மகிமை பொருந்திய மகா சிவராத்திரி - வசுந்தரா பகீரதன்

.


சைவசமயத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் முழுமுதற் கடவுளாக சிவபெருமானையே வழிபடுவர். சிவனே முதற் கடவுள். இறைவன் ஒன்றானவன். உருவில் இரண்டானவன் உமாதேவியாரை தன் இடப்பக்கத்திலே கொண்டவர்.  தன்னுடலில் சரிபாதியை தன்தேவிக்கு தந்ததால் சிவனை அர்த்தநாரீஸ்வரர் என்றும் கூறுவர்.
சிவபெருமானின் முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் மேன்மையான விரதமாகும். மாசி மாதத்தில் வருகின்ற சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிவராத்திரி தினமாகும். சிவராத்தியில் முறைப்படி விரதமிருந்து சிவனை வணங்கியவர்களுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அவர்களைப் பீடித்திருக்கும் பாவங்களும் விலகியோடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
உலகமெங்கும் உள்ள ஆலயங்கள் யாவற்றிலும் இந்த சிவராத்திரி தினம் முக்கியத்துவம் பெறும். எல்லா ஆலயங்களிலும் இரவுமுழுவதும் சிவமந்திரங்களும் வேத பாராயணங்களும் ஓதப்படும்.
பொதுவாக விரதமிருப்பவர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் விரதம் எந்தவிதத் தடையுமின்றி நிறைவேறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வார்கள். எவ்வாறு கோவிலில் திருவிழாக்கள்ää மற்றும் உற்சவங்கள் யாவும் எந்தவித தடையுமின்றி நடைபெறவேண்டும் என முதலில் பிள்ளையாரை வேண்டிக்கொள்வார்கள். அதுபோல எந்தவிரதத்தையும் மேற்கொள்ளும்போது முதலில் பிள்ளையாரிடம் அந்த விரதம் தடையின்றி நிறைவேறவேண்டும் என வேண்டிக்கொண்டே விரதத்தை ஆரம்பிப்பார்கள்.




சிவராத்திரியில் முதல் சாமத்தில் சோமஸ்கந்தமூர்த்திக்கும் இரண்டாம் சாமத்தில் தென்முகக்கடவுளான தட்சணாமூர்த்திக்கும் மூன்றாம் சாமத்தில் லிங்கோற்பவருக்கும் நான்காம் சாமத்தில் சந்திரசேகரருக்கும் அபிஷேகஆராதனைகள் நடைபெறும். இந்த நான்கு சாமப் பூஜைவேளைகளில் சிவனை வழிபடுவதே சிவராத்திரியின் மகிமையாகும். சிவராத்திரியில் சிவனை வழிபடுவதால் மனம் தூய்மைபெறும். பாவங்கள் யாவும் விலகியோடும். இல்லறம் நல்லறமாக விளங்கும்.
காலையில் எழுந்து நீராடி ஆலயம் சென்று சிவனை வணங்கவேண்டும். உபவாசமிருந்து 4 சாமங்களிலும் இறைவனுக்கு மேற்கொள்ளப்படுகின்ற அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்கவேண்டும். சிவபுராணம்ää திருவிளையாடற் புராணம்ää நாயன்மார் கதைகள் போன்றவற்றைப் படிக்கவேண்டும்.  சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. விரதமிருக்கும் வேளையில் சிவாயநமää நமச்சிவாய போன்ற சிவமந்திரங்களை உச்சரித்தல் வேண்டும். இந்தத் தினத்தில் சிவனுக்கு வில்வமிலையால் அர்ச்சனை செய்தால் மேலான நன்மைகள் கிடைக்கும்.
சிவராத்திரி தினத்தில்தான் சிவபெருமான் உமாதேவியாருக்கு தன்னுடலில் சரிபாதியைக்கொடுத்தார் என்றும் அடிமுடி தேடிச்சென்ற விண்ணுவுக்கும் பிரமாவுக்கும் ஒளிப்பிளம்பாகத்தோன்றி காட்சிகொடுத்தார் என்றும் அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வாசுகிப்பாம்பிலிருந்து வந்த நஞ்சை விழுங்கி தனது தொண்டைக்குள் வைத்து உயிர்களைக் காத்ததும்ää கண்ணப்பநாயனார் தனது கண்களை சிவனுக்குக் கொடுத்ததும் மார்க்கண்டேயருக்கு வரமளித்ததும் இதுபோன்ற சம்பவங்கள் யாவும் இந்த சிவராத்திரி தினத்திலேயே நடந்தவை என புராணங்கள் கூறுகின்றன.
விரதங்களிலே மிகச் சிறந்த விரதமான சிவராத்திரி விரதத தினத்தில் ஆலய தரிசனம் செய்வது மிகச்சிறந்த புண்ணியமாகும். ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தும் சிவனை நினைத்து வழிபாடு செய்வதும் நன்மைதரும்.




No comments: