மேகலா – அஷ்விதா இணந்த பரதக் கச்சேரி - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

.


 


  அபினய சரஸ்வதி என கலை உலகு போற்றும் பாலசரஸ்வதி அம்மையார் தனது ஐம்பது வயதையும் கடந்தபின் கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரிதத்தில் வரும் “நந்தி விலகாதோ” என்ற பாடலுக்கு ஆடினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன் கோயிலுனுள் போக முடியாது. நந்தியோ மலை போல் படுத்து வழி மறிக்கிறது. பாலசரஸ்வதி அபினயித்தார். நந்தன் சிவ தரிசனம் பெறப் பட்டப் பாட்டையெல்லாம் பார்வையாளரைக் கவர வைத்தார். பார்வையாளராக மண்டபத்தில் அமர்ந்திருந்த நான் ஓடிப்போய் நந்தியை விலக்க மாட்டேனோ என பதைபதைத்தேன். மேடையில் நந்தியும் கிடையா, தில்லை சிதம்பர நாதரின் உருவ அமைப்பும் கிடையா. ஆனால் பார்வையாளரை அத்தனையும் அங்கே உள்ளதாக உணரவைத்தார், பாலசரஸ்வதி என்ற நர்த்தகி. இதுதான் பரதக் கலையின் சிறப்பு. இவ்வாறு மக்கள் மனதில் உணர்வை ஏற்படுத்த முடியும் என்றால் அந்தக் கலைஞருக்கு வயது ஒரு வரன்முறையா?

  73 வயதில் தனது இரு பெண்களுடன் இணைந்து ஆடியும் தனித்தாடியும் மக்களை மகிழ்விக்கிறார் ஹேமா மாலினி.






  Feb 8 ஆம் திகதி 2020 Bankstown இல் உள்ள Bryan Brown Theater இல் தாயும் மகளுமாக மேகலாவும் அஷ்விதாவும் பாலமுரளியும் இணைந்து ஆடினார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும்படி என்னை அழைத்தார்கள். மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன். Bankstown இல் அதே மண்டபத்தில் 50 வயதில் எனது மகனுடன் ஆடிய ஞாபகம், அதுவே எனது இறுதிக் கச்சேரியும். எனது ஆடலைப் பார்வையுற்ற எனது சம்மந்தி “கார்த்திகா, நீர் ஆடுவதை நிறுத்த வேண்டாம். மேலும் பல காலம் உம்மால் ஆட முடியும்” என்றார். உடல் உறுதியுடன் மக்களைத் தன்னுடன் இணைத்து அபினயிக்கும் திறமையும் இருக்குமானால் நர்த்தகிக்கு வயது எல்லை கிடையாது என்பதை 40 வயது மேகலா அன்று ஆடி நிரூபித்தார்.

  சம்பிரதாயபூர்வமாக அமைந்த பரதக் கச்சேரி, புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பமாகி வினாயகர் ஸ்துதி என தொடர அஷ்விதா, மேகலா இருவருமே இணைந்து நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து அஷ்விதா தனியாக மிஸ்ரசாப்பு அலாரிப்பை ஆடினார். ஆசிரியை சுகந்தி தயாசீலன் ஆடலை அமைத்திருந்தார்.

  அடுத்து மைசூர் வாசுதேவாச்சாரியாரின் ஆரபி இராக ஜதீஸ்வரம். ஆடல் அமைப்பு N.S.ஜெயலக்ஷ்மி. அதைத் தொடர்ந்து வந்த கௌத்துவமே புதுமையானது. தந்தைக்கு அஞ்சலியாக அமைந்திருந்த்து. மதுரை R.முரளீதரனால் ஆக்கப்பட்டது. இரு நர்த்தகிகளுமே தமது தந்தையருக்கு இதை உணர்வுபூர்வமான அஞ்சலியாக சமர்ப்பித்தனர். சுகந்தி தயாசீலன் ஆடலை அழகாக நெறியாண்டிருந்தார்.





  நர்த்தகிகளின் முழுத் திறமையையும் பரீட்சிப்பது போன்று அமைவது பதவர்ணம். “அங்கையற் கண்ணி மீனாட்சி” மதுரை முரளீதரனின் ஆக்கமே. மீனாட்சி அம்மனின் திரு அவதாரம் தொடக்கம் அவரது பல செயல்களை இரு நர்த்தகிகளுமே இணைந்து உருவகப்படுத்தினர். இறுதியில் பலரையும் வெற்றி கொண்ட மீனாட்சி கைலயங்கிரியிலே தேவ கணங்களையும் தோற்கடிக்கிறாள். இறுதியிலே சிவனாரே வருகிறார். அவரைக் கண்டதுமே அவர் கவர்ச்சியில் தன்னை இழந்தாள் நங்கை. அவரால் கவரப்பட்டவள் தன்னுள் பொதிந்துள்ள பெண்மை மேலிட நாணித் தலைகுனிகிறாள். சொக்கநாதர் அவளுக்கு மாலையிட்டு அவளை தனதாக்குகிறார். ஆடல் விறுவிறுப்பாக நேரம் போனதே தெரியாது அமைந்திருந்தது.

  இடைவேளையின் பின் மேகலா தான் தனியாக அபிநயிக்க, அருணாசல கவிராயரின் இராம நாடகத்தில் இருந்து ஒரு பாடலை தெரிவு செய்து, தானே நெறியாள்கையும் செய்திருந்தார். இராமன் 14 ஆண்டு காடேக வேண்டும் எனும்போது தனது மனைவியான மெல்லியலாள் சீதை காடேக முடியாது என எண்ணி அவளை அரண்மனையில் விட்டுப் போக எண்ணுகிறான். ஆனால் அவளோ, “எப்படி மனம் துணிந்தீர், இவ்வாறு செய்ய” என ஆரம்பித்து, தான் உடன் வருவதற்கான சகல நியாயங்களையும் எடுத்துக் கூறுகிறாள். மேகலா உணர்ந்து ஆடினார்.



  “சின்னச் சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா” என அஷ்விதா சின்னக் கண்ணனை அழைத்தார். அந்தக் கண்ணன் காளிங்கனை வென்று ஆடினான். அஷ்விதா திறமை மிக்க நர்த்தகி என அவரது ஆடல் நிரூபித்தது.

  தில்லானாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. பாலமுரளி தம்பதியரின் கடைக்குட்டி சஞ்சாய் குழந்தைத்தனம் மாறாப் பாலகன். தனது குருவான பவன் சிவகரன் தாளம் போட மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் வாசித்து யாவரின் பாராட்டையும் பெற்றான்.

  இசை இன்றி ஆடல் இல்லை, அன்றைய பரத நிகழ்ச்சியில் இசை வல்லுநர்களின் திறமையும் ஒத்துழைப்பும் கச்சேரிக்கு மெருகூட்டியது.

நட்டுவாங்கம் – சுகந்தி தயாசீலன்
பாடல் – அகிலன் சிவானந்தன்
மிருதங்கம் – ஜனகன் சுதந்திர்ராஜ்
வீணை – முடிகொண்டன் N.S.றமேஷ்
வயலின் – காஞ்சனா செந்தூரன் 






















No comments: