கோயில் விழாக்கள்
எமது கோயிலிலே திருவிழாக்களுக்குக் குறைவில்லை. கொடியேற்றிச் செய்யும் திருவிழாக்களும் தேர் தீர்த்தமும் இல்லை என்ற குறைதவிர, வேறு திருவிழாப் பல தாராளமாக இருந்தன. மாதந்தோறும் நிகழ்ந்தன. அவை எமதூர் மக்களின் ஒற்றுமையையும் சமய உணர்ச்சியையும் வௌிப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களாக அமைந்தன.
அவற்றை எல்லாம் இங்கு விபரித்தல் பொருந்தாது எனினும், இரண்டொரு விழாக்கள் பற்றிக் குறிப்பிட்டாற்றான் ஊர் மக்கள் ஒற்றுமையும் உணர்ச்சியும் புலனாகும். எனவே, கந்தசஷ்டி காலத்தில் இறுதி இரண்டு நாள்களும் நடைபெறும். சூரன்போர் விழா, திருக்கல்யாண விழா ஆகியன பற்றியும் கார்த்திகை மாதத்தில் நிகழும் திருக்கார்த்திகை விழா பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டு மனநிறைவு பெறுகிறேன்.
சூரன்போர் விழா கந்தசஷ்டி விரதகாலக் கடைசி நாள் திருவிழா. சூரன் கதையும் தாரகாசுரன் சிங்காசுரன் ஆகியோரை அவன் பலிகொடுத்த சுயநலன் பற்றியும் முருகன் வேல் எய்யும் வேளை அவன் தப்பிக் கொள்ளச் செய்த சாலங்கள்பற்றியும் கந்தசஷ்டி விரதகாலப் புராணப் படிப்பின்போது அறிந்துகொள்வோம். அது முழுக்க முழுக்க செவிப்புலனாற் பெறும் அறிவு.
செவிப்புலனாகப் பெறும் அறிவிலும் பார்க்கக் கட்புலன் மூலமாகப்பெறும் அறிவு காலத்தை வென்று நிலைக்கும் என்பது கல்வியியல் தரும் தகவல். காதாற் கேட்ட கதைகளை நாம் விரைவில் மறப்பது வழக்கம். ஆனாற் கண்ணாற் கண்ட காட்சிகள் அப்படியல்ல. பலநாள் அவை நினைவில் நிற்கும். அதானாலேதான் பாடசாலைக்கற்றல் அனுபவம் பலவற்றைச் செவிப்புலனாற் பெற்றாலும் கட்புல அனுபவத்தின் மூலம் உறுதிப்படுத்துதல் நற்பயன்தருமென்பர்.
அந்த வகையில், கோயிற் புராணப்படிப்பின் போது கேட்டுச்சுவைத்த சூரன் கதைகளை சுவைத்து மனதில் நிறுத்த உதவியது சூரன்போர்த் திருவிழா.
சூரன்போர்த் திருவிழா கந்தசஷ்டி விரதகாலக் கடைசிநாள் நடைபெறும். விழாவுக்கான ஆயத்தங்கள் முற்பகல் ஒன்பது மணிக்கே துவங்கிவிடும். பகல் ஒரு மணியளவில், சூரனை வண்டி ஒன்றில் வைத்துத் தள்ளியவாறு கோயிலில் இருந்து ஒருமைல் தூரத்திலுள்ள நாவற்குழிச் சந்திக்குக் கொண்டு செல்வார்கள். அச்சந்தியை யாவகர்கோட்டை என்று ஊரவர் குறிப்பிடுவர். சாவங்கோட்டை என்று பேச்சுவழக்கிற் கூறுவதும் உண்டு. அச்சந்தியில் வைத்து, அலங்கரித்த சூரனை ஊர்வலத்துக்குத் தயாராக்குவர்.
மணிமுடி தரித்த தலை, கையிலே, எய்வதற்குத் தயாரான நிலையில் அம்பும் வில்லும், இடுப்பிலே வண்ணப் பட்டாடை, கழுத்திலே மாலை, இருபக்கமும் தலையை ஆட்டி அசைத்துப் பார்த்தவாறு வருஞ் சூரனைப் பார்க்கும் ஆவல் ததும்ப ஊர் மக்கள் வீதியெங்கும் நிற்பர். பலர் பின்தொடர்வர்.
அம்மக்களை ஈர்க்கும் ஆட்டக்காரரும் தமது ஆடற்கலைத்திறனை ஊரறியச் செய்வர். அண்ணாவி பரமர், பல வாரகாலம் ஆடல் பழக்கி, அன்று அரங்குக்குக் வரும் ஆட்டக்காரரை சந்திக்கு அழைத்துவருவார். அலங்கார உடைகள், தலையில் மணிமுடி, கையில் வாள், காலிற்கு சலசலக்குஞ் சதங்கை, மார்பில் மின்னும் ஆபரணம் – இவ்வண் பல ஆட்டக்காரர். அவர்களுக்கும் அண்ணாவி பரமருக்கும் துணையாகப் பாட்டுக்காரர், மிருதங்கம் வாசிப்பவர், ஹார்மோனியம் வாசிப்பவர் எனப்பலர்.
சூரனின் ஊர்வலம் பிற்பகல் நாலு மணிக்கு முன்பே சந்தியிலிருந்து நகரத்துவங்கும. வண்ணக்கொடிகள் ஏந்திய இளைஞர், நீண்ட கம்புகளில் வேல் பொருத்திச் செல்லும் வேற்படையினர், வண்ணக் குடை சுழற்றி வரும் நாரதர், அலங்கார ஆடை அணிகளுடன் ஆடிவரும் ஆட்டக்காரர் யாவரும் ஊர்வலத்துக்கு உயிர்ப்பூட்டுவர். தவில் வேலாயுதனாரின் மேளவாத்திய இசை செய்தி பரப்ப, அண்ணாவியார் பரமர் குழுவின் பாடலிசையும் தாள ஒலியும் அழைப்புவிட, ஆடற்கலைஞரின் சதங்கைகள் கணீர் கணீரென ஒலித்தொலித்து எதிரொலிக்க, சூரனின் ஊர்வலம் கவர்ச்சியாக அமையும்.
ஆட்டக்காரரை அண்ணாவி பரமர் வழிப்படுத்திச் செல்வார். கையிலே சல்லாரி தட்டித் தாளம்போட்டவாறு, இமைக்குள் பல இராகங்கள் எடுத்துப் பாடி, இடையிடையே தாமும் அடியெடுத்து ஆடி, கண் அசைவாலும் கைச்சமிக்ஞையாலும் ஆட்டக்காரருக்கு அறிவுறுத்தல் செய்து வழிப்படுத்தும் அண்ணாவி பரமர் திறமை பெருந்திறமை!
அண்ணாவியாருக்குப் பக்கப்பாட்டுப் பாடும் பண்டாரி குழந்தையரும் கோஷ்டியும், மிருதங்கம் இராமலிங்கரின் கைவரிசையும் ஊர்வலத்துக்கு துரிதம் அளிக்கும்.
உணர்ச்சி உந்தலினால் சிலவேளைகளிலே தவில் வேலாயுதனார் தமது நாதஸ்வர வித்வான்களை மறந்து அண்ணாவி பரமரின் பாட்டுக்குக் குமுக்கா போடத்துவங்கிவிடுவார். அதுவும் ஊர்வலத்துக்குக் காலகலப்பை ஏற்படுத்தும். பெருந்திரளான மக்கள் ஊர்வலத்திற் சேர்ந்து வர, மாலையில் ஊர்வலம் கோவிலை அடையும்.
ஊர்வலம் கோயிலை அடைவதற்கு முன்பே, பிரம்மஶ்ரீ இராமலிங்கக் குருக்கள் பூசைகள் முடித்துவிடுவார். சுவாமி கடா வகனத்திலே வீதிவர, சூரன்போர் துவங்கும். முதலிலே தெற்கு வீதியில் தாரகாசுரன் யானை முகத்துடன் போருக்கு வருவான். பலமுறை முருகனைச் சுற்றிப்போராடியபின் அவனது தலை சரியும். அவனது தலை சரிந்ததும், சிங்காசுரன் போருக்கு வருவான். அவனது தலையுஞ் சரிந்தபின்புதான், சூரன் போருக்கு வருவான். போராட்ட உணர்வைத்தருவதற்குச் சூரனைத் தூக்கி தோளிற் சுமந்தவாறு ஓடுபவர்களின் திறனும், தலைகளை மாறி மாறி வைத்து, பின் அவற்றை பொருத்தமான வேளை விழுத்தும் யுக்தியும் பார்ப்போரைக் கவரும். இறுதியில் சூரன் மாமரமாக ( கிளையுடன்) வருதலும், பின்பு சேவலும் மயிலுமாக மாறி வருதலும் நினைவை விட்டு அகலாத காட்சிகள். செவிப் புலனால் அறிந்த கதைகளைக் கட்புலக்காட்சியாக அமைத்து மனசிற் பதிய வைத்த விழா, சூரன் போர்த்திருவிழா!
சூரன் போரின் மறுநாள், திருக்கல்யாணம். அத்திருவிழாவை நாம் தோணித் திருவிழா என்று காரணப்பெயர் சொல்லிக் குறிப்பிடுவதுண்டு. கந்தசஷ்டி காலம். மாரி மழைகாலம். எமது குளம் நிரம்பி நீர் ததும்பும் காலம். நீர் நிறைந்த குளத்திலே, இரவு வேளையில் அலங்கரித்த தோணியில் சுவாமியை கொண்டு செல்லல் தனியான அழகு.
அன்று அதிகாலையிலேயே இரண்டு தோணிகளைக் காவிக்கொணர்ந்து குளத்திற் சேர்ப்பார்கள். அவற்றை நன்றாகக் கழுவி, அருகருகே விட்டு இணைத்து, அலங்கரிப்பார்கள். வாழையும் தோரணமும் மலர்மாலைகளும் திருத்தொங்கல் கட்டிய மேடையும் – பார்க்க எத்தனை வடிவு!
பூசை முடிந்து, திருக்கல்யாணம் நடைபெற்றபின் முருகன் வள்ளி தெய்வானை சகிதம் மணக்கோலத்தில் வீதிவலம் வருவார். குளத்தருகே வந்ததும், அலங்கரிக்கப்பட்ட தோணிச் சோடியில் உள்ள மேடையில் அமர வைத்து, தோணி உலா துவங்கும்.
மேளவாத்தியகாரர், அண்ணாவி பரமரின் பாடற்குழுவினர், சிவநாமம் பாடுவோர் யாவரும் முறையே தோணியில் செல்லும் வாய்ப்புப்பெறுவர். அதனால், தோணி பல முறை குளத்திலே சுற்றிவந்து, பார்ப்போரை எல்லாம் மகிழவைக்கும். நிறைகுளத்திலே தோணியிற் பவனிவரும் அவ்விழாக் கோலத்தைப் பார்க்க ஓர் ஆயிரம் கண்வேண்டும்! எமது ஊருக்கு அண்மையில் அப்படியான விழா வேறு எதுவும் நடைபெறுவதில்லை. ஆதலால், ஊரவர் மட்டுமல்ல, அயலூரவரும் பெருந்தொகையாக வந்து பங்குபற்றுவது அன்றைய வழக்கம்.
சூரன் போர், திருக்கல்யாணம் ஆகியன பெருந்தொகை மக்களை மகிழ்வித்த ஜனரஞ்சகமான விழாக்கள் என்றபடியால் அவற்றை இங்கு நினைவுபடுத்தி எழுத்திற் பதிவுசெய்கிறேன். எமது பரம்பரையினருக்கு இனிமேல் கிடைக்காத அனுபவம் என்ற வேதனை ஒருபுறமும் எட்டியும்பார்க்க முடியாத தூரத்தில் அவ்வாலயம் இன்றுள்ளதே என்ற வேதனை மறுபுறமும் அழுத்த எனது மனசிற் குமுறும் உணர்வுகளை நனவவோடையாக்கி மன ஆறுதல் பெறுகிறேன்.
இன்னொரு விழா பற்றியும் இவ்விடத்திற் குறிப்பிட வேண்டும் என்பது என் ஆசை. அக்காலத்திலே, ஆண்டுதோறும் எமது குடும்பத்தினர் பொறுப்பேற்று நடத்திய விழா என்பது அதற்கு ஒரு காரணம். அதுதான், திருக்கார்த்திகைத் திருநாளில் நடைபெறும் திருக்கார்த்திகை விழா.
திருக்கார்த்திகை என்பது, கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகைத் திருவிழா. கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடுகளில் அகல் விளக்கேற்றியும் – வளவிலே பல தீப்பந்தங்கள் ஏற்றியும் தீபமேற்றுதல் யாம் அறிந்ததே. அது போலக் கோயில்களில் திருக்கார்த்திகைத் தினத்தன்று சொக்கப்பனை அமைத்துத் தீமூட்டி எரிப்பர். காய்ந்த ஓலைகளால் அமைக்கப்படும் கூடுபோன்ற அமைப்பு, அச்சொக்கப்பனை. ஓலைக் கூடு கட்டும்பொழுது, உள்ளே வாழை, தாழை ஆகியவற்றையும் நாட்டிக் கூட்டை அமைத்த நினைவு இன்றும் உள்ளது.
கோயிற்பூசை முடிந்து சுவாமி வீதிவலம் வரும் தருணத்திலே, ஐயர் பூசை செய்த பின் சொக்கப்பனைக்குத் தீ மூட்டுவார். எனது அப்பு ஊரில் இல்லாத காலத்தில் அப்படித் தீ மூட்டும் பொறுப்பு எனதாகியிருந்தது. இளவயசில் அப்படிப் பந்தம் தூக்கிச் சென்று சொக்கப்பனைக்கு தீ மூட்டிய வேளையில், எனக்குள் ஒரு பெருமிதம், மனநிறைவு!
சைவத்தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த வழக்கத்தை நிறைவு செய்யலாமோ, என்னவோ! மொரிசியஸ் நாட்டிற்கு இற்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழ்நாட்டவர் சைவ சமயத்தை அங்கு நிலைநாட்டினர். அவர்களின் வழி வழி வந்த தலைமுறையினர் இன்றும் சைவசமய பாரம்பரியத்தை அங்கு தொடர்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட கோயில்களும் அங்குள்ளன. காவடி, தீ மிதி போன்ற விழாக்களும் அங்கு நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றபோது, கருமாரி அம்மன் கோயிலிலே திருக்கார்த்திகைத் தினத்தன்று சொக்கப்பனை எரிக்கும் முறையை அவதானிக்க முடிந்தது.
அங்கு ஓலைகளாற் சொக்கப்பனை அமைக்கப்படவில்லை. பதிலாக, நீண்டு தடித்த கம்பம் ஒன்றிலே வெள்ளைத் துணி சுற்றி, நெய்யில் ஊறவைத்து, தீ மூட்டித் தீபப் பிழம்பை உண்டாக்கினர். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே இது நடைமுறைச்சாத்தியம் இல்லை. இந்நாடுகளின் சமூக அமைப்பும் விதிகளும் அதற்கு இடமளிக்கமாட்டா.
இனி, சொக்கப்பனை எரிப்பது ஏன் என்ற ஒரு சிக்கலான கேள்வி. இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் தருவர். அடிமுடி தெரியா அழகுச்சோதியான இறைவனை நினைவூட்டுதற்காக என்பர் சிலர். அறிவியல் விளக்கம் தர முற்படுவோர் வேறு சிலர். கார்த்திகை மாதம் கடும் மழைக்காலம். இலங்கை, தமிழ்நாடு போன்ற நாடுகளில் பூச்சியினம் பல பறந்து திரியுங்காலம். சொக்கப்பனையின் தீ வெளிச்சம் பூச்சியினத்தைக் கவரும் எனவும் அப்போது அவை ஒளியை நாடிப் பறக்கும் எனவும் தீயிற்பட்டு அழியும் எனவும் அவர்கள் விளக்கம் தருவர். எமது சைவ சமயக் கிரியைகள் சமயச் சடங்குகள் ஆயினும் அறிவியல் அடிப்படையில் விளக்கம் தரக்கூடியவை.
விளக்கம் எதுவெனினும் வழக்கம் தொடர்கிறது. இக்காலத்திலே புலம்பெயர்ந்த தமிழர் எவ்வாறு இதைத் தொடரமுடியுமோ தெரியாது. ஈழத்திலும் தமிழகத்திலும் அது தொடரும் என்பது நம்பிக்கை.
சின்ன வயசிலே எங்களுர் – எழிற்
சித்திர வேலன் ஆலயம் – நின்று
என்னை வளர்த்ததை எண்ணிநான் – இன்றும்
எத்தனை கற்பனை செய்கிறேன்.
----0----
No comments:
Post a Comment