Wednesday, January 15, 2020 - 6:00am
ரஞ்சன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்ட மொத்த உரையாடல்கள் 1,27,000 - விமல் வீரவன்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், பழைய குப்பையை கிளறி புதிய பிரச்சினைகளை வெளியே கொண்டு வந்துள்ளன.
நீதித்துறை, பொலிஸ் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் பணிபுரியும் முக்கிய பிரமுகர்களின் முறையற்ற ஒழுக்கவிழுமியங்களை மேற்படி பதிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தில் பணியாற்றிய பலர் இந்தப் பொறியில் சிக்கியுள்ளனர். இதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆவார்.
மொத்தம் 1,27,000 தொலைபேசி உரையாடல்களை ரஞ்சன் ராமநாயக்க பதிவு செய்து வைத்திருந்ததாக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான தொலைபேசி உரையாடல்களில் முன்னாள் சி. ஐ. டி பணிப்பாளர், மூன்று உயர்மட்ட நீதிபதிகள், ஐ. தே. க தலைவர் மற்றும் முன்னாள் லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்பான பதிவுகள் ஏற்கனவே கசிந்துள்ளன.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி, பிரதம நீதியரசர் மற்றும் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவுக்கு அழைப்புகள் பறந்தன. சட்ட அமுலாக்க முகாமைகளின் இழந்து போன நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புமாறு அந்த அழைப்புகளில் கேட்கப்பட்டது.
எதிர்க்கட்சி உயர் மட்டம் இந்த விடயத்தில் ரஞ்சன் ராமநாயக்க மீது மொத்தப் பழியையும் சுமத்தி கைகழுவிக் கொள்ள முனையக் கூடாது. முக்கிய பிரமுகர்களின் அறிவுறுத்தலின்படியே ரஞ்சன் ராமநாயக்க இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.
இதேவேளை இந்த பாரதூரமான விடயத்தை உடனடியாக தீர்க்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவைக் கேட்டுள்ளது. இதனைத் தவிர்த்தால் அல்லது ஒத்திவைத்தால் நீதித்துறை மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழக்க வேண்டியிருக்கும். அந்த நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
நிறைவேற்றதிகாரம் அல்லது பாராளுமன்றம் ஆகியவற்றின் குறுக்கீடுகள் எதுவும் இன்றி சுதந்திரமாக செயற்பட வேண்டும்.
அத்துடன் அனைத்து நீதித்துறை நீதிபதிகளினதும் ஒழுக்கம் நீதித்துறையின் உயர் தரத்தை பேணுவதற்கு மிகவும் முக்கியமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இருதாயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கத்தவர்களாக உள்ளனர்.
நிலைமையை உடனடியாக சீர்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள சங்கம் பிரதம நீதியரசருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதித்துறையின் தலைவர் என்ற ரீதியில் நீதித்துறை, சட்டத்தொழில் மற்றும் இந்த நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியது தங்கள் கடமை என்று அந்த வேண்டுகோளின் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment