பயணியின் பார்வையில் - அங்கம் 12 கல்விபொதுத் தராதர பரீட்சைகள் முடிந்ததும் மாணவருக்கு தொழில் பயிற்சி அவசியம்! " வடபகுதியில் பன்னிரண்டு இடங்களில் ரயில்வே கடவை இல்லை ! பன்னிரண்டு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன!!" - முருகபூபதி


இலங்கையில் நாடெங்கும் சீரான பஸ்போக்குவரத்து இருந்தபோதிலும்,  பயணிகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தவாறே விழிப்புடன் பயணிக்கவேண்டியிருக்கிறது.
வருடாந்தம் அங்கு நடக்கும் வீதி விபத்துக்கள் பற்றிய புள்ளிவிபரங்களை போக்குவரத்து துறை சார்ந்த பொலிஸார் ஊடகவியலாளர்களை அழைத்து தகவல் தெரிவித்துவருகிறார்கள்.

தூரப்பயணங்களில் ஈடுபடுத்தப்படும் பஸ்வண்டிகளின் சாரதிகளின் கவனக்குறைவினால் அதிகாலைப் பயண வேளையில் வரும்  உறக்கக் கலக்கத்தினால் பல விபத்துக்கள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து தினமும் இரவுவேளையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் தனியார் துறை பஸ்வண்டிகள் பயணிகளுடன் பயணிக்கின்றன. அவற்றில் ஆசனம் பதிவுசெய்யவேண்டியவர்கள் அதற்கான முகவர்களிடம் சென்று பதிவுசெய்துகொள்ளலாம்.

வடக்கிற்கான பாதையில் கொழும்பிற்கு அப்பால், ஆசனம் பதிவுசெய்யக்கூடிய அலுவலகங்கள் எங்கள் ஊர் நீர்கொழும்பிலும் இருக்கிறது. அங்கு சிலாபம் வீதியில் பெரியமுல்லை என்ற இடத்தில் பஸ்கள் அனைத்தும் தரித்துச்செல்கின்றன.
பல இரவுப்பொழுது ஹோட்டல்களும் உணவு விடுதிகளும் இயங்குகின்றன. சில 24 மணிநேரமும் தனது சேவையை பயணிகளுக்கு வழங்கிவருகின்றன. நீர்கொழும்பு பிரதான நகரத்திற்கு சமீபமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பதனால், ஏராளமான உள்ளூர் வெளியூர் பஸ்கள் இங்கும் தரித்து நின்று வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் ஏற்றிச்செல்கின்றன.
இவ்வாறு பஸ்களில் பயணிக்கவிரும்பாத வெளிநாட்டினர், முன்னேற்பாடாக கட்டுநாயக்காவில் கார்களை வாடகைக்கு எடுத்து,  செல்லவேண்டிய ஊர்கள் - இடங்களுக்கெல்லாம் சென்று திரும்பிய பின்னர், மீண்டும் கார்களை ஒப்படைத்துவிட்டு விமானம் எறி விடைபெற்றுக்கொள்கின்றனர்.
சுருக்கமாகச்சொன்னால்,  நெடுஞ்சாலைகளில் பயணங்கள் பலவிடயங்களில் சௌகரியமாக இருந்தாலும், பஸ் ஆசனப்பதிவுகளில் நேர்ந்துவிடும் குறைபாடுகளினால் பயணிகள் சிரமங்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.
அனைத்து தொடர்பாடல்களும் கைத்தொலைபேசியூடாகவிருப்பதும் இச்சிக்கல்களுக்கு காரணம் எனலாம்.  ஆசனங்களை பதிவுசெய்யும் முகவர்களுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் இடையில் தொடர்பாடலில் நீடிக்கும் குறைபாடுகளினால் பல பயணிகள் முன்னேற்பாடாக ஆசனம் பதிவுசெய்திருந்தபோதிலும், இடைவழியில் ஏறும்போது பல சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
அன்று நான் நீர்கொழும்பு -  சிலாபம் வீதியில் பெரியமுல்லையில் இரவுவேளையில் கொழும்பிலிருந்து பருத்தித்துறை செல்லும் அந்த தனியார் பஸ்ஸிற்காக காத்து நின்றேன். சரியாக இரவு 10 மணிக்கு வரும் என்று அந்த முகவர் ( பெண்) சொல்லியிருந்தார்.
நானும் இன்னும் ஒரு சில பயணிகளும் இரவு 11 மணிவரையில் அங்கு காத்திருந்தோம். அந்த பஸ் தாமதமாக வந்து ஏற்றிச்சென்றது. இடைவழியில் மேலும் சில பயணிகள் ஏறினார்கள். அவர்களில் சிலருக்கு அந்த பஸ்ஸில் அமர்ந்து செல்வதற்கு ஆசனம் இல்லை.
அதனால் நடத்துனர் மிகவும் சிரமப்பட்டார். அந்த பஸ் மேலும் தாமதித்தது. எமது பஸ்ஸிற்குப்பின்னால் வந்த சில பஸ்கள் வேகமாக கடந்து சென்றுகொண்டிருந்தன.

அவ்வாறு கடக்கும் பஸ்களில் ஆசனம் இருக்கிறதா? எனக்கேட்கும் நிலைதோன்றியது.
அந்த பஸ் நீண்ட தாமதத்தின் பின்னர் காலை ஏழு மணியும் கடந்து,  பருத்தித்துறையை வந்தடைந்தது. அதன் சாரதி கையெடுத்து கும்பிடாத குறையாக பயணிகளிடம் மன்னிப்புக்கோரினார். வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய தேவை அவரது "மன்னிப்பில் " தெரிந்தது.

நான் இறங்கிய இடத்திற்கு எனது பெறாமகளின் கணவர் வந்து அழைத்துச்சென்றார். அன்று மார்ச் 01 ஆம் திகதி. மறுநாள் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரசாங்க செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் யாழ். மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் தகவல் அமர்வும் ஒன்றுகூடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் மார் 03 ஆம் திகதி, முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு, வவுனியா - வேப்பங்குளம் நிகழ்ச்சிகள்.
வடக்கில் வடமராட்சியில் வந்திறங்கிய அன்றைய தினத்தை வீணாக்கிவிடாமல், துரிதமாகவே இயங்கினேன். வடமராட்சியில் நான் நேசிக்கும் சில இலக்கியவாதிகள் நோய் உபாதைகளுடன் இருப்பதனால் அவர்களைப் பார்க்கச்சென்றேன். இந்தப்பயணத்தில் அங்கு நான் சந்தித்த கலை - இலக்கிய ஆர்வலர் ஆசிரியர்  சதானந்தன் அவர்கள் நான் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய சில நாட்களில் மறைந்துவிட்டமை பற்றி ஏற்கனவே எழுதிய ஒரு பதிவில் விபரித்திருக்கின்றமையால், மாணவர் ஒன்றுகூடல் குறித்து சொல்லவிரும்புகின்றேன்.

இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  நீடித்தபோரின் பெறுபேறு: ஆயிரக்கணக்கான குழந்தைகள் தமது தந்தைமாரை இழந்தார்கள். அதனால் அங்கு பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 85 ஆயிரம் என்று எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நிலாந்தன் ஒரு பதிவில் குறிப்பிடுகிறார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:
"இலங்கையில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஏறக்குறைய 85,000 உண்டு. இவற்றிற்கு உதவுவதற்கு உரிய பொறிமுறை எதுவும் இல்லை. அவர்களுக்கு உதவி செய்வது போல வரும்  நுண்கடன் நிதி நிறுவனங்கள் குடும்பத் தலைவிகளைக் கடனாளிகளாக்கி, தற்கொலை செய்யத் தூண்டு கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கு உரிய பொறிமுறை  எதுவும் இல்லை. அரசாங்கம் அவர்களுக்குக் கொடுப்பது மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவே. அது ஒரு பிச்சைக் காசு. ஆனால், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் உதவுகின்றன."
சிலவருடங்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி வானொலியில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஒருவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சி தருவது. அந்த மாகாணத்தில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் தங்கள் கல்வியை இடைநிறுத்திவிடுகிறார்களாம்!? காரணம் வறுமை. மற்றும் ஒரு புறக்காரணியும் இருக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறை. தொண்டர் ஆசிரியர்களுக்கு சரியான வேதனம் வழங்குவதற்கு ஏற்ற பொறிமுறையும் இல்லை.
அதனால்தான் அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது கல்வி நிதியம் கன்பரா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் மூதூர் சம்பூர் மகாவித்தியாலயத்தில் மூன்று  தொண்டர் ஆசிரியர்களுக்கு முன்னர் வேதனம் வழங்கியிருந்தோம்.
அரசாங்கம் வறுமைக்கோட்டில் வதியும் குடும்பங்களுக்கு சமூர்த்தி திட்டத்தின் மூலம் உதவிவருகிறது. ஆனால், அமைச்சர்கள் -  பிரதானிகள் கலந்துகொள்ளும் அந்த நிகழ்வு பெரிய எடுப்பில் நடத்தப்பட்டு இலட்சக்கணக்கான ரூபாய் வீண் விரயம் செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்துவரும் தேர்தலில் வாக்கு வங்கியை பெருக்குவதற்காகவே இத்தகைய பிரமாண்டமான விழாக்கள் அரச செலவில் ( மக்களின் பணத்தில்) நடத்தப்படுகின்றன.
இந்தப்பின்னணிகளுடன்தான் போருக்குப்பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் வாழும்,  நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தாய்மாரையும் அவர்களின் குழந்தைகளையும்  அவதானிக்கவேண்டியிருக்கிறது.
எமது கல்வி நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 - 1989 காலப்பகுதியில் வடமாகாணத்தில் மாணவர்களை  தெரிவுசெய்வதிலும் அவர்களின் நலன்களை கவனிப்பதிலும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்கள் எழுத்தாளர்கள் திரு. தெணியான், மற்றும் திருமதி கோகிலா மகேந்திரன் ஆகியோர்.
இவர்கள் ஆசிரியர்களாகவும் சமூக நலன் விரும்பிகளாகவும் இயங்கியிருப்பவர்கள். அதன்பின்னர் வடக்கில் எமது பணியை விரிவாக்குவதற்காக யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்துடன் தொடர்புகளை மேற்கொண்டோம்.
அந்த அமைப்பு முன்னர் கொக்குவிலில் இயங்கியது. அதன் நிருவாகப்பொறுப்பிலிருந்தவர்தான் பின்னாளில் வடமாகாண சபையின் தவிசாளரும் யாழ். மாநகர முன்னாள் ஆணையாளருமான திரு. சி. வி.கே. சிவஞானம். இந்த அமைப்பிலிருந்த தொடர்பாளர் திரு. பாலதயானந்தன் மிகுந்த அர்ப்பணிப்புடன் பிரதேச ரீதியாக மாணவர்களை தேடிச்சென்று தெரிவுசெய்து அவர்களின் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பியதுடன் நிதியம் வழங்கிய கொடுப்பனவுகளையும் சீராகச்சேர்ப்பித்து உதவினார்.
போர் முடிந்த பின்னர் யாழ். மாவட்ட மாணவர்களின் முதலாவது ஒன்று கூடல் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்தில் 2010 ஜனவரி மாதம் நடந்தது. அதன்பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இந்த ஒன்றுகூடல்கள் நடந்துவருகின்றன.
கொக்குவில் இந்துக்கல்லூரி, நல்லூர் நாவலர் மண்டபம், அரியாலை  கலைமகள் சனசமூக நிலையம், யாழ். அரசாங்க செயலக மாநாட்டு மண்டபம் ஆகியனவற்றில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இந்த மாணவர் ஒன்று கூடல் நிகழ்வுகள் நடந்தேறிவருகின்றன.
அன்பர் பாலதயானந்தன் ஒருசமயம் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவை வழங்கச்சென்றவிடத்தில்  விபத்துக்குள்ளாகி சில வருடங்களாக படுக்கையில் இருக்கிறார். இவரை மோதியவர்கள் மதுபோதையில் வந்த காவலர்கள். ஆனால், இதுவரையில் பாலதயானந்தனுக்கு நீதி கிடைக்கவில்லை.
"பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடக்கவேண்டும் " என்று சட்டம் சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தை பாதுகாக்கவேண்டியவர்கள் அன்று அவரை மோதினார்கள்.  பாலதயானந்தனுக்கு ஏதேனும் ஆக்கபூர்வமாகச் செய்யவேண்டும் என்று வடமாகாண தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுக்கு , அவர் பதவியிலிருந்த காலத்திலேயே தொலைபேசியூடாகச் சொல்லியிருக்கின்றேன்.
பாலதயானந்தன் போன்ற பொதுநலத் தொண்டர்கள் சிலருக்கு ,  வாழ்க்கை இத்தகைய வெகுமதிகளையும் தந்துவிடுகிறது!
யாழ். அரசாங்க அதிபர் திரு. நா.வேதநாயகன் எமது கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிகளை நன்கறிந்தவர்.
அதனால் யாழ். மாவட்ட மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தை தந்து உதவியிருந்தார். இலங்கைப் பிரதமர்  உட்பட அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் அமர்ந்து அபிவிருத்தி பற்றிப்பேசும் அந்த மாநாட்டு மண்டபத்தில் எமது நிதியத்தின் பராமரிப்பிலிருக்கும் மாணவர்களும் - அவர்களின் தாய்மாரும் பாதுகாவலர்களும் அன்று ஒன்றுகூடியிருந்தனர்.
சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சமகால தலைவர் திரு. க. சுசீந்திரன் தலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. யாழ். மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீக்கிலாப்பிள்ளை மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தார். அவுஸ்திரேலியாவிலிருந்து கல்வி நிதியத்தின் சார்பில் என்னுடன் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன், நடனகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
படைப்பிலக்கியவாதிகளும்  ஊடகவியலாளர்களுமான கருணாகரன், ரவிவர்மா, வன்னியகுலம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். பிரான்ஸிலிருந்து தோழர் அழகிரி தமது துணைவியாருடன் வருகை தந்திருந்தார். சிவன் அறக்கட்டளை இயக்குநர் திரு. கணேஷ் வேலாயுதம் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மாணவர்கள் - தாய்மார்கள் சிலர் உரையாற்றினர்.
அன்றைய நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளில் நடைபெற்றது. முதல் அமர்வில் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் அமர்வு நடத்தப்பட்டதுடன் நிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டது. இரண்டாவது அமர்வு, முக்கியமானது. இலங்கையில் எமது மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் - உயர்தரம் பரீட்சைகளுக்குத் தோற்றியபின்னர், அவற்றின் பெறுபேறுகள் சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு பின்னர்தான் வெளிவருகின்றன.
குறிப்பிட்ட மாதங்களில் இம்மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன செய்யவேண்டும் ? என்பது பற்றி இலங்கை கல்வி அமைச்சோ அல்லது மாகாண கல்வி அமைச்சுகளோ ஏதும் உருப்படியான திட்டங்கள் - யோசனைகளை வைத்திருக்கின்றனவா?
வெளிநாடுகளில் பத்தாம் தரத்தில் பயிலும் மாணவர்கள் சுமார் ஒருமாத காலம் வெளியே ஏதும் தொழில் பயிற்சிகளை பெறவேண்டும் என்ற திட்டம் நடைமுறையிலிருக்கிறது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, துருக்கி முதலான நாடுகளில் மேல் வகுப்பிலிருக்கும்போதே மாணவர்கள் இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களாகியும், மாணவர்கள் மேற்கல்வியை தொடரும் வேளையில் அவர்களுக்குப்பொருத்தமான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை.
அரசாங்கப்பரீட்சை முடிந்ததும் மாணவர்கள் சில  மாதங்கள் காலத்தை வீணே கழிக்கின்றனர். பல்கலைக்கழகம் பிரவேசிக்கமுடியாத மாணவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிகளில் இணைந்து வேறு பயிற்சிகளை பெறமுடியும். இதுகுறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை இலங்கையில் இயங்கும் மாகாண சபைகள் உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருக்கிறதா?
இந்தக்கேள்விகளை மனதிலிருத்தி அன்றைய ஒன்றுகூடலில் இரண்டாவது அமர்வை நடத்தியிருந்தோம். சில மாணவர்கள் தாங்கள் கணினி பயிற்சிக்கு செல்வதாக தெரிவித்தனர்.
இந்த அமர்வில் க.பொ.த சாதாரண தரம் - உயர்தர வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். இதுவிடயமாக கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் கவனித்தல் வேண்டும் என்ற வேண்டுகேளை விடுத்தோம்.
யாழ். மாவட்ட  அரசாங்க செயலக மாநாட்டு மண்டபத்தில் மதிய விருந்துக்கும் ஒழுங்கு செய்திருந்தோம். மாணவர்களும் தாய்மாரும் பாதுகாவலர்களும் குடநாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் வந்திருந்தனர். ஒன்று கூடல்- மதியவேளையில்தான் நிறைவடையும். அதனால் இந்த ஏற்பாட்டையும் மேற்கொண்டிருந்தோம்.
இதற்கான செலவீனங்கள் அனைத்தையும் எமது கல்வி நிதியமே ஏற்றுக்கொண்டிருந்தது.
அங்கு என்னைச்சந்தித்த  யாழ்ப்பாணம் நண்பர்களிடம் நாட்டு நிலைமை பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். தினமும் செய்திகளை ஊடகங்களில் படித்துவருவதனால் மேலும் தெரிந்துகொள்வதற்கு ஆர்வம் கொண்டிருந்தேன்.
ஒரு நண்பர், போருக்குப்பின்னர் பல தடவைகள் வந்துவிட்டீர்கள். எங்கள் பிரதேசம் உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது ? என்று கேட்டார்.
நானும் மிகச்சுருக்கமாக, " வடபகுதியில் பன்னிரண்டு இடங்களில் ரயில்வே கடவை இல்லை! அதேசமயம் பன்னிரண்டு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன!" என்றேன்.
இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு செய்தி வருகிறது:
கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்த ரயில், கிளிநொச்சியில் 155 ஆம் கட்டையில் காளிகோயிலுக்கு அருகாமையில் இருக்கும் ரயில் கடவையற்ற இடத்தில் ஒரு இரணுவ ட்ரக் மோதுண்டதில் ஆறுபடையினர்  கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த பாதுகாப்பு கடவையற்ற இடத்தில் இதற்கு முன்னரும் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளன.

இச்சம்பவம் நேற்று முன்தினம் 24 ஆம் திகதி நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்புக்கூறல் வேண்டும்?

கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினரா? வடக்கு மாகாண சபையா? இலங்கை போக்குவரத்து  அமைச்சா? ரயில்வே திணைக்களமா?
ஊடகங்களில் இனி பட்டிமன்றம் சிறிதுகாலத்துக்கு தொடரலாம்!.

( தொடரும்)
-->


No comments: