படித்தோம் சொல்கின்றோம்: - காணாமல் போகவிருந்த கதைகள்- முருகபூபதி

.

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
எழுதியிருக்கும்   காணாமல் போகவிருந்த கதைகள் 
சமூகம் எப்படி இருக்கவேண்டும்..? என்பதை ஆதங்கத்துடன் சொல்லும் வாழ்வின் தரிசனங்கள்


 
                                                         

சமூகம்  இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள்  ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள்  நிகழும்.
பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத்  தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும்.
சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில்,  தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில்  இன்ன பிற காட்சிகளில்  கிடைக்கும் சித்திரம்  மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.
இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை,  நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன்.
ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும்  அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான  ஐ. சாந்தன்.
சாந்தனுக்கு கோரியை   அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ்   அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.
கொழும்பில் அண்மையில், கோரியின்  புதிய வரவு காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதியின் அறிமுக அரங்கு நடைபெற்றவேளையில்,  இந்த நிகழ்வு பற்றிய இணையத் தகவலை எனக்கு அனுப்பியவர் சுந்தாவின் துணைவியார்  திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்.   எழுத்தாளர் கோரி அவர்களுக்கு  மின்னஞ்சல் மார்க்கமாக வாழ்த்துத் தெரிவித்ததையடுத்து, எனது முகவரி கேட்டு,  பதில்   அனுப்பியதும், தாமதமின்றி ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து பறந்து எனது வீட்டு வாசலை வந்தடைந்தது காணாமல் போகவிருந்த கதைகள். 
வழக்கமாக நாம் படிக்கும்  கதைத் தொகுதிகளிலிருந்து கோரியின் இத்தொகுப்பு அமைப்பில் வித்தியாசமாக அமைந்துள்ளது.
சிறுகதைகள் மொத்தம் 15. நூலின் இறுதியில் 34 பத்தி எழுத்துக்கள். அத்துடன் ஒவ்வொரு கதையின் பின்னிணைப்பாக, அக்கதை பிறந்த கதை பற்றிய குறிப்பு.
பெரும்பாலான கதைகளிலும் பத்தி எழுத்துக்களிலும் இலக்கியப்பிரதியாளர் கோரியே தென்படுகிறார். இன்னும் சொல்லப்போனால், அவரது சுயசரிதையின் மற்றும் சில பக்கங்கள் எனலாம்.
இலங்கை, தமிழக ஏடுகளில் எழுதிவருபவர். அதனால், இரண்டு தேசங்களிலும் இலக்கிய நண்பர்களை,  வாசகர்களை  சம்பாதித்திருப்பவர்.
முதியோர் இல்லங்களில் வாழநேரிட்ட வசதிபடைத்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், தெருவோரம் படுத்துறங்கி மழைவந்தால், இருப்பிடம் தேடி அலைபவர்கள், சிறைக்கைதிகள்,  மனவளர்ச்சி குன்றியவர்கள், இசைக்கலைஞர்கள்,  ஈடேறாத காதலின் நாயகி, நாயகன்கள்….. இவ்வாறு பலதரப்பட்ட மாந்தர்கள் இவரது கதைகளில் வருகிறார்கள்.
தனது வாழ்வில் நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களுக்கு சிறிதளவு கற்பனை கலந்து,  கதையை நகர்த்தி எழுதிவிட்டு, பிற்குறிப்பாக  “ இப்படித்தான் நிகழ்ந்தது.  இவ்வாறு இருந்தால் எவ்வாறு இருக்கும்  “ என்ற முன்தீர்மானத்துடன் சில கதைகளை எழுதியிருக்கிறார்.
சில கதைகளில் அநியாயத்திற்கு தன்னை ஒரு மனிதாபிமானியாக காண்பிக்கவும் முயன்றிருக்கிறார்.
இவரது கதைகளை சில இதழ்கள் ஏற்றுள்ளன. சில புறக்கணித்துவிட்டன.  ஏற்றார்கள் என்பதற்காக பெருமைப்படவோ, மறுத்தார்கள் என்பதற்காக சிறுமைப்படவோ இல்லை இந்த  எழுத்தாளர்.
அனைத்தையும் தொகுத்து, பிற்குறிப்பில் அவற்றுக்கு கிடைத்த களம் பற்றியும் சொல்கிறார்.
இதிலிருக்கும் வியப்பான தகவல் பற்றியும் நாம் சொல்லத்தான் வேண்டும்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எட்டுச்சிறுகதைகள் 2018 ஏப்ரிலிலிருந்து 2019 ஜனவரி வரையிலான  பத்துமாத காலப்பகுதியில் மல்லிகை மகள், குமுதம் தீராநதி, பொதிகைச்சாரல், குங்குமம், கல்கி மற்றும் நவீன விருட்சம் முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஏப்ரல் இருவத்தொண்டு  என்ற சிறுகதை, கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் அநியாயமாக உயிரிழந்த அப்பாவிப்பொதுமக்களைப்பற்றிய கதை. உருது மொழியை தாய்மொழியாகக்கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய இலக்கிய சகோதரன் இலங்கைக்கு பயணமாகி,  கொழும்பில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த இடங்களுக்கு நேரடியாக செல்கிறார்.
பாதிப்புற்ற கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தையும்  உல்லாசப்பயணிகள் வந்து தங்கிய விடுதிகளையும் எட்டத்தில் நின்று பார்த்து, மனதிற்குள் கண்ணீர் வடிக்கிறார்.
இவர் கொழும்பு செல்லும் சந்தர்ப்பங்களில் தனது பயணத்திற்கு உதவும் ஒரு ஓட்டோ சாரதியின் சகோதரியும் அந்தத் தாக்குதலில் பலியாகியிருக்கிறார். இது செய்தி. குறிப்பிட்ட ஓட்டோவிலேயே குறிப்பிட்ட பாதிப்பு நிகழ்ந்த இடங்களை தரிசித்துவிட்டு வந்து எழுதப்பட்ட கதையாகியிருக்கிறது ஏப்ரல் இருவத்தொண்டு. கோரி, ஈஸ்டர் சம்பவத்திற்குப்பின்னர், சென்னையிலிருந்து கொழும்பு செல்வதற்கு தயாராகின்றார். ஒரு நண்பன் தடுக்கின்றான்.
 “ தெரியாத மாதிரி பேசாத, யாரோ சில பயங்கரவாதிகள் ஒண்ணும் வெடிகுண்டு வக்யல. வெடிகுண்டு வச்சவனெல்லாம் நம்ம ஆள்தான் ..
 “நம்ம ஆள்ன்னா…? “
 “ நம்ம ஆள்ன்னா, ஒன்னப்போல , என்னப்போல, முஸ்லிம்.”
  வெடிகுண்டு வச்ச கொலகாரப்பசங்க ஒன்னப்போலவுமில்ல, என்னப்போலவுமில்ல. அவனுங்க முஸ்லிமுமில்ல. தீவிரவாதத்தையும் பயங்கரவதத்தயும் இஸ்லாம் ஆதரிக்கல. அப்பாவி மக்களக் கொல்லச்சொல்லி இஸ்லாம் போதிக்கல. அந்த ராட்ச்சசங்கள முஸ்லிம்ஸ்னு சொல்லி உலக முஸ்லிம்களயெல்லாம் கேவலப்படுத்தாத.” 
இக்கதை எழுதப்பட்ட 2019 நடுப்பகுதியில் இதனை  கல்கி சிறுகதைப்போட்டிக்கு அனுப்பிவைத்துள்ளார். ஆனால், அதன் நடுவர்கள் இதனை ஏற்கவில்லை என்ற தனது ஏமாற்றத்தையும்  சொல்கிறார்.
கல்கியில் வெளியானால், பரவலான வாசகரை சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு நிராசையாகிறது. அதனாலென்ன…?  தொகுதி வெளியிடும்போது இணைத்துக்கொள்ளலாம்தானே!
இத்தகைய அனுபவங்கள் பல படைப்பாளிகளுக்கு நேர்ந்துள்ளன.  இத்தருணத்தில் ஜெயகாந்தன் நடத்திய ஞானரதம் இதழில், அவர் பதிவு செய்த குறிப்பு நினைவுக்கு வருகிறது.
 “ உங்கள் கதைகளை  ஏதேனும் இதழ்கள் புறக்கணித்திருப்பின், அதனை ஞானரதத்திற்கு அனுப்புங்கள். 
திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் பொதிகைச்சாரல் மாத இதழில், கடைசிப்பக்கங்களில் கோரி எழுதிவந்த பத்தி எழுத்துகள், இந்நூலின் இறுதிப்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
கோரியைப்போன்று, இதற்கு முன்னரும் பல எழுத்தாளர்கள், இதழ்களில் கடைசிப்பக்கம் எழுதியவர்கள்தான்.
குறிப்பாக சுஜாதா, கே. ஏ. அப்பாஸ்,  குஷ்வந்த் சிங் முதலான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இவை வெளிவரும் இதழ்களை  வாசகர்கள் கையில் எடுத்தவுடனேயே  முதலில் படிக்கும் பக்கங்களாகவும் திகழ்ந்திருக்கின்றன.
அத்தகைய வாசகர்களாக முன்னாள் பாரதப்பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தியை குறிப்பிட்டுச்சொல்லமுடியும்.
அந்தந்த மாத நிகழ்வுகளை நினைவுபடுத்தும் குறிப்புகளாக இந்த கடைசிப்பக்க பத்தி எழுத்துக்கள் அமைந்துவிடுவதுமுண்டு.
இந்த நூல் எனது வசம் வந்ததும், நான் படித்து முடித்தது நூலின் இறுதிப்பக்கங்களில் 217  முதல் 284 ஆம் பக்கம் வரையில் இடம்பெற்றுள்ள 34 பத்திகளைத்தான். மிகவும் சுவாரசியமாக கோரி எழுதியுள்ளார். தெரிந்த, தெரியாத பல செய்திகள் இவற்றில் அடக்கம்.
எளிமை இனிமையானது என்ற காந்தி ஜெயந்தி பற்றிய பதிவு பற்றி  கோரி எழுதிய சில வார்த்தைகள்:
  அக்டோபர் ரெண்டு. காந்தி ஜெயந்தியன்று சென்னை மெரீனா கடற்கரையிலிருக்கிற காந்தி சிலையை நோக்கி வி.ஐ. பி.க்களின் படையெடுப்பு நடந்துகொண்டிருந்தது.
“Live simply, so that others can simply Live “  என்று இனிமையாய் எளிமையை போதித்த மகாத்மாவுக்கு மரியாதை செய்வதற்கு, மடிப்புக்கலையாத உடுப்புகளோடு சொகுசுக்கார்களில் வந்திறங்கித் தொலைக்காட்சிக் கேமராக்களுக்குப்  போஸ் கொடுத்துவிட்டுப்போனார்கள் பிரமுகர்கள் பலர். 
ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்பவர் காந்தி.
அவரிடம், “  ஏன் ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்கிறீர்கள்..? எனக்கேட்டபோது, மகாத்மா அளித்த பதில்:  “ ரயிலில் நான்காம் வகுப்பு இல்லையே 
இதனை வாசித்தபோது, எமது இலங்கையில் நான் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது, ஒரு பிரபலமான மாநகரில் ஒரு பாடசாலையில் காந்தி ஜெயந்தி விழா நடந்தபோது, தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை பிரதம அதிதியாக பேச அழைத்திருக்கிறார்கள். அவர் மேடையில் பேசுவதற்கு முன்னர், பாடசாலை அதிபரிடம் இவ்வாறு கேட்டாராம்:
 “ ஜெயந்தி என்பவர், மகாத்மா காந்தியின் அம்மாவா, அல்லது அக்காவா..? 
எழுத்தாளர் கோரியின் சிறுகதைகளும் சரி, கடைசிப்பக்க பத்திகளும் சரி அனைத்துமே   எமது வாழ்வியல் உண்மைகளை உள்ளவாறும் அங்கதச்சிறப்போடும் பேசுகின்றன.
இந்தச் சமூகம் குறித்து அவருக்கு நிறைய எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இருக்கின்றன!
என்ன செய்வது எழுத்தாள சகோதரனே…?   சமூகம்  இப்படித்தான் இருக்கும். எப்படி இருக்கவேண்டும் என்று எழுதியாவாது நாம் அமைதியும் ஆறுதலும்  அடைவோம்.
எழுத்தாளர் கோரி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
----0---
letchumananm@gmail.com

No comments: