.
ஜீவிகாவை காலையில் வேலைக்கு அழைத்துச்சென்று, மாலையானதும் வந்து விட்டுச்செல்லும் அந்த வாகனம்
ஒலி எழுப்பி, தனது வரவைச் சொன்னது.
சமையலறையில் இரவுணவு
தயாரிப்பிலிருந்த அபிதா, எழுந்து சென்று கேட்டை திறந்தாள். மஞ்சுளா முகநூலிலும்
கற்பகம் தொலைக்காட்சி நாடகத்திலும் சுபாஷினி யாருடனோ கைத்தொலைபேசியில் பேசியவாறும்
மூழ்கியிருந்தனர்.
ஜீவிகா, ஒரு பெரிய பிளாஸ்ரிக் பேக்கை அவளிடம் நீட்டியவாறு , “ எல்லோருக்கும் மாஸ்க் வாங்கி வந்திருக்கிறேன் “ என்றாள்.
“ மாஸ்க்கா…?
“ அபிதா விநோதம் தவழ அந்தபேக்கைத்திறந்து பார்த்தாள். அதற்குள் சிறு சிறு பொதியாக
முகக்கவசங்கள் இருந்தன. அந்த வாகனத்திலிருந்த
சாரதி, ஜீவிகாவுக்கு கையசைத்து, “ நாளை காலையில்
வருகிறேன் “ எனச்சொல்லிவிட்டு, வாகனத்துடன்
மறைந்தான்.
வீட்டினுள்ளே
பிரவேசித்ததும், அபிதாவிடமிருந்து அந்த பேக்கை வாங்கிய ஜீவிகா, “ எல்லோரும்
இந்தப்பக்கம் வாரீங்களா..? “ என்று குரல்கொடுத்தாள்.
மேசையில்
முகக்கவசங்களை பரப்பிவைத்து, “ ஒவ்வொருத்தரும் ஆளுக்கு இரண்டு வீதம் எடுத்துக்கொள்ளுங்கள். சீனா, அங்கே ஆக்கிரமிக்கிறது… இங்கே ஆக்கிரமிக்கிறது
என்று பேசுறாங்கள், எழுதுறாங்கள்…. இப்போது அங்கிருந்து கொரொனா
வைரஸ் என்று ஏதோ புதிதாக ஒன்று வந்து ஆக்கிரமித்திருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ரி.வியில் நியூஸ் பார்த்தீங்களா…
இல்லை தொலைக்காட்சி நாடகம் பார்த்தீங்களா…. “ என்றாள்.
அவள் யாரை இடித்துரைக்கிறாள் என்பது அங்கிருந்தவர்களுக்கு நன்கு
தெரியும். கற்பகம் ரீச்சர், ரிமோட்டினால் தொலைக்காட்சியை
அணைத்துவிட்டு, ஜீவிகா அருகே வந்து, “ எல்லாம் தெரிந்த செய்திதான் “ எனச்சொல்லிவிட்டு, தனக்குரிய
ஒரு சோடி மாஸ்க்கை எடுத்துக்கொண்டு தனது அறைக்குத் திரும்பினாள்.
கற்பகம் ரீச்சரின் ஒதுங்கும் மனப்பான்மையும் ஒட்டுறவில்லாத தன்மையும்
அங்கிருக்கும் மற்றவர்களுக்கு ஆச்சரியம் தருவதில்லை.
கற்பகம், அந்த வீட்டில் தனது வார்த்தைகளை அதிகம் செலவிடுவது அபிதாவிடம்
மாத்திரம்தான். அதுவும் தனது அதிகாரத்தை அவளிடம்
காண்பிப்பதற்காகவும் தனது தேவைகளின் நிமித்தமாகவும்தான்.
“ மூக்கை மறைக்க இப்படி
மாஸ்க் இருப்பதுபோல், வாயை மூடவும் மாஸ்க் கண்டு பிடித்தால் நல்லது “ என்றாள் மஞ்சுளா.
“ முதலில் உன்ர வாயைத்தான்
மூடவேண்டும். இந்த மாஸ்க்கினால், மூக்கையும் வாயையும் மூடலாம் என்பது உனக்குத் தெரியாதா..? “ என்ற
ஜீவிகா, தனக்கு தேநீர் தருமாறு அபிதாவுக்கு
சாடை காண்பித்தாள்.
கூடத்தில் அமர்ந்து சோம்பல் முறித்த ஜீவிகா, பரவத்தொடங்கியிருக்கும்
வைரஸ் பற்றி தனது பத்திரிகைக்கு வந்து சேரும் செய்திகளை சொல்லத் தொடங்கினாள்.
அப்போது, சுபாஷினிக்கு தும்மல் வந்தது.
“ இப்படி தொடர்ச்சியாக தும்மல் வருவதும் அந்த நோயின்
தாக்கத்தின் அறிகுறியாம்.. “ என்றாள் ஜீவிகா.
“ அதற்காக வரும் தும்மலை
அடக்கமுடியுமா…? “
“ அதற்கென்ன…? தாராளமாகத்
தும்முங்கோ… அதற்கு முதல் மாஸ்கைப் போட்டுக்கொண்டு
தும்முங்கோ.. “
அபிதா தேநீரை ஜீவிகாவுக்குரிய கப்பில் எடுத்துவந்து நீட்டவும், அதனை
வாங்கிப்பருகியவாறே, தொலைக்காட்சியை இயக்கினாள்.
அவள் அழுத்திய செனலில் செய்தி நகர்ந்து கொண்டிருந்தது.
கொரொனா வைரஸ் குறித்து மக்கள் வீணாக
பீதிகொள்ளத்தேவையில்லையென்றும் அரசு அதனை இலங்கையில் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும்
மேற்கொண்டிருப்பதாகவும் நாட்டின் பிரதமர் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து சொன்னதை ஒரு
அரசதரப்பு பேச்சாளர் சொல்லிக்கொண்டிருப்பதை தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
நுவரேலியாவுக்கு அனைவரையும்
அழைத்துக்கொண்டு பயணிப்பதற்கு எவ்வாறு ஜீவிகாவிடம் பேச்சைத் தொடங்கலாம் என யோசித்துக்கொண்டு,
மஞ்சுளாவின் இடையில் மெதுவாகக்கிள்ளி, சைகை காண்பித்து தனது அறைக்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றாள் சுபாஷினி.
ஜீவிகா தேநீர் அருந்தியதும், அவள் அருகில் தயங்கியவாறு வந்து நின்றாள்
அபிதா. கையிலிருந்த, அன்று வங்கியில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிட்டதற்காக வங்கி வழங்கிய சிறிய பதிவுப்புத்தகத்தை காண்பித்தாள்.
அதனை வாங்கிப்பார்த்த ஜீவிகா,
“ இதனையெல்லாம் என்னிடம் ஏன் காண்பிக்கிறீங்க…? இதெல்லாம் உங்கட சொந்த விஷயங்கள்.
“
“ இல்ல… இங்கே நான் எது
செய்தாலும் உங்களிடம் சொல்வதுதானே முறை. அதுதான் காட்டினேன். “ இவ்வாறு அபிதா சொன்னதும், அவள்மீது ஜீவிகாவுக்கு
அனுதாபம் பிறந்தது.
“ நல்லவிஷயம் அபிதா… சரி,
பேங்கில் காசு சேமித்து என்ன செய்யப்போறீங்க…?
“
“ அதைச்சொன்னாலும், அதுவும்
எனது சொந்த விஷயம் என்று சொல்லமாட்டீங்களா..? “ என மறுகணம் துடுக்குத்தனமாக அபிதா கேட்டதும்,
ஜீவிகாவுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்தது.
கண்களினால் சைகை காண்பித்து, ஜீவிகாவை சமையலறைப்பக்கம் அழைத்த அபிதா, “ உங்களிட்ட மற்றும் ஒரு விஷயம் சொல்லவேணும்…. “ என்று மிகவும்
பௌவியமாகச் சொன்னாள்.
ஏதோ இரகசியம் சொல்லப்போகிறாளாக்கும் என கற்பனை செய்துகொண்ட ஜீவிகா, “ …. ம்….சொல்லுங்க.. என்ன விஷயம்..? “
“ இந்த ரோட்டில் இருக்கிறது
தெரியுமா… வேர்ல்ட் கொமியூனிக்கேசன் சென்டர்.
அதில் கம்பியூட்டர் கற்றுக்கொள்ளப்போகிறேன். அனுமதிப்பீங்களா…? வீட்டு வேலையெல்லாம்
செய்துவைத்துவிட்டு, பகலில் ஒரு மணிநேரம் போய் படிக்கட்டுமா…? பிளீஸ்…. “
“ வாழ்க பல்லாண்டு, இதனை ஏன் இவ்வளவு இரகசியமாச்சொல்றீங்க… படிச்சிட்டாப்
போச்சு. அதைப்படிச்சு என்ன செய்யப்போறீங்க…? “
“ அதுவும் எனது சொந்த விஷயம்
எனச்சொன்னால் கோபிப்பீங்களா…? “
ஜீவிகா துணுக்குற்றாள். இப்படியெல்லாம் பேசக்கூடியவளையா இந்த வீட்டில்
அப்பாவி என நினைக்கிறார்கள்.
இவள் ஒரு விசித்திரமான கரெக்டர்தான்.
“ சரி… சரி… நீங்க என்ன
செய்வீங்களோ… ஏது செய்வீங்களோ…? வீட்டு வேலைகளில்
மாத்திரம் குறை ஏதும் வைத்துவிடாதீங்க. பிறகு பெரிய பிரச்சினையாகிவிடும். உங்களை நம்பித்தான்
தினமும் காலையில் வீட்டை விட்டுப்போகிறேன்.
இந்தப்பக்கம் கள்ளர் பயமும் இருக்கிறது. வீட்டில் பகல்பொழுதில் எவரும் இல்லையென்றால் மதிலால்
குதித்து வந்துவிடுவாங்கள். கவனம். முன்பொரு தடவை நடந்திருக்கிறது. வீட்டு வேலை, சமையலுக்காக மாத்திரம் உங்களை நாம்
இங்கே அழைக்கவில்லை. வீட்டுக்காவலுக்கும் சேர்த்துத்தான். “ என்றாள் ஜீவிகா.
“ அப்படியென்றால், நான்
கராட்டி, ஜூடோ, சிலம்படி எல்லாம் கற்றுக்கொள்ளவா…? “ எனச்சிரித்தவாறு கேட்டாள் அபிதா.
“ ம்… ம்… பரவாயில்லையே…
பேசியே பிழைத்துக்கொள்வீங்க.. அது சரி இங்கே
அன்று வரும்போது அந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் முன்னால், கூனிக்குறுகி நடுங்கிக்கொண்டிருந்த
நீங்களா, இப்போது இவ்வாறேல்லாம் பேசுவது….
என்பதுதான் எனக்கு மிகுந்த வியப்பாகவிருக்கிறது.. “
“ அம்மா… சொல்ல மறந்திட்டன்.
அந்த இன்ஸ்பெக்டரை ஒரு நாள் சந்தைக்குப்போகும் வழியில் பார்த்தேன். என்னை எதிரில் கண்டதும்
பொலிஸ் காரை நிறுத்தி பேசினான். அவனுக்கு பருந்து
பார்வை. யானை ஞாபகம். என்னை நன்றாக நினைவில் வைத்து பேசினான். ‘ இப்பவும்
அந்த ஹவுஸ்லதானா வேல செய்யிறது ‘ என்று கேட்டான். ஓம் என்று தலையாட்டினேன். சிரித்துக்கொண்டு போய்விட்டான். “
“ அது சரி… வேறு ஒன்றும்
கேட்கவில்லையா… ? “
“ இல்லையே… ஏன் அப்படிக்கேட்கிறீங்க…
வேறு ஏதும் பிரச்சினையா…. “ அபிதா கலவரத்துடன் ஜீவிகாவை பார்த்தாள்.
“ ஒன்றுமில்லை. ஒரு செய்தி சம்பந்தமாக பொலிஸ் ஸ்ரேஷன்
போயிருந்தன். நீங்க சென்னமாதிரி அவனுக்கு பருந்துப்பார்வையும் யானை ஞாபகமும்தான். என்னையே
சட்டென அடையாளம் கண்டுகொண்டான். அந்தச்சந்திப்பு போனவாரம் நடந்தது. ஆள் நல்ல ஆணழகன்
என்ன..? “ ஜீவிகா கண்ணை
சிமிட்டிக்கேட்டாள்.
“ சும்மா போங்கம்மா
... உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கிறதோ...? “ அபிதா இரவுச்சாப்பாட்டுக்கு புட்டுக்கு மாவு
குழைத்துக்கொண்டு கேட்டாள்.
“ சீச்சீ... சும்மா ஒரு ஜோக்கிற்குச் சொன்னன். மஞ்சுளாவுக்கு இல்லாட்டி
சுபாஷினிக்குப்பேசிப்பார்ப்போமா...? “
மீண்டும் ஜீவிகா கண்ணை சிமிட்டினாள்.
“ சரிதான். இனறைக்கு பொழுது போவதற்கு உங்களுக்கு
நான்தான் கிடைத்தேனா... விடுங்க...,
வந்துவிடுவா..., ‘ என்ன புட்டு
அவித்து விட்டீர்களா செம்மனச்செல்வி சேவகி..?
‘ என்று கேட்டுக்கொண்டு கற்பகம் ரீச்சர் எழுந்து வந்துவிடுவா.
இதனைக்கேட்டதும்
ஜீவிகாவுக்கு சிரிப்பு வந்தது. “
நல்லாத்தான் வந்து வாய்த்திருக்குதுகள்’’
என மனதிற்குள் சொல்லிக்கொண்டு ஜீவிகா அங்கிருந்து அகன்றாள்.
சுபாஷினியின்
அறைக்குள் சென்ற மஞ்சுளா இன்னமும் வெளியே வரவில்லை. நுவரேலியா போவதற்கு
மந்திராலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
“ அம்மா வரச்சொல்லி
கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாங்க. போன் எடுத்துப்பேசினால் அழத்தொடங்கிறாங்க. அதுதான் ஒருக்கா போயிட்டு வந்திடலாம் என்று பார்க்கிறன்.
மஞ்சுளா நீயும் வாவேன். அபிதா, ஜீவிகா,
கற்பகம் ரீச்சர் எல்லோரும் போவோம். ஒரு சின்ன ட்ரிப். அங்கே இரண்டு நாள்
தங்கிறதுக்கெல்லாம் ஏற்பாடு செய்யலாம். ஜீவிகாவிடம் பேசிப்பார்க்கிறாயா... ? நீதான் பேசவேண்டும்.... நான்
சொல்லப்போனால்., ‘ என்ன திடீரனெ அம்மா
பாசம்... ? ‘ என்று ஏறுமாறாகவும்
திருப்பிக்கேட்பாள். என்ன....? பேசிப்பார்க்கிறாயா...? ஜீவிகா இன்றைக்கு நல்ல
மூடில் இருப்பது போலத் தெரியுது.... பேசேன்.... “ என்று மஞ்சுளாவிடம் கெஞ்சினாள்
சுபாஷினி.
அதற்கென்ன “பார்ப்போம்
“ எனத்தலையாட்டினாள் மஞ்சுளா.
அனைவரும்
இரவுணவுக்காக மேசைக்கு வந்தனர். புட்டு,
கறிவகைகளை மேசையில் வைப்பதற்கு சுபாஷினியும் மஞ்சுளாவும் அபிதாவுக்கு உதவினர்.
கற்பகம் ரீச்சர்
தனது எவர்சில்வர் தட்டத்துடன் வந்து அமர்ந்தாள். அபிதா அவரவர் கண்ணாடி தம்ளர்களில்
தண்ணீரை வார்த்துவைத்தாள். தண்ணீர்
குளிர்மையாக இருந்தது.
அதற்கான காரணத்தை
அபிதா காண்பித்தாள். சந்தையில் அவள் வாங்கிவந்திருந்த தண்ணீர் கூஜா அந்த
சமையலறையில் புதிய வரவு.
“ சுட்டு ஆறிப்போன தண்ணீரை கூஜாவில்
ஊற்றிவைத்தால் குளிரும். அருந்துவதற்கும் சுவையாக இருக்கும் “
என்றாள் அபிதா.
அவர்கள்
நால்வரும் சாப்பிடத்தொடங்கும்போது, அபிதா இரண்டு மாம்பழங்களை எடுத்து தோல் நீக்கி
வெட்டிப்பகிர்ந்தாள். அபிதாவின் சமையல்
பக்குவம் பற்றி ஒவ்வொருவரும் தத்தம் ரஸனையை சொன்னபோது கற்பகம் மாத்திரம் மெளனமாக
இருந்து சாப்பிட்டாள்.
அந்த மௌனத்தை கலைக்கவிரும்பிய ஜீவிகா,
“ என்ன ரீச்சரம்மா... இன்றைக்கு
ஸ்கூலில் புதினம் ஏதும் இல்லையா..? “
எனக்கேட்டாள்.
“ நீங்கதான் பத்திரிகையாளர். தினமும் புதினத்தோடு வீட்டுக்கு வாரீங்க.
இன்றைக்கு உங்களோடு புதினமும் கண்டறியாத பெயருள்ள வைரஸ் நோய்க்காக மாஸ்குடனும்
வாரீங்க...? ஸ்கூல்ல எல்லாம் வழக்கம்போலத்தான்.
“
“ ரீச்சருக்கு டெங்கு வந்ததால, இந்த கொரொனாவோ, என்ன கோதாரியோ எதுவும் ஒன்றும் செய்துவிடாது, ரீச்சருக்கு இப்போது உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாக இருக்கும் என்ன ரீச்சர்..? “ மஞ்சுளாவின்
பேச்சு சீண்டலாகத்தான் இருந்தது.
கற்பகம் எதுவம் பேசாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள். ஜீவிகா, மஞ்சுளாவை
கண்களினால் அடக்கினாள்.
அபிதா மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாள். மனதிற்குள் கற்பகம் மீது அவளுக்கு
ஆழ்ந்த அனுதாபம்.
“ ஜீவி… ஒரு சின்ன ட்ரிப்
எரேஞ்ச் பண்ணியிருக்கிறன். போவமா…? “ மஞ்சுளா, மாம்பழத்தை பிட்டுடன் பிசைந்தவாறு கேட்டாள்.
“ என்ன ட்ரிப்… எங்கே..? “ ஜிவிகா தலையை உயர்த்தாமல், வினவினாள்.
“ நுவரேலியா… சுபாஷினியின் அம்மாவுக்கு கொஞ்சம் சுகமில்லையாம்.
போகவிருக்கிறா… நாங்களும் ஒருக்கா அந்தப்பக்கம் போய்வருவோமா..? “
“ அவட அம்மாவுக்கு சுகமில்லையென்றால், அவ போய்விட்டு வரட்டுமே.
நாங்கள் எல்லோரும் போய் வீணாக அவர்களுக்கு ஏன் சிரமம் கொடுக்கவேண்டும். “
“ ஒரு சிரமமும் இல்லை ஜீவிகா. தங்கிறதுக்கு தம்பி எல்லா ஏற்பாடும் செய்து தருவான்.
வாருமேன். ஒரு சேஞ்சுக்குப்போய்வருவோம். “ சாப்பாட்டுத்தட்டத்தை
சிங்கில் கழுவிக்கொண்டு சுபாஷினி கேட்டாள்.
அப்பொழுதும் ஜீவிகா, தலையை உயர்த்தாமல், “ பார்ப்போம். “ என்று அடங்கிய குரலில் சொன்னது சுபாஷினிக்கும்
மஞ்சுளாவுக்கும் அபிதாவுக்கும் சற்று ஏமாற்றமாகவிருந்தது.
“ எனக்கென்றால் எங்கேயும்
வரமுடியாது, ஏற்கனவே லீவுகள் எடுத்துப்போட்டன். இனி எடுக்கமுடியாது. நீங்கள் எல்லாம்
போறதென்டால் போயிட்டு வாங்க. அபிதா இங்கே இருப்பாள்தானே…? அவள் வரவில்லைத்தானே… “ என கற்பகம் கேட்டதும், “ இல்லை… இல்லை… அபிதாவையும் அழைத்துக்கொண்டுதான்.
பாவம் அவளை இங்கே தனியே விட்டுப்போகமுடியுமா..?
“என்றாள் சுபாஷினி.
“ சுபா, நான் வரவில்லைத்தானே. இனி என்ன… அபிதா இருக்கட்டும். நீங்கள் மூன்றுபேரும் போயிட்டு வாங்க.. “என கற்பகம்
சொன்னது அபிதாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
“ நான் யோசிச்சுச் சொல்றன். பெரியப்பா லண்டனிலிருந்து வருவதாக வேறு சொல்லியிருக்கிறார்.
அவருடைய பென்ஷன் வேலைகள் ஏதோ இருக்குதாம். அவருடைய டேட்டைக் கேட்டுவிட்டு, தீர்மானிப்போம் “ என்று ஜீவிகா சொன்னதும், கற்பகம் கலவரமடைந்தவாறு, “ எப்ப…
எப்ப… எப்ப வாரார்..? “ எனக்கேட்ட தோரணை அபிதாவுக்கு
வியப்பாகவிருந்தது.
கற்பகம் கூஜாவிலிருந்து மேலும் தண்ணீர் வார்த்து அருந்தியவாறு தம்ளருடன் தனது அறைக்குச்சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment