சி.குமாரின் மறைவு ஈழத்து இலக்கியத் துறைக்கு பெரும் இழப்பு…!

.


மலையக இலக்கிய வானில் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட மல்லிகை சி.குமாரின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். நாடறிந்த பிரபல எழுத்தாளரான அவர் கடந்த திங்கட்கிழமை மாலை காலமானார். மல்லிகை சி.குமார் தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தைச் சேர்ந்தவர். தனது 76ஆவது வயதில்  காலமானார்.
அவர் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளி ஆவார். 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் சி.குமார், இலங்கையின் சிறுகதைத் துறையில் சாதனை படைத்தவராக விளங்குகின்றார். மலையக தோட்டத் தொழிலாளர்களின் துன்ப வாழ்வை தனது படைப்புகளில் வெளியே கொண்டு வந்தவர் அவர்.
தனது கல்வியை முடித்த பின்னர் மிருக வைத்தியத் துறையில் ஈடுபாடு காட்டிய அவர், மலையகத் தோட்டப் பகுதிகளில் கால்நடை வளர்ப்புக்கு ஊக்கமூட்டும் வகையில் அரும்பணியாற்றியிருக்கிறார். கால்நடை வளர்ப்பு தொடர்பான கட்டுரைகள் ஏராளம் எழுதியுள்ளார். அவர் சிறந்த ஓவியராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். சி.குமாரின் கவிதைகள் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் கூட வெளிவந்துள்ளன.


மல்லிகை சி.குமாரின் புதல்வியான சுகுணா ஊடகவியலாளராகக் கடமையாற்றுகிறார். ஆறு மாத காலமாக சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியை இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. அன்னாரின் பூதவுடல் தலவாக்கலை பொதுமயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
இவரது மறைவினால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகம் பெரும் கவலை கொண்டுள்ளது.
இலங்கையிலுள்ள  பத்திரிகைகளிலும் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிராகப் பல சிறுகதைகளையும் கவிதைகளையும் அவர் படைத்தவர்.
தரம்_11 தமிழ்மொழியும், இலக்கியமும் பாடநூலில் பிரதேச வழக்குச் சொற்கள் என்ற மொழித் தேர்ச்சிப் பகுதியில் வந்துள்ள மலையகப் பேச்சு வழக்கு இவரது எழுத்தாக்கமே ஆகும்.
சி. குமார் தலவாக்கலை பெரியமல்லிகைப்பூ தோட்டத்தில் 1944 ஆம் ஆண்டில் சின்னையா, – கதிராய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். தான் பிறந்த தோட்டத்தின் நினைவாக ‘மல்லிகை சி. குமார்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். தலவாக்கலையில் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றினார். அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் நிறுவனர் ஜெப்ரி அபயசேகர என்பவரூடாக இவர் வெளியுலகிற்கு அறிமுகமானார். 1970களில் அந்த நிறுவனத்திற்கு பல ஓவியங்களை வரைந்து கொடுத்தார்.
கால்நடை வளர்ப்பு தொடர்பான பல கட்டுரைகள் எழுதினார். மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்கள் விழிப்பு என்ற பெயரில் ஜெப்ரி அபயசேகரா எழுதி வெளியிட்டார். அத்தொகுப்பில் இவரது சிறுகதை ஒன்று இடம்பெற்றிருந்தது. இத்தொகுதி பின்னர் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
இவரது கவிதைத் தொகுப்பு ஒன்றை ‘மாடும் வீடும்’ என்ற தலைப்பில் அந்தனி ஜீவா வெளியிட்டார். இத்தொகுப்புக்கு கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை வழங்கியிருந்தார். சி.குமார் பல கவியரங்குகளில் கலந்து சிறப்பித்திருந்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் இவருக்கு ‘தமிழ்மணி’ விருது வழங்கிக் கௌரவித்தார். கலைமாமணி விருது (2019), கலாபூசணம் விருது ஆகியவற்றையும் மல்லிகை சி. குமார் பெற்றுள்ளார்.

நன்றி 

https://newuthayan.com/

No comments: