மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  ஏற்பாட்டில்  இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில்  தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில்  வாழும்  ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு கடந்த 04 ஆம் திகதி  வழங்கப்பட்டது.
நுவரேலியா மாவட்டத்தில் முதல்கட்டமாக  நானுஓயா நாவலர் கல்லூரி,  டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை  முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவருகிறது.
இந்த அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், மலையக தாய்மாருக்கான விழிப்புணர்வு , பாடசாலை மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல், முன்பள்ளி உதவிகள், பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் வழங்குதல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கள ஆய்வுகள் முதலான வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சி, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தாய்மார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம்.ஜீ. அமரசிறி பியதாஸ, மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஷ்ராஜ், உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி பாமினி செல்லத்துரை, மற்றும் ஆசிரியை திருமதி ஷாதினி பிரேம்குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளையும் பதிவேடுகளையும் வழங்கினர்.
இவர்களில் செல்வி பாமினி செல்லத்துரை, இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை முன்னர் பெற்று கல்லூரி கல்வியையும் பல்கலைக்கழக கற்கை நெறியையும் பூர்த்தி செய்து, தற்போது   நுவரேலியா கல்வி வலயத்தின் உதவிப்பணிப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
   


No comments: