நந்தமிழே நல்லின்பம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா


சின்னசின்ன நடை நடந்து
செம்பவள வாய்மலர்ந்து
செந்தமிழால் அம்மாவென
செப்பிநின்றால் தேனொழுகும்
ஆசையொடு அணைத்தபடி
அப்பாவென நந்தமிழால்
பாசமுடன் அழைத்திட்டால்
பைந்தமிழும் பெருமையுறும்  !

கனியமுதே கற்கண்டே
கண்டெடுத்த நன்முத்தே
கூவுகின்ற கோகிலமே 
குதித்தோடும் மானினமே 
எனத்தமிழில் காதலியை
அழைத்துமே பாருங்கள்
விரும்பாத காதலியும் 
விருப்புடனே அருகணைவாள் !

செந்தமிழால் துதுபாடி
சேர்த்திடலாம் இன்பமெலாம்
நந்தமிழை இறைவிரும்பி
நாளுமே தமிழ்கேட்டார்
அந்தமிலா எந்தமிழை
அடியவர்கள் பக்தியுடன்
தந்துநின்றார் இலக்கியமாய்
தானதுவே தமிழ்வேதம் ! 
-->











No comments: