அமரத்துவம் எய்திய “கலைவளன்“ சிசு. நாகேந்திரன் அய்யாவுக்கு அஞ்சலி

.

   கல்வி நிதியத்தின் உறுப்பினர் அமரத்துவம் எய்திய   “கலைவளன்“ சிசு. நாகேந்திரன் அய்யாவுக்கு அஞ்சலி


                             
       இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில்  கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மெல்பனை தளமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நீண்ட கால உறுப்பினரான அன்பர் கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்கள் சிட்னியில் கடந்த திங்கட் கிழமை மறைந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து எமது நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது கல்வி  நிதியம்  இலங்கையில் நீடித்த உள்நாட்டுப் போரில் தமது தந்தையை அல்லது குடும்பத்தலைவரை இழந்து  வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு முதல் உதவி வழங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
இந்த அமைப்பில் , இதன் தொடக்க காலத்திலிருந்து இற்றைவரையில் இணைந்திருந்தவர் சிசு நாகேந்திரன் அய்யா அவர்கள். இந்த நிதியத்தின் ஊடாக சில மாணவர்களுக்கு தங்கு தடையின்றி உதவி வந்தவர் அய்யா.
                                    
இவரது உதவியைப்பெற்ற மாணவர்கள், இவருக்கு தமது நன்றிக்கடிதங்களையும் தமது கல்வி முன்னேற்ற அறிக்கைகளையும் ஒழுங்காக அனுப்பி  வந்தனர்.   சிசு அய்யாவும் அவ்வப்போது அம்மாணவர்களை  ஊக்கமுடன் கல்வியை தொடருமாறு கடிதங்கள் எழுதுவார்.
இவ்வாறு உதவிகளை பெற்ற மாணவர்களின்பால் சிசு அய்யா. மிகுந்த அன்பு பாராட்டியதை அவதானித்து வந்துள்ளோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் ( G.C.E. A/L Exam )  தோற்றிய இவரது நிதியுதவி ஆதரவைப்பெற்ற  வடபுலத்தில் தெல்லிப்பளையைச்சேர்ந்த மாணவர் ஒருவர், சிறந்த புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞான கற்கை நெறிக்கு தெரிவாகியிருப்பதாக, எமது கல்வி  நிதியத்தின் வடமாகாண தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையம் தகவல் தெரிவித்ததையடுத்து, இந்த நற்செய்தியை சிசு அய்யாவுடன் அண்மையில் தொலைபேசி வாயிலாக பகிர்ந்துகொண்டோம்.
அந்தச்செய்தியை கேட்டதும், மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது, அய்யாவின் மறைவுச்செய்தியை அம்மாணவருக்கும் எமது தொடர்பாளர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய ஆழ்ந்த துயரமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
தனது வாழ்நாளில் எமது தமிழ் சமூகத்திற்காக சிசு அய்யா அவர்கள் அயர்ச்சியின்றி மேற்கொண்ட தன்னார்வ பணிகள் முன்மாதிரியானவை.
அவர் சமூகப்பணியாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர், கலைஞர். படைப்பாளர். படைப்பாளிகள் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கவேண்டும் என்ற கருத்தினைக்கொண்டவர். அவ்வாறே அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
சிசு. நாகேந்திரன் அய்யாவின் மறைவுச்செய்தி அறிந்து எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவிக்கின்றோம்.
" அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,   ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் ,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" 
என்ற மகாகவி   பாரதியின்  உயிரோட்டமான சிந்தனைக்கு ஏற்ப வாழ்ந்த பெருந்தகைதான் எங்கள் சிசு நாகேந்திரன் அய்யா அவர்கள்.
அன்னாரின் திடீர் மறைவினால், ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அவர் அங்கம் வகித்த அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் அனைவரது துயரத்திலும் நாம் பங்கெடுக்கின்றோம்.
லெ. முருகபூபதி
       தலைவர்
 இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா
Kalvi.nithiyam@yahoo.com                                             www.csefund.org


No comments: