யாருமற்றவர்கள்" - கவிஞர் மகுடேசுவரன்


Image may contain: one or more people and closeup

.

இங்கே
ஒவ்வொருவரும்
இன்னொருவரை வெளியேறச் சொல்கிறார்கள்.
“நீ எங்கிருந்து வந்தாயோ
அங்கேயே போ” என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால்
யார்க்கும்
தாம் எங்கேயிருந்து வந்தோம் என்பது
உறுதியில்லை.
ஒருவர்
“தாய் வயிற்றிலிருந்து வந்தோமே…
அங்கே போவதா ?” என்கிறார்.
வேறொருவர்
“ஆப்பிரிக்காவிலிருந்து வந்தோம் என்பார்களே…
அங்கே போவதா ?” என்கிறார்.
“குரங்கிலிருந்து வந்தோமே…
அந்தக் கூட்டத்தோடு போ என்கிறார்களா ?”
என்று வினவுகிறார் இன்னொருவர்.
எல்லாரும் ஒருநாள்
போகப் போகிறவர்கள்தாம்.
போகும்படி ஏவுவதற்கு
யார்க்கோ பித்து முற்றிவிட்டது.
ஏன் போகச் சொல்கிறார்கள் என்றால்
அவர்கள் “ஓர் ஐம்பது கிமீ” இடம்பெயர்ந்து
வந்துவிட்டார்களாம்.
சித்தூரிலிருந்து
வேலூர்க்கு வந்தால்
தெலுங்கனாகிவிடலாம்.
ஓசூரிலிருந்து
பெங்களூருக்கு வந்தால்
தமிழனாகிவிடலாம்.
கொள்ளேகாலத்திலிருந்து
அந்தியூர்க்கு வந்தால்
கன்னடனாகிவிடலாம்.
பாலக்காட்டிலிருந்து
கோவைக்கு வந்தால் மலையாளி.
யாழ்ப்பாணத்திலிருந்து
மண்டபத்திற்கு வந்தால் ஈழத்தவன்.
வங்காள தேசத்திலிருந்து
ஏதிலியாக வந்தால் நாடிலி.
பீகாரிலிருந்து
தமிழ்நாட்டிற்கு வந்தவனுக்கு
ஒரு வளவாழ்வு இருக்கிறது.
என்ன செய்வது !


பல தலைமுறைகளாய்
அடுத்த ஊர் பார்க்காதவனுக்கு
வந்தேறிப் பட்டம்
நன்றாகவா இருக்கிறது ?
தக்காரும்
தாழ்விலாச் செல்வரும்
சேர்வது நாடு.
மக்கள்
நாடிவரும் தன்மையால்தான்
அது நாடு.
“கணவாய் வழியாக வந்தாய்
திரும்பிப் போ” என்கிறார் ஒருவர்.
“கள்ளத்தோணி ஏறி வந்தாய்…
திரும்பிப் போ” என்கிறார் வேறொருவர்.
“விஜயநகர ஆட்சியின்போது வந்தாய்
திரும்பிப் போ” என்கிறார் இன்னொருவர்.
“முகமதியர் காலத்தில் வந்தாய்
திரும்பிப்போ” என்கிறார் மற்றொருவர்.
முத்தாய்ப்பாக
யாரை வேண்டுமானாலும்
“பாகிஸ்தானுக்கே போ” என்கின்றனர்.
ஓர் உயிர்
எந்நிலத்தில்
தாயிடமிருந்து உதிர்ந்ததோ
அந்நிலத்தின் பிள்ளை.
அந்நிலத்தின் உடைமை.
பிறப்பொக்கும் அவ்வுயிர்.
பிறிதெல்லாம்
பிறகு வந்த பாகுபாடுகள்.
அந்த அறத்தின்படியே
அமெரிக்காவில் பிறக்கும் உன் பிள்ளை
பிறந்தவுடனே அமெரிக்கக் குடிமகன்.
எந்நிலத்தில்
கண்ணீரும் வியர்வையும் உதிர்கிறதோ
அந்நிலத்திற்குக் கடப்பாடு உண்டு.
இந்நிலப் பிரிவுகள்
மாந்தர் கற்பனை.
மக்கள்
ஒருவர்க்கொருவர் தாய்பிள்ளை.
பிறர் கண்ணீர் கண்டு
கண்ணீர் உகுக்காத
தாய்க்குலம் உண்டா ?
பிறர் உண்ணற்கு
உழைக்க மறுக்கும்
பாட்டாளி உண்டா ?
ஆயிரமாண்டு
அல்லது நூறாண்டு
நெடு வாழ்க்கைக்கு
ஒரு வேர்ப்பரவல் உண்டு.
இனி அதைப் பெயர்த்தெடுப்பானேன் ?
சேர்ந்து வாழ்வோம்
சேர்ந்து உயர்வோம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
*

No comments: