ்ப் படங்கள் ஓரளவு பரவாயில்லை என்ற நிலையில் இருந்தாலும் இந்தியப் படங்களுடன் ஒப்பிடும் போது அவை நலிந்த நிலையிலேயே இருந்திருக்கின்றன. போர்க்கால நாட்களில் திரைப்பட தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சில படங்கள் உருவாக்கப்பட்;டன. அவற்றில் சில குறும்படங்கள் தரமானவையாகவும் இருந்திருக்கின்றன. குறைந்த அளவு வளங்களை வைத்து உருவாக்கப்பட்ட அந்த குறும்படங்களில் சில இன்றளவும் பேசப்படுகின்றன. சில போதாமைகள் இருந்தாலும் எங்கள் சினிமா என்று அவற்றையும் நாம் கொண்டாடியிருக்கிறோம்.



சமீப காலங்களில் ஈழத்தில் சில படங்கள் தயாரிக்கப்பட்டு வெளி வந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அவற்றின் தொடர்ச்சியாக இப்பொழுது ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் ‘சினம் கொள்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
போருக்குப் பின்னர் எமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே இத்திரைப்படத்தின் பேசு பொருளாகியிருக்கிறது. புனர்வாழ்வு பெற்று ஊருக்குத் திரும்பும் ஒரு முன்னாள் போராளி தன் மனைவி குழந்தையைத் தேடி அலைவதை மையப்புள்ளியாகக் கொண்டாலும் அந்த அலைவினூடாக எமது சமூகத்தின் இன்றைய பிரச்சனைகளையும் அவலங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. போர் தின்ற நிலத்தின் வாழ்வை சிறு சிறு சம்பவங்கள் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறது.
இப்படத்தில் நடித்த அத்தனை பேரும் அந்த அந்தப் பாதிரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அத்தனை இயல்பு. அமுதனாக நடித்தவர் தனது முக பாவங்களினாலேயே தன் உணர்வுகளை கடத்தி விடுகிறார். இவர் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய்சேதுபதியுடன் படம் முழுவதும் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தவர். அதிலும் மனைவி குழந்தையைத் தேடி அலையும் ஈழ அகதியின் பாத்திரத்தையே ஏற்றிருந்தார். பிரிவின் ஏக்கம்ää தவிப்புää இயலாமை எல்லாவற்றையும் கண்களில் தேக்கி நடித்திருந்தார். அதே தவிப்பையும் துயரத்தையும் இந்தப் படத்தில் இன்னமும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனந்திää யாழினியாக நடித்த பெண்களும் அந்த பாத்திரமாகவே மாறியிருந்தார்கள். எந்த ஒப்னையுமற்ற பக்கத்து வீட்டுப் பெண்கள் மாதிரியான இயல்பான முகங்கள்.
நீண்ட வருடங்களுக்குப் பின் கணவன் வந்து நின்ற போது கண்களைச் சுருக்கிப் பார்;த்து விட்டு பாய்ந்து ஓடி வந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி கதறி அழும் காட்சியை கண்ணீர் சிந்தாமல் நாம் கடந்து விட முடியாது. மௌனித்துப் போன அந்த கணங்களுக்கு இசை மட்டுமே வெளிப்படுத்தும் அந்த துயரம் நம் மனங்களையும் அசைத்து விடுகிறது.
தீபச்செல்வனின் வசனங்களும் பாடல்களும் இப்படத்தின் பெரிய பலம். மனங்களின் அழுகை ஆற்றாமை கோபம் எல்லாமே நறுக்குத் தெறித்தாற் போல வசனங்களில் வந்து விழுகிறது. தேவைக்கு அதிகமாக எந்த வசனமும் எழுதப்படவில்லை. எழுதிய ஒவ்வொரு வசனமும் எம் சமூகத்தின் வாழ்வைப் புரட்டிப் புரட்டிப் போடுகிறது. எமது சமூகத்தில்; இத்தனையும் நடக்கிறதா என்று எம்மையே அதிர வைக்கிறது. 
வார்த்தைகளிலேயே வாழ்வைச் சொல்லும் பாடல்கள். அந்த வரிகளின் துயர் வந்து நம் மனதை கனக்க வைக்கும் அளவுக்கு ரகுநந்தனின் இசை. அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டாலும் அதே மனப்பாரம்தான். அவரின் பின்னணி இசை பல இடங்களில் கதையை நகர்த்திக் கொண்டு போகிறது. வசனங்கள் அற்ற அமைதியில் இசையே பேசுகிறது.
படத்தின் ஒளிப்பதிவு அத்தனை தெளிவு. புழுதி பறக்கும் மண் வீதிகளும்ää காய்ந்து போன பற்றைகளும்ää செம்மண்ணாய் விரிந்திருக்கும் தோட்டவெளிகளும்ää பனை மரங்களுமாக எங்கள் ஊர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உயரே இருந்து எங்கள் மண்ணை படம் எடுத்த விதம் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. இருளும் ஒளியும் நிலவுமாய் மின்னிய இரவு நேரக் காட்சிகளின் படப்பிடிப்பு அத்தனை அருமை.
ஆரம்பத்தில் மெதுவாய் நகரும் படம் இடைவேளையின் பின் பரபரவென்று நகர்கிறது. கடத்தி வைத்திருக்கும் பெண்ணை மீட்கத் தயாராகிற போது கதாநாயக பிம்பத்தைக் கட்டமைப்;புச் செய்யாமல் தன் நண்பர்களை அழைத்து கூட்டாக மீட்கத் தயாராவது யதார்த்தம். எனினும் அப்பெண்ணை மீட்கும் காட்சி இன்னும் கொஞ்சம் இயல்பாக நம்பகத்தன்மையோடு இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. ஆனாலும் சமூகத்தை நேசிப்பவர்கள் என்றைக்குமே சமூகத்திற்காக எதையும் செய்வார்கள் என்ற கருத்தையும் நிரூபிக்கும் காட்சியமைப்பாக இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
கடைசியாக யாருமே எதிர்பார்க்காத ஒரு துயர முடிவு. அதையே ஆரம்பக் காட்சிகளில் கடையில் சந்திக்கும் முன்னாள் போராளியை பின் ஒரு நாள் கண்ணீர் அஞ்சலி அச்சிட்;ட சுவரொட்டியில் பார்க்க நேர்வதை ஒரு குறியீடாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது தொடர் நிகழ்வாக நடக்கப் போகிறதா என்ற மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்படத்தின் காட்சிகள் உண்மைக்கு மிக நெருக்கமானதாய் இருப்பதால் ஒவ்வொருவராலும் அந்த நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கதையாலும் நல்ல நடிப்பாலும் தொழில் நுட்ப ரீதியிலும் ‘சினம் கொள்’ திரைப்படம் தமிழக சினிமாவின் தரத்தைத் தொட்டு நிற்பதாகவே தோன்றுகிறது. இது நமது ஈழ சினிமா பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
இத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். எம் மண்ணின் சினிமாவை எம் மக்களுக்கான சினிமாவாக உருவாக்தித் தந்த எம் மண்ணின் மகன் இயக்குனர் ரஞ்சித் யோசப்புக்கு மலர்க்கொத்துக் கொடுத்து வரவேற்போம்.

No comments: