.
அமைப்பு
திருச்சின்னம் – ஊதுகருவி
அனசு, உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக்
குழல்கள் தான் திருச்சின்னம். சுமார் 2 ½ அடி நீளம் இருக்கும்.
சில இடங்களில் வெள்ளியாலான திருச்சின்னம் உள்ளது.
குறிப்பு
‘ஓம்...’ என்று ஒலி தரும் இசைக்கருவி திருச்சின்னம். இது மிக நுட்பமான
ஊதுகருவி. பழந்தமிழர்
இக்கருவியை வெற்றியின் சின்னமாக பயன்படுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட
பல நடுகல் சிற்பங்களில் உள்ள வீரர்களின் கைகளில் திருச்சின்னம்
செதுக்கப்பட்டுள்ளதை நாம் கானலாம்.
திருச்சின்னம் நெடுங்காலாமாக இரட்டையாகவே ஊதப்படுகிறது. கண்டறியபட்ட நடுகல் புடைப்பு சிற்ப்பங்களும் நமக்கு இதை உறுதி செய்கின்றன.
திருச்சின்னம் பற்றிய குறிப்புகள் தமிழக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
குவிந்து கூர்ந்து நிற்கும் முகப்பு இரண்டையும் ஒருசேர வாயில் வைத்து
ஊதவேண்டும். மிகுந்த பயிற்சியும், வலுவும் உள்ளவர்கள் மட்டுமே வாசிக்கத்
தகுந்தது இது. திருச்சீரணம், திருச்சூரணம் என்றும் அழைக்கப்படும். முற்காலத்தில் கோவில்களில் தாசரி இனத்தவர்
பெரும்பாலும் இதை இசைத்து வந்துள்ளார்கள்.
சிவபெருமான் சம்பந்தருக்கு முத்து சிவிகை
அளித்த நேரத்தில் திருச்சின்னமும் அளித்ததாக பெரியபுராணம் இயம்புகிறது. அது வரை சின்னம் என்று
அழைக்கப்பட்ட இக்கருவி இறைவன் அருளியதால் திருச்சின்னம் என்று அழைக்கப்படுவதாக சைவர்களின்
நம்பிக்கை.
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார
நிகழ்ச்சி நடக்கும்போது, சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தைச்
சேர்ந்த மக்கள் முருகனுக்கு ஆதரவாகவும், தியாகசமுத்திரம்
பகுதி மக்கள் சூரனுக்கு ஆதரவாகவும் செயல்படும் மரபு நெடுங்காலமாக உண்டு. இந்நிகழ்வின்
வீரியத்தை அதிகரிப்பதற்காக கிராமிய வாத்தியங்களோடு சேர்த்து திருச்சின்னமும்
இசைக்கப்படுவதுண்டு.
திருவரங்கத்தில் இசைக்கப்படும் 18 இசைக்கருவிகளில் திருச்சின்னமும்
ஒன்று. திரு ரஞ்சித்குமார் என்கிற கலைஞர் இசைக்கிறார்.
திருவரங்கத்திலும் மற்ற கோவில்களிலும் இசைக்கலைஞர்களுக்கு திருக்கோவில்
நிரந்தர ஊழியர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது நமது ஆசை. இதனால் இக்கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படும்.
சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூர் பெருமாள்
கோவில்கள் சிலவற்றில் திருச்சின்னம் இசைக்கப்படுகிறது. தனியார் வசம் உள்ள இக்கோவில்களில்
திருச்சின்னம், உடல் போன்ற கருவிகளை இசைக்க சரியான கலைஞர்கள்
நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஏதோ விளையாட்டு பொம்மை போல்
விழாக்காலங்களில் பழமையான இக்கருவிகள் சிறுபிள்ளைகளிடம் கொடுக்கப்படுகிறது.
பார்க்க படம். அவர்களும் தெரிந்த மட்டும் ஊதி இக்கருவிகளை
வாழ வைக்கிறார்கள்.
தொண்டை நாட்டு பெருமாள் கோவில்கள் சிலவற்றில்
திருச்சின்னம் ஊதப்படுகிறது.
காஞ்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் உடல் மற்றும் தாளத்துடன் சேர்த்து
திருமஞ்சனக் காலங்களில் திருச்சின்னம் இசைக்கிறார்கள். மேலும்
வாகன புறப்பாடு, மங்கல ஆரத்தி நேரங்களிலும் திருச்சின்னம் இசைக்கப்படுகிறது.
திருக்குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் கோவில் போன்ற சில ஆலயங்களில் ஆழ்வார்களுக்கு
பரிவட்டம்/சடாரி சாத்தும்பொழுது திருச்சின்னம் ஊதுகிறார்கள்.
சுமார் 600 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த வேதாந்ததேசிகன்
என்கிற வைணவ குரு திருச்சின்னமாலை என்கிற பதிகத்தை காஞ்சி வரதராசப்பெருமாள் மீது இயற்றியுள்ளார்.
இப்பாடல்கள் பெருமாளுக்கு விருது ஓதும் விதமாக அமைக்கபட்டுள்ளது.
இக்கோவிலில் வேதாந்ததேசிகனின் திருச்சின்னமாலைக்கு
மரியாதை செய்யும் விதமாக ஒற்றை திருச்சின்னம் பயன்படுத்துகிறார்கள்.
அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தா
ரானைபரி தேரின்மே லழகர் வந்தார்
கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரந் தருதெய்வப் பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தா
ருத்தரவே திக்குள்ளே யுதித்தார் வந்தா
ரும்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே.
திருச்சின்னமாலை – ஸ்ரீவேதாந்ததேசிகன்
முன்பு தமிழர் பகுதியாக இருந்த பல ஆந்திர
கோவில்களிலும் மேல்/கீழ் திருப்பதி கோவில்களிலும் திருச்சின்னம் புழக்கத்தில் உள்ளது. அசாம் மாநிலத்தில் நமது திருச்சின்னம் போன்ற இரட்டைக் கருவி ஒன்று
"ஜோடியா பேபா" என்கிற பெயரில் புழக்கத்தில் உள்ளது. எருமை கொம்பால்
செய்யப்பட்ட இக்கருவியை அவர்களின் பிஹு என்னும் பாரம்பரிய விழாவில் இசைக்கிறார்கள். நமது திருச்சின்னதின்
ஆரம்ப வடிவம் இப்படிக்கூட இருந்திருக்கலாம்.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
தொழில் ரீதியாக திருச்சின்னம் இசைக்கும் கலைஞர்கள் தஞ்சாவூருக்கு
அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலிலும், திருச்சியை ஒட்டியுள்ள சில கிராமங்களிலும் உள்ளார்கள். சிவ வாத்திய குழுவினர்
அனைவரும் திருச்சின்னம் கண்டிப்பாக வைத்துள்ளார்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (திரு PRK ரஞ்சித்குமார், திரு நாராயணசாமி)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்,காமாட்சி அம்மன் கோயில்கள்
குமரகோட்டம் முருகன்
கோயில்
திருவாரூர் தியாகராசப்
பெருமான் கோயில்
சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார
நிகழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருவண்ணாமலை பெருமாள் கோவில்
காஞ்சிபுரம் வரதராச
பெருமாள்,உலகளந்த பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள்,
அட்டபுயகர பெருமாள் திருக்கோவில்கள்
ஸ்ரீபெரும்புதுர்
ஆதிகேசவ பெருமாள் கோவில்
கும்பக்கோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில்
நாகப்பட்டினம்
சௌந்தராச பெருமாள் கோவில்
திருநாங்கூர் 11 பெருமாள் கோவில்கள்
திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவேங்கடம் திருவேங்கடமுடையான்
கோவில்
கீழ் திருப்பதி
கோவிந்தராஜப் பெருமாள் கோவில்
திருவாவடுதுறை ஆதீனம்
காஞ்சி சங்கர மடம்
பாடல்
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்
- சேக்கிழார் பெருமான் - திருமுறை 12.2093
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால்
துங்க வெண் குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும்
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் - சேக்கிழார் பெருமான் - திருமுறை 12.2099
காணொளி
தமிழகம்
அசாம்
-சரவண பிரபு ராமமூர்த்தி
(P. Sambamurthy,
Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum,
Chennai & வெ. நீலகண்டன், வாழ்விழந்து
வரும் கிராமிய இசைக் கருவிகள்)
2 comments:
ப்ரோ., உங்க கட்டுரையை படித்தேன்.,மிக அருமை.,அற்புதமான தொகுப்பு., திருச்சின்னம் பற்றி நிறைய அறிய முடிகிறது., தமிழர்களின் இசைக்கருவி அற்புத ஆற்றல் கொண்டது என்பதை கட்டுரை அருமையாக விளக்குகிறது.,நிறைய அறிந்து கொண்டேன் ப்ரோ..மகிழ்ச்சி., உங்களது கட்டுரைல எங்க ஊரு திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலளையும் குறிப்பிட்டுருக்கீங்க...மிக்க மகிழ்ச்சி,நெஞ்சார்ந்த நன்றிகள்., நமது இசைக்கருவிகளை அழிவில் இருந்து காக்க திருக்கோயில்களில் இசைக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்ற உங்களது கருத்து வரவேற்கத்தக்கது, தக்க சமயத்தில் தேவையான கருத்து...இது போன்று இன்னும் அரிய பெரிய ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு பெருமை கொள்ள வாழ்த்துகிறோம் ப்ரோ..மகிழ்ச்சி...
ப்ரோ., உங்க கட்டுரையை படித்தேன்.,மிக அருமை.,அற்புதமான தொகுப்பு., திருச்சின்னம் பற்றி நிறைய அறிய முடிகிறது., தமிழர்களின் இசைக்கருவி அற்புத ஆற்றல் கொண்டது என்பதை கட்டுரை அருமையாக விளக்குகிறது.,நிறைய அறிந்து கொண்டேன் ப்ரோ..மகிழ்ச்சி., உங்களது கட்டுரைல எங்க ஊரு திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலளையும் குறிப்பிட்டுருக்கீங்க...மிக்க மகிழ்ச்சி,நெஞ்சார்ந்த நன்றிகள்., நமது இசைக்கருவிகளை அழிவில் இருந்து காக்க திருக்கோயில்களில் இசைக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்ற உங்களது கருத்து வரவேற்கத்தக்கது, தக்க சமயத்தில் தேவையான கருத்து...இது போன்று இன்னும் அரிய பெரிய ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு பெருமை கொள்ள வாழ்த்துகிறோம் ப்ரோ..மகிழ்ச்சி...
Post a Comment