.
மாணவர்களை....., மக்களை,,,,,
முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.
முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.
தற்போது உலகெங்கும் பேசு பொருளாக மாறியிருப்பது கொறனா வைரஸ் என்ற ஆரம்பிக்கப்பட்டு இன்று கோவிட் 19 (COVID-19) என உலக சுகாதார நிறுவனத்தால் புதிய பெயரிடப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.
இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயாக உலாவரும் இது சீனாவில் மையம் கொண்டிருப்பது பலரும் அறிந்த செய்தி. மனித உடம்பில் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தி தான் இன்று வரை இந்த நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொது விதியாக இருக்கின்றது.
நோய் தொற்றாளர்களின் அளவும், இறப்பு வீதமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனாலும் இதனைக் கட்டிற்குள் கொண்டு வர திருப்திகரமான முன்னெச்சரிகை நடவடிக்கைகளை சீனாவும், உலகும் எடுத்திருப்பது மகிழ்ச்சியான நம்பிகை தரும் விடயங்கள்.
ஆனால் சீனாவிலேயே கிட்டத்தட்ட 100 வீத அளவில் இதன் தாக்கம் இருப்பதுவும் இது ஒரு சீன நோய் என்பது போலவும் இதன் அடிப்படையில் சீன மக்களை வெறுத்து விலகி நடப்பதும், அவர்களின் தொழில்சார் இடங்களைத் தவிர்ப்பதுவும் வருத்தத்திற்குரியது, சரியானதும் அல்ல.
இது எச்சரிகையான செயற்பாடுகளுக்கு அப்பால் வெறுப்பிற்குள்ளாக்கும் செயற்பாடாக இன்று பல இடங்களில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது
இதற்கு ஒருபடி மேலே போய் மரணங்களின் எண்ணிக்கையை கண்டு '......உவர்களுக்கு உது வேண்டும். இலங்கையிற்கு குண்டு கொடுத்தவர்கள்... கம்யூனிஸ்ட்டுகள் என்ற வெறுப்புப் பேச்சுகள் சரியானதும் அல்ல நாகரீகமற்றவை, மனிதாபிமானம் அற்றவை ஏன் கண்டனத்திற்குரியவை.
இதற்கு ஒருபடி மேலே போய் மரணங்களின் எண்ணிக்கையை கண்டு '......உவர்களுக்கு உது வேண்டும். இலங்கையிற்கு குண்டு கொடுத்தவர்கள்... கம்யூனிஸ்ட்டுகள் என்ற வெறுப்புப் பேச்சுகள் சரியானதும் அல்ல நாகரீகமற்றவை, மனிதாபிமானம் அற்றவை ஏன் கண்டனத்திற்குரியவை.
என் படலையைத் தட்டாதவரை இந்த நோய்த் துன்பங்களை, மரணங்களை கொண்டாடும் மனநிலை ஒருவகை மனித நேயத்திற்கு எதிராக மனநோயின் வெளிப்பாட்டாக தவிர வேறு எப்படி பார்க்க முடியும். இங்கு சீனப் பொருளாதாரத்தின் சரிவு நிலையைக் கண்டு தனது மனதிற்குள் சிரித்துக் கொள்ளும் மனநிலையில் சீனாவை விரும்பாத நாடுகள் இருக்குமாயின் இதனைவிட கேவலமான ஒரு நிலைப்பாடு இருக்க முடியாது.
இன்று காலை எனது யோகா வகுப்பில் என்னைத் தவிர மற்றயவர்கள் யாவரும்(சிலர் மௌனம் மூலம் ஆமோதித்தனர்) இதே மனநிலையைக் கொண்டிருந்தது எனக்கு ரொம்பவும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், கவலையும் ஏற்படுத்தியிருந்து. அதுவும் இதில் அனேகர் தமது 50 களை கடந்தவர்கள். பிள்ளை குட்டிகளைக் கண்டு தற்போது வசதி வாய்புகளுடன் வாழும் மத்தியதர மேற்தட்டு வர்க்கத்தினர். ஓரளவிற்கு அறிவியல்? சமூகத்தினர். தமது கருத்திற்கு வலு சேர்க்க 'ராஜபக்ஷ" கதைகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.
சீன மக்களோ, சீன தேசமோ, ஏன் சீன அரசோ இந்த நோய் துன்பங்களை, மரணங்களை தாமாக தமக்குள் வரிந்து கட்டிக் கொண்டு மகிழ்ந்திருப்பவர்கள் அல்ல. அல்லது இதன் ஊற்றுவாயை வேணும் என்றே தமக்குள் உருவாக்கியவர்கள் அல்ல.
மாறாக இன்று உலகெங்கும் தமது விடாப்பிடியான உழைப்பால் பல பொருட்களையும் உற்பத்தி செய்து விநியோகம் செய்பவர்கள். அது உணவுப் பண்டங்களில் இருந்து உயர் தொழில் நுட்பக் கருவிகள் வரை. மாறாக பொருளாதார அழிவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும் மேற்குலகு போல் பிளாஸ்ரிக் அரிசியை ஏற்றுமதி செய்பவர்கள் அல்ல.
வேரோடு அறுத்தெறியப்பட வேண்டியது கொறனா வைரசே ஒழிய சீன தேசம் அல்ல ....சீன மக்கள் அல்ல....
ஒன்று தெரியுமா இதே மேற்குலகிற்கு பல்லு குத்த ருத் பிக்(Tooth Pick) அனுப்பாவிட்டால் வாய் நாறிவிடும் என்ற அளவிற்கு அதே மேற்குலகம் இவர்களின் குறைந்த விலைப் பொருட்களிலேயே அதிகம் தங்கியிருக்கின்றது.
இன்னும் ஒரு விடயம்..... இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பகிடி வதை பற்றியது. இந்த பகிடி வதை எந்தவகையிலும் ஏற்புடையவை அல்ல.
ஆனால் இதற்காக முழு யாழ்பல்கலைக் கழக மாணவர்களும் இந்த பகிடிவதையின் பிரதிநிதிகள் என்ற வகையிலான வெறுப்பு பேச்சுகளும் செயற்பாடுகளும் ஏற்புடையன அல்ல. மிகக் குறைந்த எண்ணிக்கையான மாணவர்களின் செயற்பாட்டை வைத்துக் கொண்டு பல்கலைகழக மாணவர்கள் மீது வெறுப்புப் பேச்சு பேசுவது அவர்களை நிரகரிப்பது சரியல்ல.
அறிவு பூர்வமான துறைசார் நிபுணத்துவம் உடையவர்களை உருவாக்கும் பல்கலைக் கழக மாணவர்களை எமது பிள்ளைகளை நாமே தூற்றி நிராகரித்து வெறுத்து ஒதுக்குவது சரியானதா...? சம்மந்தப்பட் சிலரை தவிர்த்து ஏனைய மாணவர்கள் எமது சமூகத்தின் அடையாளங்களாக சொத்துக்களாக எம்மவர்களாக நல்லவர்களாக வல்லவர்களாக எதிர்காலத்தை அமைக்கும் சிற்பிகளாக மாறப் போகின்றவர்கள். நாம் இந்த கல்வி சமூகத்தை அறிந்து ஏற்றுக் கொண்டு முன்னோக்கி நகர்வதே சரியானது.
அல்லாவிடின் ஆவா குழுகளின் இவர்களுக்கான தண்டனை என்ற அறிவித்தல் என்றும்.... பகிடிவதையில் ஈடுபட்ட மாணவரின் வீடு அடித்து நொருக்கப்பட்டது என்ற முறையற்ற செயற்பாடுகளே இங்கு தர்மம் ஆகிவிடும். ஆவா குழுவின் கடந்த கால செயற்பாடுகளை நாம் கொண்டாட வேண்டிய நிலையிற்கு எம்மை தள்ளிய போக்கிரிச் செயற்பாடுகளே எமது மௌனங்கள் உருவாக்கிவிடும்.
நான் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் வெளிமாவட்டத்து மாணவன் ஒருவரை சந்தியில் நின்ற ரவுடிகள் கேள்வி கேட்க நாதியில்லை என்ற வகையில் தலையில் தட்டி இதனை பகிடி வதையுடன் முடிச்சு போட்டனர். அது பின்பு கலவரமாக்கப்பட்டு இந்த சந்தி ரவுடிகள் பெரிய மாவீரர்கள் போல் வெள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் முதல் 4 றீல் வரை ஓடியது. பல்கலைக் கழகத்தை சுற்றியிருக்கும் தெளிந்த சமூகம் விடயத்தின் உண்மை தன்மையையும் ரவுடிகளையும் இனம் கண்டு மாணவர்களுடன் இணைந்து செயற்பட்டு இதனை அம்பலப்படுத்திய நிகழ்வுகளும் உண்டு.
இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பாதுகாப்பிற்காக மலையகத்திற்கு சென்று ஒழித்திருந்ததும் பின்பு பல்கலைக கழகம் திரும்பி கல்வியைத் தொடர தமக்குள்ளேயே ஒரு தற்பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி நடமாடியதும் 1970 களின் பிற்கூற்று. 1980 முற் கூற்று வரலாறு.
இந்த நிலமையை உருவாக்கும் செயற்பாடுகளின் வடிவங்களாகவே ஆவாவின் அறிவிப்பும் மாணவர் ஒருவரின் வீடு அடித்து நொருக்கப்பட்ட சம்பவத்தையும் பார்க்க வேண்டும்.
பல்கலைக் கழக நிர்வாகமும் பெற்றோர், சமூக அக்கறையுடையயோர் இணைந்து இதற்கான தீர்வினைப் பெற வேண்டுமே ஒழிய ஆவாக்களும் அடித்து நொருக்குவபவர்களும் அல்ல. இந்த வெறுப்பு... நிராகரிப்பு செயற்பாடுகள் ஏற்புடையன அல்ல. பிரிச்சனைகளை களைய இது உதவப் போவது இல்லை.
யாழ் பல்கலைக் கழக மாணவர் மீதான வெறுப்பிற்குள் பல்கலைக் கழக அனுமதி பெறாதவர்களின் ஒரு ஆற்றாமையும் இணைந்து பயணிக்க முற்படுவதை சிலரிடம் அவதானிக்க முடிகின்றது. இந்த உளவியல் தோல்வியில் இருந்தும் நாம் விடுபட்டே ஆகவேண்டும்
இலங்கையில் ஏற்பட்ட கலவர காலங்களில் ஏதோ ஒரு வேண்டாத சம்பவத்திற்கு ஒரு சமூகத்தின் முழு அங்கத்தவர்களையும் வெட்டிச்சாய்க்க முற்பட்ட செயற்பாடுகளும் இவையை ஒத்தவையே. கலவரச் சம்பவம் தவறு என்றால் எமக்குள் நடைபெறும் ஆவாக்களின் எச்சரிகையும் இதற்கு எங்களின் மௌனமும்... மாணவரின் வீடு அடித்து நொருக்கப்பட்டதும் தவறுதான்.
இதே மாதிரி வன்முறையை வெறுப்பை கையில் எடுத்து அடித்து நொருக்குவது சரியான அணுகு முறை அல்ல. ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டால் பகிடி வதையில் அந்த மாணவர்தான் ஈடுபட்டார் என்பதற்காக அவரின் வீட்டை அடித்து நொருக்குவது அங்கு வாழும் வயது போன பெற்றோர் ஏனைய சகோதர்களின் மனநிலையும் சற்று யோசித்து பாருங்கள்.
நிச்சயமாக அந்த மாணவனின் பெற்றோர் சகோதர்கள் இந்த பகிடி வதையை ஏற்க மாட்டார்கள். இந்நிலையில் தண்டனையை நாமாகவே கையில் எடுத்து அடித்து நொருக்குதல் சரியான செயற்பாடு இல்லை.
இதே சீன தேசமும் மக்களும், அரசும்தான் இந்த உலகிற்கான தமது உற்பத்திகளையும் தொழில் நுட்பங்களையும் உதவிகளையும் தொடர்ந்து செய்யப் போகின்றது. இதில் தனது நாட்டிற்கான நலன்கள் இல்லாமலும் இல்லை.
இதே போல் இதே பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் நல் ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் துறைசார் நிபுணத்துபவர்களாகவும், எங்கள் வீட்டுப் பிள்ளைகளாகவும், மாப்பிழைகளாகவும், மருமக்களாக, அண்ணனாக, அப்பாவாக சமூதாயத்தின் முன்னோடிகளாக தூண்களாகவும் வரப் போகின்றவர்கள். இவ்வாறுதான் வந்திருப்பதாக வரலாறுகள் கூறி நிற்கின்றன.
தவறு நடந்து உண்மை அதற்காக அந்த தவற்றை பொதுமைப்படுத்தி எல்லோரும் பகிடி வதைக் கொடுமையாளர்கள் போல் சித்தரிப்பதும் அவர்களை வெறுப்பதுவும் எள்ளி நகையாடுவதும் சரியானது அல்ல.
வேரோடு அறுத்தெறியப்பட வேண்டியது பகிடி வதையே ஒழிய யாழ் பல்கலைக் கழகம் அல்ல..... யாழ்பல்கலைக் கழக மாணவர்கள் அல்ல....
எமது நோக்கம் சீனம் நோயற்று ஆரோக்கியமான நாடாக மாற வேண்டும் என்பதே. இதன் மூலம் ஏனைய உலக மக்களுக்கு இந்த தொல்லை பரவாமல் இருக்கப்பண்ணி மனித குலத்தை பாதுகாக்க வேண்டும். சீனர்களும் மனித குலத்தின் ஒரு அங்கத்தினரே, மனிதர்களே, நம்மவர்களே.
இதே போல் எமது யாழ்பல்கலைக் கழக மாணவர்களும் எங்கள் சமுதாயத்திற்கான எதிர்கால நல்ல பிரஜகளாக மிளிர்ந்து ஒரு பலம் மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எனவே நல்லவர்களை, சிறந்தவர்களை உருவாக்க வெறுப்பற்று, அரவணைத்து, ஆலோசித்து செயற்படும் செயற்பாடுகளில் இறங்குவோம். மாணவர்களும் நம்மவர்களே.
No comments:
Post a Comment