இலங்கைச் செய்திகள்


பாரம்பரியம் மாறாத விதத்தில் பொங்கல் கொண்டாடுவோம்!

மாற்றுச் சிந்தனையோடு செயற்படுங்கள் தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் வேண்டுகோள்

ரஞ்சனுக்கு ஜன. 29 வரை வி.மறியல்; குரலை பகுப்பாய்வு செய்யவும் உத்தரவு

MCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும்

ரஞ்சனுடன் உரையாடல்; நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி

இலங்கை பாதுகாப்பு படை உபகரண கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து 50 மில். டொலர்பாரம்பரியம் மாறாத விதத்தில் பொங்கல் கொண்டாடுவோம்!மண்பானையில் பொங்கி,  சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் செலுத்துவதே தமிழர் மரபு
தமிழர்களின் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் தினம் இன்றாகும். தைப்பொங்கலின் பெருமை, சீவக சிந்தாமணியில் பாடலாக இடம்பெற்றுள்ளது.


அதாவது, மங்கை வளர்த்த செந்தீயில் பொங்கல் பொங்கியதாக அது கூறுகிறது. இப்படி சங்க காலம் தொட்டே தைப்பொங்கல் தமிழர்களின் மரபோடு ஒன்றிய திருவிழாவாக இருந்து வருகிறது. ஆனால், அப்படிப்பட்ட திருவிழாவானது இன்று பட்டுப் போய், காலத்தோடு தேய்ந்து புதுமைப் பொங்கலாக உருவெடுத்துள்ளது.

அதனை வளர்ச்சி என்று கூற முடியவில்லை என்றாலும், நவீன யுகத்தின் வார்ப்பு என்று கூறுவதே சாலப் பொருந்தும். அத்தகைய யுகத்தின் முன்னோக்கிய பார்வையும், கடந்து வந்த பாதையும் பலவற்றையும் மாற்றியுள்ளன.
இன்றும் தைப்பொங்கல் தமிழர்களின் அடையாளத்தை தரணியெங்கும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். அதன் பொருள், உழவர்கள் தங்களின் வயலில் விளைந்த நெல்மணிகளை விற்று அதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வைச் சீர்படுத்துவார்கள் என்பதாகும். அத்தகைய வாழ்வுக்கு அடித்தளமிட்ட இயற்கை தெய்வத்துக்கும், சூரியன், மாடு என உதவிய எல்லாவற்றுக்கும் புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து, அரிசியாக்கி, பொங்கலிட்டு நன்றி பாராட்டுவதே பொங்கல் திருவிழா.
பொங்கலுக்கு முதல் நாள் போகி. மழைக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன், நமது பழைய ஆடைகளைக் குப்பையில் எறியும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். சூரியனுக்கு நன்றி செலுத்துவது சூரியப் பொங்கல் நாளாகும். அதிகாலையில் சூரியக் கடவுளுக்குப் பொங்கல் பானையில் பொங்கலிட்டு, படையல் செய்து கொண்டாடுவார்கள்.
அடுத்து விவசாயத்துக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். அன்றைய தினம் கால்நடைகளைக் குளிப்பாட்டி, அழகுபடுத்தி, பொங்கலிட்டு வணங்குவர்.
இறுதியாக காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இந்தப் பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல், பெரியோர் ஆசி பெறுதல் முதலானவை அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், வீர சாகசப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவையே பொங்கல் திருநாளின் அடையாளங்கள் ஆகும். ஆனால், அவை இன்று மெல்ல மெல்ல மாறி வருகின்றன.மனிதர்களின் வளர்ச்சி என்பது அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வளம் பெற்று மகிழ்ச்சியாய் வாழ்வதே ஆகும். அத்தகைய மகிழ்ச்சிக்கு வித்திடுவதில் பண்டிகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், அவை இன்று குறுகிய வட்டத்தில் அரங்கேறி வருகின்றன என்பது காலம் கடந்த வேதனை. முன்பெல்லாம் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் பொங்கல் பண்டிகையை வாழ்த்து அட்டைகள் மனமார வரவேற்கும். அவை இன்று காலத்தின் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடான கட்செவி அஞ்சல் (வட்ஸ்-ஆப்) மூலம் ஆக்கிரமித்து விட்டது.
களிமண் கொண்டு வனையப்பட்ட மண்பானையில் பொங்கல் பொங்குவதே அழகு. இங்கு அழகு என்பதை விட அவர்களின் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கைக்கு வித்திடும் பண்டிகைக் காலம் ஆகும்.
மட்பாண்டத் தொழிலை ஒரு குறிப்பிட்ட தொழிலாளர்கள் மேற்கொள்வார்கள். அவர்கள் தயாரிக்கும் பானைக்கு பொங்கல் விழா மற்றும் கோடை காலத்தில் (சித்திரை) குடிநீருக்குப் பயன்படுத்த நல்ல தட்டுப்பாடு இருக்கும். அதே போல் அவர்கள் செய்யும் விளக்குகள் கார்த்திகை தீபத் திருநாளன்று அதிக அளவில் விற்கப்படும். பின் மாட்டுப்பொங்கலன்று (தை) அவர்கள் மண்ணைக் கொண்டு விதவிதமாக சிலைகளைச் செய்வார்கள். அவை மாடு, கோழி, குழந்தை முதலிய வடிவில் இருக்கும். தேவைப்படுவோர் அவர்களுக்கு வேண்டிய வடிவில் மண் சிலைகளை வாங்கி கோயிலில் சென்று வைப்பார்கள். அப்படி என்ன வடிவிலான சிலைகளை வைக்கிறார்களோ அவை நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலே குறிப்பிட்ட மூன்று மாதங்களின் வழியே கிடைக்கும் வருமானமே அவர்களுக்குப் பிரதான ஒன்றாகும். இப்படி இருக்கையில் இன்று பலரும் மண்பானையின் வசீகரத்தை மறந்து 'குக்கர்' போன்றவற்றைக் கொண்டு பொங்கல் வைப்பது ரசனை மறந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
பொங்கல் திருவிழாவைக் கொண்டாட இதுவரை பலரும் மண்பானை வாங்கி பச்சரிசி, முந்திரி, உலர் திராட்சை என்ற வகைகளைத் தேடி, இன்சுவையின் இதயமான கரும்பை வாங்கி நல்லதொரு பண்டிகையை நாளொரு விடியலில் கொண்டாடினர். ஆனால், அவையெல்லாம் இன்று நொடிப் பொழுதில் ஒட்டுமொத்த தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய பெரிய இணையவழி வர்த்தக நிறுவனங்கள் வாரிக் கொண்டு வருகின்றன.
எனவே, பண்டிகைக்காக தெருவோரக் கடைகளில் விற்கும் விற்பனையாளர்களும், சிறு மளிகை வியாபாரிகளும் பண்டிகையின் கொண்டாட்டத்தை அனுபவிக்காமலே கடந்து விடுகின்றனர். இணைய வழி வர்த்தகத்தில் வாங்குவது எளிது என்று சிலருக்கு மனதில் எழலாம். ஆனால், சற்றே சிந்தியுங்கள். இந்தப் பண்டிகைக்காகக் காத்திருந்து, தன்னிடம் உள்ளவற்றை விற்றால் மட்டுமே அவர்களின் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும்.
என்னதான் நொடிப்பொழுதில் இணையத்தில் பொங்கல் பொருள்களை வாங்கி பொங்கல் வைத்தாலும் அதில் வராத சுவை, அலைந்து திரிந்து, பேரம் பேசி, அடித்து பிடித்து வாங்கி, வெயிலில் நடந்து, கரும்பை வாங்கி வந்து, முக்கோணத்தில் கல்வைத்து, கைவண்ணச் சித்திரமான மண்பானையில் பொங்கலிட்டு பொங்குவதில் வருமே ஒரு சுவை... அதுவே இனிதினும் இனிதாய் சுவைக்கும். நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.  நன்றி தினகரன் 
மாற்றுச் சிந்தனையோடு செயற்படுங்கள் தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் வேண்டுகோள்அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாம்
தமிழ் மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தமிழ் ஊடகங்கள் உதவி செய்ய முன்வரவேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.
தமிழ் மக்களுக்கும் அரசுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தாது இருதரப்பும் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமமாக இணைந்து செயற்படுவதற்கு இனிவரும் காலங்களிலாவது பணியாற்ற தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்ெகாண்டார்.
கடந்த 30 வருட காலமாக இவ்விரு தரப்பினருக்குமிடையே இருந்து வருகின்ற இடைவெளியை இல்லாமல் செய்து எதிர்கால நலன் கருதி நல்லதொரு மாற்றுச் சிந்தனையை உருவாக்க தமிழ் ஊடகங்கள் தம்மை இன்றிலிருந்தே தயார்ப்படுத்தி பணியாற்ற  முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களின் பிரதானிகளிடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.
நேற்று காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு-, கிழக்கு மக்களையும் அரசாங்கத்தையும் மோதவிடும் செயற்பாடுகளில் தமிழ் ஊடகங்கள் இனியும் ஈடுபடக்கூடாது. இதனையே நான் யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து தமிழ் ஊடகங்களிடம் வினயமாக கேட்டு வருகின்றேன். ஆனால் அது நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே இனிவரும் காலத்திலாவது தமிழ் ஊடகங்கள் இதனை நல்ல முறையில் செய்யும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.
ஆகவே தமிழ் மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தமிழ் ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவே எம் முன்னாலுள்ள சிறந்த மார்க்கம் என்று நேற்று கூட தமிழ் ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எமக்கான அரசியல் தீர்வு எம்மிடமே இருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இன்றைய எமது அரசாங்கம் முனைப்புடன் பணியாற்றி வருகின்றது.
எனவே தமிழ் ஊடகங்கள் இத்தகு நல்ல கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தி ஒரு உறவுப்பாலமாக இருந்து வரவேண்டும்.
அரசாங்கத்தின் தவறுகளை நிச்சயமாக சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்ற அதேவேளை அரசாங்கம் செய்கின்ற நல்ல வேலை திட்டங்களுக்கும் உறுதுணையாக இருந்து தமிழ் மக்களுக்கு அந்த செய்தி சென்றடைய தமிழ் ஊடகங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
கடந்த காலங்களை மறந்து இரு தரப்பிற்குமிடையே பிரிவினையை அல்லது இடைவெளியை ஏற்படுத்தாது தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட தமிழ் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதே போன்று அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்து வருகின்றது.
அதுகுறித்த நல்ல பல கருத்துக்கள் கலந்துரையாடல்கள் மூலமாக பரிமாறப்படுகின்றன.
அவை குறித்த நல்ல விடயங்களை தமிழ் மக்களுக்கு தமிழ் ஊடகங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கடந்த தேர்தலில் வடக்கு, கிழக்கில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தமது வாக்குகளை எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு அளித்திருந்த போதிலும் வடக்கு, கிழக்கில் எமது அபிவிருத்தி எவ்விதத்திலும் குறைவடைய நாம் செய்த தில்லை.
வடக்குக்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்து அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். யார் வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் முழு நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் சேவை குறைவில்லாது தொடரும். ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கு, கிழக்கு மக்களை நாம் கைவிடமாட்டோம்.அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தாது இருதரப்பும் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாந்தரமாக இணைந்து செயற்படுவதற்கு இனிவரும் காலங்களிலாவது பணியாற்ற தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.
அந்த வகையில் கடந்த 30 வருட காலமாக இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருந்து வருகின்ற இடைவெளியை இல்லாமல் செய்து எதிர்கால நலன் கருதிய நல்லதொரு மாற்றுச் சிந்தனையை உருவாக்க தமிழ் ஊடகங்கள் தம்மை இன்றிலிருந்தே தயார்படுத்தி பணியாற்ற முன்வர வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களின் பிரதானிகளிடம் நேற்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் பிரதமருடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், சி. பி ரத்னாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அரசியல் கைதிகள்
விடுதலை விவகாரம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்பது உண்மையே.
இதற்கு பிரதான காரணமாக கைதிகளில் பலர் பாரிய குற்றங்களைப் புரிந்தவர்களாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே இதுதொடர்பாக நீதி அமைச்சிடம் முழுமையான விரிவான அறிக்கை ஒன்றை கோரியுள்ளோம். அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக பிரதானிகள் உடனான சந்திப்பின் போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நீதி அமைச்சினால் வழங்கப்படுகின்ற அறிக்கையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் மீது பாரதூரமான மனிதப் படுகொலை உட்பட்ட குற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் அதனை ஆராய்வோம்.
அத்துடன் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவும் நடைபெறாது தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் ரஞ்சனுக்கு ஜன. 29 வரை வி.மறியல்; குரலை பகுப்பாய்வு செய்யவும் உத்தரவு
ரஞ்சனுக்கு ஜன. 29 வரை வி.மறியல்; குரலை பகுப்பாய்வு செய்யவும் உத்தரவு-Ranjan Ramanayake Remanded Till Jan 29
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில்  சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய, கொழும்பு குற்றத் தடுப்பு (CCD) பிரிவினரால் நுகேகொடை நீதவானின் பிடியாணை உத்தரவுக்கமைய நேற்றைய தினம் (14) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று (15) பிற்பகல் 1.30 மணியளவில் நுகேகொடை நீதவான் வசந்த குமாரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பேசியதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையை, கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு, ரஞ்சன் ராமநாயக்கவை குரல் சோதனைக்காக எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி, அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து விளக்கமறியல் விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி 04ஆம் திகதி சோதனை உத்தரவு அனுமதிக்கமைய, ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டுக்குச் சென்ற கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர், குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் நிதி மோசடி பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் தொடர்பான உரையாடல் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் வெளிப்பயன்பாட்டு வன்தட்டு (External Hard Disk), பல இறுவட்டுகள் (CD), மடிகணனி (Laptop), கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் 127, சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வெளிநாடு செல்லத தடை விதிக்கப்பட்டு, ஜனவரி 05ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் பிடியாணை பெற்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, நேற்றையதினம் (14) சட்ட மாஅதிபரினால் CCD பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்றையதினம் மாலை 6.15 மணியளவில் மாதிவெலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற கொழும்பு குற்றத் தடுப்பு (CCD) பிரிவினர் அவரை கைது செய்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமையை நீக்கி ஐக்கிய தேசிய கட்சி நேற்றையதினம் (14) அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


MCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும்
MCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும்-People's views on MCC deal as two countries respect democracy

- முன்மொழிவுகள் நிபுணர் குழுவினால் ஆராயப்பட்டு வருகிறது

- ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவிப்பு

அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்பதால் மிலேனியம் சவால் கூட்டுத்தாபன (MCC) உடன்படிக்கை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது இரண்டு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (14) பிற்பகல் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வேல்ஸுடன் (Alice Wells) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை ஏனைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அனுபவங்கள் குறித்து நிபுணர் குழு விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
துரித பொருளாதார அபிவிருத்தியுடன் வறுமையற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவது தனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை வலுவூட்டுவதற்கு எளிமையான வரி முறைமையையும் தேவையான வசதிகளையும் வழங்கும் வர்த்தக சூழலை நாட்டில் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தொழிற்துறை அபிவிருத்தி திட்டமிடப்பட்டுள்ள முக்கிய துறைகளுல் சிலவாகும். தற்போது அமெரிக்கா இலங்கையின் ஆடை தொழிற்துறையில் முக்கிய கொள்வனவாளராக உள்ளது. அதேபோன்று இலங்கை தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட துறைகளின் அபிவிருத்திக்கும் தயாராக இருப்பதால் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட தொழிற்துறைகளில் முதலீடு செய்ய தான் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 
ரஞ்சனுடன் உரையாடல்; நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெற உத்தரவு
ரஞ்சனுடன் உரையாடல்; நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெற உத்தரவு-AG Orders to Record Statement from Judges Regarding Ranjan's Calls
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடியதாக தெரிவிக்கப்படும் நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் பிலபிட்டி மற்றும் தம்மிக ஹேமபால ஆகியோரிடம் உடனடியாக வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், கொழும்பு குற்றப் பிரிவு பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதிகளின் கடமைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றுமுன்தினம் (14) கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (15) குறித்த உத்தரவை வழங்கிய நுகேகொட நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அவரது குரல் பதிவை உறுதிப்படுத்த எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி அவரை அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 
கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி
கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி-Colonel Kittu Remembrance-Batticaloa
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று வியாழக்கிழமை (16) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி-Colonel Kittu Remembrance-Batticaloa
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்டு. அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அக்கட்சியின் உப தலைவர் நா. நகுலேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மகாணாசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா. சாணக்கியன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நிருவாகச் செயலாளர் நா. தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி-Colonel Kittu Remembrance-Batticaloa
இதன்போது பொதுச்சுடரினை பா. அரியநேத்திரன் ஏற்றிவைக்க, மலர்மாலையை மா.நடராசா அணிவித்தார், பின்னர் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கமும் இடம்பெற்றதைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)  நன்றி தினகரன் 
நுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி
நுவரெலியாவில் உள்ள  சீதையம்மன்  கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு ரூ.5கோடி நிதியை வழங்கவுள்ளது.  இந்த கோயில் புனரமைப்புப் பணியை உடனடியாக தொடக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது . 
இந்திய மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில்  இலங்கைக்கு  விஜயம் செய்திருந்தனர்.  இவர்கள்  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது. இந்த கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ. 5கோடி ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை தொடக்குங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டு கொண்டனர்.  இது தொடர்பாக மத்திய பிரதேச, மாநில பா.ஜ.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரிமான  ராகேஷ் சிங் கூறுகையில்: அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. அவரது மேலிட தலைவர்களை திருப்திப்படுத்த இவ்வாறு செயல்படுகிறார். இதனை மறைக்க தற்போது பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த மாநில அரசு சீதா கோயிலுக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது.உண்மை என்னவெனில், ஜான்கி போன்ற பெயர்களைக் கொண்ட பல சிறுமிகள் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்கள் குடியுரிமை பெறுவதை இந்த அரசாங்கம் எதிர்க்கிறது. இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. முதலில் அவற்றை பராமரிப்பது குறித்து சிந்திக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார். 
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது -  நன்றி தினகரன் 
இலங்கை பாதுகாப்பு படை உபகரண கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து 50 மில். டொலர்இலங்கை பாதுகாப்பு படை உபகரண கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து 50 மில். டொலர்-Indian National Security Advisor Ajit Doval Met President
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இருநாட்டு இராணுவத்தினருக்குமிடையே பலமான ஒத்துழைப்புகள், சமுத்திர பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கிடையிலான சமுத்திர வலயம் தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர், ஏனைய பிராந்திய நாடுகளையும் கண்காணிப்பாளர்களாக இந்த செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
அத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

No comments: