கான்பரா கலை இலக்கியவாதிகள் சங்கமித்த கலை இலக்கிய விழா 2019 - ரஸஞானி




கலை இலக்கியம் சார்ந்த வெளிப்பாடுகளை இரசிகர்கள், வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கான்பரா கலை இலக்கிய வட்டம் நடத்திய ஒன்று கூடல் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கான்பரா தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
நூல்களின் அறிமுகம், கருத்துரைகள், குறும்படக்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த ஒன்றுகூடல் தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் செயலாளர் திரு. சிவபேசன் தலைமையில்  நடைபெற்றது.
அமரர் கி. இலக்‌ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின்  வாழ்வையும் பணிகளையும்  நினைவுகூரும் வகையில் அன்னார் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழக அரசின் விருதும் பெற்ற இந்திய தத்துவஞானம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த அன்னாரின் மற்றும் ஒரு நூல் சிப்பிக்குள் முத்து ஆகியனபற்றிய மதிப்பாய்வுகளும் இந்நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமரர் இலக்‌ஷ்மணன் அவர்களின் துணைவியாரும் கலை இலக்கிய ஆர்வலரும் இலங்கை கல்வித்திணைக்களத்தின் சமய – தமிழ்ப் பாடநூல்களின் முன்னாள் ஆசிரியருமான திருமதி பாலம் இலக்‌ஷ்மணன் அமரரின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாற்றுகையில்,





-->

 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே 

என்னும் திருஞானசம்பந்தர் கூற்றினை மேற்கோள் காண்பித்து பேசினார்.






இனம், மொழி, சமயம், சமூகம் சார்ந்து இயங்கியிருக்கும் அறிஞர் கி. இலக்‌ஷ்மணன் அவர்கள், தனது வாழ்நாளில் எழுதிய ஆக்கங்கள் ஆய்வுகள் இன்றும் பயனுள்ள வகையில் பல்கலைக்கழகங்கள், கல்விச்சாலைகள், ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதாக அவரது நூல் பற்றிய மதீப்பீடுகளை முன்வைத்துப்பேசிய கலை, இலக்கிய ஆர்வலர்கள் திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம், சின்னத்துரை மயூரன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் நடேசன் எழுதிய கானல் தேசம் ( நாவல்) மற்றும் எக்ஸைல் ( தன்வரலாறு) ஆகிய நூல்களைப்பற்றி  முறையே மருத்துவர் கார்த்திக் வேல்சாமி, திரு. முருகபூபதி ஆகியோர் மத்திப்பீட்டுரை நிகழ்த்தினர்.
இதனையடுத்து, முருகபூபதி எழுதிய சொல்லத்தவறிய கதைகள் நூல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை திரு. எஸ். யோகன் சமர்ப்பித்து உரையாற்றினார்.

தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்களின் 90 வயது நிறைவை முன்னிட்டு, அவரது வாழ்வையும் பணியையும் பற்றி திரு. குலம் சண்முகம் உரையாற்றினார்.

இந்தியாவில் அண்மையில் சாகித்திய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் பற்றி மருத்துவர் கார்த்திக்வேல் சாமியும் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழை நீண்ட காலம் நடத்தியவருமான டொமினிக் ஜீவா பற்றி முருகபூபதியும் உரையாற்றினர்.

கருத்துரைகளையடுத்து. கான்பராவில் வதியும் அன்பர் பேராசிரியர் கா. காளிராஜன் நன்றி  நவின்றார்.

கான்பரா கலைஞர் சுபா செல்வகுமார் தயாரித்து இயக்கிய  தெருத்தேங்காய் என்னும் குறும்படமும் காண்பிக்கப்பட்டது.

--












-->

No comments: