அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 3 – தாரை



தாரை காற்றுக்கருவி
அமைப்பு
தாரை சுமார் 12 அடி நீளம் வரை நீண்டு இருக்கும்.  ஊதும்பகுதி சிறுத்தும், இடைப்பகுதி மேல்நோக்கியும்(சில வளைந்தும்), அடிப்பகுதி அகன்றும் காணப்படும் வித்தியாசமான பழந்தமிழ் ஊது கருவி தாரை. ஐந்தாறு பாகங்களைக் கொண்ட தாரை, எளிதாகக் கழற்றி மாட்டும் வசதியோடு உருவாக்கப்படும். தற்காலத் தாரைகள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
குறிப்பு
மரியாதையின் அடையாளமாகக் கருதப்படும் கிராமிய இசைக்கருவிகளில் தாரை முதன்மையானது. கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போதும், தேர்த்திருவிழா காலத்திலும், கொண்டாட்டங்களிலும் இக்கருவி இசைக்கப்படுவதுண்டு. இக்கருவியில் விரல்துளைகள் இல்லை. காற்றைச் செலுத்த முகப்பில் ஒரு சிறிய துளையும், இசை வெளியேற முடிவில் புனல்வடிவ துளையும் மட்டுமே இருக்கும். சிறுதாரை, கோணத்தாரை, நெடுந்தாரை என சிறிய வடிவ வேற்றுமைகளுடன் இக்கருவி பயன்படுத்தப் பட்டது. கோணத்தாரை கொம்புக்கருவி போன்று இருக்கும் ஆனால் வாய் பகுதி கொம்பு போன்று விரிந்து இருக்காது.

ண்மைக்காலங்களில் தமிழர்கள் கேரள செண்டை மேளக்குழுக்களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுப்பதால் தமிழகத்தில் ஆதரவற்றுப் தாரை போல் பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மரியா பழங்குடியினரிடம் ‘கோஹிக்’ என்ற பெயரிலும், உத்தரப் பிரதேசத்தில் ‘துரி’ என்ற பெயரிலும், கர்நாடகத்தில் ‘பாங்கு’ என்ற பெயரிலும், குஜராத்தில் பாம்பை போல் வலைந்து ‘நாகபாணி’ என்ற பெயரிலும்  நெடுந்தாரை போன்ற தாரை புங்கால்என்றும், ஒரிசாவில் ‘கஹல்’ என்ற பெயரிலும், கங்கை சமவெளி பிரதேசத்தில் ‘கர்ண’ என்ற பெயரிலும் மிகச்சிறிய மாற்றங்களோடு பரவலாக புழக்கத்தில் இருக்கிறது தாரை. திபெத் புத்த மக்களிடம் இக்கருவி துங்சேன் என்ற  பெயரில் புழக்கத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய பூர்வ குடிகள் மரத்தை குடைந்து செய்யப்பட்ட நமது தாரை போன்ற கருவியை இசைக்கிறார்கள். அதன் பெயர் டிட்ஜெரிடோ. முன்பு பூச்சிகள் இயற்கையாக அரித்து துளையிட்ட மூங்கில் அல்லது தைல மரங்கள் கொண்டு இக்ருவி உருவாக்கபட்டது. ஊதும்பொழுது இடையில் காற்று வெளியேறாமல் இருக்க தேன்மெழுகுக்கொண்டு ஒட்டைகளை அடைத்து இருப்பார்கள். வாய் வைத்து ஊதும் இடமும் தேன்மெழுகுக்கொண்டு பூசப்பட்டு இருக்கும். அழகிய வண்ணங்கள் தீட்டபட்ட இக்கருவிகள் பார்க்க வண்ணமயமாக இருக்கும். ஆஸ்திரேலிய பூர்வ குடி பெண்கள் தான் இக்கருவிக்கு வண்ணம் தீட்டி அழகு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் இக்கருவியை இசைப்பது இல்லை. ஆஸ்திரேலியா பூர்வ குடிகளுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அவர்களின் இசையும் மொழியும் நம்மொடு தொடர்புடையவை. தாரைக்கருவி பார்க்க பாம்பு போன்று நீண்டு இருக்கின்றது. அடிலெய்டு ஆற்று பகுதியில் வாழ்ந்த வாராஇ(Warray) மற்றும் மத்திய ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பிண்டுபி(Pintupi) என்கிற பூர்வ குடிகள் இந்த கருவியைபாம்புஎன்றே அழைத்து இருக்கிறார்கள். சில பகுதிகளில் இக்கருவி இடக்கிஎன்று அழைக்கப்படுக்றது. தமிழர் இசை மரபில்இடக்கைஎன்கிற தோற்கருவி உண்டு.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
திருச்சி மற்றும் தஞ்சை சுந்தரப்பெருமாள் கோவில் பகுதிகளில் மட்டும் தாரைக்கருவிகளும், வாசிக்கும் கலைஞர்களும் மிஞ்சியிருக்கிறார்கள்.சுந்தரப்பெருமாள் கோவிலில், லெட்சுமணன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் தாரை வாசிக்கிறார்கள். இக்குழுவில் உள்ள மார்க்கண்டேயன் என்பவர் பார்வையற்றவர். உத்திராபதி காது கேளாதவர்.
வட தமிழகத்தில் இக்கலை அழிந்து விட்டது என்று நினைத்த நேரத்தில் காஞ்சி பல்லாவரம் என்கிற பாலாற்றங்கரை கிராமத்திலும் சின்ன காஞ்சிபுரத்திலும் சில தாரை கலைஞர்கள் எஞ்சி இருக்கிறார்கள்  என்கிற செய்தி சிறிது ஆறுதல் அளிக்கின்றது. காஞ்சி பல்லாவரத்தில் மணி என்கிற கலைஞர் தாரை இசைக்கிறார்.

பாடல்
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் -  சேக்கிழார் பெருமான் - திருமுறை 12.2101

தவில்முர சத்தந் தாரை பூரிகை
     வளைதுடி பொற்கொம் பார சூரரை
          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா - திருப்புகழ்

தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
          தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி - திருப்புகழ்

காணொளி
தமிழகம்

குஜராத்

திபெத்

ஆஸ்திரேலியா

-சரவண பிரபு ராமமூர்த்தி

 (P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai & வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்)




















































No comments: