மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 23 - முருகபூபதி முருகபூபதி

.அபிதா வீதிக்கு இறங்கி நடந்துகொண்டிருந்தபோது, அவள் வேலைசெய்யும் வீட்டைப்பற்றி   நன்கு தெரிந்தவர்கள் சிலர் அவளைக்  கடந்து , அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச்சென்றனர்.
அவர்களில் ஒருத்தி, தனது மகள் போன்ற தோற்றமுள்ள யுவதியிடம்  “ அது,  ஜீவிகா வீட்டில் வேலைக்கிருப்பவள்தானே..?  “ என்று தனக்குத் தெரிந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
 “ யார்… எங்கே  வேலைக்கிருந்தால் , உங்களுக்கு என்னம்மா..? பேசாமல் வாங்க.. “
அவர்கள் மெதுவாகப்பேசிக்கொண்டு சென்றது அபிதாவுக்கு தெளிவாகக் கேட்டது. அபிதாவுக்கு காது மிகவும் கூர்மை. சின்னவயதில் வீட்டில் அவளை எலிக்காது என்றும் அழைப்பார்கள். எலிகளுக்கு பூனையின் அரவம் நன்கு கேட்குமாம் என்பது அபிதாவுக்கு பின்னர்தான் தெரியவந்தது.
அந்தப்பெண்ணின் சந்தேகத்திற்கு தான் அன்று வெளியே வரும்போது  அணிந்திருக்கும் ரோஸ் கலர் சாரியும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைக்காரிகள் சாரி அணிவது தவறா!?  அபிதா தனக்குள் சிரித்தவாறு விரைந்து நடந்தாள்.

வீதியோரத்தில் இரண்டு தெருநாய்கள், ஒரு வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கழிவு பேக்குகளை பாகம் பிரிப்பதற்கு சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
மாநகர சபை சுத்திகரிப்பு வாகனம் வருவதற்கு தாமதமானால், நாய்களும், பூனைகளும்,  காகங்களும் அழுக்கு கழிவுகளுக்காக போர்க்களத்தில் இறங்கிவிடும்.


அபிதா, வேர்ல்ட் கொமியூனிக்கேஷன் சென்டரின் கண்ணாடிக்கதவை தள்ளித்திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.
அங்கு நறுமணம் மிக்க ஊதுவத்தி வாசனை பரவியிருக்கிறது. சுவரில்  பிள்ளையார், முருகன், யேசு, புத்தர் படங்கள் தொங்கின. அவற்றுக்கு பூச்சரமும் அணிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களை கவர்ந்து வரவேற்பதற்காக  கடவுளும் இறை தூதர்களும் காட்சியளிப்பதாகவே அபிதாவின் மனதிற்குப்பட்டது.
வரவேற்பாளர் கவுண்டரிலிருந்த பெண்ணிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வந்த காரணத்தை நினைவுபடுத்தினாள்.
அந்தப்பெண்ணுக்கும் அபிதாவின் வயதிருக்கும். அவள் உள்ளே  ஒரு பிரதியெடுக்கும் இயந்திரத்திடம் நின்று அச்சிட்டுக்கொண்டிருந்த பெண்ணை அழைத்தாள்.

 “ செல்வி, இங்கே ஒருக்கா வாரும். இவுங்கட பெயர் அபிதா. இன்று முதல் இங்கே வருவாங்க.  தினமும் ஒரு மணிநேரம்தான் பயிற்சி. சொல்லிக்கொடுக்கவேண்டும். இவங்களுக்கு ஒரு மின்னஞ்சலும் திறந்து கொடுக்கவேண்டும்…. சரி, நீங்க அந்த அறைக்குப்போங்க.. செல்வி உங்களுக்கு சொல்லித்தருவா. 
 “ தேங்ஸ்… உங்கட பெயர்…? “
 “ தேவகி. உங்கட சொந்த ஊர் எங்கே..? “
 “ முல்லைத்தீவு.  இங்கே வீட்டு வேலைக்கு வந்திருக்கிறேன். எட்வான்ஸ் லெவல் வரையும் படித்திருக்கிறேன். 
 “ அட… அதுவரையும் படித்துவிட்டுத்தானா,  இந்த வீட்டு  வேலைக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்க… ஆச்சரியமாக இருக்கிறது.. “
 “ எந்த வேலை செய்தால்தான் என்ன… எனக்கு இந்த வேலை நன்கு பிடிச்சிருக்கு.  “ என்றாள் அபிதா.

 “ நீங்க இங்கே கம்பியூட்டர் படிக்க வருவது, அந்த வீட்டுக்காரர்களுக்குத் தெரியுமா…?   “ இப்படியும் ஒரு கேள்வியை அந்த தேவகி கேட்பாள் என்று அபிதா எதிர்பார்க்கவில்லை.
 “ ஓம்…. ஓம்… தெரியும். சொல்லிவிட்டுத்தான் வருகிறேன். அங்கே  எல்லோரும் வேலைக்குச்செல்லும் பெண்கள்தான்.  அவர்களின் தேவைகள், வீட்டு வேலை, சமையல் வேலையெல்லாம் செய்துவிட்டு, பொழுதுபோகாமல் இருப்பதனால்தான் இந்த பயிற்சிக்கு வந்தேன். “
  அந்த வீட்டில்தானே கற்பகம் ரீச்சரும் இருக்கிறாங்க..? “
இந்தக்கேள்வியினால், அபிதா சற்று அதிர்ந்துவிட்டாள். பதிலுக்கு தலையாட்டினாள்.

 “ என்னுடைய  சின்னத்தம்பியும் அந்த ஸ்கூலில்தான் படிக்கிறான். அதுதான் கேட்டேன்  “ என்றாள் தேவகி.
அதற்கு மேலும் தொடராமல், தேவகி  காண்பித்த அறைக்குள் அபிதா பிரவேசித்தாள். அந்த அறையில் ஆறு கம்பியூட்டர்கள் இருந்தன. இரண்டில் இரண்டு பெண்பிள்ளைகள் ஏதோ தட்டிக்கொண்டிருந்தனர்.
செல்வி என்ற பெண் அபிதாவின் அருகில் வந்து, அமரச்செய்துவிட்டு, கணினியை இயக்கினாள்.

   உங்களுக்கு மின்னஞ்சலும் திறந்து கொடுக்குமாறு தேவகி சொன்னாங்க.  என்ன பெயரில் திறப்போம்…? “ செல்வி கேட்டாள்.
அபிதாவிடத்தில் அதுவரையில் மின்னஞ்சல் பாவனை இல்லை. சற்று யோசித்தாள்.  மகளதும் கணவனதும் பெயர்களை இணைத்துச்  சொன்னாள்.
சில நிமிடங்களில் அபிதாவுக்குரிய மின்னஞ்சல் தயாரானது.  அதனைத் திறப்பதற்கான Pass word உம் தெரிவானது. அந்த Pass word வேறு எவருக்கும் தெரியாமலிருக்கவேண்டும் என்று செல்வி எச்சரித்தாள்.
உடனே, கைவசம் எடுத்துச்சென்ற கொப்பியின் இறுதிப்பக்க மூலையில் அதனை குறித்துவைத்துக்கொண்டாள்.

 “ முதலில் ஆங்கிலத்தில் தட்டி பதிவுசெய்து பழகுங்க.  கீபோர்ட் பழக்கத்து வரும் வரையில் பயிற்சியை தொடர்ந்தால் நல்லது.  “ எனச்சொன்ன செல்வி, ஒரு ஆங்கிலப்பத்திரிகையிலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக்காண்பித்து, மவுஸை எவ்வாறு நகர்த்தவேண்டும், பதிவுசெய்ததை எவ்வாறு சேமிக்கவேண்டும் முதலான முதற்கட்ட பயிற்சிகளை சொல்லிக்கொடுத்தாள்.

அபிதாவுக்கு சற்று பதட்டமாகவும் இருக்கிறது. இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டாள். அந்த அறை குளிரூட்டப்பட்டிருந்ததையும் அபிதா உணருவதற்கு தாமதமானது.
 நீடித்த போர் முடிவுற்று அகதிமுகாம் வாழ்க்கை, பின்னர் மீள் குடியேற்றம், இடப்பெயர்வு ,  வாழ்வாதாரத்திற்கு சில பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது  என்றே அவளது வன்னிப்பிரதேச வாழ்க்கை எப்படியோ ஓடிவிட்டது.

உடையார்கட்டில்  அமைந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின்  மேற்பார்வையில் இயங்கிய ஒரு வாசிக சாலையில், கம்பியூட்டர் பயிற்சி நடந்தபோது, ஒரு சில நாட்கள்தான் சென்று வந்தாள்.
அதற்கிடையில் அவள் சந்தித்த பிரச்சினைகள் அநேகம். அவற்றையெல்லாம் கடக்க திராணியற்றுத்தான், நிகும்பலைக்கு புறப்பட்டு வந்தாள்.

புதிய பிரதேசம், புதிய மனிதர்கள், எந்த சில்லெடுப்பும் இல்லாத அமைதியான வாழ்க்கை. தொடக்கத்தில் சிடு சிடுவென இருந்த மஞ்சுளாவும் முற்றாக மாறிவிட்டாள்.
இன்னமும் கற்பகம் ரீச்சரைத்தான் தன்வசம் நெருங்க வைக்கமுடியவில்லை என்ற மனக்குறையைத்தவிர வேறு எந்தப்பிரச்சினையும் தற்போதைக்கு அவளுக்கு இல்லை.
எனினும், இன்று காலை கற்பகம் குறிப்பிட்ட ஜீவிகாவின் பெரியப்பா பற்றிய முன்னோட்டக்கதையினால், அவள் சற்று மனம் குழம்பியிருந்தாள்.
அகப்பையும் கரண்டியுமாகத்தான் இருக்கவிரும்பியவளுக்கு செருப்பையும் தூக்கவேண்டி வந்துவிடுமோ என்ற யோசனையும் வந்தது.
அந்த பெரியப்பா யாரைப்போன்று  இருப்பார்…?  கணினியின் திரையை அவதானித்துக்கொண்டிருந்தாலும் மனக்கணினியில் சில ஆண்களின் தோற்றம்தான் புகை படிந்து வந்துகொண்டிருந்தது அவளுக்கு.
கற்பகம் ரீச்சர் சொன்ன அந்த மனுஷனா எனக்கு வேலை தந்தது…?   அந்த வீடு அவருடையதாக இருக்கலாம். ஆனால், என்னை  அழைத்தது, அவரது பெறாமகள்தானே..! எது நடந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கவேண்டும். முன்னர் இருந்த வேலைக்காரிகள் அங்கிருந்து அகன்றதற்கு அந்த பெரியப்பாதான் காரணம் என்று கற்பகம் ரீச்சர் பெரிய குண்டைப்போட்டதுதான் இந்தப்பதகளிப்புக்கு காரணம் .
    எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதுதான்    தீர்க்கமாக முடிவுசெய்துகொண்டு ஆங்கில எழுத்துக்களை தட்டிக்கொண்டிருந்தாள்.

ஜீவிகா, தனது அலுவலகத்தில் கணினியின் முன்னமர்ந்து தமிழில் செய்திக்கட்டுரை எழுதிக்கொண்டிருந்தாள். நேரத்தைப்பார்த்தாள்.  முற்பகல் பதினொரு மணிக்கு இன்னமும் பத்து நிமிடங்கள் இருந்தன.
திடீரென அவளுக்கு அபிதா  பற்றிய யோசனை வந்தது.  வீட்டு வேலைகளுக்கும் சமையல்  வேலைக்கும் வந்திருப்பவளுக்கு, ஏன் திடீரென கம்பியூட்டர் படிக்கவேண்டுமென்ற ஆசை வந்தது…?
அபிதாவை வேலைக்கு அழைத்துக்கொள்ளும்போது, அவளுக்கு சமைக்கத் தெரியுமா..? வீட்டுப்பணிப்பெண் வேலை செய்த முன் அனுபவம் இருக்கிறதா..? என்றெல்லாம் கேட்கத் தெரிந்த எனக்கு, ஏன் அவளது கல்வித்தகைமை பற்றி கேட்கத் தோன்றவில்லை.
கல்விப்பொதுத் தராதர உயர்தர வகுப்பு வரையில் படித்திருக்கும் அபிதா, எதற்காக  வீட்டு வேலைக்காரியாகவும் சமையல்காரியாகவும்  மாறினாள்…?
அவளிடத்தில் வேலை வாங்கத் தெரிந்த எனக்கு, அவளை ஒரு சகமனுஷியாக பார்க்கத்தெரியாமல் போய்விட்டதே. இந்த இலட்சணத்தில் நானும் என்னை ஒரு பெண்ணிலைவாதி என அழைத்துக்கொள்கின்றேன். பெண்ணியம் பற்றி பேசுகின்றேன். எழுதுகின்றேன்.
வீட்டில் இருப்பதோ நான்கு சிறிய சிறிய படுக்கை அறைகள். நான்கையும் நானும் சுபாஷினியும் மஞ்சுளாவும் கற்பகம் ரீச்சரும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். அபிதாவுக்கு சமையலறைப்பக்கமாக சிறிய களஞ்சிய அறையை ஒதுக்கியாயிற்று.  பாவம்,  இன்னமும் தரையில் விரித்த பாய்தான் அவளது படுக்கை.  பெரியப்பா லண்டனிலிருந்து திடீரென வந்துவிட்டால், இங்கு எத்தனை நாட்கள் தங்குவார்…? அவருக்கு வீட்டில் எந்த அறையை ஒதுக்கிக்கொடுப்பது. அது அவரது வீடு.
இரவில் வீட்டின் கூடத்திலிருக்கும் பெரிய ஷோபாவை தனது படுக்கையாக்கிக்கொண்டு, பெரியப்பாவுக்கு தனது அறையை கொடுக்கும் தீர்மானத்திற்கு ஜீவிகா வந்தாள்.

ற்பகத்திற்கு, வகுப்பறையில் மாணவர்களில் கவனம் செலுத்த இயலாமலிருக்கிறது. தமிழ்ப்பாட நூலில் ஒரு கட்டுரையை    வகுப்பு மாணவர்களிடம் தெரிவுசெய்து கொடுத்துவிட்டு, அதனைப்படித்து, அதன் சாராம்சத்தை சுருக்கமாக எழுதச்சொன்னாள்.
டெங்கு காய்ச்சல் வந்து ஏற்கனவே லீவுகள் எடுத்தாயிற்று. இல்லையென்றால், சுபாஷினி, மஞ்சுளாவுடன் நுவரேலியா செல்வதற்கு தயாராகலாம். எல்லோரும் புறப்பட்டால், லண்டனிலிருந்து வரவிருக்கும் ஜீவிகாவின் பெரியப்பாவும், அந்தப்பயணத்தில் இணைந்துகொள்ள விரும்பினால் என்ன செய்வது..?
அவ்வாறு அந்த அறுபத்தியைந்து வயது மன்மதன் இந்தக்குமருகளுடன் பயணத்தில் இணைந்துகொண்டால், எதுவும் பேசாமல், அபிதாவுடன் வீட்டில் இருந்துகொள்வதுதான் உத்தமம் என்ற தீர்மானத்திற்கு கற்பகம் வந்தாள்.
நேரத்தை பார்த்தாள். மதியம் பன்னிரண்டு மணி கடந்துகொண்டிருந்தது.

ஞ்சுளா,  வங்கியில் மிகவும் பிஸியாக இருந்தாள். அடிக்கடி வங்கி முகாமையாளரின் அறைக்குச்  சென்று வரவேண்டியிருந்தது. மாதாந்த கணக்கறிக்கை தயாரிக்கும் பொறுப்பு வாய்ந்த வேலை அந்த மாத இறுதியில் அவள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
அன்று மதியத்திற்கு மேல்,  சற்றும் எதிர்பாராதவகையில் அந்த சிங்கள முகாமையாளர் மஞ்சுளாவிடம் கேட்ட தனிப்பட்ட கேள்வி அவளை திக்குமுக்காடச்செய்துவிட்டது.

 “ மிஸ் மஞ்சுளாவுடன் ,  ஐந்து நிமிடம் பேசவேண்டும். “ 
  யெஸ் சேர். சொல்லுங்கள்..”
 மேசைக்கு முன்னாலிருந்த ஆசனத்தில் அமருமாறு முகாமையாளர் கண்ணால் சைகை காட்டிவிட்டு, அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி, கண்ணாடிக்கூடுக்குள்ளிருக்கும் மென் மஞ்சள் துணியால் துடைத்தார்.
மஞ்சுளா ஆழ்ந்த யோசனையுடன்  முகாமையாளருக்கு முன்னாலிருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.
  மிஸ் மஞ்சுளா,  உங்களுடன் ஒரு தனிப்பட்ட விடயம் பேசவேண்டியிருக்கிறது. “ 
 “ சொல்லுங்க சேர்.. “  அப்பாவின் வயதிலிருக்கும் இந்த மனுஷன் என்ன கேட்கப்போகிறதோ...? என்ற யோசனை மஞ்சுளாவுக்கு வந்தது.
 “ இன்று காலையில் எனக்கு ஒரு போன் கோல் வந்தது. உங்களது பெயரைச்சொல்லி, விசாரித்தார்கள். பேசியது பெண்குரல். உங்கள் அப்பாவின் பெயரையும் சொல்லி கேட்டபடியால், அது நீங்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து, ஓம் மிஸ் மஞ்சுளா சிவகுமாரன் இங்கேதான் வேலை செய்கிறாங்க என்றேன். அது சரி, மஞ்சுளா,  கேட்கிறேன் என்று என்னை தவறாக நினைக்கக்கூடாது. இது உங்கள் தனிப்பட்ட விடயம். எனக்கும் உங்கட வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.  நீங்கள் இப்போது அம்மா – அப்பாவுடன் இல்லையா..? தனியாவா இருக்கிறீங்கள்…? 
முகாமையாளரின் முகத்தை  அதுவரையில் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுளா, இந்த எதிர்பாராத கேள்வியினால், சட்டென தலை கவிழ்ந்து, “  யெஸ் சேர்  “ எனச்சொல்லி தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

 அவளது கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் உடைந்து விழுந்தது, கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டாள்.
  வெரி சொறி மிஸ் மஞ்சுளா… உங்களின் பேர்சனல் விடயம் இது. எதுவும் கேட்கமாட்டேன். உங்கட அம்மாவுக்கு உங்களை பார்த்துப்பேசவேண்டுமாம். உள்நாட்டிலிருந்தும்  நீண்டகாலம் பார்க்கவில்லையாம்.  நீங்கள் இங்கேதானா பணியிலிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு கேட்டாங்க. அவுங்க அழகாக ஆங்கிலத்தில் பேசினாங்க. நன்கு  படித்த பெண்ணாக இருக்கவேண்டும். அம்மாவுடன் ஏதும் கோபமா..? அப்பா எங்கே..? 
அதற்குமேலும் மஞ்சுளாவுக்கு அந்த அறையில் இருக்க முடியாதிருந்தது.  சட்டென எழுந்தாள்.

 “ சேர்… வெரி சொறி.  அது பெரிய கதை.  இப்போது அது அவசியமில்லை. அம்மா வேறு என்ன சொன்னாங்க…? “
 “ வேறு எதுவுமே சொல்லவில்லை. மிஸ் மஞ்சுளா சிவகுமாரன் இந்த வங்கியில்தானே பணியிலிருக்கிறாங்க என்பதை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வந்த கோலாக இருக்கவேண்டும். உங்கள் அம்மா என்றும் சொன்னதனால், மேலும் இரண்டொரு வார்த்தைகள் பேசவும் கேட்கவும் வேண்டியதாகிவிட்டது. ஒன்று மாத்திரம் நிச்சயம். உங்கட அம்மாவுக்கு ஏதோ அவசரம் போலத் தெரியுது. உங்களை பார்க்க வரப்போகிறார்கள் போலும். உங்கட போன் இலக்கம் கேட்டாங்க.  தெரியாது என்று சொன்னேன். 
  தகவலுக்கு நன்றி சேர்.   நான் என்னுடைய மேசைக்குப்போகிறேன் சேர். “  மஞ்சுளா மீண்டும் கண்களை துடைத்துக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அந்த வங்கியில் சில கண்கள் தன்னையே  பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு.
( தொடரும் )   

 
 

No comments: