ஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020


வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 12_01_2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserveமைதானத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஓஸ்ரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர் திரு அருணகிரிநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மற்றுமொரு நீண்டகால செயற்பாட்டாளர் திரு அன்ரன் வேதநாயகம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்-களின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில்  ஓட்டப்போட்டிகள், சமநிலை ஓட்டம்,  தவளைப்பாய்ச்சல், தேசிக்காய் கரண்டியில் வைத்து ஓடுதல் அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றது.
பெரியவர்களுக்கான விளையாட்டுக்களாக சாக்கோட்டம், கயிறு இழுத்தல், நீளம் பாய்தல், ஓட்டப்போட்டிகள், குண்டெறிதல் என்பனவும் இடம்பெற்றன. கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பன விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் பலசுற்றுக்களாக இடம்பெற்றன.
மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய சிறார்கள் அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு பெரியவர்களுக்கான விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கும் விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதி-களினாலும்தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள்போட்டிகளின் நடுவர்களினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
வழமைபோன்று தாயக உணவுவகைகளான தோசை, பூரி, வடை, கொத்துரொட்டி ஒடியற்கூழ் முதலான உணவுகளும்வடை, றோல், பற்றீஸ், டோனட் மற்றும் பாபிகியூ போன்ற சிற்றுண்டிகளும் அத்தோடு வலூடா உள்ளிட்ட குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன. 
துடுப்ந்தாட்டத்தில் MTG அணியும்Shivash Reegal அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வுசெய்யப்பட்டு Shivash Reegal அணி 2020ம் ஆண்டிற்கான வெற்றியாளர் விருதை தனதாக்கிக்கொண்டது. கரப்பந்தாட்டம் மிக்ஸ்கேம் போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணியினருக்கும்செந்தமிழ் அணியினருக்கு-மிடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப்போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணி வெற்றியீட்டி 2020ம் ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர். 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான துடுப்பாட்ட  போட்டியின் இறுதியாட்டத்தில்  ஈழம் போய்ஷ் - சிவப்பு அணியினர் 2020 ஆண்டு சம்பியனாகவும், ஈழம் போய்ஷ் - மஞ்சள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பவற்றில் இறுதியாட்டங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டு, இறுதியாட்டங்களில் பங்கெடுத்து வெற்றியீட்டிய அணிகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, இவ்விளையாட்டுக்களில் இறுதியாட்டங்களில் பங்கெடுத்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இறுதியாக பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கும் நிகழ்வையடுத்து மாலை 8.00 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டடு தமிழர் விளையாட்டுவிழா_ 2020 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.No comments: