இலங்கைச் செய்திகள்


அரசியலமைப்பின் 18, 19வது திருத்தச் சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டும் ; ஜனாதிபதி

தற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை

அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்படுங்கள் -  ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்

மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் ஏன் இரத்துச்செய்யப்பட்டது?

இவ்வாரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்- மன்னிப்புச்சபை அச்சம்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பின் நிரந்தரப் பதிவாளர்

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் பிரிட்டிஷ் சபை

பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்  சாட்சியமளிக்க  மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு

போதை பொருள் பாவனைக்கு எதிராக முள்ளிவாய்க்கால் மக்கள் ஆர்ப்பாட்டம் !

அபாயா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

மூத்த ஊடகவியலாளர் எஸ் . தில்லைநாதன் மறைந்தார்

யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

கோத்தபாயவிற்கு மேலும் நெருக்கடி- அமெரிக்க நீதிமன்றில் பலர் வழக்கு

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு- பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பது என்ன?

குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்யலாம் ; நீதிமன்றம் உத்தரவு!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக செயல்படுத்த திட்டம்

முஸ்லிம்கள் குறித்த, அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்திற்கு தலாய்லாமா கடும் கண்டனம் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்
அரசியலமைப்பின் 18, 19வது திருத்தச் சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டும் ; ஜனாதிபதி

23/06/2019 சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 
18வது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட மன்னர் ஆட்சி மற்றும் சர்வாதிகார தோற்றத்தின் காரணமாக புதிதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும், அதனூடாக ஒரு அரசியல் தலைமையின் கீழ் பயணிக்க முடியாத நிலை தோன்றி இருப்பதனால் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நல்லாட்சி அரசின் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார். 
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று (23) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் மக்கள்நேய ஆட்சியே நாட்டுக்கு தேவையாக இருப்பதாகவும் அரசியல் தலைமைகள் நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். 
நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான சக்தியாக கருதப்படும் சுமார் 16 இலட்சம் அரச ஊழியர்கள் ஊழல் மற்றும் மோசடிகளை தவிர்த்து தங்களது கடமைகளை சரிவர ஆற்றுவார்களேயானால் பொதுமக்களின் தேவைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 
ஜப்பான் நாட்டின் பிரதான சங்கநாயக்கர் வண.பானகல உபதிஸ்ஸ தேரர்இ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரான திருமதி. பேரியல் அஸ்ரப்இ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 
தற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை

24/06/2019 முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை நடத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.  
பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் இது தொடர்பில் விஷேட ஆலோசனைக் கடிதம் ஒன்றூடாக தெரியப்படுத்தியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதல்களை முற்றாக அல்லது பகுதியளவிலேனும் தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி, அவர் அவரது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றவில்லை என்பதை அவதானித்தே இந்த விசாரணைகளுக்கான ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள ஆலோசனை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 

அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்படுங்கள் -  ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

25/06/2019 இலங்­கையில்  இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற  பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து   கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன்.  எனினும்  அதன்­ பின்னர்   முஸ்லிம் மக்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும்  சில மதத்­த­லை­வர்­களின்  வன்­மு­றை­களை அங்­கீ­க­ரிக்கும் வகை­யி­லான  கருத்­துக்கள் தொடர்­பி­லான   அறிக்­கைகள்    கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்    மிச்செல்  பச்லெட்  தெரி­வித்தார். 
பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக சில­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  ஆனால்  அவ­ச­ர­கால சட்­ட­மா­னது மிகவும்  குறை­வான காலப்­ப­கு­திக்கு மட்­டுமே    அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும்  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட்  குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 
 ஜெனி­வாவில் நேற்று ஆரம்­ப­மான   ஐ.நா. மனித உரிமை பேர­வையின்  41 ஆவது கூட்டத் தொடரை ஆரம்­பித்து  வைத்து  உரை­யாற்­று­கை­யி­லேயே    ஆணை­யாளர்  மிச்செல் பச்லெட் இதனைக் குறிப்­பிட்டார்.  
நீண்ட அறிக்­கையை  நேற்று   பேர­வையில் வாசித்த   மனித உரிமை ஆணை­யாளர் பல்­வேறு நாடுகள் குறித்து பிரஸ்­தா­பித்­த­துடன் இலங்கை குறித்தும் தனது  நிலைப்­பாட்டை வெ ளியிட்டார். 
அவர் அங்கு இலங்கை தொடர்பில் மேலும்  குறிப்­பி­டு­கையில்,
இலங்­கையில் இரண்டு  மாதங்­க­ளுக்கு முன்னர்  இடம்­பெற்ற   பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள்  அந்த நாட்டில்  பதற்­றத்தை  அதி­க­ரித்­தமை தொடர்பில்    நான்  கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன்.  
ஜனா­தி­ப­திக்கும் அர­சாங்­கத்­திற்­கு­மி­டை­யி­லான ஒன்­றி­ணைந்த அணு­கு­மு­றையின்  பல­வீ­ன­மான தன்­மையே  பாது­காப்புத் தரப்­பினர்  அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் பாது­காப்பை வழங்கும் செயற்­பாட்டில்   பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  குறிப்­பாக   சில  முக்­கிய  மனித உரிமை விட­யங்­களில்  இவ்­வாறு  மோச­மான பாதிப்பு  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  
எப்­ப­டி­யி­ருப்­பினும்  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள்   மற்றும்   சில  மதத்­த­லை­வர்­களின் வன்­மு­றை­களை  ஊக்­கு­விக்கும் கருத்­துக்கள் என்­பன என்னை கவ­லை­கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றன.  இந்த  விடயம் சரி­யான முறையில்  கையா­ளப்­ப­ட­வேண்டும்.   
பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக சில­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ­ச­ர­கால சட்­ட­மா­னது மிகவும்  குறை­வான காலப்­ப­கு­திக்கே   அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.  
அத்­துடன்   அர­சியல், மதத்­த­லை­வர்­க­ளையும் சமூ­கத்­த­லை­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து  வன்­மு­றைகள் மற்றும் அநீ­திகள் கார­ண­மாக  ஏற்­பட்­டுள்ள   நிலை­மை­களை   ஆராய்­வதே   இங்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக   காணப்­ப­டு­கின்­றது.   
அனைத்­து­வ­கை­யான வன்­மு­றைகள் மற்றும் அநீ­திகள் தொடர்பில்  அர­சியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள்  ஒன்றிணைந்து ஆராயவேண்டியது அவசியமாகும்.   
இந்த  விடயத்தில்   இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் மிக முக்கிய மற்றும்   ஊக்குவிக்கத் தக்க வகையிலான வேலைத்திட்டங்களுக்கு எனது  முழு ஒத்துழைப்பும்  வழங்கப்படும்  என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.   நன்றி வீரகேசரி 

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

25/06/2019 வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று,  வென்னப்புவ பிரதேச சபைத்  தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,  குறித்த கடிதத்தில் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். 
கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத்  தாக்குதல்களையடுத்து,  குறித்த பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப்  பகுதிக்கு வருவதற்கு,  ஏனைய மக்களும் வியாபார சமூகமும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், பிரதேச சபைத் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 
இதன்பிரகாரம், தங்கொட்டுவ  வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள்  வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்

25/06/2019 யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர்.
உலகில் 36 நாடுகள் இச்சேவை குறித்து எச்சரித்துள்ளதுள்ளன. அத்துடன் உலகெங்கும் உள்ள 180 விஞ்ஞானிகளும் 5 G சேவைக்கான மின்காந்த அலைக்கற்றையால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளனர்.
இதன் அலைவரிசை புற்றுநோய் தாக்கம், குழந்தைகள், கற்பவதிகள், சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் உலகளாவிய ரீதியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அலைக்கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக அமைவதாக 2011 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதனை விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்ப சேவைக்கு அனுமதி வழங்க தயங்கி வரும் நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  நன்றி வீரகேசரி 


மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் ஏன் இரத்துச்செய்யப்பட்டது?

25/06/2019 இலங்கையில் அமெரிக்கா தளத்தை  அமைப்பதற்கு காணப்படும் எதிர்ப்புகள் காரணமாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்போம்பியோ  இலங்கைக்கான தனது விஜயத்தை இரத்துச்செய்தார் என இந்தியாவின் எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை விவகாரங்களை உன்னிப்பாக அவதானிப்பவர்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான அமெரிக்காவின் ஆதரவை வெளியிடுவதற்காக 27 ம் திகதி மைக்போம்பியோ  மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிடல் பிரச்சினைகளால்  இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதுடன் மைக்பொம்பியோ பிறிதொரு தினத்தில் விஜயம் மேற்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளதாக எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மைக்போம்பியோ  இந்தியாவிற்கும்  ஓசாகாவில் இடம்பெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கும் செல்லவுள்ள அதேவேளை இந்த இரண்டு விஜயங்களிற்கும்  இடையில் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார்.
அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இந்து சமுத்திர மற்றும் இந்தோ பசுவிக்கில் கடற்போக்குவரத்து சுதந்திரம்  உட்பட பல விடயங்கள் குறித்து  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில் இலங்கையில் மூலோபாய பிரசன்னத்தை கொண்டிருப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது என  எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச காலத்தில் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன என தெரிவித்துள்ள எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம்  எதிர்காலத்தில் சீனாவின் கடற்படையின் நடவடிக்கைகளிற்கு  அம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் அமெரிக்க படையினரின் பிரசன்னத்தையும் அமெரிக்காவின் தளம் அமைவதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக எதிர்ப்பதாக அறியமுடிவதாக எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு எதிராக அதிகரித்துவரும் உணர்வுகளே அமெரிக்க இராஜாங்க செயலாளரின் விஜயம் இரத்துசெய்வதற்கான காரணமாக அமைந்தது என கொழும்பின் தகவல்கள் தெரிவித்தன என  எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 
இவ்வாரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்- மன்னிப்புச்சபை அச்சம்

25/06/2019 போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான  இரகசியமான நடவடிக்கைகள்  இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இவ்வாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால்  1976ம் ஆண்டின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தடவையாக அது காணப்படும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மரணதண்டனை குறித்த தனது சாதகமான வரலாற்றை இலங்கை கைவிடப்போகின்றது என வெளியாகும் அறிக்கைகளால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர்  பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது மனித உயிர்களை பாதுகாப்பது முக்கியமானதாக கருதப்படும் மனிதாபிமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள தோல்வியையே புலப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் நோக்கில் மேலும் மரணங்கள் இடம்பெறுவது இலங்கைக்கு தற்போது தேவையற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மரணதண்டனையை நிறைவேற்றும் நோக்கத்துடன் உள்ளார் என எங்களிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 


கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பின் நிரந்தரப் பதிவாளர்

25/06/2019 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையைச் சேர்ந்த அமரசிங்கம் பகீரதன் இன்று திங்கட்கிழமை (24) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்துக்கமைய உபவேந்தரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு - களுதாவளையைச் சேர்ந்த அமரசிங்கம் பகீரதன் கிழக்குப் பல்கலைக்கழத்தின் வியாபார நிருவாகப் பட்டதாரியும், வியாபார நிருவாகப் முதுமாணிப் பட்டதாரியுமாவார். அத்துடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவினையும் நிறைவு செய்துள்ளார்.  
பட்டம் பெற்ற 1996ஆம் ஆண்டு முதல் 1999 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும், விடுதிக்காப்பாளராகவும் பணியாற்றினார். பின் 1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக நியமனம் பெற்றார்.
2002ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று கிழக்குப் பல்கழலைக்கழகத்தில் இணைந்து கொண்ட அமரசிங்கம் பகீரதன் உதவிப் பதிவாளர், சிரேஸ்ட உதவிப் பதிவாளர், பிரதிப் பதிவாளர், பதில் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் பதவி வகித்து வந்திருந்தார்.
2007ஆம் ஆண்டு வரை பதிவாளராக இருந்த ஏ.டி. ஹரிஸ் ஓய்வு பெற்றுச் சென்றது முதல், ஒப்பந்த அடிப்படை, பதில் கடமை அடிப்படைகளில் பதிவாளர்கள் கடமைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் பேரவை தீர்மானத்துக்கமைய நிரந்தர பதிவாளராக அமரசிங்கம் பகீரதன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் பிரிட்டிஷ் சபை

25/06/2019 மொழி தடைக்களை குறைக்கும் வகையில் இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு பிரிட்டிஷ் சபை உதவி வருகின்றது. சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இங்கு பேசப்பட்டு வரும் நிலையில் மொழித் தடையை குறைக்கும் வகையில் பிரிட்டிஷ் சபை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து அதிகாரிகளுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. 
நல்லிணக்க செயன்முறையை இலங்கையில் வழுப்படுத்தும் நோக்கில் நான்கு வருட திட்டமாக கடந்த மார்ச் 2018 இல் இத் திட்டம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. 
ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மன் சமஷ்டி வெளிவிவகார அலுவலகமும் இணைந்து இலங்கையின் நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்தல்(எஸ். ஆர். பீ )திட்டத்திற்கு நிதி வழங்கி வருகிறது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டிஷ் சபை தமிழ் மற்றும் சிங்கள பயிற்சியாளர்கள் கொண்ட குழுவை இம்மாதம் அமைத்துள்ளது. 
தமிழை இரண்டாம் மொழியாக கொண்ட அதிகாரிகளுக்கு இக் குழு தமிழையும், சிங்களத்தை இரண்டாம் மொழியாக கொண்ட அதிகாரிகளுக்கு சிங்களத்தையும் இக் குழு கற்பிக்கும்.
இக்குழுவிற்கு நான்கு வாரங்கள் தீவிர பயிற்சி வழங்கப்படும். இக் குழுவிற்கு இலக்கணம் மற்றும் சொல் வளத்திற்கு அப்பால் சுகாதாரம், கல்வி, சமூகசேவை, தொழில் வாய்ப்பு மற்றும் சமூகத்தில் பொலிஸாரின் பங்கு பற்றி எடுத்துறைக்கப்படும்.
சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட கண்டி பகுதியைச் சேரந்த அதிகாரிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தமிழ்மொழி பாடநெறியை பயிற்சி வழங்குபவர்கள் கற்பிப்பர்.தமிழ்மொழி அடிப்படை பரீட்சைமூலம் தராதரம் பாராது அவர்களது தேவை மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு கல அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவர். 
இத்திட்டத்தின் நிறைவில் 150 தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பயிற்று விப்பாளர்கள் தமிழ் மற்றும் சிங்களமென 600 பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்குவர்.
நல்லிணக்க செயற்பாடுகளின் போது மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது என இத்திட்டத்தை பிரிட்டிஷ் சபை கல்வி மற்றும் ஆங்கில பணிப்பாளர் லூசி கௌசர் பாராட்டியுள்ளார். இது நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அம்சமாக கலாசாரத்தை பண்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்

25/06/2019 அண்மையில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம் பிரசல்ஸிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 17 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 
இதற்கு முன்னர் கிரேஸ் ஆசீர்வாதம் வெளிவிவகார அமைச்சின் செயலராகப் பணியாற்றியுள்ளார். கிரேஸ் ஆசீர்வாதத்தை தூதரக ஊழியர்கள் வரவேற்பு உபசாரம் மூலம் வரவேற்றனர். 
2019 இன் தூதரகத்தின் இலக்குகளை நோக்கிச் செயற்படுமாறு கிரேஸ் ஆசீர்வாதம் இதன் போது கேட்டுக் கொண்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதே அதி முக்கியம் என்று குறிப்பிட்டார். மற்றும் பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் முதலீடு , உள்ளாசத்துறையை ஊக்குவித்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுக்கு இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர் என்ற வகையில் முக்கியத்துவத்தை வழங்குகின்றது.
அத்துடன் கிரேஸ் ஆசீர்வாதம் பெல்ஜியத்தின் மரபுசார் அதிகாரியையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மரபுசார் அதிகாரியையும் சந்தித்தார். கிரேஸ் ஆசீர்வாதத்துக்காக பௌத்த இந்து கிருஸ்தவ இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன. அங்குள்ள இலங்கை சமூகத்துடனும் அன்வேப்பிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகருடனும் கிரேஸ் ஆசீர்வாதம் சந்திப்புக்களை மேற்கொண்டார்.   நன்றி வீரகேசரி 
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்  சாட்சியமளிக்க  மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு

25/06/2019 பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்  சாட்சியமளிக்க  இராணுவத தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும்  முன்னாள் அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ரிஷாத் பதியுதீன் இன்று  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு  சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இராணுவ தளபதிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து விளக்கம் கோரவே இருவருக்கும் தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. 
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இராணுவத் தளபதி ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை முன்வைத்ததுடன் இந்தியாவில் இருந்து திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். 
இந்த கருத்து அரசியல் மட்டத்தில் சர்ச்சையை கிளப்பிய போதிலும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்று நிலைப்படும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த விடயங்கள் குறித்து இன்று தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தும் என எதிர்பார்கலாம். 
 அதேபோல் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களில் ஒருவருடன் வியாபார தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும்  அமைச்சராக இருந்த சந்தர்ப்பங்களில் தாக்குதல் குறித்த விசாரணைகளில்  தலையிட்டார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்ட்டுள்ள நிலையில் அவரையும் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
நாளை பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதல் சாட்சியமாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயகவிடம் விசாரணைகள் நடத்தப்படும். அடுத்ததாக பிற்பகல் 3 மணிக்கு  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவுள்ளார். அதேபோல் மேலும் ஒரு  அரச அதிகாரியும்  வரவழைக்கப்படவுள்ளதா தெரிவுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


போதை பொருள் பாவனைக்கு எதிராக முள்ளிவாய்க்கால் மக்கள் ஆர்ப்பாட்டம் !

25/06/2019 முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கில் தேசிய போதை ஒழிப்புவாரத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (25)முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு விடியல் சனசமூகத்தினரால் இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .இதன் ஒரு அங்கமாகவே முள்ளிவாய்க்கால் மேற்கு மக்களால் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது .
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "ஏற்றத்தாழ்வு பார்க்காத போதை மது" , மதி மயக்கிட துடிக்கும் மதுவை ஒழி ",மதியை போக்கும் மதுவே போ போ " போதை அற்ற தேசத்தை உருவாக்குவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .  நன்றி வீரகேசரி 

அபாயா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

25/06/2019 உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை,  மீண்டும்திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளளார். 
இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து முஸ்லிம்களின் கலாசார உடையில்  அபாயா அணிவதையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்பதியுதீன்  கடிதமொன்றை  தனித்தனியாக அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். 
அக்கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: 
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின்  ஆடை தொடர்பிலான சுற்று நிருபத்தில் முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 
இதனால் அலுவலகங்களுக்குச் செல்வதில் முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தேசிய உடை என்ற போர்வையில் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாசார ஆடைகள் மீது கட்டுப்பாடு விதிப்பதும், இஸ்லாமிய கலாசார விடயங்களில் தேவையற்ற நெருக்குதல்களை ஏற்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்துவதாகவுள்ளது. 
இனங்களை மோதவிட்டு சுய இலாபங்களையும் அரசியல் முதலீடுகளயைும் அதிகரிக்கக் காத்திருக்கும் இனவாதிகளும் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை ஒரு இனத்தின் மீதான ஒடுக்கு முறையாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 
இவ்விபரீதங்களைக் கருத்தில் கொண்டு கலாசாரங்களின் நம்பிக்கைகளில் தேவையில்லாத தலையீடுகளைத் தவிர்க்கும் வகையில் புதிய சுற்று நிருபத்தை அவசரமாக வெளியிட வேண்டும். 
மேலும், பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அணிந்து வந்த அபாயாவையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தை வெளியிடுவது சிறப்பாக அமையும். 
மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தால் சில அரச அதிகாரிகளினால் , அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற நெருக்கடிகளை எதிர் கொள்ள நேர்ந்தது. 
இதைத் தவிர்க்கும் பொருட்டு ஆடைகள் தொடர்பில் தெளிவான வரையறைகளை உள்ளடக்கி புதிய சுற்று நிருபத்தை வெளியிட வேண்டும் என்றும் ரிஷாத் பதியுதீன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


மூத்த ஊடகவியலாளர் எஸ் . தில்லைநாதன் மறைந்தார்

27/06/2019 தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் மறைந்தார்.
பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர்.
சிரேஷ்ட  ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான தில்லைநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் பல வருட காலங்களாக பணியாற்றினார்.
பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய காலம் சென்ற தில்லைநாதன் இலங்கை பத்திரிகை பேரவையின் தனிக்கை பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் நாளை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

27/06/2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை சட்டக் கோவை நடைமுறை 296ஆம் பிரிவின் கீழான குற்றஞ்சாட்டில் நீதிமன்றம் திருப்தி கொள்ளும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளை வழங்கினார்.
அதனால் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வழக்கை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சந்தேகநபர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் தொடர்ந்தும் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 
5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர். 
மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
அதனடிப்படையில் சிவில், பொலிஸ் மற்றும் நிபுணத்துவ சாட்சிகள் கடந்த 13ஆம் திகதி நிறைவடைந்திருந்தன. 
 அதனால் சுருக்கமுறையற்ற விசாரணையின் இறுதிக் கட்டளைக்காக வழக்கு இன்று தவணையிடப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு இன்று கட்டளைக்காக அழைக்கப்பட்டது. 
சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார்.
சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.
“சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தின் மீது முன்வைக்கப்பட்ட சான்று ஆதாரங்களில் மன்று திருப்தியடைகின்றது. அதனால் அவர்கள் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று கட்டளையிடுகின்றது.
அதற்காக சுருக்கமுறையற்ற விசாரணைகளின் வழக்கு ஆவணங்களை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்த மன்று பணிக்கின்றது. அத்துடன், சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்” என்று நீதிவான் கட்டளை வழங்கினார்.
இதேவேளை, தற்போதைய சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவால் குற்றவியல் வழக்குகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுவதால் குறைந்தது 3 மாதங்களுக்குள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி 

கோத்தபாயவிற்கு மேலும் நெருக்கடி- அமெரிக்க நீதிமன்றில் பலர் வழக்கு

27/06/2019 கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே    கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
புதன் கிழமை தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டநபர்கள்   கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இராணுவமுகாம்கள் பொலிஸ் நிலையங்களில் தான்  அனுபவித்த சித்திரவதைகளை முழுமையாக விபரித்துள்ளார்.
சூடாக்கப்பட்ட இரும்புத்துண்டுகளால் தாக்கினார்கள்,கேபிள்களால் அடித்தார்கள்,பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சுதிணறச்செய்தார்கள் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத அவர்கள் தமது  மனுவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆள்கடத்தல் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவு மற்றும் கப்பம் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட படையினரிற்கு பொறுப்பாகயிருந்தார் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற காலத்தில் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையென்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களை சித்திவதை செய்தவர்கள் யார் என்பதையும் நேரடியாக குறிப்பிட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் முக்கிய விசாரணை அதிகாரியான நிசாந்த  டி சில்வா இரு தடவைகள் தங்களை கொழும்பில் தாக்கினார் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.
நிசாந்த டி சில்வா என்னை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கினார் என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டீஐடியின் கொழும்பிற்கான பொறுப்பதிகாரியாக காணப்பட்ட பிரசன்ன டி அல்விஸ் என்பவரிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வழக்கு தாக்கல் செய்தவர்கள் சுமத்தியுள்ளனர்.
அவர் சித்திரவதைகளிற்கு உத்தரவிட்டதுடன் சில வேளைகளில் நேரடியாக அதில் ஈடுபட்டார் அவரிற்கு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து நேரடி உத்தரவுகள் கிடைத்தன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு- பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பது என்ன?

27/06/2019 இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணியொருவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே    கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறிப்பிட்ட பெண்மணி தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் பொறுப்பதிகாரியான மேஜர் முனசிங்க என்பவர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் நான் வேறு சில தமிழ் பெண்களுடன் முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன் அங்கு பாலியல் வன்முறைகள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் பொலிஸ் தலைமையகத்திலும் இராணுவமுகாமொன்றிலும் இதேவன்முறைகளை அனுபவித்ததாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் நான் எனது வாழ்நாளில் மிக மோசமான  சந்தித்த பாலியல் அடிமைத்தனம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் கட்சிக்காரர்களிற்கு எதிராக கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு படையினர் புரிந்துள்ள பாலியல் வன்முறைகளும்,இதனை புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் பாலியல் வன்முறைகள் இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொள்கையாக விளங்கின என்பதை புலப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

27/06/2019 வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓரு மீள்குடியேற்ற கிராமம் ஆகும். 
இக் கிராமத்தில் 373 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பலரும் நாளாந்த கூலி வேலை மூலம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர். 
வவுனியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குறித்த கிராம மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு குழாய் கிணறும் பழுதடைந்துள்ள நிலையில் பெரும் சிரமத்தின் மத்தியில் குடிநீரை பெற்று வருகின்றனர்.
மேலும்,  கிராமத்தில் ஒரு சில வீடுகளில் உள்ள கிணறுகளும் வற்றி வறண்டுவிட்டதனால் தண்ணீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக அம்மக்கள் தெரிவித்தனர். 
இதனால் தமது அன்றாட தேவைகளுக்கு மட்டுமன்றி குடிநீரைக் கூட பெற முடியாத நிலையில் அம் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.  நன்றி வீரகேசரி 

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்யலாம் ; நீதிமன்றம் உத்தரவு!

28/06/2019 வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேரா அண்மையில் வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடைவித்திருந்தார்.
இந் நிலையில் 20 முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்திருந்ததுடன்  இது தொடர்பில் சுசந்த பெரேராவுக்கு எதிராக முறைப்பாடொன்றையும் அளித்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டினை மையப்படுத்தி பொலிஸார் மாரவில நீதிவானுக்கு இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் மாரவில வென்னப்புவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்டோரை இன்றைய தினம் மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்று முன்தினம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையிலேயே அது தொடர்பான விசாரணை இன்று மாரவில நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிவான்,  தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவுக்கு உத்தரவிட்டார்.  நன்றி வீரகேசரி 

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக செயல்படுத்த திட்டம்


29/06/2019 சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்ர் தெரிவித்துள்ளார்.
சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றினார். 
இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படும்.
இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள் இந்த நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் இந்த விமான நிலையம் சிவில் விமான நிலையமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் 15 விமான நிலையங்கள் உண்டு. இவற்றில் 2 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். மத்தள விமான நிலையம் தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. 
இலங்கை சிவில் விமான சேவை எட்டு தெற்காசிய மத்திய நாடுகளில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இது ஆசிய நாடுகள் மத்தியில் ஆறாவது இடத்திலும் உலக நாடுகள் மத்தியில் 19 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
முஸ்லிம்கள் குறித்த, அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்திற்கு தலாய்லாமா கடும் கண்டனம் 

28/06/2019 முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், கல்லால் அடித்துக் கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்திற்கு திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கிறார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கடந்த 15 ஆம் திகதி முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 'முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடைகளில் உணவருந்த வேண்டாம். அவர்கள் எம்முடைய சமூகத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது வெளிப்பட்டிருக்கிறது.
ஆகையால் பௌத்தர்கள் கவனமாக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு செய்த வைத்தியரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிபிசி ஆங்கில செய்திச்சேவை தலாய்லாமாவுடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பிலும் வினவியது. அதற்குப் பதிலளித்த திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவரான அவர், முஸ்லிம்கள் குறித்த தேரரின் கருத்தை நிபந்தனைகளின்றி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
'இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவதென்பது முற்றிலும் தவறானதாகும். நாம் ஏனைய பிற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமய நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்' என்றும் தலாய்லாமா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் 'நான் ஒரு பௌத்தன். என்னுடைய முழு நம்பிக்கையும் பௌத்த சமயத்தின் மீதே இருக்கின்றது. இருப்பினும் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ஒரேவிதமாக நான் மதிப்பளிக்கிறேன்' என மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்

30/06/2019 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் நிலைமை தொடர்பில் வெளிப்படுத்துமாறு கோரி கோசங்களை எழுப்பினார்கள்.
வெளியே மதிய வெயிலுக்குள் நின்று மக்கள் போராடிய போதிலும் மண்டபத்தினுள் மாநாடு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சிறிது நேரம்  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

No comments: