சமூகங்களை சீண்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்


இலங்கையில் காணப்படும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடமிருந்தே தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை தமிழினத்துக்கு ஊட்டும் முயற்சிகளில் அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ ஈடுபடக் கூடாது என தமிழ் ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் மக்களுக்கும் அரசுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாமெனவும் பிரதமர் கேட்டிருக்கின்றார். மாற்றுச் சிந்தனையின் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழ்ச் சமுகத்தின் மத்தியில் வெறுப்புணர்வை தோற்றுவிப்பதை பிரதமர் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.
நாட்டின் எதிர்கால வேலைத் திட்டங்கள், அபிவிருத்திச் செயற்பாடுகள், அரசியல் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுப்பதற்கு தமிழ் ஊடகங்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெரிதும் எதிர்பார்க்கின்றது. நாட்டை பின்னடைவுக்குள் இட்டுச் செல்வதை எவருமே அனுமதிக்க போவதில்லை. முதலில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வும், நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த இடமளிக்கப்படக் கூடாது. சில ஊடகங்களின் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாகக் காணப்படவில்லை.


பிரதமர் தமிழ் ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் ஆலோசனைகள் ஏனைய ஊடகங்களுக்கும் பொருந்தக் கூடியவையேயாகும். சிங்கள, ஆங்கில தனியார் ஊடகத்துறை சார்ந்தோரையும் அழைத்து பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் செயற்படுவதை தடுப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளது. தமிழ் ஊடகங்கள் தமிழ் சமூகத்தையும், சிங்கள ஊடகங்கள் சிங்கள சமூகத்தையும் இன ரீதியில் தூண்டி விடக்கூடிய வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் ஒற்றுமை, புரிந்துணர்வு நல்லிணக்கத்தினூடே இணைந்து செயற்பட வேண்டும். சகல சமூகங்களும் இணைந்தும், இணங்கியும் வாழக் கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். மனித நேயம் பேணப்படுவதன் மூலமே மக்களது மனங்களை வெற்றி கொள்ள முடியும். குரோத அரசியலுக்கு ஒரு போதும் வாய்ப்பளிக்கக் கூடாது. நீதி, நியாயங்கள் பக்கச்சார்பற்றவையாக இருக்க வேண்டும். சமாதான சகவாழ்வொன்றையே இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அதுதான் தேசத்தின் மீட்சிக்கு துணை புரிய முடியும்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக புரையோடிப் போயுள்ள இனங்களுக்கிடையேயான விரிசல் இனிமேலும் தொடர முடியாது. அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கிடையே காணப்படுகின்ற இடைவெளியை இல்லாமல் செய்து எதிர்காலத்தின் நலன் கருதியும், எமது எதிர்காலச் சந்ததியின் சுபீட்சத்துக்குமாக நல்லதொரு மாற்றுச் சிந்தனையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு ஊடகங்கள் மனம் திறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை நியாயமானதொன்றாகவே நோக்க வேண்டியுள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கால கட்டத்தில் சில ஊடகங்கள் தமிழ்க் கட்சிகளூடாக அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் மோதலை ஏற்படுத்தி பெரும் இடைவெளியை உருவாக்கியதை நினைவூட்டிய பிரதமர், இப்போதும் சில ஊடகங்கள் அதனையே செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் ஊடகங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஒரு விதத்தில் நியாயமாக காணப்பட்டாலும் சிங்கள ஊடகங்களின் செயற்பாடுகள் அதனைவிடவும் மோசமானவையாகவே அமைந்துள்ளது. சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் மோசமானதொரு ஊடக கலாசாரத்தையே சில சிங்கள ஊடகங்கள் பின்பற்றுகின்றன.
இங்கு மற்றொரு முக்கிய விடயத்தை பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவே எம்முன்னுள்ள சிறந்த மார்க்கம் என்று சில எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எமக்கான அரசியல் தீர்வு எம்மிடமே உள்ளது. இலங்கை அரசாங்கத்தினூடாகவே நல்ல தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசு முனைப்புடன் இருக்கின்றது. இந்தியாவிடமிருந்து தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது. என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த கூற்று முக்கியமானதாகவே நோக்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு இந்தியவோ, வேறெந்த நாடுகளுமோ தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது. ஆனால் அரசாங்கத்துடன் தமிழ்க் கட்சிகள், சமூகமும் பேசியே தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை புறக்கணித்து இந்தியாவையும் சர்வதேசத்தையும் நாடுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. அவ்வாறான முயற்சிகள் அரசையும் தமிழினத்தையும் தூரப்படுத்துவதற்கே வழிவகுக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனை தீர்ப்பதற்கு பெரும்பான்மை சமூகத்தின் இணக்கப்பாட்டை வென்றெடுக்க வேண்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனை தீர்ப்பதற்கு பெரும்பான்மை சமூகத்தின் இணக்கப்பாட்டை வென்றெடுக்க வேண்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருதரப்புகளுக்கிமிடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். புரிந்துணர்வும், நல்லிணக்கமுமே இதில் முக்கியமான விடயமாகும். இனங்களுக்கிடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். இனங்களுக்கிடையேயான வெறுப்புணர்வுகள் அகற்றப்படவேண்டும். பிரதமர் எதிர்பார்க்கும் மாற்றுச் சிந்தனையை அனைத்து ஊடகங்களும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மக்களை விழிப்பூட்டும் நல்ல பணியை ஒன்றுபட்டு முன்னெடுப்போமாக.   நன்றி தினகரன் 
Email
No comments: