அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி ஊடகங்களும் - பரமபுத்திரன்

.

அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும்
பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்


தற்காலத்தில் குறித்த கால இடைவெளிக்கொரு தடவை புதிய நோய் ஒன்று  அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக இவை வைரசு நோய்கள். அந்த வரிசையில் இந்த  ஆண்டு அறிமுகமாகியுள்ள  வைரசு கொரோனா வைரசு. வைரசு என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால்  மக்களுக்கு விழிப்பூட்டுவதாக கூறிக்கொண்டு செய்தி ஊடகங்களும் மருத்துவமும் மக்களை பயமுறுத்துவதில் குறியாக இருக்கின்றது. தாங்கள் என்ன செய்கின்றார்கள்  என்று ஊடகங்களும் தெரிந்து கொள்ளவில்லை. மருத்துவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இன்று  வேறுபட்ட  நோய்களை இனம்  காட்டி, அதற்கு அறிகுறிகள் கூறி, அந்த நோயின் தாக்கங்களை எடுத்துச்சொல்லி  மக்களை   அச்சத்தின்  உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள் செய்தியாளர்கள். இதற்கு உதவியாக மருத்துவர்கள் கூறுவதாக சொல்லிக்கொள்கின்றார்கள்.  மக்களுக்கு உதவுவதாக எண்ண  வைத்து மக்களை  மனநோயாளிகளாக மாற்றுகின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் அருகில் அமர்ந்திருப்பவனை  ஏக்கத்துடன் பார்த்து ஏதாவது நோய் ஒன்றை என்மேல் ஏற்றிவிட்டு செல்வானோ என்ற கலக்கத்துடன் நிற்கின்றான். மறுபுறத்தில் “மூடு முகம், போடு தடுப்பூசி” என்று அறிவுறுத்தல்கள் வழங்குகின்றனர். அன்றாடம் உழைத்துக்  களைத்து வாழும் மக்கள் மிரண்டு பயந்து அலைகின்றனர். முகமூடிகளை போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். காரணம் நாமோ  படிக்கவில்லை, ஆனால் படித்தவர்கள் நோய்கள்  தொடர்பாக  சொல்கின்றார்கள், எனவே அது சரிதான் என்று முழுமையாக நம்புகின்றார்கள்.  இது சரியா?இறப்பு என்பது உறுதியானது. ஆனால் நாம்  இறந்து விடுவோம் என்ற பயமே  எப்போதும் மனிதர்களை கலங்க வைக்கிறது. அது வாழவேண்டும் என்ற விருப்பு. அதாவது உயிர்மேல் கொண்ட ஆசை. இந்த உலகின் மீது கொண்ட மோகம். இதுதான் ஒவ்வொரு மனிதனையும் நோய்க்கு அச்சமுற  வைக்கின்றது. இருந்தாலும் திடீர் சாவு மனிதனை பயமுறுத்துவதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக வீதி விபத்துகளால் நிகழும் இறப்புகளை கூறலாம். ஒரு வீதி விபத்து நடைபெற்றால் அதற்கு காரணம் வீதியில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இருவரும் வீதி விதிகளை  மீறியுள்ளனர். எனவே விதி மீறல்தான் விபத்துக்கு காரணம். வீட்டிலிருந்து புறப்பட்ட எத்தனை பேர் வீதியிலே செத்து மடிந்திருக்கிறார்கள். வேலைக்கு புறப்பட்டவன், வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தவன், வீட்டில் மனைவி பார்த்துக்கொண்டிருப்பாள், பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கும் என்று வீடு நோக்கி ஓடியவன் எனப்பலர் வீதி விபத்தில் இறந்திருக்கின்றனர்.  அவர்களுக்காக எவரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் உயிர்களை பெறுமதி மிக்கதாக கொள்வதில்லை. வேகத்தை கூட்டி ஓடாதீர்கள், வாகனம் ஓடும்போது வேறு செயற்பாடுகள் செய்யாதீர்கள், கைபேசி பயன்படுத்தாதீர்கள் என்பதை எத்தனை பேர் கவனத்தில் எடுக்கின்றோம்.   வீதி விதிகளை படிக்கின்றோம். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுகின்றோம். எத்தனை பேர் மற்ற மனிதர்களை காக்கவேண்டும் என்று நினைத்து  வாகனம் செலுத்துகின்றோம். ஆனால் கொரோனா வைரசு என்றதும் எங்களை பாதுகாக்க எப்படி அலைகின்றோம். பயத்தில் உறைகின்றோம். எம்மைப்போல் பிறரையும் நேசிக்கின்றோமா?


தமிழில் “உடன்பிறந்தே கொல்லும் வியாதி” என்று ஒரு தொடர் உண்டு. அதாவது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது அவனை கொல்வதற்கே அவனுடன் ஒரு வியாதி பிறந்திருக்கும்.  எனவே உடன் பிறந்த வியாதி தாக்கி மனிதன் இறப்பது உறுதி. இதனைவிட மனிதர்களை பொறுத்தவரை இருவழிகளில் நோய்கள் வருகின்றன. ஒன்று உடலுக்கு தேவையான போசணைப் பொருள்கள் அதாவது உணவுப்பற்றாக்குறை காரணமாக வரும்  குறைபாட்டு நோய்கள், மற்றையது   நோயாக்கிகள் எனப்படும் பற்றீரியா, பங்கசு, வைரசு போன்ற நோய்க்கிருமிகள் மூலம்  மனிதனுக்கு வரும் நோய்கள். பொதுவாக மனிதனுக்கு வரும் நோய்கள் எங்களை துன்ப படுத்தும். இது உடல், உள பாதிப்புகளை தரும். உடலை பொறுத்தவரை    உடல்வலி, காய்ச்சல், சுவாச குழப்பம், தலைவலி போன்ற உபாதைகளை  உடலுக்கு கொடுக்கலாம். அடுத்து உடல் அங்கங்கள் பாதிக்கப்படுதல், நரம்புகள் தாக்கப்படுதல் போன்ற  நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் இறப்பையும் தரலாம்.  ஆனால் முந்தைய காலங்களில் தொற்று நோய்கள்  தாக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளனர். வாழ்ந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அன்று  தொடர்பாடல் ஊடகங்கள் இந்தளவுக்கு இல்லை.  அதனால் செய்திகள் பரப்பப்பட்ட அளவு குறைவு. மருத்துவம் உயர்நிலையில் இல்லை. மக்கள் சுகமாக வாழந்தார்கள். இன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்குக்காட்டி மக்களை ஏங்கச்செய்கின்றனர். உயிர்ப்பயம் காட்டி மருத்துவர்களிடம் ஓட வைக்கின்றனர்.  அவர்களும் தங்கள் பங்குக்கு மக்களை பயப்பட செய்கின்றனர்.


தாயின் வயிற்றில் கருக்கொள்ளும் சிசு வயிற்றினுள் முற்று முழுதாக தாயால் பாராமரிக்கப்படுகின்றது. பிறந்த குழந்தை தாயின் பால் குடிக்கும் போது தனது உடலுக்கு தேவையான போசணை மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பவற்றை பெற்றுக்கொள்ளும். சிறு பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக  இருக்கும். ஆனால் பிள்ளை வளர வளர உடல் வளர்தல்  மட்டுமல்ல நோய் எதிர்க்கும் ஆற்றலும் வளரும். இருந்தாலும் நோய் எதிர்ப்பு ஆற்றல் தொடர்ந்து வளராது. குறித்த காலம்வரை வளரும். அதன் ஆற்றல் ஏறத்தாழ எமது நாற்பது வயதுவரை உச்சமாக இருக்கும். அதன் பின் நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைந்து செல்லும். அதாவது நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை குறைந்து செல்ல  ஆரம்பிக்கும். இதைவிட வாழும் காலம் முழுவதும் நோயாக்கிகள் எங்களை தாக்கியபடியே இருக்கும். இதனை தடுப்பதற்கு நாங்கள் மருத்துவரை நாடுவோம். அவர்கள் சில மாத்திரைகள் தருவார்கள்.  எமக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல நோயும் குணமடையும் என்று நம்புகின்றோம். எப்போது  நாம் மாத்திரைகளை உண்ண ஆரம்பிக்கின்றோமோ அதன்பின் மாத்திரைகளில் இருந்து  எம்மால் விடுபட முடியாது என்பதும் உண்மையான செய்தி. 


.நோய் என்பது புவியில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதாவது தாவரம், விலங்குகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் என எல்லாமே நோயால் தாக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிர்கள்   எமக்கும்  நோய் வழங்கும் காரணிகள். நுண்ணுயிர்கள் மனிதனுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய பாதிப்பு நோய்களை தருவதுதான். உண்மையில் நுண்ணுயிர்கள் என்பவை கண்ணுக்கு தெரியாதவை. அதாவது நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப்படுபவை. அதிலும் இருவகை நுணுக்குக்காட்டிகள் உண்டு. ஒன்று ஒளி நுணுக்குக்காட்டி, மற்றது இலத்திரன் நுணுக்குக்காட்டி. இலத்திரன் நுணுக்குக்காட்டி உயிர் அல்லாத பொருள்களை அவதானிக்கும் ஒன்று. அதாவது உயிருள்ளவை எதனையும் இதன் மூலம் அவதானிக்க முடியாது. வைரசுக்கள் இலத்திரன் நுணுக்குக்காட்டிகளிலேயே அவதானிக்கப்படுகின்றன. அதேவேளை சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்தான் இலத்திரன் நுணுக்குக்காட்டிகளை கையாள முடியும். அவர்கள்தான் இந்த வைரசுக்கள் தொடர்பாக அறிவிக்கின்றனர்.  இருப்பினும் வைரசுக்கள் உருள்ளவை என்றும் சொல்லமுடியாது, உயிரற்றவை என்றும் சொல்லமுடியாது இரண்டுக்கும் இடைப்பட்டவை. பொதுவாக  வைரசுக்களை மருந்துவகைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தல் கடினம். எனவே கொரோனா வைரசும் இந்த வகைக்குள் வருகின்றது. இது  ஒரு புதிய வைரசு அல்ல.  ஏற்கனவே இருந்த ஒன்று.  இப்போது பெரிதாக பேசப்படுகின்றது. எங்கள் உடலினுள் புகும் வைரசுக்களை ஏன் கட்டுப்படுத்த முடிவதில்லை?. இவை ஏன் நோய்களை ஏற்படுத்துகின்றன?.


வைரசுக்கள் தாமாக வாழ முடியாதவை. இன்னோர் உயிருள்ள அங்கியின் உடலினுள் சென்றால் மட்டும் வாழக்கூடியவை. ஒரு உயிருள்ள அங்கியினுள் புகும் வைரசு அந்த அங்கியினை பயன்படுத்தி  தன்னை பெருக்க ஆரம்பிக்கும். இந்த அங்கிதான் விருந்து வழங்கி. வைரசுக்கள் மனிதர்களை மட்டும் விருந்து வழங்கியாக பயன்படுத்துவதில்லை. வேறு விலங்குகளையும் விருந்து வழங்கியாக பயன்படுத்தும். வைரசுக்கள் விருந்து வழங்கியை பயன்படுத்தி தன்னை பெருக்கும் போது அதன் விழாவாக எங்களின் உடலில் நடைபெறும் மாற்றங்களே எமக்கு நோயை விளைவிக்கின்றன.  எனவே வைரசு  நோய் வராது இருக்க வைரசுக்களை உடலினுள் புகவிடாது தடுத்தல் சிறந்தவழி என்பது சரி. அதற்காகவே முகக்கவசமிடுதல், சாப்பிட முன்பு நன்றாக கைகளை கழுவுதல், நோயாளிகளின் அருகில் செல்லாதிருத்தல் போன்ற அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.  ஆனால் அதனையும் தாண்டி உடலினுள் புகும் வைரசினை என்ன செய்வது?. எப்படி அந்த வைரசிடமிருந்து தப்புவது?

இப்போது முன்னைய காலம் தொடர்பாக சிந்தியுங்கள். அந்தக்காலத்தில் தமிழர்கள் மத்தியில் பரிகாரிகள்  வாழ்ந்தார்கள். நோய்கள்  வரும்போது இவர்களிடம் சென்றால் மருத்துவம் செய்வார்கள். செலவும் குறைவு. இவர்களுக்கு தனித்த ஒரு மதிப்பு என்று  கிடைப்பதில்லை. மருத்துவம் என்ற அடிப்படையில் நாம் அவர்களை நம்புவதும் இல்லை. இன்றும் ஊரில் வாழ்ந்து கொண்டு, சித்த மருத்துவம் அல்லது ஊர் மருத்துவம் செய்பவர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால் பல்கலை கழகங்களில் கற்று ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர்கள் எம்மால் மிகவும் மதிக்கப்படுவார்கள். ஐயா  மிகவும் படித்தவர் என்ற எண்ணம் எங்களிடம் வலிமையாக உள்ளதால் நாம் அவர்களை நம்புகின்றோம். அவர்களின் ஆலோசனைக்கும் மருந்துகளுக்கும் அடிமையாகின்றோம். உண்மையில் எல்லா மருத்துவத்தையும் தாண்டிய சக்தி வாய்ந்த ஒன்று எங்கள் உடல் என்று எமக்கு தெரிவதில்லை. அதன் ஆற்றலையும் நாம் விளங்கிக்கொள்ளவதில்லை. தேவையற்று மருந்துகளை உண்பது எங்கள் உடலின் ஆற்றலை கெடுக்கும் என்பதும் எமக்கு புரிவதில்லை. ஊர் வைத்தியர்கள் வழங்கும் மருந்துப்பொருட்கள் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டச்செய்யும். ஆபத்துகளை விளைவிப்பது குறைவு. அப்படி என்ன நோய் எதிர்ப்பு ஆற்றல்கள் எங்கள் உடலில் உண்டு?.

மனித உடலினுள் வெளிப்பொருட்கள் புகுவதற்கு பலவழிகள் உண்டு. தினம்தினம் நுண்ணுயிர்கள் உடலில் புகுந்த வண்ணமே உள்ளன. எமது உடலின் எதிர்ப்புத்தன்மை அவற்றை எல்லாவற்றையும் தடுத்த படிதான் உள்ளது. நோயிலிருந்து பாதுகாத்துதான் வைத்திருக்கிறது.  ஆனாலும் அதனையும் மீறி நுண்ணுயிர்கள் உடலினுள் நுழைக்கின்றன. நுண்ணுயிர்கள் புகுந்து உடலின் உட்செல்ல   சுவாசவழி மிகவும் இலகுவானது.  நோய்க்கிருமிகள் நேரடியாக உடலின் உட்புறம் சென்று சேர்ந்துவிடும். ஆனாலும் சுவாசப்பாதை கிருமிகள் புகுவதை தடுக்க பலதடைகளை இயற்கையாகவே கொண்டிருக்கும். அதாவது  மூக்கிலிருந்து வளி சென்றடையும் சுவாசப்பாதை எல்லைவரை பிசிர்கள், ஓட்டும் தன்மையுள்ள சளி என்பன உண்டு. இங்கு கிருமிகள் புகுந்தவுடன் அவற்றை சளிமூலம் ஒட்டச்செய்து பிசிர்களால் அசைத்து வெளித்தள்ளிவிடும். எனவே   இவற்றை தாண்டித்தான் கிருமிகள்  உட்பிரவேசிக்கவேண்டும். இந்த தடைகளை வெற்றிகரமாக தகர்த்து நோய் கிருமிகள்  உட்பிரவேசித்தால் அடுத்து என்ன?. எங்கள் உடலில் இருக்கும் சிலகலங்கள் வெளியிலிருந்து வந்த கிருமியை கண்டுபிடித்துவிடும். கிருமி வந்த செய்தி உரிய பகுதிக்கு அறிவிக்கப்படும்.  அதேபோல் உடலுக்குள் புதிதாக நுழையும்  கிருமிகளை  கட்டுப்படுத்தும் கலங்களும் இருக்கும். இக்கட்டுப்படுத்தும் கலங்கள் உடனடியாக விரைந்து வந்து கட்டுப்படுத்த தொடங்கும். இதுதான் நோய் தொற்று நிலை. அதாவது எங்கள் உடல் வழமைக்கு மாறான பல மாற்றங்களை காட்டும். இதேவேளை தொற்றியுள்ள கிருமி எது? எந்த காலம் அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது? என்ற ஆராய்ச்சியும்  உடலுக்குள்ளேயே நடக்கும். இந்த ஆராய்ச்சி மூலம் தொற்றியிருக்கும் கிருமியை அழிக்கும்  ஆற்றல் உள்ள கலங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் உற்பத்தி ஊக்குவீக்கப்படும். உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிரிகள்  உடனையாக நோய்த்தொற்று உள்ள இடத்துக்கு அனுப்பப்படும். இதனால் தான் புதிய நோய் ஒன்று தொற்றும்போது குறைந்தது மூன்று நாட்களில் இருந்து ஏழு நாட்கள்வரை நாம் பொறுமை காக்கவேண்டும். அதாவது உட்புகுந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்டு சரியான முடிவு கண்டறிய உடல் எடுக்கும் கால அளவு  அது. இதற்குள் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படின் எங்கள் உடலே  வந்த கிருமிகளை சிதைத்து அழிக்கும். அதேவேளை தொற்றிய கிருமி பலம் வாய்ந்ததாயின் உடல் கலங்களை தாக்கி மேலும் முன்னேறி தீவிர நோயை விளைவிக்கலாம். உடலும் அதற்கு எதிராக தொழிற்பட தயங்குவது இல்லை. இது எங்கள் உடலின்  நோய் எதிர்க்கும் ஆற்றலில்தான் தங்கியிருக்கும்.  இதன் விளைவு நோய் நீங்குதல் அல்லது இறப்பாக அமையலாம். மேலும் ஒருமுறை தாக்கிய அதே நோய்க்கிருமி  மீண்டும் வரும் எனின் உடனடியாக அவற்றை அழிக்கும் வல்லமை உடையதாக எமது உடல் இருக்கும். காரணம் எங்கள் உடலில் முன்பே இந்தக்  கிருமிகள் ஊடுருவியுள்ளதால் உடல் இலகுவாக இனம்கண்டு எதிர்தாக்கத்தை ஆரம்பிக்கும். அநேகமான  வைரசு நோய்களுக்கு இது பொருந்தும். இதனால் சிறிதளவு நோய்நிலை தோன்றலாம் அல்லது நோய் வராது போகலாம். ஆனால் இது எங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் தங்கியிருக்கும்.  


தற்காலத்தில் நோய் வந்தவுடன் மாறவேண்டும் என்று நாம் சிந்திக்கின்றோம். உடலில் இருந்து நோயை பிடுங்கி எறியவேண்டும் என்று விரும்புகின்றோம். இதனால் மருத்துவரே கதி மருந்தே வழி  என்று நினைக்கின்றோம். இதன் விளைவாக  எங்களின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நாமே குறைத்துக் கொள்கின்றோம். இதேவேளை  விசகடி  வைத்தியர் ஒருவர் எனக்கு  சொன்ன ஒரு செய்தியை கூறவிரும்புகின்றேன். அந்த வைத்தியர் நாட்டு மருத்துவம் செய்பவர். நாட்டு மருத்துவர்கள்  சில நடைமுறைகளை வைத்திருப்பார்கள். அதாவது ஒருவர் பாம்புகடிக்கு ஆளாகி அவரிடம் வந்தால் அவருக்கு மருந்து கொடுப்பார்கள். தங்கள் வீட்டில் தங்க வைத்திருப்பார்கள். பாம்பினால் கடியுண்டவரை   மற்றவர்கள் பார்க்க  அனுமதிக்க மாட்டார்கள். மருத்துவரிடம் காரணம் கேட்டேன். சொன்னார். பாம்பினால் கடியுண்டு என்னிடம் வருபவருக்கு மருந்து வழங்குவது மட்டுமல்ல, இதனால் ஒன்றும் உனக்கு ஆபத்தில்லை என்று நம்பிக்கையூட்டி,  அவரை சமாதானப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால்  பாம்பினால் கடியுண்டவர்கள் தாங்கள் இறந்துவிடுவோம் என்று பயப்படுவது வழமை. இவ்வாறு மருத்துவ சிகிச்சை பெற்று தனது வீட்டில் தங்கி இருக்கும் ஒருவரை பார்க்க வரும் இன்னொருவர் வாசலுக்குள் வரும்போதே குளறி அழ ஆரம்பிப்பார். அதுவும் சும்மா அல்ல, “மலையான மலையடா, உன்னையே பாம்பு கடிச்சு   சரிச்சு போட்டுதடா. இனி எப்ப பாக்கப் போறநெண்டு  ஏங்கிப்போனன்” இப்படியான  வார்த்தைகளை கேட்டதும் ஏற்கனவே பயத்துடன் இருந்தவர் இன்னும் பயப்படுவார்.  எனவே அவரை தேற்றி மருந்து செய்வது மிகவும் கடினம். எனவே நோயாளியை நம்பிக்கையான நிலையில் வைத்தே என்று கூறுவார்.  ஆனால் இன்று அப்படி அல்ல. நோயாளிக்கு தனது நிலை தெரியவேண்டும் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லவேண்டும் என்கிறார்கள். அதன்பின் அவர்களுக்கு அறிவுரை வழங்கலாம் என்கிறார்கள். இதுதான் இன்றைய வைத்தியமுறை. அவுத்திரேலியாவில் எனக்கு தெரிந்த ஒரு பெண் கூறினார். தனது கணவருக்கு புற்று நோய் மருத்துவ மனையில் இருந்தார். இறுதி நாளில் நடந்த சம்பவம். கணவர் வாந்தி எடுத்துள்ளார். அந்த வாந்தி வழமையிலும் வேறுபாடாக இருந்தது. அதனை  பார்த்த மருத்துவர் சாவு நேரம் நெருங்கிவிட்டது அவருக்கே சொன்னாராம். அந்த வேளையில் தான் கணவர் தன்னை பார்த்த ஏக்கம் தாங்கமுடியவில்லை என்று சொன்னார்.  அதன்பின் தான் கணவர் தன்னுடன் எதுவும் பேசவில்லை ஏக்கத்துடன் இறந்துபோனார் என்று சொன்னார்.

எனவே நோய்க்கு பயந்து ஏங்குவதை தவிர்த்து, மருத்துவத்தை நம்பி ஏங்கி அலைவதிலும், நம்மையே நம்பி உடலை பாதுகாத்து, உடல் ஆரோக்கியதுடன் வாழ்வதே  சிறப்பு.

பரமபுத்திரன்

No comments: