படித்தோம் சொல்கின்றோம்: பிரான்ஸ் ராணிமலர் எழுதிய நூல் அமரர் சின்னத்தம்பி சின்னையா செல்லையா வாழ்வும் பணிகளும் ரஸஞானி



எமது தமிழ் சமூகத்தில் அதிலும் வசதி படைத்தவர்கள் மத்தியில் ஒருவர் மறைந்துவிட்டால், பிள்ளைகள் அந்தியேட்டி வரும் சமயத்தில் மண்டபம் ஒழுங்கு செய்து உறவினர், நண்பர்களை அழைத்து மறைந்தவர் பற்றிய நினைவு மலரையும் வெளியிட்டு விருந்துபசாரம் நடத்துவார்கள்.
ஈழத் தமிழர் புகலிட  நாடுகளில் இந்த நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நினைவு மலருக்கு கல்வெட்டு என்றும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
அதில் மறைந்தவரின் சுருக்கமான வாழ்க்கைச்சரிதமும்,  மக்கள், பேரப்பிள்ளைகள் எழுதும்  நினைவுக் குறிப்புகளும் குடும்ப பின்னணி பற்றிய  Family Tree உம் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
மறைந்தவர் சைவத்தமிழராயின், கல்வெட்டின் இறுதிப்பக்கங்களில்  தேவாரம், சிவபுராணம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா, திருப்புகழ் என்பனவும்  அச்சிடப்பட்டிருக்கும்.  இது வழக்கமான சம்பிரதாயமாகியிருக்கும் புகலிடச்சூழலில், ஒரு மகள் தனது அருமைத்தந்தையாரை நினைவுகூர்ந்து ஒரு சிறிய நூலை எழுதியுள்ளார்.
இந்த நினைவேட்டில் நாம் எதிர்பார்க்கும் கல்வெட்டு உள்ளடக்க சமாச்சாரங்களை பார்க்கமுடியவில்லை! அதனால் முற்றிலும் வித்தியாசமானது.
இந்த நூலை எழுதியிருப்பவர் கடந்த பலவருடங்களாக பிரான்ஸ் நாட்டில்  வாழ்ந்துவரும்  ஈழத்தவரான ராணிமலர் செல்லையா.  இவர் இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த பிரபல வர்த்தகரும் சமூகப்பணியாளருமான ( அமரர் ) சின்னத்தம்பி சின்னையா செல்லையாவின் இளைய மகள்.
தனது நெடுநாள் கனவை நனவாக்கும் பொருட்டு, தனது தந்தையார் பற்றிய தகவல்களை தேடித்திரட்டி இந்த நூலை படைத்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் காசுப்பயிராக விளங்கிய புகையிலை வர்த்தகம் சார்ந்த சுருட்டுத் தொழிலகத்தை நடத்தியவாறு, சமூகச்சிந்தனையுடன் இயங்கியிருப்பவர்தான் நீர்கொழும்பு பிரதேசத்தில் செல்லையா முதலாளி என்ற பெயருடன் வாழ்ந்திருக்கும் ராணிமலரின் தந்தையார்.
தமது தொழிலாளர்கள் சமூக மற்றும் நாட்டு நடப்புகளையும் உலக விவகாரங்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காக தான்  நடத்திவந்த தொழிலகத்தில் வித்தியாசமான வாசிப்பு அனுபவப்பயிற்சியையும் நடைமுறைப்படுத்தியவர்.

அதாவது சுருட்டுத் தொழிலாளர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சுருட்டு சுற்றிக்கொண்டிருக்கும்போது, மற்றும் ஒருவர் அருகிலிருந்து  தமிழ்த் தினசரிகளான வீரகேசரி, தினகரன், தினபதி முதலானவற்றை உரத்து வாசிப்பார்.
இக்காலத்தில் கையடக்க கைத்தொலைபேசியிலேயே அனைத்து புதினங்களையும் மீம்ஸ்களையும் படித்துவிடுகின்றோம்.  இந்த நுட்பம் தோன்றுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே, ஒரு தொழிலகத்தில் அப்படியொரு வாசிப்பு அனுபவப்பகிர்வு நடந்திருக்கிறது என்ற தகவல் இன்றைய தலைமுறையினருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
செல்லையா அவர்கள், இலங்கையின் வடபுலத்தில் மானிப்பாயில் 1915 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரது பூர்வீகம் புங்குடுதீவு.
1930 ஆம் ஆண்டையடுத்து இவரது வாழ்விடமானது வடமேற்கு இலங்கையின் நீர்கொழும்பூர். அங்குதான் இவர் தனது தொழிலகத்தை நடத்தியவாறு, அக்காலப்பகுதியில் இங்கு தொடங்கப்பட்ட இந்து வாலிபர் சங்கம், 1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயம் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி )  வித்தியாலயத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்  மற்றும் ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை முதலானவற்றில் முக்கிய பதவிகளிலும் இணைந்து அவற்றின் வளர்ச்சிக்கு பக்கபலமாக திகழ்ந்திருக்கிறார்.
இந்தத்  தகவல்களை அவரது புதல்வி ராணிமலர் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
1950 களில் இலங்கையில் வீச்சுடன் இயங்கிய இடதுசாரி இயக்கங்களில் குறிப்பாக லங்கா சமசமாஜக்கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் இவர் விளங்கியிருக்கிறார்.
தனது தொழிலகத்தை தமது இல்லத்துடன் இணைத்து வைத்திருந்தவர். தொழிலாளர்கள் தரையில் இருந்து வேலைசெய்யும்போது, அவரும் அவர்களின் அருகில் அமர்ந்து வேலை செய்வார்.
அந்த இல்லத்தின் சுவர்களில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா  காந்தி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்களையும்  காணமுடியும்.
கலையுணர்வு மிக்க அவரின்  தலைமையில் ஶ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில்  சதுர்த்தி காலத்தில் நடந்த நான்காம் திருவிழாவின்போது  புகழ்பெற்ற தவில் நாதஸ்வரக்கலைஞர்களையும் அழைத்து இரவு இரவாக கச்சேரிகளையும் நடத்தியவர். அந்தப்பிரதேசத்திற்கு யாழ்ப்பாணத்தின் பிரபலமான சின்னமேளத்தையும் அறிமுகப்படுத்தியவர்.
புகழ்பெற்ற பாடகியான பெங்களுர் ரமணி அம்மாளையும் அவ்வூருக்கு அழைத்து கச்சேரி நடத்தியவர்.
விவேகானந்தா வித்தியாலயத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்கான அபிவிருத்திப்பணிகளிலும் ஈடுபாடு காண்பித்தவர்.
தனது பிள்ளைகளும் தன்னைப்போன்று சமூக அக்கறையுடன் வாழவேண்டும் என்பதற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார். இந்தச்செய்திகளையும் ராணிமலர் இந்நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிடுகின்றார்.
ராணிமலர், தற்போது பாரிஸில் செந்துவான் லாமூன் பிரதேசத்தில் செகூர் கத்தோலிக் என்ற நிறுவனத்தில்  பிரெஞ்சு மொழியில் கணினி பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார். 
இவரது தந்தையார் 1978 ஆம் ஆண்டில் மறைந்தவர். எனினும், சுமார் 42 வருடங்களின் பின்னர் இப்படி ஒரு நினைவுப்பதிகையை வெளியிடும் எண்ணம் எவ்வாறு உருவாகியது..?  எனக்கேட்டதற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற பண்டிதர் கதிரேசு மயில்வாகனம் அவர்களின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம்தான் காரணம் என்றார்.
பண்டிதர் அவர்களின் நண்பராகவும் விளங்கியிருக்கும் தனது தந்தையார் பற்றிய நினைவுகள் இவ்விழாவில் பகிரப்பட்டதையடுத்து, அவரது வாழ்வையும் பணிகளையும் எழுத்தில் பதிந்துவைக்கவேண்டும் என்ற தூண்டுதல் பெற்றதாக குறிப்பிட்டார்.
சிறிய நூலாயினும் குறிப்பிடத்தகுந்த அந்தக்கால செய்திகளை நனவிடை தோய்தலாக ராணிமலர் சொல்கிறார்.
சமகாலத்தில் அருகிவரும்,  முற்காலத்தில் காசுப்பயிராக விளங்கிய புகையிலை  பற்றியும் இந்நூல் சொல்கிறது.  எமது நாட்டிற்கு சிகரட் அறிமுகமாகியிருந்த காலத்திலேயே  மக்கள் விரும்பிப் புகைக்கும்   மகிமையை சுருட்டு  பெற்றிருக்கிறது  என்பதையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.
தான், தனது குடும்பம், தனது தொழில் என்று சுயநலனுடன் வாழாமல் தனது சமூகத்திற்கும் உறவுகளுக்கும் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்திருப்பவர் தனது  அருமைத் தந்தையார் செல்லையா என்பதை பெருமிதத்துடன் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலை 2020 ஆம் வருடத்தின் அனைத்துலக பெண்கள் தினத்திலேயே  வெளியிடவேண்டும் என்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் ராணிமலர் செல்லையா.
அவரது கனவு மெய்ப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.


















No comments: