அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 9 - சேமக்கலம்


சேமக்கலம் - கஞ்சக்கருவி

அமைப்பு
வட்டவடிவில் தூய வெண்கலத்தால் ஆன சேமக்கலம் சுமார் 6 கிலோ எடையிருக்கும். கனத்த தேக்கு குச்சி கொண்டு இதை அடிப்பார்கள். நுனியில் கயிறு கோர்க்கப்பட்டிருக்கும். ஆதியில் இதன் பெயர் ‘சோமன் கலம்’. சோமன் என்பது சந்திரனின் பெயர். சந்திரனைப் போன்ற வட்டவடிவம் கொண்டதால் அப்பெயர்.

குறிப்பு
சேமங்கலம், சேகண்டி, சவுண்டி, செகண்டை, செயகண்டி, செயகண்டிகை, சேமக்கலம், சேமணி, சேங்கலம், சோமங்கலம், சேடகம், சேகடம், எறிமணி என பகுதிக்கு ஒரு பெயரிட்டு அழைக்கப்படும் இக்கருவி, திருச்சங்குடன் சேர்த்து இசைக்கப்படும். திருச்சங்கு விஷ்ணுவுக்கு உரியது. சேமக்கலம் சிவனுக்கு உரியது. சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்ற உயரிய தத்துவத்தை விளக்கும் விதமாகவே இவ்விரு கருவிகளும் இணைத்து இசைக்கப்படுகின்றன.

‘‘தொடக்கத்தில் இக்கருவி இறைவனுக்குரிய இசைக்கருவியாகவே கருதப்பட்டது. கோயில்களில் இருந்த 18 சர்வவாத்தியங்களில் முக்கிய இடம் பெற்றிருந்தது. பிற்காலத்தில், எதன் காரணமாகவோ இறப்பு அறிவிக்கும் கருவியாக உருமாறிவிட்டது’’ என்கிறார் இக்கருவி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள சென்னை இசைக்கல்லூரி பேராசிரியை டாக்டர் சுப்புலட்சுமி.

சேமக்கலம் தொன்மையான கருவி என்பதற்கு சான்றாக பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உள்ளன. காஞ்சி அடுத்த ஆனூரில் அட்டபுரீசுவரர் திருக்கோயில் என்னும் சிவன்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுச் செய்தியின் மூலம் பல்லவமன்னன் கம்பவர்மன் இக்கோவில் இறைவன் களத்தூர் கோட்டத்து ஆனியூர் "வம்பங்காட்டு மகாதேவர்" என்றும் "திருவம்பங்காட்டு மகாதேவர்" எனவும் "திருவம்பங்காட்டு உடையார் ஆளுடைய மகாதேவர்" எனவும் குறிக்கப்படுவதைக் காணமுடிகிறது.  அட்டபுரீசுவரர் என்பது எல்லாம் பிற்கால வடமொழி ஆதிக்கம் பெற துவங்கிய காலத்தில் எற்பட்ட பெயராக இருக்கலாம். இக்கோயிலில் அமாவாசை நாளிலும், ஸ்ரீபலி வழிபாட்டின்போதும் மத்தளி-1, கரடிகை-1, கைமணி-1, சங்கு-1, காளம்-2, சேகண்டிகை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க நரசிங்கபிரான் சிவன் என்பவர் நிலம் அளித்த செய்தி இக்கோவிலின் சோழர்காலக் கல்வெட்டில் காணப்படுகிறது. சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள சோழர் கால செப்பேட்டில் காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலுக்குஉகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இரண்டும் கைமணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலிஎன்று ஆடை/நெல் அளித்த செய்தியினை நமக்கு தெரிவிக்கின்றது. தலைப்பறை என்பது சில ஆண்டுகள் முன்பு வரை இசைக்கப்பட்டு தற்பொழுது வழக்கொழிந்து விட்ட சூரிய வளையம்/சந்திர வளையம் ஆகிய கருவிகளாக இருக்கலாம்.இந்த இரண்டு கருவிகளூம் தலையில் கட்டிக்கொண்டு இசைக்கப்பட்ட பறை வகை கருவிகள்.


தலைவாசல் அடுத்த தியாகனூரில் மலைமண்டல பெருமாள் கோயிலில் நுழைவாயிலின் அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று பலகை கல்லில் நான்கு புறமும் வெட்டப்பட்டுள்ளது. மகதை மண்டலத்து ஆற்றூர் கூற்றத்தில் உள்ள பெரியேரி என்னும் ஊரில் பெரியபெருமான் என்னும் பெருமாள் கோயிலையும் மடையையும் கட்டுவித்து அக்கோயிலுக்கு பூசை செய்யவும், பூசைக்கு எண்ணெய் அளிக்கவும் , சங்கு, சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் இசைக்கவும், இசைப்பவர்களுக்கு ஏரிக்கு அருகே நிலம் நிவந்தமாக விட்டதையும் இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெண்ணொருவர் சேமக்கலம் இசைக்கும் சிற்பம் திருவைகுண்டம்(ஸ்ரீவைகுண்டம்) பெருமாள் கோவிலிலும்  திருவைகுண்டம் கைலாசநாதர் கோவிலிலும்  உள்ளது.

திருவரங்கத்தில் இசைக்கப்படும் 18 இசைக்கருவிகளில் சேமக்கலமும் ஒன்று. திரு ரஞ்சித்குமார் மற்றும் ரங்கவிட்டல் வெங்கடேசன் ஆகிய கலைஞர்கள் இசைக்கிறார்கள். திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கருவறையிலிருந்து வெளிப்படும் நேரத்தில் சேமக்கலம், வீரவண்டியுடன் (தவண்டை) சேர்த்து இசைக்கப்படுகிறது. மேலும் பெருவிழா 8ஆம் நாள், இராப்பத்து வேடுபறி மற்றும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும்  ’குதிரை வையாளி’ திருவிழாவில் உத்திர வீதியில் நம்பெருமாள் உலாவரும்போது மற்ற இசைக்கருவிகள் நிறுத்தப்பட்டு சேமக்கலமும் வீரவண்டியும் மட்டுமே இசைக்கப்படும். திருவள்ளூர் வீராரகவர் கோவிலிலும் சேமக்கலம் புறப்பாட்டிற்கு முன் இசைக்கப்படுகிறது. பவானி கூடுதுறைநாதர்/ திருநணாஉடையார் (சங்கமேஸ்வரர்) கோவிலில் சேமக்கலம் காலை பள்ளியறையில் இருந்து இறைவன் கருவறை சேரும் நேரத்தில் ஒலிக்கின்றது.

தமிழகத்தில் வாழும் தாதர்/தாசர் சமுக மக்கள் சேமக்கலம்,சங்கு, தாசரி தப்பட்டை ஆகிய கருவிகளை இசைத்து அழகு தமிழில் தெய்வங்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். பாடல்களை பாடி பிறகு நிறுத்தி சேமக்கலமும் சங்கினையும் குறிப்பிட்ட கதியில் இசைத்து நிறுத்தி மீண்டும் பாட தொடங்குகிறார்கள். இவர்கள் சங்கை இசைக்கும் முறை மிகவும் வித்தியாசமானது. ஒரு தாதர் கூட்டத்தில் 10 பேர் இருந்தால் 8 பேர் சேமக்கலம்/சங்கும், ஒருவர் சேமக்கலம்/தாசரி தப்பட்டையும், ஒருவர் வளவுபூரி ஆகிய கருவிகளை வைத்து இசைக்கிறார்கள். தாதர்கள் பெரும்பாலும் வைணவர்களாக உள்ளனர். திருமலை, அழகர் கோவில், காரமடை, திருவரங்கம் ஆகிய கோவில் தெய்வங்களை போற்றி பாடுகிறார்கள். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பல தாதர் குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பாடல்களில் பல அரிய வரலாற்று செய்திகள் புதைந்து கிடக்கின்றன. புதுச்சேரி மக்களே அதிகம் அறியாத பழைமையான வீராம்பட்டினம் செங்கேனியம்மன் கோவிலையும் வங்க கடலின் சிறப்பையும் சேலத்தில் வாழும் தாதர்கள் பாடுகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வியப்பை தந்தது. இவர்கள் திருமலையில் நிகழ்த்திய தாதர் பாடல் தொகுப்பை காணொளி பகுதியில் காணலாம். சைவ தாதர்களும் உள்ளார்கள். கால்நடையாக சேலத்தில் இருந்து பழனி செல்லும் 400 ஆண்டு பழைமையான இடைப்பாடி பருவதராஜகுலம், வன்னியகுல சத்திரியர் காவடிகளில் தாதர்களும் உடன் செல்கிறார்கள். காவடி பூசையில் சேமக்கலம், சங்கு, தாசரி தப்பட்டை, துத்திரி ஆகியவற்றை இசைக்கிறார்கள். இப்பகுதி காவடிகள் இந்த இசைக்கருவிகள் இல்லாமல் பயணிப்பது இல்லை. இக்காவடி பயண்த்தில் பறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. காரமடை அரங்கநாதர் கோயிலுக்கென்று பாத்தியபட்ட தாதர்கள் உள்ளனர். இவர்களின் பந்த சேவை என்னும் சடங்கில் சங்கும்/சேமக்கலமும் இசைக்கப்படுகிறது. பிரம்பால் அடித்தல் மற்றும் வேறு சில அருவுருக்கத்தக்க சடங்குகளையும் இத்தாதர்கள் நிகழ்த்துகிறார்கள். வட தமிழகம்/புதுவை பகுதிகளில் ஆண்டி பண்டாரம் எனப்படும் சாதியார் சேமக்கலம் சங்கு ஆகிவற்றை இசைக்கிறார்கள்.

காரைக்குடியை சுற்றிய செட்டிநாடு பகுதிகளின் காவடி பூசைகளில் சங்கும் சேமக்கலமும் கண்டிப்பாக ஒலிக்கின்றது. பெண்களும் இங்கே இக்கலையை நிகழ்த்துவது வியப்பு. தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் ராஜகம்பளம் நாயக்கர் சாதியினர் ஆடும் சேவையாட்டத்தில் சேமக்கலமும் இசைக்கப்படுகிறது. உறுமி, சேமக்கலம், சேவைப்பலகை(சிறிய தப்பட்டை) ஆகியவற்றை இசைக்க இவர்கள் தெலுங்கு  பேசும்மாலொடுஎன்கிற இனத்தாரை அமர்த்தியுள்ளார்கள்.

தஞ்சை -  மார்கழி முழுவதும் நள்ளிரவு நேரத்தில், தொட்டியம்பட்டி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுவீடாகச் சென்று சேமக்கலத்தை இசைத்தபடி திருப்பாவை மற்றும் பெருமாள் பாடல்களைப் பாடுவார்கள். இவ்வழக்கம் அண்மைக்காலம் வரை இருந்தது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மட்டும் மார்கழி இரவில் இப்போதும் சேமக்கலம் ஒலிக்கக் கேட்கலாம். மோகன் என்பவர் இப்பணியை செய்கிறார்.

கேரளத்தில் சேமக்கலத்தைசேங்களா/சேங்கிளாஎன்கிறார்கள். இடக்கை(இதுவும் தமிழர்களிடம் இருந்து அழிந்து விட்ட ஒரு தமிழர் இசைக்கருவி) மற்றும் சேங்களாவை இசைத்தப்படியே கோவில்களில் இறைத் திருமேனிகள் முன்பு இனிமையான பாடல்களை பாடும் வழக்கம் உள்ளது. இதை சோபனசங்கீதம் என்கிறார்கள். ஒரிசா மாநிலத்திலும் சேமக்கலத்தை இசைக்கிறார்கள். பூரி ஜகன்னாதர் கோவிலில் சேமக்கலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேற்கு வங்காள மாநிலத்தில் திருமண விழாவின் போது சேமக்கல ஒலியுடன், சங்கொலி மற்றும் குலவை ஒலி பெண்களால் எழுப்பப்படுகிறது. இலங்கை தமிழர் பகுதிகளில் கோவில் வழிபாட்டில் சேமக்கலம் இசைக்கப்படுகிறது. மணிப்பூரில் இதைசென்முஎன்கிறார்கள். சற்று பெரிய அளவில் உள்ளது.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
திருவரங்கம் ரங்கநாதர் கோயில்
திருவள்ளுர் வீரராகவர் கோயில்
காரமடை ரங்கநாதர் கோயில்
பவானி கூடுதுறைநாதர்(சங்கமேஸ்வரர்) கோயில்
காஞ்சி சங்கர மடம்

காணொளி

திருவரங்கம்

இடைப்பாடி தாசர்கள்

இடைப்பாடி பழனி காவடி

ராஜகம்பளம் சேவையாட்டம்
https://youtu.be/aM6ZAPFKjJ0

கேரளம்

-சரவண பிரபு ராமமூர்த்தி
 (P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai & வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்)
















No comments: