அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 6 - கொக்கரை

.


கொக்கரை/கொக்கறை – காற்றுக்கருவி


அமைப்பு
கொக்கரை இருவகைப்படும் - சிவவாத்தியமான கொக்கரை மற்றும் பழங்குடி காணிக்காரர்களின் கொக்கரை. நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை. அடி, நுனி, இடைப்பகுதியில் பித்தளைப் பூண் போட்டு அலங்கரித்து, நுனிப்பகுதியை சற்று சீவி ஊதும் வடிவம் செய்திருக்கிறார்கள். எக்காளத்தை விட சற்று சன்னமான ஒலியெழுப்பும்.
மற்றொரு கொக்கரை தமிழக பாபநாசம் மற்றும், கேரள மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான காணிக்காரர்களின் கொக்கரை. சிவவாத்தியமான கொக்கரைக்கு முற்றிலும் வேறு வடிவிலானது. ஒன்றரை அடி நீளம் கொண்ட இரும்புக்குழல். இதன் மேல்பகுதியில் குறுக்குவாட்டத்தில் பல கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கும். அக்குழலோடு சங்கிலியால் ஒரு இரும்புக்கம்பி பிணைக்கப்பட்டிருக்கும். குழலை கையில் பிடித்துக்கொண்டு அந்த கம்பியால் கோட்டுப்பகுதியை உரசும்போது ஒருவித மெய்சிலிர்க்கும் இசை எழும்புகிறது. இந்த இசைக்கு தாளக்கட்டுப்பாடுகள் இல்லை. இக்கருவியை அகத்தியர் இவர்களுக்கு வழங்கியதாக நம்புகிறார்கள்.

குறிப்பு
தமிழ்த்திணையில் பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை. கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி. இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள். கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன. திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை இடம்பெறுகிறது.  கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன. நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.  நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில், ”கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர்போலும் என்றொரு வரி இடம்பெற்றுள்ளது. கொக்கரை இசைக்குத் தகுந்த கூத்தாடும் ஈசன் என்று பொருள்படும் இவ்வரியே இதன் பழமைக்குச் சான்று. மேலும் சிவபெருமான் கொக்கரையின் இசைக்கேற்ப பாடுவதாகவும் நாவுக்கரசர் குறிப்பிடுகிறார் – ”கொக்கரை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா”. ”கொக்கரையன் காண்என்பது ஆறாம் திருமுறை. கொக்கரையை சிவபெருமான் விருப்பமுடன் சேகரித்து வைத்து இருப்பதாக குறிப்பிடுகிறார் அப்பரடிகள். சங்கரநாராயணக் கோலத்தை வருணிக்கும் 11ஆம் திருமுறை சிவ பாகமான வலப்புறம் கொக்கரை ஆட்டம் நடப்பதாகவும் திருமால் பாகமான இடப்புறம் குடமாட்டம் நடப்பதாகவும் குறிக்கின்றது. திருமாலுக்கு குடமாடுக்கூத்தன் என்கிற பெயரும் உண்டு (திருஅரிமேயவிண்ணகரம், திருநாங்கூர்,தமிழ்நாடு).





திருவாருர் தியாகராஜர் கருவறை அருகில் பூதகனமொன்று கொக்கரையை வாசிப்பது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தனை பெரும் சிறப்புகள் பொருந்திய இக்கருவி இன்று வழக்கொழிந்து விட்டது. கொக்கரை போன்ற பழந்தமிழர் கருவிகளை மீள ஆலயங்களில் இசைக்க முயற்சி செய்பவர்களுக்கு அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகம், நீதிமன்றம் என்று அனைத்து வழிகளிலும் தொல்லைகளும் தடைகளும் உள்ளன. உதாரணம் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் சிவவாத்திய குழுவினருக்கு எற்பட்ட இடர்களும் நீதிமன்ற தீர்ப்புகளும். எந்த கோவில் வழிபாட்டு விதியிலும் இல்லாத மின்சார வாத்தியக் கருவிகளை முதலில் கோவில்களில் இருந்து வெளியேற்ற வேண்டும். தற்போது பெரிய கோயில்களில் பராமரிப்பின்றி கிடக்கும் இசைக்கருவிகள் பாதுகாக்கப்பட வேண்டும். நெல்லை காந்திமதியம்மன்/ராமேச்வரம் கோவில் நகரா, காஞ்சி பெருமாள் கோவில்களின் உடல் மற்றும் நகரா, ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் திமிலை, திருவான்மியூர் மருந்தீச்வரர் கோவில் கனகதப்பட்டை, மேலும் பல கோவில்களில் ஆணிகளில் கேட்பாரற்று பழுதடைந்து தொங்கும் தவண்டை, உடல் போன்ற பழைமையான கருவிகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் இசைக்கப்பட வேண்டும். கருவிகளை இசைக்க கலைஞர்களை நியமிக்க வேண்டும். தவண்டை, நகரா போன்ற கருவிகளை இசைப்பவர்களின் நியமனத்துக்கு பட்டய சான்றிதழ் கேட்கும் அராஜகத்தை தமிழக அரசு கை விடவேண்டும். கலைஞர்களுக்கு உரிய சன்மானம் தரவேண்டும். கருவிகளை தகுந்த தட்பவெப்பத்தில், பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.(திருவரங்கத்தில் சில 100 ஆண்டுகள் பழமையான தக்கை என்னும் கருவி பாதுகாக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி விழாவில் இசைக்கப்படுகிறது) இசைக்கருவிகளின் பயன்பாட்டை அக்கோயிலுக்கு உரிய நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும். தற்போதுள்ள அரிய இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், அந்த நுட்பத்தை இளம் தலைமுறைக்கு போதிக்க வேண்டும். சிதைந்த நிலையில் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படும் கருவிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். கிராமிய இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கு உரிய மரியாதை/விருதுகள் வழங்கப்பட வேண்டும். இசைக்கருவி உற்பத்தியாளர்களும் ஊக்குவிக்கபட்டு கௌரவிக்கப்பட வேண்டும். தமிழர் இசைக்கருவிகளை வரிசைப்படுத்தி ஆய்வு செய்ய முனைவர்கள் முன்வர வேண்டும். இசைக்கல்லூரிகளும், அரசு சார்ந்த பண்பாட்டு அமைப்புகளும் இதை முன்னெடுக்க வேண்டும்.  புரவலர்கள் இதை செய்யும் இசை அறிஞர் மம்மது ஐயா போன்றவர்களின் முயற்சிகளுக்கு உதவ வேண்டும். திருகோவில்களில் இசைக்கருவிகளை இயக்கும் கலைஞர்களுக்கும் ஒதுவார்களுக்கும் பக்தர்கள் அர்ச்சகர்களுக்கு நிகரான மரியாதையும் தட்சணையும் கொடுக்க வேண்டும்.


தமிழக பழங்குடி இனத்தவர்களுள் காணிக்காரர்களும் அடங்குவர். கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மாவட்டம் பாபநாசத்திலுள்ள பொதிகை மலையில் மயிலாறு, சேவலாறு, இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். முருகன்/வள்ளியின் வாரிசுகளாக தங்களை கருதுகிறார்கள். இக்காணிக்காரர்களின் மிக இன்றியமையாத இசைகருவிகள் கொக்கரை, சீங்குழல் ஆகியவை. காணிக்காரர்கள் கொக்கரையை ‘கோக்ரா’ என்றும் சொல்வர். இவர்களின் வழிபாட்டு சடங்குகளில் கொக்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் தெய்வம் கருமாண்டியம்மன்/நீலியம்மன் என்னும் பெண் தெய்வம். தமிழும் மலையாளமும் கலந்த மலபாஷைமொழியில் அமைந்த சாற்றுப்பாட்டு’ இசையில் கடவுளையும் வனத்தையும் போற்றி பாடுகிறார்கள். பாடலுக்கு இசையாக கொக்கரையை வாசிக்கிறார்கள். ஆதி தமிழர்கள் இறைவனை வேண்டி சாற்றுப்பாட்டு பாடியதன் திரிபு வடிவம் தான் தற்காலத்தில் வைணவ கோவில்களில் பாடப்பெறும் சாற்றுமுறை சடங்காக இருக்கலாம். பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குளில் 20க்கும் மேற்பட்ட சாற்றுப்பாடல் வகைகளை இசைக்கிறார்கள். நோய்களை குணபடுத்தவும் இவர்கள் சாற்றுப்பாட்டு சடங்கையே நாடுகிறார்கள். இரவில் ஆரம்பித்து அதிகாலை வரை நோய்வாய்பட்டவர் முன்பு பிலாத்தி என்பவர் தலைமையில் சாற்றுக்காரர்கள் என்னும் சிலர் கொக்கரையை இசைத்துக்கொண்டே கடவுளை வேண்டி பாடுகிறார்கள். இதனால் நோய்கள் குணமாவதாக நம்புகிறார்கள். அரசாங்கம் காடுகளை இம்மக்களிடம் இருந்து பிடுங்கி இவர்களை வெளியேற்றி இவர்களின் மரபு சார்ந்த வாழ்க்கையை குலைத்துவிட்ட இத்தருணத்தில் சாற்றுப்பாட்டு சக்தியற்றதாகி விட்டது. கொக்கரைக் கருவி துருப்பிடித்து சிதைந்துவிட்டது. காணிக்காரர்கள் பலர் இன்று மதம் மாறிவிட்டார்கள்.
ஒரிசாவில் கருகாமா என்றும், மணிப்பூரில் கொய்செய் என்றும் எருமைக்/காளைக் கொம்புகளைக் கொண்டு செய்யபட்ட பழங்குடி இசைக்கருவிகள் உள்ளன. திருமணம்/வழிபாடு போன்ற நிகழ்வுகளில் இசைக்கிறார்கள்.


புழக்கத்தில் உள்ள இடங்கள்
திருவாரூர் தியாகராஜர் கோவில்
சில சிவன்/முருகன் கோவில்களில் சிவ வாத்திய குழுவினர் மாட்டுக் கொம்பாலான கொக்கறையை இசைக்கிறார்கள்.
தமிழக பாபநாசம், கேரள மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான காணிக்காரர்கள் இரும்பாலான கொக்கறையை இசைக்கிறார்கள்.

பாடல்
நான்காம் திருமுறை - திருநாகேச்சரம் - திருநாவுக்கரசர்
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே  .



நான்காம் திருமுறைபொது - திருநாவுக்கரசர்
விடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும் வாளரவும்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

திருமுறை 11 - மூத்த திருப்பதிகம்  - காரைக்காலம்மையார்           
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
    உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
    தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
    தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
    அப்ப னிடம்திரு ஆலங் காடே




திருத்தணிகை - திருப்புகழ் - அருணகிரிநாதர்
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
     டக்கைமு ழக்கொலி ...... யாலக்

கந்தபுராணம் - தெய்வயானையம்மை திருமணப் படலம் - கச்சியப்பர்
கொக்கரை படகம் பேரி குடமுழாக் கொம்பு காளந்
தக்கைதண் ணுமைத டாரி சல்லரி நிசாளந் தாளம்
மெய்க்குழல் துடியே பம்பை வேறுபல் லியமுந் தாங்கி
மைக்கடல் வாய்விட் டென்ன வரம்பிலோர் இயம்பிப் போனார்

காணொளி
தமிழகம்
கேரளம்
ஒரிசா
-சரவண பிரபு ராமமூர்த்தி
 (வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்)

No comments: