மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 19 - முருகபூபதி


தனிமனித அங்கீகாரமும் அரசியலாகிவிடுகிறது. அந்த அங்கீகாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு – எதிர்ப்பு  நிலைப்பட்ட முடிவுகளை வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொள்வதற்கும் சாமர்த்தியம் தேவைப்படுகிறது.
அத்தகையதோர் சாமர்த்தியத்தை பெற்றுக்கொள்ளமுடியுமா…?  என்று அபிதா யோசிக்கத் தொடங்கினாள்.
இப்படியெல்லாம் என்னை சிந்திக்கத்தூண்டியது யார்..? ஜீவிகாவின் அறையில் குவிந்து கிடக்கும் பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்களை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பொழுதுபோக்கிற்காக படித்ததனால் வந்த விளைவுகளா..?
நல்லவேளை, கற்பகம் ரீச்சருக்கு, இந்த வீட்டில் தனது பொழுது எவ்வாறெல்லாம் கழிகிறது என்பது தெரியாமலிருக்கிறது. இதுவும் தெரிந்தால், தன்னை இங்கிருந்து கலைத்துவிடுவதற்கு ஏதும் திட்டம் தீட்டிவிடுவாள்.
இனிமேல் இந்த வீட்டிலிருந்துகொண்டு என்ன செய்தாலும் வீட்டின் எஜமானி  ஜீவிகாவிடம் சொல்லிவிடவேண்டியதுதான். அவள்தானே என்னை இங்கே அழைத்தது. அவள்தானே, மாதம் முடிந்ததும் சம்பளம் தருவது,
அப்படியிருக்கும்போது நான் எதற்கு இந்த வாத்திச்சிக்கு பயப்படவேண்டும். மஞ்சுளாவும் சுபாஷினியும் ஆதரவோடு இருக்கிறார்கள்.
ஜீவிகாவுக்கோ, தான் சொல்லும் வேலைகளையும்  செய்து,  வீட்டையும் நன்றாக பராமரித்து சுத்தம் பேணினால்  போதும். இந்த கற்பகம் ரீச்சர்தான் நான் எவ்வளவு பணிவிடை செய்தாலும் எனக்கு வில்லியாக காட்சியளிக்கிறாள்.
அந்த வீட்டில் கற்பகம் ரீச்சர் எவருடனும் ஒட்டுறவில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்..? அபிதா  அந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதகாலத்துள், அங்கிருக்கும் நால்வரதும் குண இயல்புகளை ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறாள்.
அதுபோன்று தனது அடங்கிப்போகும் இயல்புகளை அவர்களும் தெரிந்துவைத்துள்ளனர். ஆனால்,  அடக்கிவைத்திருப்பதன் மூலம்தான் தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என கற்பகம் ரீச்சர் நினைக்கின்றாவோ..? யார் கண்டது…?
தனக்குத்தரப்பட்ட முதல் மாத சம்பளத்தை நிகும்பலையில் ஒரு வங்கியில் கணக்குத்திறந்து வைப்பிலடவேண்டும். கையில்  கொஞ்சம் பணமும்  வைத்திருக்கவேண்டும்.

சந்தைக்குச்செல்லும் வழியில் தென்பட்ட வேர்ல்ட் கொமியூனிகேஷன் சென்டரில் கணினியில் பயிற்சி பெற்று தமிழில் எழுதுவதற்கு பழகவேண்டும். கடைத்தெருவுக்குப்போய் இரண்டு மாற்றுடைகள் வாங்கவேண்டும். அதற்கெல்லாம் யாரை உடன் அழைத்துச்செல்வது..?
மஞ்சுளாவிடம் கேட்டாள். அவள் தனக்கு சனிக்கிழமைதான் வசதி என்றாள். அன்றைய தினம் கற்பகம் ரீச்சர் வீட்டில் இருப்பாள். சுபாஷினியிடம் கேட்டாள். புதன் கிழமை தன்னால் அழைத்துச்செல்ல முடியும் என்றாள்.
வங்கி அலுவல்களை பார்ப்பதற்கு அபிதாவுக்கு துணை தேவைப்பட்டது.  திங்கட்கிழமை எல்லோரும் வேலைக்குச்சென்ற பின்னர், கதவையும் கேட்டையும்  மூடி பூட்டிவிட்டு, சந்தைக்கு செல்லும் வீதியிலிருக்கும் வேர்ல்ட் கொம்மியூனிக்கேஷன் சென்டருக்குப்போனாள்.
அங்கே சில இளம் யுவதிகள் பணியாற்றுகிறார்கள். கெஷியர் கவுண்டரிலிருந்த ஒருத்தியிடம் சென்று தனது விருப்பத்தைச் சொன்னாள்.
 “ எனக்கு தினமும் சுமார் ஒருமணிநேரம் கம்பியூட்டரில் பழகமுடியுமா..? தமிழிலும் எழுதப்பழகவேண்டும். 
 “ உங்கட பெயர் – அட்ரஸ் – மொபைல் இலக்கம் எழுதித்தாங்க…. “ அந்தப்பெண் ஒரு சிறிய காகிதம் கொடுத்தாள்.
அபிதா எழுதினாள்.  அந்தபெண் உள்ளே போட்டோ கொப்பி இயந்திரத்திடம் நின்று ஏதோ அச்சிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து,  அபிதாவுக்கு அறிமுகப்படுத்தினாள்.
 “ நாளையிலிருந்து வரமுடியுமா…? 
   ஓம் வரலாம். முற்பகல் பத்துமணியிலிருந்து பதினோரு மணி வரையும் போதும்.  முற்பணம் ஏதும் செலுத்தவேண்டுமா..?  “ எனவும் கேட்டாள்.
                  “ இல்லை. நாளைக்கு வாங்க சொல்வோம்  “ எனச்சொன்ன  கஷியர் கவுண்டரிலிருந்தவள் அபிதாவை விநோதமாகப்பார்த்துவிட்டு,  “ நீங்க… ஜீவிகா வீட்டில்தானே  வேலைக்கு இருக்கிறீங்க…?  “எனக்கேட்டாள்.
 “ ஓம்  “ எனத்தலையாட்டிவிட்டு தானியங்கி கதவினால் வெளியேறினாள்.  உள்ளே அந்த இரண்டு பெண்களும் தன்னைப்பற்றி ஏதோ பேசுவதாகப்பட்டது அபிதாவுக்கு.
 ‘ என்னத்தை பேசப்போகிறாள்கள். ஒரு வீட்டு வேலைக்காரி கம்பியூட்டர் படிக்க வரப்போகிறாள்  ‘ என்றுபேசலாம். அதற்கென்ன பேசட்டுமே.  ‘ அபிதா சந்தையை நோக்கி விரைந்தாள்.
வழியில் வரும் முத்துமாரியம்மன் கோயிலில் மணியோசையுடன்  ஒலிபெருக்கியில் நாதஸ்வரக்கச்சேரி மிதந்துகொண்டிருக்கிறது. ஒரு முதிய பெண் வாசலில் தேங்காய் அடித்து கண்கள் மூடி பிரார்த்தனை செய்கிறாள்.
அபிதாவுக்கு கடவுள் நம்பிக்கை அறவே போய்விடவில்லை.  கோயில் வாசலில் தரித்து நின்று மூலஸ்தானத்தைப்பார்த்து ஒரு கும்பிடு போட்டாள். 
யாருக்காக பிரார்த்திக்கவேண்டும்…? எவராவது   “ கடவுளே நீங்கள் சுகமாக இருக்கவேண்டும்   “ எனச்சொல்லி வணங்குகிறார்களா..?  சிதறுதேங்காய் அடிப்பதும் கற்பூரம் கொளுத்துவதும், அரோகரா கோஷம் எழுப்புவதும், அங்கப்பிரதிஷ்டை செய்வதும், தேவாரம், திருவாசகம் பாடுவதும் தத்தமக்கு கடவுள் ஏதும் தருவார் என்ற நம்பிக்கையில்தானே..?
இந்தச்சிந்தனைகள் எல்லாம்  அபிதாவுக்கு வந்ததன் பின்னணி போரின் பின்விளைவுகள்தான்.  எவருமே இறுதியில் காப்பாற்ற முன்வரவில்லை என்ற கோபம். ஜீவிகா வீட்டு வேலைக்காரியாக இருப்பதனால்,  அங்கிருக்கும் சுவாமி படங்களுக்கும் கூடத்தின் சுவரில் காட்சியளிக்கும் சத்திய சாயிபாபா படத்திற்கும் ஜீவிகாவின் பெரியம்மாவின் படத்திற்கும் அவ்வப்போது பூமாலை – பூச்சரம் கட்டி அணிவிப்பது, விளக்கேற்றுவது, ஊதுவத்தி கொளுத்துவது யாவும் கடமைக்காகத்தான் என்றாகிவிட்டது.
கோயில் திருவிழாக்களே ஆடம்பர கேளிக்கையாகிவிட்டிருக்கிறது. அப்பர் பெருமான் உழவாரப்படையுடன் கோயிலைச்சுற்றி வளர்ந்த புல் புதர்களை நீக்கி, சிரமதானம் செய்தார். அவருக்கு தொண்டுணர்வு  இருந்தது. ஆனால், இன்று கோயில் நிருவாகங்களில் பதவி உணர்வுதானே பலருக்கும் மேலோங்கியிருக்கிறது.
ஆன்மீகப்பணிகள், ஆணவப்பணிகளாகிவிட்டன.
அபிதா, அந்தக்கோயிலைக்கடந்து செல்லும்போது, அவளது  அப்பா முன்பொருதடவை சொன்னவை நினைவுக்கு வந்தது.
அபிதாவின் அப்பா, எப்போதும் பகுத்தறிவு வாதம் பேசுபவர். அதனால் அம்மாவுக்கும் அவருக்கும் இடையில் வரும் சண்டை சச்சரவுகளில் தலையிட்டு சமரசம் செய்வது  அபிதாவின்வேலையாக இருந்தது.  எல்லா உறவுகளும் இன்று இல்லையென்று ஆகிவிட்டதன் பிறகு, யாருக்காக இனி வேண்டுதல் செய்வது…?
தற்போது இங்கு உடனிருப்பவர்கள் துணை ஏதும் இன்றி தனிமரமாகிவிட்டனர். அவர்களுக்கு நல்ல துணை கிடைக்கவேண்டும் என்று வேண்டுமானால் பிரார்த்திக்கலாம்.
புதன்கிழமை தன்னுடன் வங்கிக்கு வரவிருக்கும் சுபாஷினியிடம் மனம் விட்டுப்பேசவேண்டும். அவள்தான் இந்த வீட்டுக்கு வந்தன்று எதுவித பந்தாவும் இன்றி,                                      “ நல்வரவாகுக “ என்று சொல்லி கைபற்றி வரவேற்றவள்.  அந்தத் தீண்டுதலில் ஏதோ பூர்வஜன்ம உறவு இருந்ததுபோல் அக்கணம் தோன்றியது.
வரவிருக்கும் புதன்கிழமைக்காக அபிதா காத்திருந்தாள்.
சந்தை வழக்கம்போல் ஜனசந்தடியாக காட்சியளிக்கிறது. கையிலிருந்த துண்டில் எழுதியிருந்தவற்றை பார்த்து வாங்கினாள். ஒரு சிங்களப்பெண், தரையில் பரப்பிவைத்திருந்த மரக்கறி ,  கீரை வகைகளின் மீது மொய்த்திருக்கும் இலையான்களை களைத்தவாறு,                          “ நோனா… நோனா….  வாங்கோ… என்ன வேணும்…?  என அழைத்தாள்.  அவளது உச்சரிப்பிலிருந்து சிங்களம் எனத் தெரிந்தது அபிதாவுக்கு.
அவள் இடுப்பில் கம்பாயச்சேலை அணிந்திருந்தாள். தன்னை அவள் நோனா என்று அழைத்ததும் மனதிற்குள் அபிதா சிரித்தாள்.  வெளிநாட்டு உல்லாசப்பயணிகளாக  இந்த நாட்டுக்கு வரும் வெள்ளைக்காரி எவரேனும்  வந்தால்,                                “ மெடம்…. மெடம்….  கம்… கம்…. பிளீஸ்… கம்…. “ என அழைக்கக்கூடும்.
சந்தையில் பிழைப்பு நடத்துவதற்கு  எந்தமொழியும் தேவையாக இருக்கிறது.   “ அரசியல் நடத்துவதற்கும் எந்த மொழியும் தேவையாக இருக்கிறது “  என்று  ஜீவிகா, அவள் பணியாற்றும் பத்திரிகையில் எழுதியிருந்ததும் அபிதாவுக்கு அப்போது நினைவில் சஞ்சரித்தது.
அந்த சிங்களப்பெண், தமிழில் இரண்டொரு  சொற்களை வைத்துக்கொண்டு சமாளிப்பதுபோன்று,  தானும் ஏன் சிங்களத்தில் இரண்டொரு சொற்களை பேசிப்பழகக்கூடாது,.? என்ற எண்ணமும் அபிதாவுக்கு துளிர்த்தது.
கத்தரிக்காய், வெண்டிக்காய், முருங்கைக்காய், கரட்,  கீரைவகைகளை விரலால் சுட்டிக்காண்பித்து,   கீயத..? “  எனக்கேட்டாள்.
அந்தப்பெண் சொன்ன விலையை சற்றுக்குறைத்து  கேட்பதற்கு, சிங்களத்தில் அபிதாவுக்கு வார்த்தை தெரியவில்லை. சுபாஷினி மலையகத்தை சேர்ந்தவள். அவளிடம் சில சிங்கள  வார்த்தைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.
சித்திரமும் கைப்பழக்கம் எம்மொழியும் நாப்பழக்கம் என்று சும்மாவா சொல்லிவைத்திருக்கிறார்கள். நாட்டின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமானவரே சிரமப்பட்டாவது, தமிழ் பேசுவதற்கு முன்வந்திருக்கும்போது,  தானும் சிங்களத்தை சிரமப்பட்டாவது பேசுவதற்கு முயற்சிக்கவேண்டும்.
அந்த மரக்கறி விற்கும் பெண் அபிதாவுக்குள் சிறு சலனத்தை ஏற்படுத்திவிட்டாள். அவ்வப்போது வந்து அவளிடம் பேசவேண்டும். பழகவேண்டும். அபிதா எடுத்துவந்த பிளாஸ்ரிக் பேக்கில் மரக்கறிகளை பக்குவமாக அடுக்கிக்கொண்டு, மீன் சந்தை பக்கம் சென்றாள்.
அங்கு மீன் விற்பனை செய்யும் பெண்களிடமிருந்து உதிர்ந்த  தமிழ் உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கிறது.
 ஒரு  மீன்காரி,    தன்னிடம் மீன் விலை கேட்ட ஒரு முஸ்லிம்  பெண்ணிடம்,   “ என்ர சோமல மாதாவே… என்னத்தைச்  செல்லிய.  டீஸல் , பெற்றோல் விலை தெரியாதா அம்மண்டோ…  அஞ்சு ரூவா குறைச்சியன். வேணுமா…. இல்லாட்டிப்போங்கே… “  என்றாள்.
அபிதா அந்த உரையாடலைக்கேட்டு வியப்புற்றாள். இவ்வாறும் இங்கு தமிழ் பேசுகிறார்களா..? இந்தத் தமிழும் பேசக்கற்றுக்கொள்ளவேண்டும்.
அந்த மீனவப்பெண்ணிடமே மீனும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.  மதிய உணவு சமைத்ததும்,  மீன் கறியை வேறாக எடுத்துவைத்தாள். இன்னும் சில நாட்களுக்கு கற்பகம் ரீச்சர் மச்சம் மாமிசம் சாப்பிடமாட்டார்கள் என்பது அபிதாவுக்குத் தெரியும்.
கற்பகம் பாடசாலையால் திரும்பியதும், சமையலறையில்  பரவியிருந்த மீன் கறி வாசனையை முகர்ந்துவிட்டாள்.
  என்ன…இன்றைக்கு, வீட்டில் மீன் கொடி ஏறிவிட்டதோ…  “ என்று கேலியாகக் கேட்டாள்.
 “ ஓம் ரீச்சர். சரக்குத்தூள் , பழப்புளி, வெங்காயம், உள்ளி எல்லாம் போட்டு கொஞ்சம் காரமாகத்தான் செய்திருக்கிறன். எதற்கும் கொஞ்சம் டேஸ்ட் பாருங்களேன். “ 
  உன்ர மீன்கறி வாசம் தூக்கலாத்தான் இருக்குது. கொஞ்ச நாளாக காய்ச்சல் வந்து மீன் வாசமே இல்லாமல் இருந்தன். இரு….  கால், முகம் கழுவிட்டு வாரன். இன்றைக்கு ஒரு பிடி பிடிப்போம். அது சரி, நீ சாப்பிட்டியா…? “  கற்பகம் கேட்டாள்.
 “ இல்லை  “ அபிதா தலையாட்டினாள்.
 “ சரி…. வா… சாப்பிடுவோம்.    சொல்லிவிட்டு கற்பகம் குளியலறைக்குள் புகுந்தாள்.
 ‘ என்ன திடீர் மாற்றம்     கற்பகம் திரும்பிய திசையை  ஆச்சரியத்துடன் பார்த்து மனதிற்குள் அபிதா யோசித்தாள்.
 ‘ சில நேரங்களில்… சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்போலும். ‘ 
பிரத்தியேகமாக எடுத்துவைத்த மீன்கறி பாத்திரத்துடன்  சாப்பாட்டு மேசையை கற்பகம் சாப்பிடுவதற்காக  ஒழுங்கு செய்தாள்.
கற்பகத்தின்  வழக்கமான எவர்சில்வர் தட்டத்திற்குப்பதிலாக மச்சம் மாமிசம் சாப்பிடும் செரமிக் பிளேட்டை எடுத்துவைத்து, தண்ணீர் அருந்துவதற்கும் கண்ணாடி  தம்ளரை அருகில் வைத்துவிட்டு.  அடுத்த கட்டளைக்கு காத்திருந்தாள்.
கற்பகம் ரீச்சருக்கு, அவள் மனதிற்குள் சூட்டியிருக்கும் மற்றும் ஒரு புனைபெயர் “ கட்டளைத் தளபதி. 
குறிப்பறிந்து நடக்கும் தன்னிடத்தில் அநாவசியமாக கோபிப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு கற்பகம் ரீச்சர் வந்திருக்கவேண்டும். அதுதான் எந்த கடுகடுப்பும் இல்லாமல், இன்று அமைதியாக இருந்து  தனது சமையலை ரசித்து சாப்பிடுகிறாவாக்கும்.
இருந்தாலும் இந்த மனுஷியை நம்பமுடியாது. பருவகாலம் போன்று திடீர் திடீரென மாறிவிடலாம்.
 “ வடிவாப்போட்டுச்சாப்பிடுங்க ரீச்சர். மீன் கறி டேஸ்டாக இருக்கிறதா..? “
  ம்…. ம்…,  “ தலையை ஆட்டியவாறு மீன்முள்ளுகளை தட்டத்தின் ஓரமாக எடுத்துவைத்த கற்பகத்திடம் ஒரு சிறிய செரமிக் பிளேட்டை நகர்த்தி,  “ இதில் வையுங்க ரீச்சர்  “ என்றாள்.
கற்பகம் அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு முட்களை எடுத்து வைத்தாள்.  அந்த ஓரக்கண் பார்வையில் பொதிந்திருக்கும் அர்த்தம் என்னவோ…? அபிதா, தனது தட்டத்தை எடுத்து சற்றுத்  தள்ளி  நின்று காஸ் அடுப்பின் அருகில் வைத்து சாப்பிடத்தயாரானாள்.
  இப்படி வா. மேசையிலிருந்தே சாப்பிடு  “ கற்பகம் அழைத்தும்,  “ இல்லை ரீச்சர்,.. நீங்க சாப்பிடுங்க…. “ அபிதா தயக்கத்துடன் நின்றவாறே  சாப்பிட்டுவிட்டு கையை கழுவிக்கொண்டாள்.
அன்று  மாலை கடந்து,   வேலையால் திரும்பிய மஞ்சுளாவிடமும், சுபாஷினியிடமும்,   “ என்ர அம்மண்டோ என்னத்தை செல்லிய சோமல மாதாவே… எங்கட ரீச்சர் நல்லாவே மாறிப் போன எலா….”  என்று நிகும்பலையின் தமிழ் மீனவர் பாஷையில் அபிதா சொன்னதும், அவர்கள் இருவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.
கற்பகம் அப்போது,  மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டுக்குப் போயிருந்தாள்.
( தொடரும் )











-->

















No comments: